ஜெயசுதா சமுத்திரன் – நேர்காணல்

0
1006

சீடார் தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலைக் கல்வி, இராஃபிள்ஸ் பெண்கள் உயர்நிலைப்பள்ளி
மற்றும் இராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரி படிப்புகளுக்குப் பிறகு சிங்கப்பூர்த் தேசியப்
பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையிலும் தெற்காசிய கல்வித் துறையிலும் பட்டம்
பெற்றவர். தற்போது ஸ்பிரிங் சிங்கப்பூர் அமைப்பில் நிர்வாகியாக பணிபுரிகிறார்.

வளர்தமிழ் இயக்கத்திலும் இந்திய ஊடக நிகழ்ச்சிகள் ஆலோசனைக் குழுவிலும் தேசிய இளையர்
மன்றத்தின் (Young Change Makers) குழுவிலும் நியமன உறுப்பினராக இருக்கிறார்.

1. தங்கள் வானொலி அனுபவம் பற்றி……
வானொலியில் நிகழ்ச்சிகளைப் புதுமையாக தொகுத்து வழங்குவது ஓர் இனிய அனுபவம்.
நேயர்களோடு கலகலப்பாகப் பேசுவது மகிழ்ச்சிகரமானது. பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க
வாய்ப்பளித்த ஒரு பணி. கடமையுணர்வு, மொழிவளம், உச்சரிப்பு, படைப்பாக்கம், இவற்றை
இருபது வயதிலிருந்து எனக்குக் கற்பித்த வானொலிக்கு நன்றிகள் பல.

2. வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அகல்யா’ நாடகத்தில் ஜெயசுதா அகல்யாவான
கதையைச் சொல்லுங்கள்.

தற்செயலாக தொலைக்காட்சியில் வாய்ப்பு கிட்டியது. மாணவராக மேடை நாடகங்களில்
நடித்ததுண்டு, இருப்பினும் எவ்வித முறையான பயிற்சியும் பெற்றதில்லை. கதாபாத்திரமோ
நாடகத்தொடரின் தலைப்புக் கதாபாத்திரம். அதற்கும் மேலாக, என் இயல்புக்கு வெகு எதிர்மாறான
பண்புகள் படைத்த கதாபாத்திரம். “நீ ஜெயசுதா அல்ல. அகல்யா”, என நாடக இயக்குனர் அடிக்கடி
நினைவுறுத்தினார். உண்மையில் தமிழ்நாட்டிலிருந்து வந்த பெண்தான் என்று நினைக்கும்
வகையில் அகல்யாவின் நடை, உடை பாவனை யாவும் ஜெயசுதாவின் இயல்புகள்தாம் என பலரும்
நம்பிவிட்டார்கள்.

நான் ஒரு பெண்ணியவாதி, விமர்சனப் போக்குடன் எதையும் பார்வையிடுபவள், எதையும் யாரோ
பெரியவர், பெற்றவர், மற்றவர் சொன்னார் என்பதற்காக நிச்சயம் கட்டுப்படாதவள், நிறைய
பேசுவேன், வாதிடுவேன், வானொலியில் பகுதி நேர படைப்பாளர் வேறு. இதில் ஓர் அப்பாவியாக
நடித்தது உண்மையில் வேடம் இடுவது போல்தான் இருந்தது. மாபெரும் கற்றல் பயணமது. என்னை
ஏதோ ஓரளவுக்கு நடிக்க வைத்த தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள் அனைவரும் என்
நன்றிக்கு உரியவர்கள். ஊடகத்துறை என்றால் பொதுமக்களின் விமர்சனத்திற்குப் பாத்திரமாவது

நிச்சயம். கர்வப்படாமலும், காயப்படாமலும், அடக்கத்தோடும், மாற்றத்திற்கு உடன்படும்
ஆர்வத்தோடும் இயங்கக் கற்றுக்கொண்டேன். கற்றல் தொடர்கிறது.

3. வாசிப்பு பழக்கம் உண்டா? எந்த எழுத்தாளர்களை விரும்பி படிப்பீர்கள்?
ஆங்கிலத்தில் ச்சிமமாண்டா ங்ஙொஸீ அடீச்சீ, ஹருக்கி முராக்காமி, ஈயன் மெக்ஈவன், ஜும்பா
லாஹிரி ஆகியோரது எழுத்துக்களை விரும்பி படிப்பேன்.
தமிழில் சு. தமிழ்ச்செல்வி, அசோகமித்ரன், கல்கி, சாண்டில்யன், பாலகுமாரன், எஸ் ராமகிருஷ்ணன்
ஆகியோரை வாசிக்கிறேன்.

4. தற்போது என்ன வாசித்து கொண்டிருக்கிறீர்கள்?
உயர்நிலைப்பள்ளிப் பருவத்திலிருந்து பல்கலைக்கழகப் பருவம் வரை தமிழ் வரலாற்று
நாவல்களையும் வைரமுத்து கவிதைத் தொகுப்புகளையும் வாசிக்கும் பழக்கம் இருந்தது. அதன் பிறகு
தமிழ் நூல்கள் வாசிப்பது அரிதாகிவிட்டது. தற்காலத் தமிழ் நூல்களை அன்றெல்லாம் அதிகம்
வாசித்ததில்லை. வாசிக்க விரும்பியதில்லை என்பதே உண்மை. 'ஏ' நிலைத் தேர்வுவரை
தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் பயின்ற எனக்கு, தற்காலத் தமிழ் நூல்களை வாசிக்கும்பொழுது
அவற்றின் பாடுபொருள்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. வேற்றுத் தமிழ்ச்
சமுதாய நாடித்துடிப்பினை நூல்களினூடே உள்வாங்கும் பக்குவம் எனக்கு அன்று இல்லை. மேலும்,
அந்த நூல்களில் தமிழாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலம் மலிந்திருந்தது. வாசிப்பதற்கு எரிச்சலாகவும்
நல்ல தமிழ் அல்லவே என்றும் அன்று பத்தொன்பது வயதில் தோன்றியது. அதுவே பல்கலைக்கழகப்
பருவம் வரை நிலைத்திருந்தது.
பல்கலைக்கழகப் பருவத்தின் இறுதி ஆண்டுகளில், தற்காலத் தமிழ் எழுத்தாளர்கள் பலரைப் பற்றிப்
பல செய்திகளை அறிந்துகொண்டேன். அவர்களுடைய நூல்களை வாசித்தே ஆகவேண்டுமென்று
அண்மையில் தான் அதிக தற்காலத் தமிழ் நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் வாசித்து
வருகின்றேன். தமிழ்ச்செல்வியின் ‘கண்ணகி’யை வாசிக்கத் தொடங்கவிருக்கின்றேன். ‘கற்றாழை’
வாசித்தாயிற்று. எஸ். ராமகிருஷ்ணனின் ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ நூலை வாசித்து
வருகின்றேன்.

5. தங்கள் பொழுதுபோக்குகள் என்ன?
யூடியூப், ஃபேஸ்புக், ஏனைய இணையச் செய்தித்தளங்கள், இணையத்தில் பல்கி வரும் சமூகச்
சிந்தனைக் கட்டுரைகள், உலக அரசியல் கட்டுரைகள்.
நல்ல உணவைத் தேடிக் கண்டுபிடித்து (சிங்கப்பூரையும் தாண்டி) உண்டு மகிழ்வது. காலாற 10-15
கிலோமீட்டர் நடப்பது.

6. தங்கள் எதிர்கால கனவு என்ன?
இவ்வுலகில் எப்படியாவது ஓர் ஆக்ககரமான முறையில் என் சுவட்டைப் பதித்துவிட வேண்டுமென்ற
துடிப்பு என்னுள் பல காலமாக இருந்து வருகின்றது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பலவற்றைச்
சமூகத்திற்காகச் சாதித்துவிடவேண்டும். அதே காலகட்டத்தில், என்னில் நானே பெரிய அளவில்
முதலீடு செய்யவேண்டும் என்ற இலக்கும் உண்டு. கனவுகளை மனம் திறந்து கூறிவிட்டால், அதுவும்
கனவைக் கேட்டோரிடமிருந்து மலைப்பையோ பாராட்டுகளையோ பெற்றுவிட்டால், பெரிதாகச்
சாதித்துவிட்டோம் என்பது போன்ற கர்வம் மனதைக் கவ்விக்கொள்கிறது. கனவுகளும் கூண்டு
திறந்த பறவைகளாக எங்கோ பறந்து சென்று விடுகின்றன. நனவாகும் வரை அவை என்னுள்ளேயே
ஊறிக் கிடக்கட்டும்; இன்னும் எட்டிவிடவில்லையே என என்னை நெருடிக்கொண்டே இருக்கட்டும்.
அதுவரை மனக்கூண்டுக்குத் திரையோடு பூட்டு.

7. 2014 ஆம் ஆண்டு தமிழ் மொழி மாதத்தை முன்னிட்டு நீங்கள் ஒரு நிகழ்ச்சி நடத்தினீர்கள். நான்
ஒரு பார்வையாளராக வந்திருந்தேன். அருமையான நிகழ்ச்சி. அதன்பிறகு நிகழ்ச்சிகளை நடத்தாமல்
போனதற்கு ஏதாவது காரணம் உண்டா?
'பிஸி' என்பது உண்மை, காரணம், சாக்குப்போக்கு என இவற்றையும் தாண்டி என் போன்ற
பலருடைய தாரக மந்திரமாகிவிட்டது என்பதை இந்தக் கேள்விக்கான பதிலுக்குரிய
முன்னுரையாகக் கூறிவிடுகிறேன். இந்தக் கேள்விக்குச் சரியான விடை, நேரமும் காலமும் சரியாக
அமையவில்லை, நானும் அமைத்துக்கொள்ளவில்லை. இதுதான் இளம் வயதில் புறப்பாட
நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபட்டவர்கள் வேலையுலகில் புகுந்தவுடன் அலுவலுக்கப்பால்
பலவற்றில் கலந்து கொள்ளாதமைக்குத் தகுந்த காரணம் என்று கருதுகிறேன். நேரமோ, காலமோ
ஏன் சந்தர்ப்பமும் கூட இயற்கையாக அமையாது. நாம்தான் அமைத்துக் கொள்ளவேண்டும்.
இல்லாவிடில் காலச்சுழற்சியே வாழ்க்கைப் பாதையின் திசைகாட்டியாகிவிடும். செய்வேன்,
பொறுத்திருந்து பார்க்கவும்.

8. ‘’இளையர்களால் இளையர்களுக்காக’’ என்ற அடிப்படையிலான நிகழ்ச்சிகள் குறைவாக
உள்ளன. ஓர் இளையராக இதைப்பற்றி உங்கள் பார்வை என்ன?

பல்கலைக்கழகத்திற்கு அப்பால் எவ்வித தகுந்த தமிழ் இளையர் அமைப்பும் இல்லை. ஏன்? வேலை,
குடும்பம், நண்பர்கள், இளமை என வாழ்க்கை ஓடிவிடுகின்றது. இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள்
பெரும்பாலானவை இளையர்களை ஈர்க்க விரும்புபவை. ஆனால், இளையர்களின் நாடித்துடிப்பை
அதிகம் உணராதவை. இளையர்களின் ஈடுபாட்டைக் குறிப்பிட்ட பருவத்துடிப்பாகப் பரவலாகக்
கண்ணோட்டமிடுகின்றனர். மாற்றங்களை கண்காட்சிப் பொருள்களாக அவ்வப்போது

பெருமிதத்துடன் காட்டிப் பெயர் வாங்குபவர்கள் அவற்றை உள்ளூற ஏற்பதில்லை; அதனால்
அமைப்புகளும் அவற்றை உள்வாங்கி மாறுவதில்லை.
தமிழைத் தொய்வின்றிப் பேசாத பல சிங்கப்பூர் இளையர்கள் இருக்கின்றனர். ஏன்? தமிழ்
முதல்மொழியல்ல, இரண்டாம் மொழி. கால்வாசிப் பேருக்கு தமிழ் என்பது தாய்மொழிகூட இல்லை
– இன்னோரன்னப் பிற தென்னிந்திய மொழிப் பின்புலம் கொண்டவர்கள். ஆகவே,
தமிழுலகத்திலேயே தோய்ந்திருக்கும் பெரும்பாலான தமிழ்ச் சமூக அமைப்பின் உறுப்பினர்களும்
பங்கேற்பாளர்களும், இந்த இளையர்களிடமிருந்து கணிசமாக வேறுபடுகின்றனர். அந்த
வேற்றுமையை இளையர்கள் உணர்கின்றனர். அதனால், தங்களுக்கு பழக்கமான பிரதேசத்திலேயே
இருந்து மகிழ்வுறுகின்றனர்; வெற்றிகளையும் தேடிக்கொள்கின்றனர்; தமிழ் அமைப்புகளின் பக்கம்
தடம் பதிப்பது அரிது. ஆக, இளையர்களே இளையர்களுக்காக ஒரு தமிழ் அமைப்பை
நிறுவவேண்டும்; அதில் செயலாக்கம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தலைமைத்துவம்
பெரிதுபடுத்தப்படக்கூடாது; அதனால் விளையும் அரசியல் இயன்றவரை களையப்படவேண்டும்.

9. தமிழ் சோறு போடுமா? போடாதா?
போடாது. பொதுவாகப் பெரும்பான்மையினருக்குப் போடாது. இது நிதர்சன உண்மை. இதற்கு
மாறாகக் கூறப்படும் எதுவும் பொய்.
தமிழ் வர்த்தக மொழியல்ல. தமிழ் தெரிந்தால்தான் இந்தியாவுடன் அல்லது தமிழகத்துடன் வர்த்தகம்
புரியமுடியும் என்பதில்லை. ஆங்கிலம் தெரிந்தால் போதும். கூட கூடப் போனால் ஹிந்தி மொழி –
அது கூட பெருமளவில் தேவையில்லை. ஆங்கிலம் போதும். உலக மேடையில்: ஆங்கிலம் சோறு
போடும், சீனம் சோறு போடும், தென்கிழக்காசிய மொழிகள், சில ஐரோப்பிய மொழிகள்,
அரபுமொழி என வளர்ந்துவரும் உலக வட்டாரங்களின் வழக்குமொழிகளே சோறுபோடும்
மொழிகளாக உள்ளன.
தமிழாசிரியர்களையோ, தமிழ் ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களையோ, தமிழ்
எழுத்தாளர்களையோ சுட்டிக்காட்டி, தமிழ் சோறு போடுகின்றது எனக் கூறுவது போலிவாதம்.
பெரும்பாலான தமிழ் கூறும் நல்லுலகிற்கு தமிழ் சோறு போடாது. ஆனால், மொழி
வர்த்தகத்திற்குரியது மட்டுமல்ல. அது அடையாளக்குறி, பண்பாட்டுக்குறி, கலாசாரக்குறி,
வரலாற்றுக்குறி.
எத்தகைய துறையில் ஈடுபட்டிருப்பினும் தமிழ் அடையாளத்தை ஏதாவதொரு வகையில்
பேணுவதையோ, வெளிப்படுத்துவதையோ, கொண்டாடுவதையோ, அங்கீகரிப்பதையோ வெகு
இயல்பான செயல்பாடுகளாக கொள்ளவேண்டும். தமிழ் சோறு போடாது. பல வகைகளில்
ஆங்கிலமும் இன்னோரன்னப் பிற வர்த்தக மொழிகளுமே நமக்குச் சோறு போடும்.

ஆனால், வெறுஞ்சோறு ஏழ்மையின் அடையாளம். உண்ணும் உணவிற்கு நிறத்தையும்
சுவையையும் ஊட்டச்சத்தையும் சேர்ப்பவை தாய்மொழியும் அதையும் தாண்டிய பிற
அடையாளக்குறிகளும் பண்பாட்டுக்குறிகளுமே. செழுமையான வாழ்க்கைக்குச் சோறு மட்டும்
போதாது, கறியும் கூட்டும், ஏன் அப்பளமும் ஊறுகாயும் கூட வேண்டும்.

10. இளையர்கள் தமிழில் பேசுவது குறைந்துவிட்டது என்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதற்குப் பெற்றோர் முதல் காரணம். என் பெற்றோர் இருவருமே சிங்கப்பூரில் பிறந்து
வளர்ந்தவர்கள். என் மொழி வளர்ச்சியில் அதிக பங்காற்றியவர் என் தாயார். ஆங்கிலம் முதல்
மொழி, பொதுமொழி என்பதனால் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவது இயல்பு. இதை நன்கு
புரிந்திருந்த என் தாயார் "எனக்கு ஆங்கிலம் தெரியாது. என்ன கேட்பதானாலும் தமிழில் தான்
கேட்கவேண்டும்," என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். இதனால், நானும் என் தம்பியும் தமிழில் பேச
வேண்டியிருந்தது. எந்த ஒரு புது ஆங்கிலச் சொல்லையும் தமிழில் மொழிபெயர்த்து,
ஆங்கிலத்தையும் தமிழையும் என் தாயார் ஒருங்கே கற்பிப்பார். ஆங்கில மொழிவளத்தைக்
கற்பிப்பதிலும் அவர் சளைத்தது கிடையாது. இது எனக்கும் என் தம்பிக்கு சீரியதோர் அடித்தளத்தை
அமைத்தளித்தது.
நான் தமிழ் ஊடகத்துறையிலும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் பங்கேற்பதால் என் தமிழ்வளம்
பள்ளியையும் தாண்டி தொடர்ந்து செழித்துள்ளது. ஆக, நான் சிறந்த உதாரணமல்ல. நான் ஒரு
விதிவிலக்கு. ஆனால், என் தம்பிக்குத் தமிழ்ப் பற்று அதிகம் கிடையாது. தமிழ் தொடர்புக்குரிய
தாய்மொழி என்றெண்ணும் நிதர்சனப் போக்குடையவர். பள்ளியில் இரண்டாம் மொழியாகத் தமிழ்
கற்ற பல சராசரி சிங்கப்பூர் இளையர்களுள் ஒருவர். இருப்பினும், இன்றுகூட சிறப்பாகத்
பேச்சுத்தமிழில் உரையாடுவார், நல்ல தமிழில் எழுதுவார். இதுவே என் தாயார் அமைத்தளித்த
குடும்பச்சூழலின், குடும்ப வளர்ப்பின் வெற்றி. ஆனால், இது பல குடும்பங்களில் கிட்டா கனியாக
இருப்பதற்கு இருமொழித் திறனைப் பயிற்றுவிக்கப் பெற்றோர் தவறுவதே காரணம். தமிழுணர்வு
பெற்றோருக்கு முதலில் இருக்கவேண்டும்.
ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு கிராமமே தேவை என்பது ஆப்பிரிக்கப் பழமொழி. தமிழாசிரியர்கள்,
தமிழ்ச் சமுதாயம் இரண்டும் பெற்றோருக்கடுத்த முக்கிய பங்குதாரர்களாக இருக்கின்றன. என்னிடம்
புள்ளிவிவரங்களோ, ஆய்வோ கிடையாது. என் நட்புவட்டத்தையும் நான் சந்தித்தவர்களையும்
உதாரணங்களாகக் கொண்டு என் அனுமானத்தை முன்வைக்கிறேன். கணிதம், ஆங்கிலம்,
வேதியியல் பாடங்களில் சிரமப்படும் மாணவர்களைக் குறையுள்ளவர்களாகக் கருதாமல்
அப்பாடத்தில் தேர்ச்சி பெறுவதற்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தமிழ்மொழியிலோ
சற்று வேறுபட்ட நிலை உள்ளதைக் கண்டும் கேட்டும் இருக்கிறேன். ஒரு தமிழ் மாணவன் தமிழ்
பேசத் தயங்கினாலோ, தமிழ் வரவே இல்லை என்றாலோ, தமிழ் அடையாளத்தை

வெறுத்தொதுக்கும் நபராக கோடிட்டுக் காட்டப்படுவதுண்டு. தமிழில் சிறக்கும் மாணவர்கள்
உயர்பீடத்தில் வைக்கப்பட்டு புகழப்படுவதுமுண்டு.
தமிழ்மொழியைப் பாடமாக அல்லாமல் ஓர் அடையாளக்குறியாக உணர்த்தும் முயற்சியில் சில
ஆசிரியர்கள் அதைப் பாடமாகப் பார்க்கும் மாணவரின் நிதர்சனத்தைக் கண்டுகொள்ளத்
தவறிவிடுகிறார்கள். இதனாலேயே, தமிழ் கற்றல் அனுபவம் கசந்துவிடுகின்றது. அக்கசப்புணர்வே,
எனக்குத் தெரிந்த கணிசமான எண்ணிக்கை கொண்ட இளையர்கள் தமிழில் பேசத் தயங்குவதற்கு
முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தலைசிறந்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள், அவர்களிடம்
பயிலும் நல்வாய்ப்பை நானும் பெற்றிருக்கின்றேன். இருந்தாலும், மேற்கூறிய என் அனுமானத்தை
வெளியிட வேண்டுமென நினைக்கின்றேன். மீண்டும், மீண்டும் நான் கேட்கும் உண்மைக் கதைகளே
இதற்குக் காரணம்.

11. ஏன் மொழி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இளையர்கள் வருவதில்லை?

எல்லாம் தமிழில் உண்டு. எல்லாம் தமிழ்க் கலாசாரத்தில் உண்டு. அகழ்ந்தெடுத்துப்
பொருள்கண்டால், அனைத்துப் பொருள்களும் தமிழில் உண்டு என பறை அறைவிக்கும் மொழி
நிகழ்ச்சிகளே தமிழுலகில் இன்றும் மலிந்திருக்கின்றன. சரி, அனைத்தும் தமிழில் இருந்தால் ஏன்
அவற்றில் கால்வாசியாவது நடைமுறை உலகில் கூறப்படுவதில்லை என்று கேள்வி எழுப்பினால்,
ஆங்கிலமோகம், காலனித்துவம் என காரணங்கள் கூறப்படுகின்றன. காலனித்துவத்தின் தாக்கத்தை
நாம் அடையாளப்படுத்திக்கொள்வது முக்கியம்தான். ஆனால், மிகைக்கூற்றுகளைக் காலனித்துவம்,
மறைக்கப்பட்ட உண்மைகள் எனக் கூறுவது போலிவாதம். அதிலும், ஒரு சில மேல் நாட்டவர்கள்
நடத்திய ஆராய்ச்சிகளை, தன் கூற்றுக்கு ஏற்புடைய வகையில் தேர்ந்தெடுத்து, ஆதாரம் காட்டும்
வாதங்கள் பற்பல. இதிலும் ஒரு காலனித்துவ மயக்கம் உண்டு என்பதைக் கண்டுகொள்ளத்
தவறிவிடுகின்றோம்.

எடுத்துக்காட்டுக்கு, அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று இருக்கின்றது. சமய நூல்களைப் புரட்டி அதில்
ஒரு பத்தியைக் காண்பித்து, சமய நூலில் ஏற்கனவே இந்தக் கண்டுபிடிப்பு இருந்திருக்கின்றது எனக்
கூறுபவர்கள் உண்டு. இலக்கியம் என்பது பல பொருள்களை ஒருங்கே அளிக்கவல்லது. அதன்
இயல்பே அப்படித்தான். ஆனால், அத்தனை விளக்கங்களும் உண்மையாகிவிட முடியாது. எது
அந்தந்தச் சூழலுக்கு பொருத்தமானதோ, நன்மை பயப்பதோ, அதையே இலக்கியத்தின் உட்பொருள்
விளக்கமாகக் கொள்கின்றோம். பல சமய நூல்கள் இப்படித்தான் தெளிவுரை கண்டு வருகின்றன,
உலக அமைதிக்காக, நடைமுறையோடு இயைந்து போவதற்காக. மொழியில் கூடப் பேரினவாதம்
கூடாது. தமிழுலகம் வெற்றிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடாது. நடைமுறை உலகத்தோடு

ஒட்டி ஒழுகவேண்டும். பன்மொழி உலகத்தில் எம்மொழியே அனைத்தையும் விடச் சீரியது
என்பதைத் தனிப்பட்ட கருத்தாகப் பாரதிதாசன் முன்வைத்தார். அதை நடுநிலைத் தீர்ப்பாக நாம்
முன்வைக்க முடியாது, முன்வைக்கவும் கூடாது. இளையர்கள் நிதர்சனவாதிகள், குறிப்பாக
சிங்கப்பூரில் சிறும்பான்மையினர் என்பதனால் தமிழல்லாத சமுதாயத்துடனே
நெருங்கியிருப்பவர்கள். அவர்களை ஈர்ப்பதற்குத் தமிழுலகம் புதுப் பரிமாணம் பெறவேண்டும். சிலர்
இதைச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள் – குறிப்பாக மேடை/தொலைக்காட்சி நாடகவாதிகள்,
இசைக் கலைஞர்கள். பிறர் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தமிழுலகம் மிகுந்த முற்போக்குடன்
செயல்பட்டால்தான் இளையர்கள் தமிழோடு ஏதோ ஒருவகையில் பயணிப்பர்.

12. இனிவரும் காலங்களில் தாய்மொழி மற்றும் பண்பாட்டைப் பற்றிய புரிதல் இளையர்களிடையை
எவ்வாறு இருக்கும் என்று எண்ணுகிறீர்கள்

தாய்மொழி என்பதே காலப்போக்கில் பின்தங்கியதொரு சிந்தனையாக மாறிவிடும் என்று
நினைக்கின்றேன். கலப்புத் திருமணங்கள், வரம்பற்ற உலகம், பன்மொழிப் புலமை இவை யாவும்
உலகின் நிலையாக இருக்கும். இதில், மொழியைத் தாய்மொழி என்பதற்காக வாழவைத்துக்
கொண்டிருத்தல் பிற்போக்காகிவிடும். மொழியின் நவீனத்துவமே அதன் உயிர்நாடியாக இருக்கும்.
அதன் பழமையை நவீனத்துவத்துடன் பாராட்டி சீராட்டினால் ஒழிய அம்மொழி பழங்காலத்திலேயே
பின்தங்கிவிடும். சிங்கப்பூரில் தமிழை வாழவைக்கும் கட்டமைப்புகளை அரசாங்கத்தின்
அரவணைப்பு அளித்திருக்கின்றது. அந்த அரவணைப்பு நீடித்திருக்கும் என அரசாங்கத் தரப்பினர்
அடிக்கடி வாக்கு கொடுத்தாலும், வயிற்றில் பால் வார்த்துவிட்டார்கள் என அந்தந்த வேளையில்
மகிழ்ச்சி கண்டு, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால், மாறிவரும்
பொருளாதாரத்திற்கேற்ப உருமாறிவரும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில்,
தமிழோடு சேர்ந்து வேறு மொழியும் அதிகாரத்துவ மொழியாக அரவணைக்கப்படும் என்பது என்
அனுமானம். இந்த நிலை தமிழுக்குரிய இடத்தை பாதிக்காது; ஆனால், அதன் பிரத்தியேகத்தைக்
குறைத்துவிடும். இதைக் கூடுமான வரை தவிர்க்கவேண்டுமென்றால், என் தலைமுறை இளையர்கள்
தமிழோடு பயணிக்கவேண்டும். அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் சமூக அமைப்புகள் அதற்கான
தளங்களை வெகு விரைவில் கூடுதலாக அமைத்தளிக்க வேண்டும். இளம் பெற்றோராகி வரும்
இளையர்கள் தம் பிள்ளைகளுக்குத் தமிழூட்டவேண்டும்.

13. மொழியை வைத்து அரசியல் செய்யும் அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதைப் பற்றிய
உங்கள் நிலைப்பாடு என்ன?

அரசியல் ஒரு பக்கம். பெண் ஒருவர் முன்வந்து மறுத்துப் பேசினால், ‘திமிர்’ என்று பெண்ணுக்கு
உரித்ததாகிவிட்ட தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தி, காதுகொடுத்து கேட்காத போக்கும் பரவலாக
நிலவுகின்றது. மொழியில் என்றும் அரசியல் இருக்கும், இருக்கவே செய்யும். அதை மாற்றுவதற்கு
ஒரே வழி, தடித்த தோலுடன் வந்த வேலையில் கண்ணுங்கருத்துமாகவும் முற்போக்குடனும்
ஈடுபட்டு, இளையர்களை நிலைத்த வகையில் தமிழ்பால் கொண்டு வருவதில் வெற்றி காண்பது.
தனிமரம் தோப்பாகாது. அறிவுரைஞர்கள் தேவை. ஆலோசகர்கள் தேவை. பழுத்த அனுபவம்
கொண்டவர்களும் தேவை. ஆனால், இவற்றிற்கும் மேலாக, தீரா தன்முனைப்பு முக்கியத் தேவை.

14. உங்களை எவ்வாறு அடையாளப்படுத்தி கொள்ள விழைகிறீர்கள்? தமிழச்சியாகவா அல்லது
உலகக் குடிமகளாகவா? ஏன்?

உலகக் குடிமகள். பெண்ணியவாதி. விமர்சனச் சிந்தனையாளர். தமிழைப் பொறுத்தவரை
தமிழ்மொழியையும், தமிழுணவையும் பெரிதும் விரும்புபவர். தமிழ்ப் பண்பாட்டிலும் கலாசாரத்திலும்
படர்ந்திருக்கும் ஆணாதிக்கப் போக்கையும் பிற்போக்கையும் கிஞ்சிச்சிற்றும் விரும்பாதவர், அதை
மாற்ற முனைபவர். ரத்தத்தில் தமிழ் ஓடுகின்றது என்றெல்லாம் சொல்வது எந்த அளவுக்கு உண்மை
என்று அப்படிச் சொல்பவர் எல்லோரும் மரபணுச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டால்தான் தெரியும்.
தமிழரானவர்கள் எத்தனையோ பேர் இருக்கும் போது, தமிழர்கள் எனில் தமிழ்மொழி பேசுபவர்கள்,
அல்லது அந்த அடையாளத்தை முன்னிலைப்படுத்துபவர்கள் என்றே கொள்வேன்.

15. கலை மற்றும் இலக்கிய செயல்பாடுகளில் மற்ற மொழிகளோடு சேர்ந்து செயல்படாமல் தமிழ்ச்
சமூகம் தனித்தீவாக இயங்குவதை எப்படி பார்க்கிறீர்கள்? இது ஆரோக்கியமான சூழல்தானா?

இது நிச்சயமாக ஆரோக்கியமற்ற நிலைதான். பரிணாம வளர்ச்சியில் அறிவியல் தோய்ந்த
நம்பிக்கை எனக்குண்டு. அதை ஒரு கருத்துப்படிவமாகவும் பார்க்கின்றேன். ஒரு சிறு உயிர்ம
வட்டற்திகுள்ளாகவே இனப்பெருக்கம் கண்டால், காலப்போக்கில் நோயினாலும்
உடற்குறைகளினாலும் பீடிக்கப்படுவது அவ்வினம்தான். ஆனால், அந்த உயிர்ம வட்டம்
விரிவுபடுத்தப்பட்டால், அவ்வினம் மாற்றத்தோடு ஆரோக்கிய நிலைத்தன்மையும் பெறுகின்றது.
தன் மொழி, தன் இனம், தனக்கென்று ஓர் உலகம் என வாழும் சமுதாயங்கள் வெற்றுவெளியில் சில
ஆண்டுகள் இயங்கி, சரித்திரத் தூசு படிந்து ஒடுங்கிவிடுகின்றன. இது வரலாற்று உண்மை. தமிழ்
உலகமொழிகளுள் ஒன்றாக வாழ வேண்டுமென்றால், அது தமிழரல்லாதவரையும் ஏதோ ஒரு
வகையில் ஈர்க்கவேண்டும். கொரிய மொழி இதற்கொரு நல்ல சான்று. தமிழ்கூறும்
நல்லுலகிற்கு தற்காலத்தன்மையும் முற்போக்கும் வேண்டும்.

16. உங்களைப் போன்ற துடிப்பான இளையர்கள் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கிறீர்கள்.
இந்திய சமூகத்திற்கு பயனளிக்க கூடிய எதிர்கால திட்டங்கள் எதுவும் மனதில் இருக்கிறதா?
பல்கலைக்கழகத் தமிழ் அமைப்புகளில் ஈடுபட்டு பட்டம் பெற்று வெளியேறும் இளையர்களுக்கும்
பிற வேலை புரியும் இளையர்களுக்கும் தகுந்த அமைப்பை நிறுவும் முயற்சியில் முழுமூச்சாக
ஈடுபட்டுள்ளேன். திட்டங்கள் பல. செயல்பாடு தான் முக்கியம். செயல்படுத்திக் காட்டவேண்டும்.
காட்டுவேன்.

17. ‘சிங்கையில் இன நல்லிணக்கம்’ இதைப் பற்றி உங்கள் பார்வை என்ன? சிறுபான்மையினரில்
ஒருவராக ஏதாவது அவமானங்களைச் சந்தித்ததுண்டா?

இன சகிப்புத்தன்மையையும் தாண்டி இன நல்லிணக்கத்தை அடையவேண்டுமெனில், இனமென்பது
அடையாளக்குறியாக இருக்ககூடாது. அதிகாரத்துவ மொழிகள் அனைத்தும் அனைவருக்கும்
கட்டாய மொழிப்பாடங்களாக்கப்பட வேண்டும். இனவாதத்தால் நிச்சயம்
பாதிக்கப்பட்டிருக்கின்றேன். ஆனால், அதைக் காயங்களாகச் சுமக்கும் வசதி சிறும்பான்மைச்
சமூகங்களுக்குக் கிடையாது. உங்கள் அலுவலகத்தையே பாருங்கள். வேலையையும் தாண்டி,
அல்லது உணவு வேளைகளில், ஊழியர்களே அதிகம் இன, மொழி அடிப்படையிலாகப்
பழகுவார்கள். மூத்த நிர்வாகிகள், நிறுவனர்கள், என வெற்றியின் படிக்கட்டுகளில் ஏற்றம்
கண்டவர்களும் காண்பவர்களும் இப்பிரிவினைகளைத் தாண்டிப் பழகுவார்கள். இவர்கள் தரப்பில்
பெரும்பான்மைச் சமூகமே அதிகம் இருப்பது இயற்கை. அத்தரப்பிற்குள் ஊடுருவி ஒன்றாக
வேண்டுமெனில் சிறும்பான்மைச் சமூகத்தினர் தம் வேற்றுமை காட்டும் அடையாளக்குறிகளை
மழுங்கலாகவே வைத்துக்கொள்ளவேண்டும். இது எந்த நாட்டிலும் நிதர்சன உண்மை. அதற்காக
தங்கள் இன, மொழி சார்ந்த அடையாளக்குறிகளை மழுங்கலாக்கிக்கொண்டவர்கள் எதையோ
தொலைத்துவிடுகின்றனர் என்று கூறமுடியாது. தத்தம் விருப்பத்திற்கேற்பத் தம் அடையாளத்தைச்
செதுக்கிக்கொள்கின்றனர், வெற்றி காண்கின்றனர். இனவாதத்தை அவ்வப்போது சந்திக்கும்போது
அதை எதிர்த்து நிற்கவேண்டும். ஆனால், பாதிப்புக்குள்ளாக்கப்பட்டவர் என்ற
மனப்பான்மையையும் கசப்புணர்வையும் உதறித் தள்ளவேண்டும். மரியாதையோடும்
வாஞ்சையோடும் உறவாடும் எத்தனையோ பல்லின சிங்கப்பூரர்களுடன் 'இது என் நாடு, இது நம்
நாடு' என்ற உரிமையோடு ஒற்றுமை காணவேண்டும்.

18. சிறுபான்மை சமூகத்திலிருந்து அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவது நல்லது என்று சமீபத்தில் பிரதமர்
தெரிவித்திருந்தார். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒரு பக்கம், திறன்சார்ந்த சமூகக் கட்டமைப்பிற்கு இது இழுக்கு விளைவிக்கக்கூடியது என்று
எண்ணுகிறேன். சிறும்பான்மைச் சமூகத்தில் ஒளிர்வதற்கும் தேசிய அளவில் ஒளிர்வதற்கும் மிகுந்த
வேறுபாடு உண்டு. சிறு குளத்தில் பெருமீனாக இருந்தால் போதாது. சமுத்திரத்தில் திமிங்கிலமாக
இருக்கவேண்டும். சிறும்பான்மைச் சமூகத்திலிருந்து இன அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
தேசியத்தரம் கொண்டவரா என்று அச்சமூகமே கேள்வி எழுப்பி, உன்னிப்பாகப் பரிசீலித்து,
மதிப்பீடு கொடுக்கவேண்டும்.
மறு பக்கம், திரு எஸ் ஆர் நாதன் மறைவின்போது நான் வாசித்த ஒரு டிவிட்டர் பதிவு நினைவில்
நிற்கின்றது. "என்னைப் பிற இன நண்பர்கள் தாழ்த்திப் பேசும்போது, என் நாட்டு அதிபரே
இந்தியர்/தமிழர் என நெஞ்சு நிமிர்ந்தேன், தினமும் பள்ளிமண்டபத்தில் உங்கள் புகைப்படத்தைப்
பார்த்து." இந்த அஞ்சலி எனக்கொரு நிலைத்த நெருடலைப் பரிசளித்துவிட்டது. தன்னைப் பற்றிய
ஒரு பெருமை ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை. தன் அடையாளக்குறிகளுள் எந்தவொன்றைத்
தேர்ந்தெடுத்துப் பெருமைப்பட்டுக் கொண்டாலும் பரவாயில்லை. சிங்கப்பூரில் இனம் எனபது
முக்கிய அடையாளக்குறியாக நிலைத்திருக்கும் வரை, இத்தகைய இனம்சார்ந்த தேசிய
பிரதிநிதித்துவம் முக்கியமென்றும் தோன்றுகிறது.

19. எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதா?

இல்லை. சுய எண்ணமில்லை. பலர் அவ்வப்போது விதைத்து வருவதால் எண்ணம் வெகுதூரத்தில்
நிழலாடுகிறது. ஆனால், முதலில் நான் வெற்றியாளராக வேண்டும். என் துறையிலோ வேறோரு
செயலாக்கத்திலோ. அறிவையும் மனதையும் மேலும் விரிவுபடுத்தவேண்டும். இவற்றில் தான்
கவனம் செலுத்த விரும்புகிறேன். வருங்காலம் வரும்போது வரட்டும்.

20. சிங்கப்பூர் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாடு. வேலை வாய்ப்பில் தங்களைப் போன்ற
பட்டதாரிகள் எதிர்கொள்ளும் சவால்கள் ஏதாவது உள்ளதா?

பட்டதாரிகள் எனப் பொதுவானதொரு சொல் இருந்தாலும், அது சிங்கப்பூரில் பொதுச்
சொல்லாகாது. உள்ளூர் தேசிய பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும், வெளியூர் உயர்தர
பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும், உள்ளூர் தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும்,
வெளியூர் சராசரிப் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும், வேலை தேடும் அனுபவத்தில்

குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக, அரசாங்கத்துறையில் முதல் இரு தரப்பினருக்கும்
எங்கும் நேர்காணல்களாவது கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், பிறரோ பட்டதாரிகள் என்ற
அங்கீகாரத்தையே பெரும்பாலும் பெறுவதில்லை. இந்த வேறுபாடு மாறவேண்டும்.
உண்மையிலேயே கல்வித்தகுதியைக் கண்டுகொள்ளாமல் திறனுக்கே முதன்மை கொடுக்கும்
சமூகமாக நாம் வளர வேண்டுமென்றால் அரசாங்கத்துறையின் பணியமர்த்தும் முறை
மாறவேண்டும்.

21. வளர்ந்துவரும் தொழில்நுட்பம் விழுமியங்களை அழிக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறதே?
இது பற்றி உங்கள் கருத்து என்ன?

விழுமியங்கள், அறம் இவை எல்லாம் நிரந்தர கோட்பாட்டிற்கு உட்பட்டவையல்ல. காலத்துக்கு
உகந்தவையாக இல்லாவிட்டால் உதறித் தள்ளப்பட வேண்டியவை. தொழில்நுட்பம் அறிவியலின்
வளர்ச்சிக்குறி. பிறரைப் பாதிக்காத வரையில் எதுவும் நல்லது தான். ஒவ்வொருவருக்கும் பிறரைப்
பாதிக்காத செயலாண்மை வேண்டும். விழுமியங்கள் அழியவில்லை, மாறிவருகின்றன. அவற்றின்
அழிவையொட்டி ஒப்பாரி வைப்பவர்கள், அடுத்த முப்பதாண்டுகளில் வாய் பிளந்து நிற்கப்
போகின்றார்கள், வளர்ந்த, மேலும் நாகரீகமான, சமத்துவமான சமுதாயத்தைக் கண்டு. வாழ்வாங்கு
வாழ தொழில்நுட்பமும் முற்போக்கும் மூலதனங்கள்.

22. பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்கு ‘தலைமுறை இடைவெளி’ பெரிய தடையாக
இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
இல்லை. ஒவ்வொரு தலைமுறையின் ஆணவத்தையும் தான்தோன்றித்தனத்தையும் ஒடுக்கும்
கருவிதான் தலைமுறை இடைவெளி. கற்றலுக்கு இடம் கொடுக்கும் இடைவெளி இது.
இருசாராருக்கும் அடக்கத்தைக் கற்பித்துப் பாலம் அமைக்கும் அற்புத வாய்ப்பிது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here