சலீம் ஹாதி – ஒரே நாள் ஒரே வெள்ளி

0
841

அவன் வக்கீலாக வரவேண்டுமென்பதுதான் அவன் தந்தையின் ஆசை. ஆனால் முகமது சலீம் அப்துல் ஹாதி தன் மனதுக்கு நெருக்கமான நாடக மற்றும் திரைப்படத்தொழிலையே தேர்ந்தெடுத்தார். தன் 26வது வயதில் இவர் சிம் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது (2008, மே மாதம்) இவரது தம்பியும் இரண்டு நண்பர்களும் சேர்ந்து ஐந்து நிமிட நீளமுள்ள குறும்படம் ஒன்றை எடுத்தனர். அதன் பெயர் Take. இறப்பு என்பதைக்குறித்த மக்களின் பார்வைகளை அது பதிவு செய்திருந்தது. அந்தப்படத்தை தங்கள் டிஜிட்டல் கேமராக்கள் மூலமாகவே எடுத்துவிட்டனர். அதுவும் ஒரே நாளில். ஆன மொத்த செலவு ஒரே வெள்ளி, கொஞ்சம் பூக்கள் வாங்குவதற்கு!

இந்தப்படம் கான் திரைப்பட விழாவில் சிறப்பு சமூக ஆவணப்படபிரிவில் தேர்வுசெய்யப்பட்ட மூன்று படங்களில் ஒன்றாக வந்திருந்தது. மொத்தம் 36 படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. தெரிவுசெய்யப்பட்ட மற்ற இருபடங்கள் வந்திருந்தது பிரேசில் மற்றும் அமெரிக்காவிலிருந்து. நடுவர் குழுவில் இரண்டு ஆஸ்கர் வாங்கிய ஆவணப்பட இயக்குனர் ராப் எப்ஸ்டீனும் உண்டு. “அவர்கள் வலைதளத்தில் முடிவுகள் வெளியானபோது எங்களால் நம்ம இயலவில்லை. தேர்வுக்குழுவிற்கு மின்னஞ்சல் அனுப்பி உறுதிசெய்ய வேண்டினோம். ஒருவாரம் கழித்து பதில் வந்தது. எங்கள் மகிழ்ச்சி ஒருவாரம் ஒத்திவைக்கப்பட்டது” என்கிறார் சலீம்.

முன்பின் தெரியாதவர்களை ஆவணப்படத்துக்காக் அனுகியது சிறப்பான அனுபவம் என்கிறார் இவர். ஒரு சனிக்கிழமை காலையில் கடற்கரையில் விளையாட்டில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சென்று இறப்பைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், வாழ இன்னும் அரைமணி நேரமே இருக்கிறது என்றால் என்ன செய்ய விரும்புவீர்கள் ஆகிய இரு கேள்விகளை வைத்ததும் பல ஏச்சுக்கள் கிடைத்தன. முகம்கொடுக்காமல் திருப்பிக்கொண்டனர் பலர். வாரயிறுதியின் காலையில் பேசுகிற பேச்சா இது?

கிடைத்தவற்றை ஐந்து நிமிட நீளத்துக்கு தொகுத்து போட்டிக்கு அனுப்புவதற்கு ஒருவாரம் பிடித்துள்ளது. குழுவிலிருந்த மற்றவர்கள் நல்லு தினகரன், சரவணன் சிவா மற்றும் முகமது கமாருதீன். ஒருமாதம் கழித்து அவர்கள் வென்றிருந்தார்கள். பரிசாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் 2000வெள்ளி மதிப்புள்ள அடோபி படத்தயாரிப்பு மென்பொருள் கிடைத்தது. சலீம் முதலில் தகவல் தொழில் நுட்பத்தில் பட்டயப்படிப்பு முடித்திருந்தபோதும் அது தனக்கான துறையல்ல என்கிறார்.

தன் இருபதுகளின் ஆரம்பத்திலிருந்தே வண்ணங்களோடு விளையாடுவதே இவர் விருப்பம். மேற்படிப்புக்கு முடிவு செய்தபோது தன் படைப்பூக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு படிப்பையே தேரிந்தெடுக்க உறுதியெடுத்தார். அப்போது அவர் கண்ணில் பட்டதே சிம் பல்கலையின் தொடர்பு வடிவமைப்பு பட்டப்படிப்பு. ‘உங்களுக்காக யோசிப்பீர்’ என்ற சிந்தனையை முன்வைக்கும் படிப்பு அது. அங்கே செல்வதற்குமுன் காணொளி பதிவுசெய்வதில் தானாக கற்றுக்கொண்டதில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள நல்வாய்ப்பு அமைந்ததாகச் சொல்கிறார் சலீம். தன் தனித்திறன் எங்குள்ளது என்பதை அங்கேதான் கண்டறிந்துகொண்டேன் என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here