சிங்கப்பூர் வாசகர் வட்ட 28ம் ஆண்டு விழாவிற்கு தமிழச்சி தங்கபாண்டியன் வருகிறார் என்பதை நண்பர் நீதிப்பாண்டியின் மூலம் அறிந்துக்கொண்டேன். நானும் மேலும் சில சிங்கப்பூர் நண்பர்களும் சேர்ந்து செல்லலாம் என்று முடிவெடுத்தோம். விழா நடந்த வூட்லண்ட்ஸ் நூலகத்தின் மேல்தளத்தில் இருக்கும் தமிழ்ப் பகுதியை சென்று பார்த்தேன். அங் மோ கியோ நூலகம் போலவே தமிழுக்காகப் பெரிய இடம் ஒதுக்கி இருப்பதைப் பார்த்து மகிழ்ந்தேன்.

அனைவரும் கீழ்தளத்திலுள்ள விழா அரங்கிற்கு சென்றோம். நீதிப்பாண்டி கையில் கேமராவுடன் வாசலிலேயே வரவேற்றார். அன்று வெளியாகும் ஐந்து புத்தகங்களில் அவரின் கவிதைகள் தொகுப்பும் ஒன்று என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்.

தமிழ்த்தாய் வாழ்த்து, ஷாநவாஸ் அவர்களின் வரவேற்புரை, அனைத்துலகப் பள்ளி ஒன்றின் மாணவிகள் நிகழ்த்திய நடன நிகழ்ச்சி ஆகியவை முடிந்ததும், முதலில் நண்பர் சிவானந்தம் “இடமும் இருப்பும்” என்ற வாசகர்வட்ட சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்திப் பேசினார். 13 பேர் எழுதியுள்ள தொகுப்பு என்பதால் வேற்றுமைகள் இயல்பாக இருந்தாலும் சில பொதுமைகளும், புதுமைகளும் இருப்பதாகச் சொல்லி சில கதைகளை எடுத்துக்காட்டிப் பேசினார். இந்நூல் ஷாநவாஸ் தொகுத்தது.

அடுத்ததாக, ஷாநவாஸ் எழுதிய “ஒலி மூங்கில்” சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி பாரதி மூர்த்தியப்பன் பேசினார். கதைத்தலைப்புகளை வரிசையாக வாசித்தால் நவீன கவிதைபோல இருக்கிறது என்று தொடங்கி நூலைக் குறித்துப் பேசினார். விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வைக் குறித்து கவலைப்படும் கதைகள் இவை என்றவர், வேதாளம் என்ற கதையில் வீட்டுதவிப்பெண்கள் கதைசொல்வது குறித்து எழுதப்பட்டுள்ளது சிங்கப்பூரில் மெய்டுகள் கவிதை எழுதலாமா என்று முன்னர் நடந்த சில விவாதங்களை நினைவூட்டுவதாகச் சொன்னார். மூங்கில் ஒலி என்று சொல்லும்போது சிறிய விஷயத்திலிருந்து பெரிய விஷயத்திற்குப் போவதும், அதையே ஒலி மூங்கில் எனும்போது பெரிதிலிருந்து சிறிய விஷயங்களுக்குப் போவதும் நிகழ்வதாகச் சொல்லி, இக்கதைகளும் அதையே செய்கின்றன என்றார்.

சித்ரா ரமேஷ் அவர்கள் எழுதிய “ஒரு துளி சந்தோஷம்” என்ற சிறுகதை மற்றும் குறுநாவல் தொகுப்பைக் குறித்து சித்துராஜ் பொன்ராஜ் பேசினார். சிங்கப்பூர் இலக்கியம் குறித்து அவர் பேசிய விஷயம் சுவாரசியமாக இருந்தது. சிங்கப்பூரிலேயே நாம் அறிந்த சிங்கப்பூர், நாம் அறியாத சிங்கப்பூர், நாம் அறிய விரும்பாத சிங்கப்பூர் என்று மூன்று வகை இருக்கிறது. இதில் பெரும்பாலான இலக்கியங்கள் நாம் அறிந்த சிங்கப்பூரில் இருந்து தான் வருகிறது. ஆனால், சித்ரா ரமேஷ் அவர்கள் அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்று இருக்கிறார் என்றார். இறந்தபிறகும்கூட சிங்கப்பூரில் கல்லறைகள் நிரந்தரமில்லை என்று குறிப்பிட்டவர் கல்லறைகள் இடமாற்றப்படுவது குறித்த கதையும் நூலில் இருப்பதாகக் குறிப்பிட்டார். அவர் பேசியது அந்த புத்தகத்தை வாசிக்கும் ஆவலைத் தூண்டும் வகையில் இருந்தது.

எம்.கே குமார் அவர்கள் எழுதிய “5:12PM” என்ற சிறுகதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி மலேசிய எழுத்தாளர் வல்லினம் ம.நவீன் பேசினார். நல்லிணக்கம் என்ற கதையில் ஒரு குரங்கையும், தமிழ்-சீன குடும்பங்களையும் வைத்து அரசியல் பகடியாகவும், அதேநேரம் பாதிக்கப்பட்டவர்களிடையேதான் நல்லிணக்கம் உண்டாகிறது என்ற நுட்பமான பார்வையையும் தந்திருப்பதால் சிறந்த கதை என்று பாராட்டிப்பேசினார். ஒரு படைப்பு மையப்படுத்தும் கதாபாத்திரம், கதைக்குத் தேவையில்லாத விஷயங்கள் போன்று சில குறைகளையும் சுட்டிக்காட்டினார். மையக் கதாபாத்திரத்தில் கதையின் குவியம் இருக்கவேண்டியதன் அவசியம் குறித்து அவர் பேசிய விஷயம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

அடுத்தாக, நீதிப்பாண்டி அவர்கள் எழுதிய “மாயா, மது, உதயா” என்கிற கவிதைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி எம்.கே குமார் பேசினார். மாயா, மது, உதயா இந்த மூன்றுமே நமக்கு பிடித்த பெயர்கள் அல்லது விஷயங்கள் என்று ஆரம்பித்தவர், இந்நூலின் குறுங்கவிதைகளில் பலவும் படித்தவுடன் யோசிக்க வைக்கும் வகையில் இருப்பதாகப் பேசினார். கவிதைக்கான ஓவியங்கள் பொருத்தமானதாக இருந்தாலும் சில இடங்களில் மை கொட்டியிருப்பதைப் போல அச்சாகி இருப்பதாகச் சொன்னார்.

புத்தக அறிமுகங்கள் முடிந்ததும் சிறப்பு விருந்தினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார். ஒரு நீண்ட இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த உரையைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தன் எழுத்துக்கள் எதை பிரதிபலிக்கிறது, எந்த மனிதர்களைப் பிரதானப்படுத்துகிறது என்பதைத் தெளிவுப்படுத்தினார். சென்னையில் வசித்தாலும், முகப்பூச்சு, நகப்பூச்சு என ஒப்பனைகள் இருந்தாலும், தன்னைத் தலை நிறைய எண்ணையைத் தடவிக்கொண்டு, இரட்டை ஜடை போட்டுக்கொண்டு, தரையில் உட்கார்ந்து ஒண்ணாப்பும், ரெண்டாப்பும், மூணாப்பும் படித்த ஒரு கரிசல் காட்டுப் பெண்ணாகத்தான் உணர்வதாக, அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புவதாகச் சொன்னார்.

ஒரு படைப்பு எதைப்பற்றிப் பேச வேண்டும் என்று அவர் சொன்னது முக்கியமானது. சதத் ஹசன் மான்டோ இந்திய பிரிவினையை வைத்து எழுதிய ‘திற’ என்ற கதையை அவர் விவரித்து சொல்லி முடிக்கும் போது என் மனம் பதறியது. எவ்வளவு கொடூரமான வரலாறு நம்முடையது! மனிதர்களின் உளவியலை பேசிய மார்க்கேசின் “நான் ஒரு தொலைபேசி செய்யத்தான் வந்தேன்” என்ற சிறுகதையையும் அவர் விவரித்தது வாசிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது.

தமிழச்சி அவர்களின் அப்பத்தாவை பற்றி சொல்லியது சுவாரசியமானது. குழாயடிச் சண்டையில் வல்லவரான அவரின் அப்பத்தாவின் ஒரு வாய்ச்சண்டையின் இடையே அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் தலையிட்டு என்ன பிரச்சனை என்று கேட்க, “அய்யா, நீங்க பெரிய கலெக்டரா இருக்கலாம். அதுக்காக எங்க சொந்த பிரச்சனையை எல்லாம் உங்ககிட்ட சொல்ல வேண்டியதில்லை!” என்றாராம். இந்த மாதிரி சுவாரசியமான மனிதர்களைத்தான் தன் எழுத்தில் கொண்டு வருவதாகச் சொன்னார். பிறகு அவர் எழுதிய சில சிறுகதைகளைப் பற்றிச் சொன்னார். நகரங்களின் திருமணவிருந்துகளில் விஐபிக்களுக்காக சாப்பாட்டு இலையில் அமர்ந்து இடம்பிடித்தபின் எழுப்பிவிடப்பட்டு அனுப்பப்படுபவர்களைப்பற்றிய ஒரு சொந்த அனுபவத்தைக் கதையாக்கியது நெஞ்சைத் தொட்டது.

வரலாற்றை எப்படி அணுக வேண்டும் என்று அவர் வைத்த பார்வை முக்கியமானது. வட இந்திய மன்னர்களை உள்ளே விடாமல் நம்மை காத்த சேர சோழ பாண்டிய மன்னர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள். அதே வேளையில், சதுர்வேதி மங்கலம், கொண்டி மகளிர் என அவர்கள் வளர்த்த சாதியத்தையும் நாம் பேசாமல் விட்டுவிட முடியாது என்று சொல்கையில் நானும் பக்கத்தில் உட்கார்ந்திருந்த நண்பர்களும் ஒரே நேரத்தில் பார்த்துக்கொண்டு “செம” என்றோம். கிராமங்களில் தான் இன்னமும் சாதியின் பிடி வலுவாக இருக்கிறது என்பதை நான் மறுக்கவில்லை. அதே வேளையில், அந்த கிராம மனிதர்கள் தான் நமக்கு வாழ்க்கையையும் கற்றுக்கொடுக்கிறார்கள் என்றார்.

தமிழச்சியின் வாசிப்பு மலைக்க வைக்கிறது. ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் பரந்த வாசிப்பு அவருடையது. ஏற்கனவே சில காணொளிகளில் அவருடைய உரையைக் கேட்டிருந்தாலும் நேரில் கேட்டது மேலும் சிறப்பாக இருந்தது. தமிழச்சி என்று தன்னை அடையாளப்படுத்தி கொள்வதில் பெருமை கொண்டாலும் அதில் எட்டிப்பார்க்கும் சிறு ஆபத்தையும் உணர்ந்தே இருப்பதாகவும் அவர் கூறியது தான் அவரது தனியம்சம் என்று நான் கருதுகிறேன். She is a rare and real mixture!

சிங்கப்பூருக்கு வந்ததும் ஷாப்பிங் சென்றபோது காரில் இருந்து இறங்கி மழைத்தூறலில் நின்றுகொண்டிருந்தபோது, இவர் இறங்கிய காருக்குள் ஏறவேண்டிய வெள்ளைக்காரப்பெண் இவர் நனையாமல் இருக்க குடைபிடித்த சம்பவத்தை நினைவுகூர்ந்தவர், இனம், வர்க்கம், மொழி, தேசம் எல்லாம் வேறாக இருந்தபோதும் சக மானுடத்துக்காக ஒருவர் கவலைப்பட்ட அந்த நொடியில் சிங்கப்பூர் மண்ணின் மகத்துவம் புரிந்துவிட்டதாக நெகிழ்ந்தார்.

தமிழச்சி பேசிய பின்னர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அழகுநிலா, பத்திரிகையாளர் மாலனைப் பேச அழைத்தார். மேடையேறிய மாலன், என்னை திடீரென பேச கூப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால், சிங்கப்பூரில் மழையைத் தவிர எல்லாமே திட்டமிட்டு தான் நடக்கும் என்பதால் இதுவும் திட்டமிட்டே நடந்து இருக்கும் என்று நினைப்பதாக சொல்லி அரங்கத்தைக் கலகலப்பாக்கினார். தமிழச்சி பேசியதற்கும் சித்துராஜ் பேசியதற்கும் இடையில் விவாதிக்கவும் சர்ச்சிக்கவும் விஷயங்கள் இருப்பதாகச் சொன்னார். கி.ரா, அசோகமித்திரன் போன்ற சிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் உலக அளவில் பேசப்பட வேண்டுமானால் மொழியாக்கம் செய்யப்படவேண்டும் என்ற அவரது ஆசையையும் அதிலுள்ள சில சிகல்களையும் குறிப்பிட்டுவிட்டு, இந்திய அளவில் செய்யப்படும் சில மொழியாக்க முன்னெடுப்புகளைப் பற்றிக் கூறினார்.

இவரும் ஒரு சிங்கப்பூர் குடை அனுபவம் சொன்னார். சிங்கப்பூரில் தான் வாங்கியபோது வேலை செய்த குடை, மழை தூறும்போது திறக்கவில்லை என்றும் பிறகு கட்டிடத்துக்குள் வந்ததும் திறந்தது என்றும் அந்த அனுபவத்தைக் குறிப்பிட்டு, அதுபோல நம் அறிவு உட்படத் தேவையான நேரத்தில் கைகொடுக்காதவைகளையும் இருப்பினும் வேலை செய்யாத குடையைப்போல அவற்றைச் சுமந்தலையும் நம் நிலையையும் யோசித்துப் பார்ப்பதாகச் சொன்னார்.

மொத்தத்தில், சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா சிறப்பாகவும், நிறைவாகவும், வாசிப்பு குறித்த ஆர்வத்தைக் கூட்டுவதாகவும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here