மெல்பகுலாஸோ – விமர்சனம்

பதிமூன்று சிறுகதைகள் கொண்ட தொகுப்பு மெல்பகுலாஸோ. ஆசிரியர் மாதங்கி. திருநெல்வேலியைப் பூர்வீகமாகக்கொண்ட இவர் 1993ல் இருந்து சிங்கப்பூரில் வசிப்பவர். நூல் வெளியான ஆண்டு 2014. இந்த ஆண்டு (2016) சிங்கப்பூர் இலக்கியப்பரிசுக்கான போட்டியில், புனைவுப்பிரிவில், இறுதிச்சுற்றுவரை சென்ற தொகுப்பு.

நூலை வாசிக்கும்முன் ஒரு அட்டவணை போட்டுக்கொண்டேன். அதில் கதையின் பெயர், வெளியான ஆண்டு, சில வார்த்தைகளில் நிறை-குறைகளாக உணர்வது, பிடித்த கதையா இல்லையா ஆகியவற்றை ஒவ்வொரு கதை வாசித்ததும் நிரப்பிக்கொண்டே வந்தேன். முடித்துவிட்டு அவ்வட்டவணையை ஆராய்கையில் அதிலிருந்து ஒன்று தெளிவாகத் தெரிந்தது. 2010 முதல் எழுதப்பட்ட ஒன்பது கதைகளில் ஏழு உவப்பாக இருந்தன. அதற்கு முன் எழுதப்பட்ட எந்தக் கதைகளும் கவரவில்லை.

கவராதவற்றை முதலில் பார்த்துவிடுவோம்.

‘எனெக்கென்று’ கதையில், வேலை நிமித்தமாக டெல்லி சென்று திரும்பும் ராஜூ. குழந்தை, தங்கை, அப்பா என்று அனைவருக்கும் முறையே பொம்மை, சூரிதார், மப்ளர் என்று வாங்கிவருகிறான். ஆனால் மனைவிக்கு அழகான ஆறு பீங்கான் தட்டுகள். ஏன் என்னை சமையலறையின் ஒரு அங்கமாகவே கருதுகிறீர்கள்? அதற்கு வெளியிலும் நமக்கென ஓர் உலகம் உண்டு என்று மனைவி விளக்கமாகக் கேட்டபின் ராஜூ உடனே மனந்திருந்துகிறான். நேரடியான பிரச்சனை – அறிவுரை – உடனடியாகப் பிரச்சனை தீர்தல் என்ற வடிவத்தில் இருக்கும் கதை. வாழ்வின் பிரச்சனைகளெல்லாம் இப்படி அறிவுரைகள், விளக்கங்களோடு தீர்பவையாக இருந்தால் இலக்கியத்துக்கு எவ்வளவோ வேலை மிச்சம். ஆனால் துரதிருஷ்டவசமாக நிஜம் அப்படியில்லையே!

‘ஆரம்பம்’ கதையில் சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குப்போய், காலையில் பெண்பார்த்து, அன்று மாலையே நிச்சயம் செய்துகொண்டு சிங்கை திரும்பிவிட்ட உமேஷ் தன் மனைவியாக வரப்போகிற ஐஸ்வர்யாவுக்கு ஒரு நீண்ட கடிதத்தை எழுதுகிறான். தான் தமிழில் அக்கடிதத்தை எழுதுவதை பெருமையாகச் சொல்வதில் ஆரம்பித்து, வரதட்சணை கேட்கமாட்டேன், திருமணமாகி சிங்கை வந்தவுடன் நீ விரும்பினால் வேலைசெய் என்று மிகவும் முற்போக்காக ஆரம்பிக்கிறான். பிறகு நீ முடியின் நீளத்தைக் குறைத்துக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று கொஞ்சம் இடறுகிறான். கடிதத்தின் கடைசியில் அவளுக்குமுன் அவன் பார்த்த பெண் ஒரு ரெஸ்டாரண்டில் சந்தித்துப்பேசவேண்டும் என்று விரும்பியதால், ‘ஏன் ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கியே பேசலாமே’ என்று கேட்டுத் தவிர்த்துவிட்டதாகச் சொல்லி, அந்தப்பெண்ணுக்கு என்ன தைரியம் என்று தாத்தா காலத்துக்குப் போய்விடுகிறான். ஐஸ்வர்யா அலுவலகத்தில் கொடுத்த ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறப்போவதாகச் சொல்வதுடன் கதை முடிகிறது. கடிதத்தின் குரல் ஒலிக்கும் போக்கிலிருந்தே இன்னதுதான் நடக்கும் என்பது வாசகருக்குத் தெளிவாக விளங்கிவிடுகிறது. மேலும் ‘எனக்கென்று’ கதைக்கு அடுத்ததாகவே இக்கதையும் வருவதால், ஆசிரியர் ஆண்கள் என்றால் இப்படிதான் என்று ஏதும் டெம்ப்ளேட் வைத்துக் கதைசொல்கிறாரோ என்ற சந்தேகமும் பிறந்துவிடுகிறது. அந்த எண்ணம் நமக்கேதும் செய்தியிருக்கிறதா என்று கதையை ஊன்றிப்பார்க்கும் ஆர்வத்தை அழித்துவிடுகிறது.

‘மகனுமானவன்’ மேற்சொன்ன கதைகளின் செய்திகளுக்கு நேர் எதிர்ப்புறமாகச் செல்லும் கதை. தலைப்பே அதைச்சொல்லிவிடுகிறது. சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும் ஜெயந்த் தன் பிரசவித்த மனைவியையும் குழந்தையையும் தானே கவனித்துக்கொண்டு, வேலைக்கும் சென்றுவருகிறான். முதல் வரியில் அவளை எழுப்பி வாயில் லேகியம் கொடுப்பதில் ஆரம்பித்து சுற்றிச்சுற்றி குடும்ப வேலைகள் செய்துகொண்டேயிருக்கிறான். இவர்களுக்கு உதவிக்குவரத் தயாராக இருந்தும் தன் தாயையோ, மாமியாரையோ தவிர்த்துவிட்டுத் தானே எல்லாவற்றையும் சமாளிக்கிறான். கதையை வாசித்ததும் எனக்கு, ‘என்ன செய்வது இலக்கியத்தில் உலவும் ஆண்கள் ஒன்று ராஜுக்கள் அல்லது உமேஷ்களாக இருக்கிறார்கள் இல்லையேல் ஜெயந்த்களாக இருக்கிறார்கள்’ என்று தோன்றியது. படுத்தால் பாதாளம், பாய்ந்தால் பனிச்சிகரம் என்றிருப்பவர்களை விட்டுவிட்டுத் தரையில் கால்பதித்து சாதாரணமாக நம்மைப்போல நடப்பவர்களை இலக்கியம் கவனித்தால் பெரும்பாலானவர்களுக்கு அது நல்ல அனுபவமாக இருக்கும்.

‘வானம் பூப்பூக்கட்டும்’ கதையில் சந்தானலட்சுமி வயதான காலத்தில் முயற்சியுடனும் ஆர்வதுடனும் கணினி கற்று, அதில் தமிழ் எழுதப்பழகி, சிறந்த வலைப்பதிவர் பரிசை வென்றுவிடுகிறார். வெறுமே மின்மடல் வாசிக்கமட்டும் கற்றுக்கொண்டு அங்கேயே தேங்கிவிடும் அவரது கணவரைப் போலல்லாது பல தடைகளையும் சமாளித்து சாதிக்கிறார். முதலில் இது என்ன வேண்டாதவேலை என்று கடுப்பாகும் கணவரும் இறுதியில் மனம்மாறிப் பாராட்டுகிறார். தமிழ்க்கணினியின் ஆரம்பத்தில் முரசு குறியீடு பிறகு ஒருங்குறி (யூனிகோட்) வந்தது என்ற சில தகவல்களும் பதிவுசெய்யப்பட்டுள்ள கதை. ‘கற்பதற்கும் கற்பிப்பதற்கும் வயது தடையன்று; தன்னம்பிக்கையின்றி மனம் காலியாக இருப்பதுதான் தடை என்று தான் எங்கோ படித்தது லட்சுமிக்கு ஞாபகம் வந்தது’ என்று கதையின் நீதியை ஆசிரியர் தெளிவாகவே சொல்லிவிட்டபின் மேற்கொண்டு விமர்சனம் செய்ய எனக்கொன்றுமில்லை.

‘மதுரைக்குப் போகணும்’ கதையில் பொருளாதாரக் கஷ்டத்திலுள்ள சிங்கப்பூர் தமிழ்க்குடும்பத்தின் தலைவர் சண்முகம் வாடகைக் காரோட்டி. அவரது பெண் மோகனா தமிழகத்துக்கு சுற்றுலா செல்ல ஒரு மலிவான வாய்ப்பு வருகிறது, அதைப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறாள். அவள் தமிழகத்தைப் பார்த்ததே இல்லை ஆனால் நீண்டகால ஆவல். நானூறு வெள்ளிகள் வேண்டும். அந்த சமயத்தில் மோகனாவுக்கு ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அவளது நீளமான கூந்தலலுக்கேற்ற ஷாம்பூ விளம்பரம். ஆனால் மூன்று வருடங்களாக இதைத்தான் பயன்படுத்துகிறேன் என்ற பொய்யான வசனத்தைப் பேச மறுத்துவிடுகிறாள். ‘தன்னெஞ் சறிவது பொய்யற்க, பொய்யாமை பொய்யாமை ஆற்றின், உள்ளத்தால் பொய்யாதொழுகின், பொய்யாமை அன்ன புகழில்லை’ என்றெல்லாம் தொடங்கும் பலகுறட்பாக்கள் என்மனதில் ஓட ஆரம்பித்தன. மனதில் வள்ளுவரைத் தொழுதுவிட்டு அடுத்த கதையை வாசிக்க ஆரம்பித்தேன். இக்கதையை விமர்சித்தால் வள்ளுவரை விமர்சித்த பாவம் வந்துசேரும். இன்னொரு நீதிக்கதை, அவ்வளவுதான்.

‘இரட்டை வானவில்’ சிங்கப்பூரில் மாணவர்களுக்குப் படிப்பை முன்னிட்டு கொடுக்கப்படும் அதீத அழுத்தத்தையும், அதிலும் முன்னுக்கு வந்துவிட்ட இந்தியப் பெற்றோர்கள் தம் பிள்ளைகள்மேல் எடுக்கும் ‘முதல் தரமன்றி வேறில்லை’ என்ற கடுமையான நிலையையும் பதிவு செய்துள்ளது. குடும்பத்தின் சமநிலை குலைந்துபோய் கணவன் மனைவி பிரியும்வரைகூட உந்த இந்த மதிப்பெண்கள் சக்திவாய்ந்தவை என்று சொல்லும் கதை. இக்கதையையும் கவராதவை லிஸ்டில் சேர்த்ததற்கு இரண்டு காரணங்கள்; ஒன்று கிட்டத்தட்ட ஒரேமாதிரி வளர்ப்பில், கல்வியறிவில், குணநலன்களில் காட்டப்படும் தம்பதியில் திடீரென்று கணவன் மட்டும் பிள்ளைகள் கல்வி விஷயத்தில் மிகக்கடுமையாக மாறுவதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை. இது முக்கியமான இடம். இரண்டாவது, மனைவியின் நல்ல அணுகுமுறைக்கு அவளது பெற்றோர்களின் வளர்ப்புதான் காரணம் என்பதை அழுத்திச் சொல்லியிருப்பது. இதுமட்டும்தான் உதவும் என்றால் கணவனுக்கு ஏன் அது உதவவில்லை என்ற கேள்வி எழுகிறது. அவன் பெற்றோர்களும் மென்மையானவர்கள்தான் என்றொரு வரி கதையில் வருகிறது. அவசியமான விஷயத்தைப்பேச எடுத்துக்கொண்டுவிட்டு முக்கியமான இடங்களில் நிறமிழந்த வானவில்லாகத் தோன்றியதால் கவரவில்லை.

இனி கவர்ந்த கதைகள்.

‘கோமாளி’. பள்ளிப்பருவத்தில் தன்னை எப்போதும் கோமாளி என்று பரிகாசம் செய்யும் சக வகுப்பு மாணவி ஜெ.ஊர்மிளாவை அவள் புன்னகையுடன் சகித்துக்கொள்கிறாள். உண்மையில் என்ன காரணத்தாலோ ஜெ.ஊர்மிளாவை இவளுக்குப் பிடித்திருக்கிறது. பல்லாண்டுகள் கழித்து பெங்களூரில் இவள் தற்காலிக வங்கி மேலாளராகப் பணிபுரிய வந்த இடத்தில், வங்கி நேரம் முடிந்து வெகுநேரம் கழித்து நகைக்கடன் வாங்க வருகிறாள் ஜெ.ஊர்மிளா. குழந்தைக்கு வைத்தியச்செலவு என்பதாலும், ஜெ.ஊர்மிளாவை அடையாளம் கண்டுகொண்டதாலும், வங்கி விதிமுறைகளை மீறி, தன் சொந்த ரிஸ்க்கில், இவள் ஜெ.ஊர்மிளாவுக்கு நகைக்கடன் அளிக்கிறாள். இவள் அடையாளம் கண்டுகொண்டதைப் போலவே ஜெ.ஊர்மிளாவும் இவளைக் கண்டுகொள்கிறாள். ஆனால் ஜெ.ஊர்மிளா கேட்கும்போது தான் மதுரைதான் ஆனால் அந்தப்பள்ளியில் படிக்கவில்லை என்று மறுத்துவிடுகிறாள். பக்கத்தில் நிற்கும் சக வங்கி ஊழியர், ‘உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்க’ என்று கதையை முடித்துவைக்கிறார்.

ஒரு மாதிரியான ஃபீல் குட் ஃபேக்டர் உள்ள கதை. ஒருத்திக்குக் கதையில் ஜெ.ஊர்மிளா என்று இனிஷியலோடு பெயர் ஆனால் கோமாளிக்கு நிஜப்பெயர் கதையில் கிடையாது. அன்று ஜெ.ஊர்மிளாவைச் சின்ன விஷயத்துக்குக்கூட வருத்தப்படச் செய்யாமல் விட்டவள் இன்று இருவரும் உள்ள நிலையில் தன் அடையாளத்தை எப்படி வெளிப்படுத்த இயலும்? மேலும், சிலரைக் காரணமின்றி பிடித்துப்போவதும் சிலர்மேல் காரணமின்றி வெறுப்பு வளர்வதும் வாழ்வின் சுவாரஸ்யமான புதிர்களில் ஒன்று. அதை அழகாகப் படம்பிடித்துள்ள கதை.

’38 நாட்களில் வரையப்பட்ட ஒரு சிவப்புப்புள்ளி’ கதையில் முழுநேர குடும்பத்தலைவியான அவள், காமன்வெல்த் நாடுகளிலிருந்து பிரதிநிதிகளை அண்ட்டார்ட்டிகா அனுப்ப ஆட்தேர்வு நடப்பதை அறிந்து, சிங்கப்பூர் சார்பில் கலந்துகொள்ள விண்ணப்பிக்கிறாள். நேர்காணல்களை வெற்றிகரமாகச் சமாளித்து தேர்வாகிவிட்டபோதிலும் மனம் குடும்பத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. தானில்லாமல் வீட்டில் எல்லாம் சரியாக நடக்குமா என்ற கேள்வி அவளைக் குடைகிறது. ஒருவழியாக எல்லாம் நல்லபடியாக முடிந்து, சிங்கப்பூர் கொடியை பனிமலையில் நாட்டி, விமானத்தில் வீடுதிரும்பும்போது கணவன் மற்றும் பிள்ளைகளிடம் என்னெவெல்லாம் விசாரிக்கவேண்டும் என்று பட்டியல்போட்டுக்கொண்டு வருபவள், வரவேற்க வந்திருந்த அவர்களைக் கண்டதும் ‘வெள்ளைப் பனியில் சிவப்புப்புள்ளியாக சிங்கப்பூர் கொடியை நாட்டினேன்’ என்று மட்டும் சொல்கிறாள்.

இக்கதை என்னைக் கவர்ந்தது ஒரு நல்ல குடும்பத்தலைவி ஒரு நல்ல குடிமகளாக, தேசப்பற்று மிக்கவளாகப் பரிணமித்துவிடுவதால் அல்ல. குடும்பப் பராமரிப்பை முழுநேரமாக ஏற்றுச் செயல்படும் பெண்களுக்கு ஓர் உளவியல் சிக்கல் உண்டு. தான் செய்வது குடும்பத்துக்கு அவசியமான வேலைகள்தான் என்றாலும் – தான் இல்லாத போது – அவை எளிதாக இன்னொருவரால் செய்யப்படக்கூடிய வேலைகளே என்ற உண்மை உறுத்திக்கொண்டே இருக்கும். தன்னுடைய அடையாளம், முக்கியத்துவம், தனித்துவம் இவையெல்லாமே கேள்விக்குறிகளாக, வாழ்க்கைப்படத்தில் கடைசிவரை பெரும்பாலும் ஒரு துணைநடிகை பாத்திரத்திலேயே நடித்து முடித்துவிடுவோமோ என்ற ஆதங்கம் இருக்கும். இக்கதையின் நாயகி அந்த வெற்றிடத்தைத்தான் நிறைவுசெய்துகொள்கிறாள். வீட்டின் எல்லா வேலைகளையும் செய்தபோது வீட்டில் ஓரமாகவும், வீட்டைவிட்டு வெளியேறி ஒன்றைச்செய்யும்போது வீட்டின் மையத்துக்கும் ஒரு பெண் வரும் கதை. அதுவே உண்மையும் கூட.

‘மெல்பகுலாஸோ’. தன்னுடன் பள்ளியில் படித்த மெல்பகுலாஸோ ஜெரால்டின் லலிதா ராணி என்ற பெண்ணுடன் இவளுக்கு ஆத்மார்த்தமான நட்பு. கல்யாணத்துக்கில்லாவிட்டாலும் குழந்தை பிறந்ததும் எங்கிருந்தாலும் கூட்டிவந்து காட்டவேண்டும் என்று அந்த வயதுக்கே உரிய அபத்தமான சத்தியங்கள் எல்லாம் செய்துகொண்டபிறகு பிரிந்துபோகிறார்கள். இவள் சிங்கப்பூர் வந்து திருமணமாகி, குழந்தை பெற்று, பல்லாண்டுகள் கழித்து யதேச்சையாக இன்னொரு வகுப்புத் தோழியை சந்திக்கும்போது மெல்பாவின் முகவரி வாங்கிக்கொண்டு அவளைப் பார்க்கத் தமிழகம் போகிறாள். அங்கு மெல்பா திருமணத்திற்குப்பின் கொடுமைகளுக்கு ஆளாகி, மனநோயாளிகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டு, அங்கிருந்து தப்பிச்சென்றதை அறியநேரிடுவதுடன் கதை முடிகிறது.

மெல்பா பாத்திரத்தின் குணநலன்களை எடுத்துக்காட்டும் கதையின் ஆரம்பப்பகுதிகளே இக்கதையின் முடிவில் நம்மைச் சிந்தனைக்குள்ளாக்குகிறது. தன்மேல் சாய்ந்து தூங்கும் அடுத்த சீட்டுக் குழந்தையின் தூக்கம் கெட்டுவிடக்கூடாதென்று இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்காமல் மேலும் பயணித்தவள் மெல்பா. தாய்க்கு உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நட்புக்காக ஒரு அவசரச் சந்திப்பை நிகழ்த்தும் பண்புள்ளவள். மேலே வாந்தி எடுத்துவிட்டவரிடம் கோபப்படாமல், அவருக்கென்ன பிரச்சனையோ என்று அனுதாபப்படுபவள். அவளுக்கு ஏன் இப்படி மோசமான ஒரு வாழ்க்கை அமையவேண்டும் என்ற கேள்வி வாசகரைத் தாக்குகிறது. எது நம் வாழ்வை நிர்ணயிக்கிறது? என்ற ஆதாரக்கேள்வி அது. ‘அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்’ என்ற பழமையான பதில்தான் அதற்கு உண்டு. அதாவது நல்லவர்கள் கஷ்டப்படுவது ஏன் என்ற அக்கேள்வியை ஆராயலாம் என்பதே பதில். மீண்டும் அக்கேள்வியைச் சிறப்பான வடிவத்தில் கேட்டதால் மெல்பகுலாஸோ கவர்ந்தது.

‘நீர்’ கப்பலில் பயணிக்கும் ஒரு கண்டெய்னர் சொல்லும் கதை. அசம்பாவிதமாகத் தனக்குள் மாட்டிக்கொள்ளும் ஓர் ஏழை உழைப்பாளி, பங்களாதேஷின் சிட்டகாங் துறைமுகத்திலிருந்து சிங்கப்பூர் செல்லும் ஐந்து நாட்களும் உயிர் பயத்திலும், குடும்பத்தை நினைத்தும் புலம்பித் தீர்க்கிறான். சிங்கப்பூரில் தான் இறக்கப்படும்போது இவன் உயிர்பிழைத்துவிடுவான் என்று ஆறுதல்கொள்ளும் கண்டெய்னர், அங்கு இது வியட்னாம் போகவேண்டிய கண்டெய்னர் என்று திருப்பிவிடப்படுவதால் கையறு நிலையில் வருந்துவதுடன் கதைமுடிகிறது.

கண்டெய்னர் கதைகொல்லும் கோணம் வித்தியாசமாக இருந்தது. இங்கே ஒரு மனிதன் இருக்கிறான் சீலிட்டு அடைத்துவிடாதீர்கள் என்று தன்னால் ஆனமட்டும் அது அலறிப்பார்க்கிறது. அவன் பெயர் தெரியவில்லை ஆனாலும் மனித உயிர் என்பதால் ஜீவன் என்று கண்டெய்னரே ஒரு பெயர் வைக்கிறது. எப்படியாவது அவன் உயிர்பிழைக்க ஏங்குகிறது. ஒரு கோணத்தில் பார்த்தால் மிகமிகக் கீழ் நிலையிலுள்ள விளிம்புநிலை மனிதர்கள் மேல் ஜடப்பொருட்கள் இரக்கப்பட்டால்தான் உண்டு என்று சொல்லக்கூடிய கதை. சொல்முறைக்காகவும், கோணத்துக்காகவும், தகவல்களுக்காகவும், சிந்தனைக்காகவும் கவர்ந்த கதை.

‘கைகழுவப் (பாடு)பட்டவன்’ கதை ஒரு வரலாற்றுப்புனைவு. 19ம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த ஹங்கேரி மருத்துவர் இக்னாஸ் செம்மல்வெய்ஸின் கதை. மருத்துவர்கள் கைகளைச் சுத்தமாக வைக்காததால்தான் குழந்தை பெற்ற தாயின் மரணம் (கிருமித்தொற்றினால் வரும் காய்ச்சலினால்) நிகழ்கிறது என்று ஊகம் சொன்னவர். கண்ணுக்குத் தெரியாத கிருமிகளைப்பற்றிய மருத்துவ அறிவு ஏற்படாத காலம் அது. அவர் சொன்னதை அன்று அவரால் அறிவியல்பூர்வமாக நிறுவமுடியவில்லை. ஆனால் குளோரின் கலந்த தண்ணீரில் கைகளைக் கழுவி அதன்மூலம் காய்ச்சல் வருவதை வெகுவாகக் குறைத்துக்காட்டியிருக்கிறார். யாரும் கேட்பாரில்லை. இவரது ஆத்திரம் எல்லைமீற, அதிகாரத்தில் உள்ளவர்களைத் தாக்க, மனநோயாளியாகச் சித்தரிக்கப்பட்டு காப்பகத்துக்கு அனுப்பப்பட்டு அங்கே கொடூரமாக அடி உதை வாங்கி உயிர்துறக்கிறார்.

இக்கதையை வாசித்ததும்தான் இவரை அறிந்துகொண்டேன். இதற்குமுன் கேள்விப்பட்டதில்லை. குறும்படங்களும் திரைப்படங்களும் எடுத்திருக்கிறார்கள் இவர் வாழ்க்கையைப்பற்றி. சிலவற்றைப் பார்த்தேன். லூயி பாஸ்டர் பின்னாளில் இவரது முடிவுகளை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க, வரலாறு இக்னாசுக்கு இழைத்த துரோகம் மனிதகுலத்தின் முகத்தில் அறைந்திருக்கிறது. ‘கைகளைச் சுத்தமாகக் கழுவச்சொன்னேன் அவ்வளவுதானே…அதைச்செய்து உயிர்களைக் காப்பாற்றுங்களேண்டா…’ என்று கதறும் இக்னாசின் குரலை மீண்டும் ஒலிக்கச்செய்ததால் கவர்ந்த கதை. இலக்கியத்தின் முக்கியமான ஒரு பணி வரலாற்றில் மறைந்துபோன, மறந்துபோன பக்கங்களை உழைத்து மீட்டுக்கொண்டு வருவதும்தான் என்று நினைவுபடுத்தும் கதை.

‘100 பிழைகளுடன் ஒரு காப்பியம்’ கதை ஓர் உரையாடல். புலவர் பொன்னையனும் ஒரு நவீனத் தமிழ் இளைஞனும் உரையாடுகிறார்கள். நாவலை அவர் காப்பியம் என்றுதான் சொல்கிறார். எழுத்துத் தமிழில் மலிந்துள்ள பயன்பாட்டுப் பிழைகளைப் பற்றிப்பேசுகிறார். தான் பிழையின்றி எழுதித்தந்தாலும் அதை மெய்ப்பு பார்ப்பவர்கள் திருத்துவதாக எண்ணிக்கொண்டு பிழையாக்கிவிடுகிறார்கள் என்று ஆதங்கப்படுகிறார். ஆனால் அவர் பழைய பஞ்சாங்கமாகவும் இல்லை. நவீனத் தமிழிலக்கிய வாசிப்பும் அவருக்கு இருக்கிறது. ஒரு பதற்றத்துடன் உரையாடலை ஆரம்பிக்கும் இளைஞன் தன் தாய்மொழியைக் குறித்த ஒரு நெகிழ்வான இலக்கிய அனுபவத்துடன் வீடுதிரும்புகிறான்.

தமிழின் அழகை உணர்ந்து ரசிக்கும்போது ஏற்படும் இன்பமும், தனக்குத் தெரியாமலேயே தமிழார்வம் தன்னுள் மெல்ல இறங்குவதை உணர்ந்து புத்துணர்ச்சிபெறும் கணமும், மீண்டும் மீண்டும் அவ்வனுபவத்தை அடையவேண்டும் என்ற தவிப்பில் அவரோடு அடிக்கடி உரையாட விரும்புவதும், கிட்டத்தட்ட தன் அடையாளத்தை மீட்டெடுத்துவிட்ட ஒரு நிறைவும் அந்த இளைஞனின் பாத்திரத்தில் நேரடிப் பிரச்சாரமாக அல்லாமல் அழகாக வடிக்கப்பட்டுள்ளது. இன்று இணையத்தில் தமிழில் புழங்கும் இளையர்கள் பலருக்கும் இவ்வாறு சில அனுபவங்கள் இருக்கலாம். எனவே இக்கதை பிடிக்கலாம். எனக்கும் பிடித்திருந்தது.

‘தாத்தி’ ஓர் அறிவியல்புனைவு. குழந்தையை கவனித்துக்கொள்ள மனிதரைப்போலவே இயங்கும் இயந்திர வீட்டுதவியாள் கவிதா. அவளோடு குழந்தை ஒன்றிவிடுகிறது. ஒரு விபத்தில் கவிதா சிக்கிக்கொண்டு செயலிழந்துவிடுகிறாள். குழந்தையைப் பொறுத்தவரை கவிதா இறந்துவிட்டாள். அந்த அதிர்ச்சியிலிருந்து மீளமுடியாமல் உடல்நிலை மோசமாகிறது குழந்தைக்கு. கவிதாவைப்போலவே ஒரு பழைய மாடலைக் கண்டுபிடித்துப் பெற்றோர்கள் கூட்டிவந்ததும், ஒரு நொடி மகிழ்ச்சியடையும் குழந்தை, மறுகணம் பேய் பேய் என்று அலறுவதுடன் கதை முடிகிறது.

அறிவியல் புனைவுகளில் கற்பனைகளைக் காட்டிலும், விஞ்ஞான அறிவைக்காட்டிலும் இது எதிர்காலத்தில் நடக்கக்கூடும் என்று வாசகர் நம்பவிழைவது முக்கியமான அம்சம். இக்கதை அதில் வெற்றிபெற்றுள்ளது. சிங்கப்பூரில் எதிர்காலத்தில் மனிதரைப்போலவே செயல்படும் ஆனால் மனிதர்களின் குற்றம்குறைகளில்லாத, ஆற்றல் மிகுந்த, பிரைவசியை பாதிக்காத, இயந்திர வேலையாட்கள் நிச்சயம் கிடைக்கக்கூடும். ஏற்கனவே ஜப்பானில் வயதானவர்களுக்குத் துணையாக இயந்திர உதவியாட்கள் இருக்கிறார்கள். எதிர்காலத்தைக் குறித்த அதீத கற்பனைகள் அறிவியல் வளர்ச்சியின் ஆதாரமான செயல்பாடு. அதை இலக்கியத்துக்குள்ளும் கொண்டுவருவது உற்சாகமானது. ஆகவே பிடித்திருந்தது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வாசிக்கப் பரிந்துரைக்கக்கூடிய ஒரு தொகுப்புதான் மெல்பகுலாஸோ.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்