ரெ.கார்த்திகேசு

எனக்கு 13 வயதிருக்கும்.தமிழ்நேசன் சிறுவர் அரங்கத்தில் , கட்டுரைகள், குட்டிக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த நேரம்.
தமிழ்நேசன் ஞாயிறு மலரில் சுழல்பந்து என்ற தலைப்பில் பிரசுரமான ஒரு சிறுகதை ஏனோ என்னை அப்படிக் கவர்ந்தது.ஒரு ஆசிரியர் கல்வியில் பிரச்சினை உள்ள ஒரு மாணவர் மீது கோபப்பட்டு பின் அந்த ஆசிரியர் எப்படி உணர்ந்தெழுகிறார் என்பது கதையின் சாரம் . அவ்வளவு ஆசையாக அந்த கதையைத் திரும்பத்திரும்பப் படித்தேன். இணையம் அறிமுகமாகிய வேளையில் ஜெ ர்மனி நா..கண்ணன் நடத்தும் மின் தமிழ் குழுமத்தில் எழுதத் தொடங்கிய கால கட்டத்தில், இலக்கிய உரையாடல் ஒன்றில், சின்னவயதில் படித்த மறக்க முடியாத கதைகளிலொன்று சுழல் பந்து கதை என வரிசைப்படுத்தி இருந்தேன்.ஒரு சில நிமிடங்களிலேயே ”,அன்புள்ள கமலாதேவி “எனத்தொடங்கி பதில் வந்தது.அடுத்த சில நிமிடங்களிலேயே தொலைபேசியில் பேசினோம்.இப்படித்தான் ரெ.கார்த்திகேசுவும் நானும் முதன் முதலாக பேசத்தொடங்கினோம்.

எனது இதுதான் சொர்க்கம், தமிழ்நேசனில் அந்த ஆண்டுக்கான சிறந்த சிறுகதையாகத் தேர்வு செய்யப்பட்டபோது, அந்த தேர்வுக்குழுவில் நடுவராக இருந்தவர் கார்த்திகேசு அவர்கள் என்பதை பேச்சினூடே தெரிவித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.அப்பொழுதுதான் நான் ரசித்த கதையின் தலைப்பு, சுழல்பந்து அல்ல, பிள்ளையார் பந்து என அவர் கூறியபோது, ஊஹூம் ,நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்,அது சுழல் பந்துதான், என நான் பிடிவாதம் பிடிக்க ரசித்துக்கேட்டார். சிங்கப்பூர்ர் பலகலைக்கழகத்தில் பல நாடுகளிலிருந்தும் எனக்குத்தெரிந்த தமிழறிஞர்கள் பலர்கலந்து கொண்ட மாநாடு நிகழ்ந்தது.முனைவர் ஜெர்மனி கண்ணனும் நானும் மகிழ்ந்துபோய் பேசிக்கொண்டிருந்தபோது, அருகே வந்த ஒருவர் பூச்செண்டு கமலம், “ என்று அன்போடு அழைக்க அடுத்தகணமே சுழல்பந்து சார்’ என பதிலுக்கு அழைத்துவிட்டேன்.எப்படிக்கண்டுபிடித்தாய் என்று கண்ணன் கேட்க, சிரிப்பு வந்தது.கார்த்திகேசு சாரும் சிரித்துக்கொண்டார்.

அன்றெல்லாம் மின் தமிழில் சிறந்த பதிவுக்கு பூச்செண்டு கொடுப்பது என் வழக்கம்.வெங்கட் ஸ்வாமிநாதன் ,நர்சையா, மறவன் புலவு சச்சிதானந்தம்,எனப்பலர் இருந்த குழுமம் .மறுவாரமே கார்த்திகேசு சாரின் அருமையான இடுகைக்கு பூச்செண்டு கொடுத்தேன். அடுத்தமுறை கார்த்திகேசு சார் சிங்கை வந்தபோது அருண்[மகிழ்நன்] ஏட்டன் வீட்டில் நான், நரசையா,ஜெயந்திசங்கர், முனைவர் சீதாலெட்சுமி, எனப் பலர் சூழ கார்த்திகேசு சாருடனான இலக்கிய உரையாடல். மிக முக்கியமாக அன்று சிங்கை இலக்கியம் பற்றி பிரசுரமாகிய ஒரு நூல் பற்றி விரிவாக என்னிடம் பகிர்ந்து கொண்டிருந்தார்.நான் அந்த நூலையே படிக்கவில்லை, விஷயமே எனக்குத்தெரியாது என்றபோது நானே உனக்கு அனுப்பிவைக்கிறேன் , என்றதோடல்லாமல் அனுப்பியும் வைத்தார்,அந்த நூல் மட்டுமல்ல. மலேசிய ஆய்வுக்கான பல நூல்களையும் கார்த்திகேசுசார் தான் எனக்கனுப்பி உதவியுள்ளார்.அப்படி நூல் இருப்பில் இல்லை என்றாலும் கூட தொலைபேசி எண் தந்து அந்த நூலுக்கான முகவரியையும் தந்து எப்படியும் நூல் கிடைக்க உதவியுள்ளதை நினைக்கும்போதே கண்ணீர் மல்குகிறது’

கரிகாற்சோழன் விருதுக்காக சிங்கையில்[நுவல் நூலுக்காக] நானும் மலேசியாவில் கார்த்திகேசு சாரும் தெரிவு செய்யப்பட்ட போது உடனே அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.நுவல் நூல் ஐந்து விருதுகள் பெற்றதெல்லாம் பின்னாளில் தான்.மலேசியப்பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்களுக்கான [பி.ஏ ] பாடத்திட்ட நூலாக நுவல் தெரிவு செய்யப்பட்டதும் முதலில் வாழ்த்துத்தெரிவித்தவரே கார்த்திகேசு சார் தான் மலேசியப்பெண்ணிலக்கியவாதிகளுக்கான் ஆய்வுநூல் எழுதும் பணிக்காக பல நூல்களை அனுப்பி உதவியவர்.ஆனாலும் ,அவருக்கு நூல் கிடைக்க வில்லையே எனும் கவலையில் கே.எல் சென்றபோது நுவல் நூலும் ஆய்வுநூலும் தேடிச்சென்று கொடுத்தேன்.

அடுத்து சூரிய கிரஹணத்தெரு நூல் பிரசுரமான போது அந்த கதையை மட்டுமாவது உடனே அனுப்பி உதவு, என்றிட அனுப்பி வைத்தேன் .உன்னுடைய எழுத்திலேயே மிக மிகச்சிறந்த கதை கமலம், என்றிட மிகவும் கஷ்டப்பட்டு களப்பணி ச்செய்து எழுதிய கதை சார் அது, என்று அழமாட்டாமல் நான் சொல்ல,கமலம், உன்னுடைய நடையே யூனிக்கான நடை, அதை சுட்டுப்போட்டாலும் வேறு ஒருவரால் எழுத முடியாது , இப்படியே எழுது,என்றிட , நன்றி கூட சொல்ல முடியாமல் ஸ்தம்பித்துப்போய் நின்றிருந்தேன்.இவர் என்றல்ல .நரசையா சார், வெங்கட் ஸ்வாமிநாதன், கூத்துப்பட்டறை ஆசிரியர் என்ப்பலரும் இதே வரிகளால் என்னை ஊக்குவித்ததை அண்மையில் சிங்கை வந்து போன விமர்சன மகுடாதிபதிக்கு எந்த அசரீரியாவது போட்டுக்கொடுத்தால் அதற்குப்பொறுப்பு நானல்ல.நுவல் நூலின் முகடுகள் ஆங்கிலத்தில் குறும்படமாக தெரிவு செய்யப்பட்டதறிந்து அந்த குறும் பட டேப்பை அனுப்பு கமலம் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார்.

சூரியகிரஹணத்தெரு நூலுக்கு வெங்கட் ஸ்வாமிநாதன் எழுதிய முன்னுரை சொல்வனத்தில் படித்து மனமுவந்து அவர் பாராட்டிய வரிகளை இங்கு எழுத முடியவில்லை. சூரியகிரஹணத்தெரு நூலில் மாம்பழப்புளிசேரி கதையை பலவாறு ரசித்துப்பேசியுள்ளார். பின் நவீனத்துவம் பற்றி உரையாடல் ஒன்றை தொடங்கவேண்டும் என்று நான் ஆசைப்பட்டபோது, கண்ணன் ஊக்குவிக்க, கார்த்திகேசு சாரும் ஊக்குவித்தவர் அதற்குப்பிறகும் எந்த இலக்கிய ஐயம் என்றாலும் அவரிடம் மட்டுமே கேட்டுள்ளேன். அவர் முதன் முதலாக மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது அறியாமல் ஒரு நாள் தொலைபேச , நான் அறுவை சிகிச்சை முடிந்து ,மருத்துவமனையில் இருக்கிறேன் கமலம், என்றிட கலங்கிப்போனேன். மறுமாதம் எனது நிகழ்வுக்காக கே.எல். சென்றபோது, மங்கல கெளரி அழைத்துச்சென்று விட, மனம் விட்டுப்பேசிக்கொண்டிருந்தோம். அவரே காரில் கொண்டு வந்து விட்டார்,.கணவரின் உடல்நிலை , குழந்தைகள் பற்றியெல்லாம் மிகுந்த அக்கறையோடு விசாரிப்பார்.என் மூத்த மகளைப்பற்றி, மிகவும் அக்கறையோடு விசாரிப்பார். மகளின் அடுத்த நூல் எப்பொழுது என்று அடிக்கடி விசாரிப்பார்.இதோ! ம்களின் அடுத்த நூல் விரைவிலேயே வெளிவரப்போகிறது.ஆனால் நீங்கள் தான் இல்லையே சார்!

எந்த நிகழ்வுக்குப்போனாலும் முடியும் வரை அமர்ந்திருக்க முடியாமல் கணவரின் உணவு நேரத்துக்குள் வீடு நோக்கி ஓடிவருவது என் வழக்கம்.ஒருமுறை கார்த்திகேசு சார் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், அவரது உரை, என்னுரை என நிகழ்ந்தேறியபிறகு, மதியத்துக்குப்பிறகு விடைபெற ச்சென்றபோது,”பழங்காலத்துப்பெண் தெய்வம் , போய் வா” என புன்னகையோடு வழி யனுப்பியதை நினைக்கிறேன்.[நெஞ்சு விம்முகிறது]எந்த நல்ல நூல்கள் படித்தாலும் உடனே பகிர்ந்து கொள்வேன்.அப்படி ஒருமுறை அழைத்தபோது மீண்டும் உடல் நிலை சரியில்லை என் குறுஞ்செய்தி மட்டுமே வந்தது.மறு மாதம் கோலாலம்பூரில் நிகழ்ந்தேறிய பலக்லைக்கழக மாநாட்டில் பேராளராகக் கலந்துகொண்ட அன்றுதான் மீண்டும் சந்தித்தேன்.எனது நிகழ்வில் கலந்துகொண்டு, டாகடர் திண்ணப்பன் சாருக்கு அருகில் அமர்ந்துகொண்டு நான் வாசித்தகட்டுரையை ரசித்துக்கேட்டார்.மறுநாளே தொலைபேசியில் பலதகவல்களை பகிர்ந்துகொண்டார்.மனதாரப்பாராட்டினார்.மீண்டும் சந்தித்தது ஷா நவாசுக்கு கரிகாலன் விருது கிட்டிய நிகழ்வில் தான்.கமலம் என்று அன்போடு அணைத்துக்கொண்டபோது கண்ணீர் வந்தது. மெலிந்திருந்தார். மிகவும் களைத்திருந்தார்,அழுகையோடு என்ன சார்?என்று தடுமாறியபோது உடல் தேறவே மாட்டேன்கிறது கமலம், என்றார்.அடுத்த கணமே சுதாரித்துக்கொண்டு, ஷா நவாசின்

அயல்ப்சி அருமையான நூல் கமலம், என்று அவர் மனதார பாராட்டியதை இங்கு பதிவு செய்தே ஆக வேண்டும். நல்ல எழுத்தை அவர் கொண்டாடத்தவறியதே இல்லை. பலருக்கும் முன்னுரை கொடுத்திருக்கிறார். கெடா சீ .முத்துசாமியின் நூலுக்கு நானும் அவரும் தான் முன்னுரை கொடுத்தவர்கள். எனது பகுதிகளைப்படித்ததும் தொலைபேசியில் அழைத்து, வெக்கையும் வெம்மையுமாக என அழகாக விளக்கியிருக்கிறாய் கமலம். என்றபோது, எனது வேறொரு இல்க்கியக்கவலை பற்றி நான் பகிர்ந்துகொண்டேன்.இப்படி எத்தனை எத்தனை நிகழ்வுகள். அவரது நூல்களிலேயே விமர்சனமுகம் எனும் இரண்டு நூல்களுமே மிக முக்கியமானவை.அரை வேக்காடுகளும் தடி எடுத்தவனெல்லாம் தண்டல் எனும் அல்டாப்புகள் அவசியம் படிக்க வேண்டியது இந்த அறிவார்த்தமானவரின் ஆய்வு நூல் .சிங்கை ,மலேசிய வாழ்வியல்,இலக்கியம் படைக்க அவர்களுக்குள்ள நேரப்போராட்டங்கள், என எதையுமே கருத்தில் கொள்ளாது தனிமனித சாடல் மட்டுமே விமர்சனம் எனும் கீழ்மைகுணம் அவர் அறியாதது.

மெத்தப்படித்தவர்.ஆழமான அவதானிப்பின் சொந்தக்காரர்.மனதார நல்ல எழுத்தைப்பாராட்டும் படைப்பாளி. அருண் ஏட்டன், ரெ.கார்த்திகேசுவின் மறைவுச்செய்தியை அனுப்பும் சில நிமிடங்களுக்கு முன்தான் துக்கச்செய்தியை அறிந்தேன்.உமா பதிப்பகம் சோதிநாதன் சாரின் அலுவலகத்தில் முனைவர் முரசு நெடுமாறனுடன் எனது அடுத்த படைப்புக்கான ஆய்வுத்தகவல்கள் கேட்டு பதிவு செய்து கொண்டிருந்தபோதுதான் அந்த துக்கம் சோதினாதன் சார் வாய்வழி கேட்க நேர்ந்தது.உறைந்துபோய் நாங்கள் மூவருமே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். இன்றுவரை அதுகுறித்துப்பேசும் மனவலிமை எனக்கில்லை.அவருக்குக்கொடுக்க இரண்டு புதிய மொழிபெயர்ப்பு நூல்கள் வாங்கி வைத்திருந்தேன்.அவரும் எனக்கு செல்லும்போதெல்லாம் ஏதாவது நூல்கள் தருவார்’

இப்பொழுதும் அவர் ஆசைப்பட்ட நூல்கள் கணிணி க்கு முன்னால் அமர்ந்து என்னையே பரிவோடு பார்த்துக்கொண்டிருக்கிறது.ஆனால் தேற்றுவதற்குத்தான் சுழல் பந்து சாரின் குரல் அருகில் இல்லை. இவ்வாண்டு மலேசிய எழுத்தாளர் கழகம் கார்த்திகேசு சார் பெயரில் தொடங்கிய விருதை , அருமைக்குரிய பாவை சேச்சிக்கு கிடைத்தது, எனும் செய்தியை பாவைசேசி மகிழ்ச்சியோடு தெரிவித்தபோதே நெருடலாக இருந்தது. இதனால் தானா சார்?
அன்பான பலர் எமை விட்டுப்பிரிந்தபோது உக்கி உருகி அழுதிருக்கிறேன். மலபார் குமார், ஜெயந்தன் சார், நா. கோவிந்தசாமி, ராமையா சார்,அண்மையில் வெங்கட் ஸ்வாமிநாதன் சார்,சென்னையில் நாட்டியத்தாரகை சந்திரலேகா, ,அருமையிலும் அருமையான என் ஆசிரியர் , பேராசிரியர் ராமானுஜம் சார், எனப்பலர் பிரிந்தபோதும் பரிதவித்துப்போய் அழுதிருக்கிறேன். இப்பொழுது சுழல்பந்து சார்..இழப்பைப்பற்றி எவர்கேட்டுக்கொ ண்டபோதும் எழுதவே முடியாமல் மனசு நடுங்கும்.ஆனால் கொஞ்சகாலமாகவே உங்கள் உடல்நிலை குறித்து அறிந்திருந்தபோதிலும் கூட , அதற்குப்பின்னர், நேரில் பலமுறை சந்தித்திருந்த நிலையிலும் கூட, உலுக்கி எடுத்துவிட்டது இச்செய்தி.

அதனால் என்ன ? நானும் உடல் நலம்செழிப்பானவளல்ல .காத்திருங்கள் சார்? எப்பொழுது என்று தெரியாவிடினும் , நிச்சயம் என்றேனும் நாம் சந்திக்காம்லா போவோம்?

அப்பொழுது பேச பல விஷயங்கள் எனக்குண்டு, புனைவில் கதாசிரியரின் கதை கூறு திறன் , கதை எடுத்துரைக்கும் திறன் மட்டுமல்ல,இலக்கியசிலேடைத்தன்மை [Literary ambiguity] கோணத்தையும் கூட காண்கிறேன் என்றபோது முதலில் விளக்குங்கள் சார்’ என்று பிடிவாதம் பிடிக்க விளக்கியிருக்கிறார். இலக்கியம் படைத்தல் என்பது தவம் எனும்போதெல்லாம் , அதெப்படி என்று வேண்டுமென்றே என்னை சீண்டுவீர்கள்.
இப்படித்தான் சார், இந்த தவத்தால் தானே கமலம் இப்படியெல்லாம் கண்கலங்குகிறேன்.இலக்கியம் மட்டும் இல்லையென்றால் சுழல் பந்து சாரை நான் அறிந்திருப்பேனா ?
காத்திருங்கள் சார்!அண்மையில் நான் படித்தவையில் மிக முக்கியமான நூல் where ?when ? by –Marco wyne பற்றி சர்ச்சை செய்வோம்.எவ்வளவு நாட்கள் இலக்கியம் பேசியுள்ளோம்.இனியும் கூட பேசலாம்.

காத்திருங்கள் சார்!

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்