வாழ்வின் புதிர்களை விடுவிக்கும் வாசிப்பு

0
795

டான் டார்ன் ஹொவ்
ஆய்வாளர், கொள்கை கல்வி நிறுவனம்

நம்முடைய தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் வாசிப்பு என்ற் கட்டாயப்பாடம் கொண்டுவரவேண்டும். அப்பாடத்திற்கு தேர்வும் இருக்கவேண்டும். இதைப்படித்ததும் உங்களுக்கு அனேகமாக் நான் மூளைகுழம்பியவன் என்று தோன்றலாம். ஆனால் அது நடந்தால் தனிமனிதர்களாக அல்ல ஒரு தேசமாகவே நாம் ஒரு மறுமலர்ச்சியை அடைவோம் என்று உறுதியாக நம்புகிறேன்.

வாசிப்பின் பலன்கள் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு இணைப்பேராசிரியர் லோ சின் யீ உடன் இணைந்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அவர் நூலகம் மற்றும் வாசிப்பு ஆகியவற்றில் வல்லுனர், தேசிய கல்விக்கழகத்தில் பணியாற்றுபவர். அக்கட்டுரையின் தலைப்பு ‘தனிப்பயிற்சியிலிருந்து (tuition) விலகி வாசிப்பில் நுழைவோம்’. ஆராய்ச்சிகள் நமக்கு மீண்டும் மீண்டும் காட்டித்தருவது என்னவென்றால் வாசிப்பு மற்ற பாடங்களின் மதிப்பெண்களை உயர்த்த மட்டுமல்லாமல் மேம்பட்ட மனிதர்களாகவும், குடிமகன்களாகவும் பரிமளிக்க உதவுகிறது என்பதுதான்.

வாசிக்கும் பழக்கமுள்ளவர்களை இவ்வாழ்வின் புதிரான பக்கங்களைப் புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்பவர்களாகவும், தன்னுடைய மற்றும் பிறருடைய அறியாமை இருளைத் துளைத்துச் செல்லக்கூடிய ஒளிக்கற்றையைக் கையில் ஏந்திய அதிர்ஷ்டசாலிகளாகவும் நான் பார்க்கிறேன்.

இது வாசிப்பினால் எப்படி சாத்தியமாகிறது?

ஆய்வுகள் காட்டுவது என்னவென்றால் சிறார்கள் சொந்தமாக, குதூகலத்துடன் வாசிப்பிற்குள் இறங்க அவர்களுக்கு உதவி தேவை என்பதுதான். அவ்வேலையை தொடக்கப்பள்ளிகளின் ஆரம்பநிலை ஆசிரியர்கள் செய்யலாம். பிறகு மேல்நிலைப்பள்ளியில் புனைவுகளை ஆழமாக வாசிப்பது, அபுனைவுகளைத் திறம்பட கற்பது, விமர்சிப்பது, புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கும் முறைகள் ஆகியவற்றைப்பற்றி ஆசிரியர்கள் பேசலாம். அதை ஒரு கடமையாக அல்லாமல் களிப்புடனும் கேளிக்கையுடனும் மாணவர்களுக்கு எடுத்துக்காட்ட முடிந்தால் இன்னும் உசிதம்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் வாசிப்பைப்பற்றிய போதனை வகுப்புகளாக இவ்வகுப்புகள் ஆகிவிடாமல் பார்த்துக்கொள்வதுதான். வாசிப்பு வகுப்பின் நேரம் – அது ஒரு நாளைக்கு அரைமணி நேரமோ ஒருமணி நேரமோ – மாணவர்களின் நேரம். ஆசிரியர் தடுமாறும் மாணவர்களுக்கு உதவலாம். அவர்கள் வாசிக்கவிரும்புவது என்ன என்பதைக்குறித்து அவர்களுடன் நெகிழ்வான, இயல்பான உரையாடல்கள் செய்யலாம்.

பள்ளி நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசிக்கும் வசதியுடன், ஒவ்வொரு நிலைக்கும் ஏற்ற, எளிதான மற்றும் கடினமான புத்தகங்களின் பரிந்துரைப் பட்டியலைத் தயார்செய்யவேண்டும். அப்பட்டியல் ஒரு வழிகாட்டலே. அதில் சிலவற்றைய மட்டும் வாசிப்பதோ அதைத்தாண்டியும்போய் வாசிப்பதோ மாணவர்கள் வசதி. அந்த பட்டியலில் புனைவு, அபுனைவு, கவிதை, அறிவியல், தன்வரலாறு, வரலாறு, தத்துவம், மருத்துவம், விளையாட்டு என்று பல்வேறு பிரிவுகளின் நூல்கள் – தேச, பிராந்திய, சர்வதேச அளவில் வெளிவந்தவை – இருக்குமாறு அமைப்பது அவசியம். ஒன்றோடொன்று கலந்த பிரிவுகளின் வாசிப்பும் முக்கியம். உதாரணமாக அறிவியலாளர்கள், ஓவியர்கள், கணிதவல்லுனர்கள் ஆகியோரின் தன்வரலாறு, பயணக்கட்டுரைகள், ஜனரஞ்சக அறிவியல் மற்றும் வரலாறு, மொழிகளைக்குறித்த புத்தகங்கள் ஆகியவற்றைச் சொல்லலாம். மாணவர்கள் தாய்மொழியில் கட்டாயமாக சிலபுத்தகங்களேனும் வாசிக்கவேண்டும்.

ஏன் வாசிப்பை கட்டாயமாக்கவேண்டும்?

முதலாவதாக, வாசிப்புக்கு நம் தேசம் இன்னும் பழகவில்லை. 2015ல் நடத்தப்பட்ட தேசிய கலைகள் கழகத்தின் மதிப்பாய்வு சிங்கப்பூரில் 44 சதவீதம்பேர் ஒருவருடத்தில் ஒன்று அல்லது அதற்குமேற்பட்ட இலக்கிய புத்தகங்கள் வாசிப்பதாகச் சொன்னது. இங்கு இலக்கியம் என்ற பயன்பாடு மிகவும் தாராளமான எல்லைகளுடன் வரையறுக்கப்பட்டது என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும். தேசிய வாசிப்பு இயக்கம் என்பதை இவ்வாண்டின் மத்தியில் அரசு அறிமுகப்படுத்தியதில் அரசின் அக்கறையும் நமக்கு விளங்குகிறது. இவ்வியக்கத்தின் முயற்சிகளுள் ஒன்று தேசிய நூலக வாரியத்தை வயதுவந்தோரிடம் புத்தக்கங்களைக் கொண்டுசென்று சேர்ப்பிப்பது. பேராசிரியர் லோவும் நானும் கடந்த ஆண்டு கலந்துகொண்ட உரையாடல்களில் பல பெற்றோர்களும் ஆசிரியர்களும் வாசிப்புப்பஞ்சத்தைப் பற்றிய தங்கள் கவலையை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்கள்.

இரண்டாவது, வயதுவந்தும் வாசிப்பவர்களாக நீடிக்க சிறுவயதில் வாசிப்பு அறிமுகமாவது முக்கியம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன; அவ்வறிமுகம் பெற்றோர்களால் வாசிக்க ஊக்குவிக்கப்பட்டதாயினும் சரி அல்லது அவர்களே தொடர்ந்து வாசித்துக்காட்டியதாயினும் சரி. ஆய்வாளர் டெபோரா ஹிக்ஸ் அவரது 2002ம் ஆண்டு வெளியான நூலில், ‘வாசிப்பவர்களாக யாரும் பிறப்பதில்லை. வாசிப்புச் சமூகத்தின் அங்கமாக அதன் பழக்கங்களைத் தானும் கைக்கொள்வதன் மூலமாக வாசிப்பில் சொந்த அடையாளத்தைக் கண்டடைபவர்களாகவே வாசிப்பவர்கள் உருவாகி பரிமளிக்கிறார்கள்’ என்கிறார். எத்தனை சிங்கப்பூரர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு வாசித்துக்காட்டுகிறார்கள்? வாசிக்கத் தூண்டுகிறார்கள்? பெற்றோர்கள் வேடிக்கைக்காக எதையாவது வாசித்து நேரத்தை வீணடிக்காமல் பாடபுத்தகங்களைப் படிக்கச்சொன்ன சம்பவங்களை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். வாசிப்புக்கு ஊக்கமூட்டும் சில திட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன. ஸ்டெல்லர் (Stellar – Strategies for English Language Learning and Reading) என்பது ஒரு தொடக்கப்பள்ளித் திட்டம். ஆனால் இது அறிவுறுத்தலில் முனைப்புடன் இருக்கும் திட்டம். வாசிப்பதற்கான வகுப்பு நேரம் அதிகமில்லை. சில மேல்நிலைப்பள்ளிகளில் வாசிப்புக்கு நேரம் ஒதுக்கப்படுவதையும் சேர்த்துக்கொள்ளலாம். தேசிய நூலகம் kidsREAD வசதிகுறைந்த சிறார்களுக்கான வாசிப்பு அறிமுக முயற்சியை செய்துவருகிறது.

மூன்றாவதாக, இம்முயற்சிகள் இரண்டு முக்கியமான பிரச்சனைகளைக் களைவதில் வெற்றியடையவில்லை என்பதை வாசிப்பு ஏன் கட்டாயமாக்கப்படவேண்டும் என்ற என் வாதத்துக்கு ஆதரவாக வைக்கவிரும்புகிறேன். ஒன்று வாசிப்பின் மதிப்பை கணிதத்திலோ, அறிவியலிலோ தெரிந்துகொள்ளமுடிவதைப் போல தெரிந்துகொள்ள இயலவில்லை என்பது. இரண்டாவது பள்ளிப்பாடங்களைப் படித்துமுடித்து ஓய்வுக்கும் தூக்கத்துக்குமே நேரமின்றித்தவிக்கும் சூழ்நிலையில் வாசிப்புக்கு அறவே நேரமில்லை என்பது. இந்த அழுத்தத்தின் விளைவாக கொஞ்சம் ஓய்வு கிடைத்தாலும் நம் பிள்ளைகள் தொலைக்காட்சியோ கணிணிவிளையோட்டோதான் விரும்புகிறார்கள் என்று 2009ல் நடத்தப்பட்ட ஆய்வு சொல்லியது. கல்வியாளர் அப்துல் சத்தார் மற்றும் நூலகர் கிளாடிஸ் லோ ஆகியோர் இணைந்து இவ்வாய்வைச் செய்திருந்தார்கள்.

வாசிப்பைக் கட்டாயமாக்குவது என்பதும் அது PSLE மற்றும் ‘ஓ’ நிலைத்தேர்வுகளின் மதிப்பெண் கணக்கீட்டில் இடம்பெறவேண்டும் என்பதும் சேர்ந்தே நிகழவேண்டும். இல்லையென்றால் அது ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகிய அனைவராலும் கவனிக்காமல் விடப்பட்டுவிடும். பலராலும் இன்று கலை, இசை, விளையாட்டு ஆகியவை அப்படித்தான் விடப்படுகின்றன.

வாசிப்பைக் கட்டாயமாக்குவதும் தேர்வு வைப்பதும் மாணவர்களை வாசிப்பிலிருந்து விலகவைக்காதா என்ற கேள்வி எழலாம். என் பதில் வாசிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள் ஏற்கனவே வாசித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் கட்டாயமாக்குவது ஒரு பிரச்சனையாக இராது. வாசிப்பை இன்பமான அனுபவமாக ஆக்குவது நம் ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. இரண்டாவதாக எப்படி தேர்வில் வாசிப்பைச் சோதிப்பது என்ற கேள்வி எழலாம். இது பொருட்படுத்தத்தக்க கேள்விதான். ஏற்கனவே திட்டப்பணி வகுப்புகளில் எவ்வாறு மதிப்பீடுகள் செய்யப்படுகிறதோ அவ்வாறு செய்யலாம். ஒரு பாடம் முக்கியம் என்பதை நாம் ஏற்றுக்கொண்டுவிடும்போது அதை எப்படி சோதிப்பது என்பதற்கு விடைகள் கண்டுபிடிப்பது கடினமல்ல. இத்தேர்வில் மதிப்பெண்கள் அவசியமில்லை. அவரவர் வயதுக்கு ஏற்ற விரிவான, ஆழமான வாசிப்பு வளர்ச்சியை அடைந்திருக்கிறாரா என்ற சோதனையின் அடிப்படையில் தேர்வானார், தேர்வாகவில்லை என்ற இரு பிரிவுகளே போதுமானது.

என்னுடைய இந்த முன்மொழிவு தீவிரமானது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் நம் சமூகத்தின் இன்றைய நிலையை கவனத்தில்கொண்டு பார்க்கும்போது அடிப்படையான மாறுதலை உண்டாக்கக்கூடிய இவ்வழியைத்தவிர வேறு நல்ல வழிகள் ஏதும் தென்படவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் நாம் ஒவ்வொருவருமே வாசிப்பு என்னும் ஒளியை இயல்பிலேயே பெற்றவர்களாக ஆகிவிடுவோம் என்றால் கட்டாயவாசிப்பு என்பதற்கு அவசியமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here