சிங்கப்பூரில் சிங்கம் இருந்தது!

இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பதாண்டுகளில் உலகம் இரண்டு உலகப்போர்களை (முதற்போர் 1914-18, இரண்டாம்போர் 1939-45) எதிர்கொண்டது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் வென்ற அணியும் சரி, தோற்ற அணியும் சரி, பார்வையாளர்கள் அணியும் சரி இன்னுமொரு உலகப்போர் மனிதகுலத்துக்கு வேண்டாம் என்பதில் ஓரளவுக்கு ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தன. விளைவாகத் தங்கள் நாடுபிடிக்கும் கொள்கையைக் காலத்துக்கேற்ப பிரிட்டிஷ் பேரரசு கைவிடத் தொடங்கியதால் அதன் பல காலனி நாடுகள் அடுத்தடுத்து விரைவாகச் சுதந்திரம் பெற வழி பிறந்தது. ஆனால் ராணுவ கேந்திர முக்கியத்துவம் கொண்டதாகச் சிங்கப்பூர் விளங்குவதாலும், பிராந்தியத்தில் வலுப்பெற்றுவரும் கம்யூனிஸ்டுகள் கையில் இத்தீவு விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்ததாலும் ஒப்புக்கு ஓர் உள் நாட்டு அரசை ஏற்றுக்கொண்டுவிட்டு பாதுகாப்பு, வெளியுறவுத் துறைகளைத் தொடர்ந்து தன்வசம் வைத்திருக்கவே பிரிட்டன் விரும்பிதால் சிங்கப்பூருக்கு சுதந்திரம் கிடைப்பது மட்டும் தள்ளிக்கொண்டே போனது.

1942ல் ஜப்பானியர்களைத் தாக்குப்பிடிக்க இயலாமல் தங்கள் கண்முன்னால் ஓட்டம்பிடித்த – யாராலும் வெல்ல முடியாதவர்கள் என்று அதுகாறும் நினைத்திருந்த – பிரிட்டிஷார் தரும் ‘பாதுகாப்பில்’ நம்பிக்கையிழந்திருந்தனர் சிங்கப்பூர்வாசிகள். சுதந்திர வேட்கையும் அரும்பிக் கிளர்ந்தது. சுமார் ஒன்றரை லட்சம்பேர் சுதந்திரம் கேட்டுக் கையெழுத்திட்டக் காகிதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதற்கும் (1956) எந்த பலனுமில்லாமல் போயிற்று. பிறகு ஒரு வழியாக 1958ல் சிங்கப்பூர் தன்னாட்சி அதிகாரம் பெற்றதும், 1959 தேர்தலில் புதிய கட்சியான மக்கள் செயல் கட்சி அமோக வெற்றியுடன் ஆட்சியைப்பிடித்ததும், அதன் பொதுச்செயலர் லீ குவான் யூ முதற்பிரதமராகப் பதவியேற்றதும், 1963ல் லீயின் தீவிர முயற்சியால் மலாயாவுடன் சிங்கப்பூர் இணைந்து மலேசியாவானதும், அடுத்தடுத்து அரங்கேறிய இன அடிப்படையிலான சமத்துவமற்ற முன்னுரிமைகள், கலவரங்கள், உயிரிழப்புகள் ஆகியவற்றால் ஆகஸ்ட் 9, 1965ல் சிங்கப்பூர்  வல்லந்தமாக மீண்டும் தனிநாடாக ஆக்கப்பட்டதும் சுருக்கமான சிங்கப்பூர் வரலாறு.
இன்று இருபத்தோராவது நூற்றாண்டின் முற்பகுதியில் நின்றுகொண்டு திரும்பிப்பார்க்கையில் வரலாறு ஆச்சரியப்பட வைக்கிறது. சுதந்திரம் ஒளிமிக்க வாழ்வைக் கொண்டுவந்துவிடும் என்ற நம்பிக்கையில் அதைப்பெற ஆயிரக்கணக்கில் உயிர்கள் தியாகம் செய்த பல கிழக்காசிய நாடுகள் இன்னும் சாண் ஏறினால் முழம் சறுக்குவதாக இருந்துகொண்டிருக்க, தன்மீது திணிக்கப்பட்ட விடுதலையை பெற்ற சிங்கப்பூர் தன் பொன்விழா ஆண்டை – முதல் உலக நாடுகளில் ஒன்றாகத் – தலை நிமிர்ந்து கொண்டாட ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. சிங்கப்பூர் ஒரு ‘பொருளாதார அற்புதம்’ என்று வர்ணிக்கப்பட்டு அதன் வெற்றிச் சூத்திரங்களைப் பற்றிய விவாதமும் பல்வேறு துறைகளின் அறிவுஜீவிகளால் கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாகவே தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஏதோ விபத்துபோல் சிங்கப்பூர் மேலெழுந்துவிட்டது என்றும் ஒரேயொரு பொருளாதார அடியைக்கூட அதனால் தாங்கமுடியாது என்றும் கணிப்புகள் இருந்தன. ஆனால் 1984, 1998, 2001, 2009 வருடங்களில் ஆசிய அளவிலோ, உலக அளவிலோ வரிசையாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிகள் அல்லது சுணக்கங்கள் ஒவ்வொன்றிலும் முந்தைய முறையைவிடக் குறைந்த காலத்தில் சிங்கப்பூர் மீண்டதில் அக்கணிப்புகளும் பொய்த்துப் போயின. சிங்கப்பூரின் பொருளாதாரம் ஊசியினால் குத்தி உடைத்துவிடக்கூடியது இல்லை என்பதும், சிங்கப்பூரர்கள் எளிதில் தோல்வியை ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் அல்லர் என்பதும் இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் ஏதோ தானாகத் தன்போக்கில் நிகழ்ந்துவிட்டனவா என்ன? இதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது எங்கே? யாரால்? இன்று சுவையான கனிகள் தருவதற்காக போற்றப்படும் இம்மரத்திற்கான கனவைக் கண்டு, விதையைப் போட்டு, வேலிகட்டி, நீர்பாய்ச்சி, உரமிட்டு, பூச்சிகள் அண்டாமல் பாதுகாத்து, தனக்குப்பிறகு அடுத்தடுத்த தோட்டக்காரர்களையும் தேர்ந்தெடுத்து, வழிகாட்டி, மேற்பார்வையும் இட்டுவிட்டு, எந்தப் புயலிலும் சாய்ந்துவிடாமல் நிற்கவைத்த திருப்தியுடன் தன் 91ம் வயதில் கடந்த மார்ச் மாதம் அமைதியாக உறங்கச் சென்றுவிட்ட சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு. லீ குவான் இயூ அவர்களை நினைவுகூர்வது இப்பொன்விழா ஆண்டில் பொருத்தமாக இருக்கும். தடைக்கற்களைப் படிக்கற்களாக ஆக்குவதே வெற்றியாளர்களின் ரகசியம். லீயும் அதற்கு விதிவிலக்கல்ல. அவரையும், அவர் தலைமைத்துவத்தில் சிங்கப்பூர் எதிர்கொண்ட சிக்கல்களையும் இக்கட்டுரை ஆராய்கிறது.
சமீபத்தில் பிரதமர் லீ சியன் லூங் சிங்கப்பூர்  எதிர்கொண்டிருக்கும் மூன்று முக்கியச் சவால்களைக் குறித்துப் பேசினார்; அடுத்த பத்தாண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கான சவாலையும், இருபத்தைந்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சிக்கான சவாலையும், ஐம்பதாண்டுகளில் சிங்கப்பூரர் என்ற அடையாளத்தைத் தக்கவைப்பது குறித்த சவாலையும் எதிர்கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். வரலாறு தன்னை மீண்டும்  படைத்துக் கொள்கிறது (History repeats itself) என்ற வழக்குக்கேற்ப, ஐம்பதாண்டுகளுக்கு முன் அச்சு அசலாக இதே சவால்களையே லீ குவான் இயூ தலைமையிலான அரசும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, ஆனால் வேறு காரணங்களுக்காக! உலகின் ஆக அதிகத் தலா வருமானம் பெறும் நாடுகளில் ஒன்றாகப் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துவிட்டதால் அதை மேன்மேலும் வளரச்செய்வதில் உள்ள சிக்கல்களை இன்று எதிர்நோக்கும் சிங்கப்பூர் அன்று மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவு செய்வதற்காகத் தொழில் முதலீடுகளை ஈர்த்து வளர்ச்சியைக் கொண்டுவரவேண்டிய பொருளாதாரச் சிக்கலில் இருந்தது. இன்று தொடர்ந்து வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதம், மூப்படையும் சமூகம் ஆகியவற்றால் மக்கள்தொகைப் பிரச்சனையை எதிர்நோக்கும் சிங்கப்பூர் அன்று ஆண்டுக்கு 4% வளரும் மக்கள்தொகையைச் சமாளிக்க முடியாது என்று ‘இரண்டோடு நிறுத்துங்கள்’ கோஷத்துடன் குடும்பக் கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி மக்கள்தொகையைக் குறைக்கப் போராடிக் கொண்டிருந்தது. உலகமயமாக்கலின் விளைவாக இன்று சிங்கப்பூரர் தன் அடையாளத்தைத் தொலைக்கக்கூடும் என்ற கவலை அன்று அதிகாரபூர்வமாக ஒருவர் சிங்கப்பூரர் என்ற குடியுரிமையைப் பெற்றுவிட்டபோதிலும் எந்த அளவு இச்சிறிய துண்டு நிலத்தைத் தன் நாடாக, தன் எதிர்காலமாக அவர் உணரப்போகிறார் என்ற அடையாளத்தைக் குறித்த கவலையாக இருந்தது.
மேலோட்டமாகப் பார்த்தால் இவைதான் லீ குவான் இயூ எதிர்கொண்ட சவால்களாகத் தோன்றினாலும் அவருக்குக் காலம் அளித்திருந்த முக்கியமான சோதனை என்னவெனில் இப்பிரச்சனைகளைத் தீர்க்கும் முயற்சியில் இந்நாட்டை ஊழல் மிகுந்த, ஒழுங்கு-கட்டுப்பாடு குறைந்த, மத-மொழி-இனப்பூசல்கள் புரையோடிப்போன, பாதுகாப்பும் தூய்மையுமற்ற ஒரு சமூகமாக ஆகிவிடும் அபாயத்திலிருந்து காப்பாற்றுவதுதான். கடவுளுக்கு மட்டும்தான் ‘அனைத்தையும் தனியனாகச் செய்யமுடிந்தவர்’ (Omnipotent) என்ற பெயருண்டு. ஆகவே லீ தன் கனவுகளை நிறைவேற்றத் தன்னுடன் ஒத்த அதிர்வெண்ணில் சிந்திப்பவர்களைச் சகாக்களாக அமைத்துக் கொண்டார். அதுவே அவரது தலைமைத்துவத்தின் முதலும் முக்கியமானதுமான ஆயுதம். சிங்கப்பூரை ஒரு கணினியாக உருவகம் செய்துகொண்டால் அதன் வன்பொருட்கள் பெரும்பாலும் லீயின் சகாக்களின் தனிப்பட்ட திறமையினாலும், அதன் மென்பொருட்கள் லீயின் நேரடிப் பங்களிப்பாலும் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் கட்டமைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. தன் குழுவின் பங்களிப்பை ஒவ்வொரு முறையும் அவர் தனது பங்களிப்புக்கு நிகராக அல்லது மேலாகவே குறிப்பிட்டு வந்துள்ளார். லீயிடம் நேர்காணல் செய்து டாம் பிளேட் என்பவர் எழுதிய ‘ஒரு தேசத்தை நிர்மாணிப்பது எப்படி’ என்ற புத்தகத்தில் லீ பின்வருமாறு கூறுகிறார்; “அது செய்து முடிக்கமுடியுமா என்று மலைக்கச் செய்யும் பெரிய வேலை. ஒரு புது பொருளாதாரத்தையே நாங்கள் உண்டாக்க வேண்டியிருந்தது. ஆனால் என்னிடம் ஒரு நல்ல குழு இருந்தது. சித்தாந்தங்களின் அடிப்படையில் அல்லாமல் பரிசோதனை அடிப்படையில் முயற்சிகளை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து, எது வேலைசெய்கிறது என்பதைக் கண்டறிந்து செயல்படுத்தினோம். முடிவில் வெற்றியும் பெற்றோம்.”
லீயின் புகழ் வெளிச்சத்தில் சிங்கப்பூர் வெற்றிக்கான அவரது சகாக்களின் பங்களிப்பு மறைந்து போய்விட்டதாக பரவலாக ஒரு கருத்து உண்டு. இது சரியான கருத்தல்ல என்பதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம். முதலாவதாக லிம் கின் சான். 1960ல் உருவாக்கப்பட்ட வீட்டுவசதி வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றவர் லிம் கின் சான். பணத்தையும் நேரத்தையும் வீணடிக்காதவராக வர்ணிக்கப்பட்ட இவர் Mr.HDB என்றும் அழைக்கப்படுபவர். ஜூன் 1960ல் புக்கிட் ஹோ ஸ்வீ என்ற இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 30,000 பேர் வீடிழந்ததை தன் ‘சிங்கப்பூரின் கதை’ புத்தகத்தில் நினைவுகூறும் லீ, அடுத்த பதினெட்டே மாதங்களில் அவர்கள் அனைவரையும் ஓரறை வீடுகளில் குடியேற கிம் சான் வழிசெய்ததையும், அதுமட்டுமல்லாமல் அவர்களுக்கு அடுத்து கிடைக்கப்போகும் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றை விரைந்து எழுப்பியதையும் குறிப்பிடுகிறார். அவற்றைமட்டும் கிம் சான் அவ்வளவு துரிதமாகச் செய்யாமற் போயிருந்தால் தன் கட்சி அடுத்து வந்த தேர்தலில் ஒருவேளை தேர்ந்தெடுக்கப்படாமலேயேகூடப் போயிருக்கலாம் என்றும் வெளிப்படையாகவே லீ எழுதுகிறார்.  அதேநேரம், வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்படுவது இன அடிப்படையில் இந்த விகிதாச்சாரத்தில்தான் இருக்கவேண்டும் என்பது போன்ற கொள்கை முடிவுகள் லீயால்தான் கொண்டுவரப்பட்டன. சமீபத்தில் துணைப்பிரதமர் தர்மன் ஷண்முகரத்னம் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதுபோல் இது தனிமனிதர்கள் வாழ்வில் வெகுவாக ஊடுருவும் அரசின் ஒரு கொள்கைதான். ஆயினும் சிங்கப்பூரின் அமைதிக்கு ஆதாரமான இன நல்லிணக்கம் உருவாக இதுவே அடிப்படை. ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் அருகிலிருக்கும் ஒரே பள்ளியில் பயில்வதில் துவங்குகிறது சிங்கப்பூரின் வெற்றி.
இரண்டாவது, கோ கெங் ஸ்வீ. சிங்கப்பூர் நிர்மாணத்தில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றிய கோ கெங் ஸ்வீயைப் பற்றி லீ குறிப்பிட்டிருப்பது எவருடைய பங்களிப்பையும் அவர் மறைத்துவிடவோ, தன்னுடையதாக்கிக் கொள்ளவோ இல்லை என்பதற்கு மற்றுமொரு அத்தாட்சி. சிங்கப்பூரின் முதல் நிதி அமைச்சராகவும், பின்னர் பாதுகாப்பு அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய கெங் ஸ்வீ கிட்டத்தட்ட லீயின் வலதுகரமாக விளங்கியவர். கிரஹாம் ஆலிசன் என்பவர் எழுதிய ‘லீ குவான் இயூ : சீனா, அமெரிக்கா மற்றும் உலகத்தைக் குறித்த பார்வைகள்’ என்ற புத்தகத்தில் உள்ள நேர்காணல் பதிவில் லீ பின்வருமாறு சொல்கிறார்; என்னுடைய அத்தனை அமைச்சரவைச் சகாக்களைக் காட்டிலும் கெங் ஸ்வீயே சிங்கப்பூரின் உருவாக்கத்தில் மகத்தான பங்கு வகித்தவர். அவரிடம் அசாத்தியமான மூளையும் தனித்தன்மையும் இருந்தன. என் முடிவிலிருந்து அவர் வேறுபடும்போதெல்லாம் நான் எடுத்த முடிவுகளை, அதன் அடிப்படைகளை மறுவிசாரணை செய்வேன். அதன் மூலம் சிங்கப்பூருக்கு மேம்பட்ட முடிவுகள் கிடைத்தன. நாடு எதிர்கொண்ட ஒவ்வொரு சோதனைக்காலத்திலும் பிரச்சனைகளால் உணர்ச்சிவசப்படாமல் கூர்மையான பகுப்பாய்வுகளை நடத்தி ஒரு முடிவுக்கு வர அவரால் முடிந்தது. அவர் பிரச்சனைகளைக் கையாளும் விதம் தீர்க்கவேமுடியாத பிரச்சனைகள் என்று தோன்றுபவற்றைக்கூடத் தீர்த்துவிட எனக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. அவர் என் சிக்கல்களைத் தீர்ப்பவர் (troubleshooter). நானும் அவரும் சேர்ந்து உருவாக்கிய கடினமான கொள்கை முடிவுகளைச் செயல்படுத்தும் வகையிலேயே நான் அரசியல் சூழ்நிலைகளை அமைத்துக்கொண்டேன். அவர் நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயங்களிலும் விற்பன்னராக இருந்தார். சன் சு, கிளாஸ்விட்ஸ், லிடல் ஹார்ட் ஆகியோர் எழுதிய பழமையான யுத்ததந்திர நூல்களைக்கூட வாசித்திருந்தார். ராணுவத்தின் அதிநவீன ஆயுதங்களைத் தெரிந்துகொள்வதற்காக அது தொடர்பான பல பத்திரிகைகளைச் சந்தா கட்டி வரவழைத்துத் தொடர்ந்து வாசித்து வந்தார். அதிலிருந்து குறிப்புகளையும், கட்டுரைகளையும் எனக்கு அவ்வப்போது அனுப்பியது மட்டுமல்லாமல் ராணுவ விஷயங்கள் தொடர்பான அனுமதிக் கோப்புகளில் கையெழுத்திட இந்த அளவுக்காவது தெரிந்திருப்பது அவசியம் என்பதையும் வலியுறுத்திவந்தார்.”
ஊழற்கறை படியாதவர்கள் என்பதைக் குறிப்புணர்த்த லீயும் அமைச்சரவை சகாக்களும் முழு வெண்மை நிறத்திலேயே ஆடைகள் அணிந்தனர். ஊழலை அடியோடு ஒழித்திடும் தொலைநோக்கில் CPIB (Corrupt Practices Investigation Bureau) என்ற அமைப்பு 1968லிருந்து உச்சபட்ச அதிகாரங்களுடன் பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. 1940-50களில் ஊழல் என்பது சிங்கப்பூரின் நடைமுறை வாழ்விலிருந்து பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக இருந்தது. போலீஸிலேயே ஒரு சிறிய பிரிவு மட்டுமே அப்போது ஊழல் ஒழிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்ததும், சட்டத்தில் போதிய அதிகாரங்கள் தரப்படாததாலும் ஊழலுக்கெதிராக ஆதாரங்களைத் திரட்டுவதோ, ஊழற் குற்றம் செய்தவர்களை தண்டிப்பதோ எளிதாக இல்லை என்பதும், ஊழலை அடியோடு வேரறுக்க வேண்டும் என்ற துடிப்புடன் கூடிய தலைமை இல்லாததும் முக்கியமான காரணங்கள். ஊழல் ஒழிப்பு என்ற விஷயத்தில் இன்று நாடு அடைந்துள்ள வெற்றி முழுதும் கடைசிவரை அதில் தனிப்பட்ட கவனம் செலுத்திவந்த லீயிக்குச் சேரவேண்டியதே. இன்று உலகின் ஆகக்குறைவாக ஊழல் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கும் சிங்கப்பூரில் ஒவ்வொரு வருடமும் சராசரியாகப் பதிவாகும் சுமார் 750 மொத்த ஊழல் புகார்களில் 80% தனியார் துறைகளிலிருந்தும் 20% மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களிலிருந்தும் பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமும் பாரபட்சமின்றி அவர்கள் மேல் தன் கடமையைச் செய்கிறது. இந்த உறுதியான ஊழல் ஒழிப்பும் அடுத்தடுத்த ஆண்டுகளில் வேலைவாய்ப்பு, கல்வி, வீட்டுவசதி, சுகாதாரம், மருத்துவ வசதி ஆகியவற்றில் ஏற்பட்ட குறிப்பிடத் தகுந்த முன்னேற்றமும், லீயின் தலைமைக்கும் கட்சியின் பெயருக்கேற்ப நடந்த செயலூக்கம் மிக்க அமைச்சர்களுக்கும் மக்கள் மனதில் ஆழமான நம்பிக்கையைக் கொணர்ந்தது. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றி வருவதுடன் அதன் பலன்களையும் இன்று அவரது கட்சி அறுவடை செய்து வருகிறது.
தனது தலைமைத்துவத்தின் முத்தாய்ப்பாக லீ செய்தது தனக்கு அடுத்த தலைமையைத் தயார் செய்ததுதான். எவ்வளவோ பிரயாசைப்பட்டு சிங்கப்பூர் என்ற சிறு தீவுக்கு உலக அளவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியபின் அந்தத் தொடர் ஓட்டத்தில் அடுத்ததாக குறுந்தடியை வாங்கிக்கொண்டு ஓடுபவர் சரியில்லாமல் போய்விட்டால் அது வெற்றியில் முடியாமற் போய்விடும் என்பதை லீ நன்றாக உணர்ந்தே இருந்திருக்கிறார். பலரும் நினைப்பதுபோல் அது அவ்வளவு எளிதாக அவருக்கு இருந்துவிடவில்லை. அதிலும் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியதிருந்தது. இனி அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்; “பொருளாதார வெற்றியை அடைந்தபின் என் அடுத்த வேலையாக இருந்தது எனக்கடுத்த தலைமையைத் தெரிவு செய்வதுதான். ஏனெனில் அந்தத் தொடர்ச்சியில்லாமல் போனால் நான் செய்ததெல்லாம் வீணாகிவிடும். கோ ச்சோக் டோங்கிடம் அதைக் கண்டேன். அவரது தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம். நான் அவருக்குப் பின்னாலிருந்தேன். எதையாவது அவர் மாற்ற விரும்பினால் அதை ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் அடிப்படைகளை மாற்றாமல் எப்படிச் செய்யலாம் என்பதைக் காட்டித்தந்தேன். ஆனால் ஆறே மாதங்களுக்குள் மூன்று அமைச்சர்கள் பதவி விலகினார்கள். அவர்களுக்கு கோ செயல்படும் விதம் (style) பிடிக்கவில்லை. நான் அவர்களைப் பேசிச் சமாதானப்படுத்திப் பணியில் தொடரச்செய்தேன். கோவுக்குத் தன்னை தகவமைத்துக்கொள்ள இன்னும் கொஞ்சம் அவகாசம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவர்கள் தொடரச் சம்மதித்தார்கள். பிறகு அது பதினான்காண்டுகள் நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் கோ என் மகன் லீ சியன் லூங்கைத் தனக்கு அடுத்ததாகத் தொடரத் தேர்ந்தெடுத்தார். கோவின் வெற்றியே என் வெற்றி. இந்த வளர்ச்சி தொடர்ச்சியாக நிகழவேண்டும். ஒருவேளை எதிர்காலத்தில் எல்லாம் நல்லபடியாக நடக்கும்போது நாம் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்று தகுதியும் திறமையும் உள்ளவர்கள் நினைத்துவிட்டால் அது ஒரு மாற்று அரசாங்கம் பிறக்க வழிவகுக்கும்.”
சிங்கப்பூரின் சுருக்கமான ஆரம்பகால வரலாற்றையும், அதைப் பிறகு திருத்தியெழுதி செம்மைப்படுத்திய லீயின் தலைமைத்துவத்தின் சில முக்கியக் கூறுகளையும் பார்த்தோம். லீ எதிலும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல் எந்த நிலையிலும் கருத்துகளை மாற்றிக்கொள்ள அவர் சம்மதித்ததில்லை என்று பொதுப்புத்தியில் ஒரு புரிதல் இருக்கிறது. அதில் உண்மை எவ்வளவு என்பதைப் பார்த்துவிட்டுக் கட்டுரையை நிறைவு செய்துவிடுவோம். சமீபத்தில் ‘லீ குவான் இயூவின் மறைவினால் சிங்கப்பூர் நம்பிக்கை இழக்கக்கூடாது’ என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் தேவதாஸ் கிருஷ்ணதாஸ் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தார். அதாவது ஆதாரக் கொள்கை முடிவுகளில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாத லீ குவான் இயூ அதேசமயம் காலச் சூழ்நிலைகளுக்கேற்ப சிங்கப்பூரின் முன்னேற்றத்துக்காக நீக்குப்போக்காக நடந்துகொள்ளவும் தவறவில்லை என்று எழுதியிருந்தார். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் மலாயா கம்யூனிஸ்டுகளைக் கடுமையாக எதிர்த்திருந்தாலும் எழுபதுகளில் கம்யூனிஸ்ட் சீனாவுடன் நட்பு பாராட்டத் தவறவில்லை. சிங்கப்பூரில் நிறுவனப்படுத்தப்பட்ட சூதாட்டத்துக்கு ஆரம்பகாலத்தில் எதிராக இருந்திருந்தாலும் காலத்தின் தேவைக்கேற்ப காஸினோக்கள் அமைப்பதற்குக் குறுக்கே நிற்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல உடல், மன ஆரோக்கியத்துடன் இருக்கும்போதே தனக்கு அடுத்தடுத்த தலைவர்களைத் தேர்ந்தெடுக்க முன்வந்தது உலக அளவில் அவர் தலைமுறைத் தலைவர்களிடம் அரிதாகக் காணப்பட்ட ஒரு குணம். சிங்கப்பூரர்களும் சரி சிங்கப்பூரின் அரசியல் தேர்வுகளும் சரி உறுதியாகவும் அதேநேரத்தில் கால மாற்றங்களுக்குத் தக்கத் தங்களை மாற்றிக்கொண்டு முன்னேறிச் செல்லும் நெகிழ்ச்சித் தன்மையுடன் இருப்பதையே லீ எப்போதும் விரும்பிவந்துள்ளார். அதன்படி நடந்தும் காட்டியிருக்கிறார்.
இரங்கற்செய்திகளில் ‘இப்படி ஒருவர் இருந்ததில்லை. இனி இருக்கப்போவதுமில்லை’ என்ற சொற்றொடர்கள் வாசிக்கப்படுவது வழக்கம். அவற்றை நான் பொதுவாக உணர்ச்சி மேலீட்டால் வெளிப்படும் வார்த்தைகளாகவோ அல்லது தேய்வழக்காகவோ கருதி ஒதுக்கிவிடுவதுண்டு. ஆனால் ஒரு மில்லியன் பேருக்குமேல் அஞ்சலி செலுத்திய லீயின் இரங்கலில் இச்சொற்கள் வாசிக்கப்பட்டபோது அவை மிகுந்த பொருளுள்ளதாகத் தோன்றின. வரலாற்றாளர்களும் இனிமேல் சிங்கப்பூரில் சிங்கம் இருந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை என்று சொல்லிக்கொண்டிருப்பதை மறுபரிசீலனை செய்யவேண்டும். சிங்கத்தின் உறுமல் ஏழு கிலோ மீட்டர் தூரம்வரை கேட்கும் என்கிறார்கள். இவர் வாழ்வும் பங்களிப்பும் சிங்கப்பூர் என்ற உறுமலாக மாறி இன்று உலகத்தில் வாழும் ஏழு பில்லியன் பேருக்கும் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆம், சிங்கப்பூரில் சிங்கம் இருந்தது!
சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்