எரிந்த தீயில் விரிந்த கனல் – சிவகாமியின் சபதம்

தமிழ்மாதம் என சிங்கப்பூர் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்ட சித்திரை மாதம் முழுக்க தமிழ் நிகழ்வுகள் சிங்கப்பூரின் வெவ்வேறு பிரதேசங்களில் அரங்கேறிக்கொண்டிருந்தன.08.04.2017 சனிக்கிழமை மாலை 6.00 மணி.

உமறுப்புலவர் மண்டபத்தின் வாசலில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடக பதாகை வரவேற்றது..

உலகத் திருமறையின் நாயகன் திருவள்ளுவர் மண்டப வாசலில் அமர்ந்திருந்தார்.

அவரின் கையில் இருந்த ஏட்டில் மல்லிகையும் ரோஜாவும்.

மண்டபவாசலில் தமிழ் பூத்துக் குலுங்கியது.

கூப்பிய கரங்கள் புன்முறுவலுடன் வணக்கம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தன.

சிங்கப்பூரில் இயங்கும் ”சியாமா” நிறுவனமும் இலங்கையில் இயங்கும் ”தியாகராஜா கலைக்கோவில்” அமைப்பினரும் இணைந்து ’சிவகாமியின் சபதம்’ நாட்டிய நாடகத்தை வழங்க காத்திருந்தார்கள்.

மண்டபம் ஏறக்குறைய நிறைந்திருந்தது. எங்கிருந்து பார்த்தாலும் மேடைக்கு அண்மையில் இருந்து பார்க்கும் பிரமையை ஏற்படுத்தும் வகையில் விஞ்ஞானமுறையில் அமைக்கப்பட்ட அரங்கம் அது.

அரங்கத்திரை அகலும் நேரம்வரை வழமையாக வெளியே கேட்கக் கூடிய வகையில் எந்த வாத்தியங்களையும் மீட்டிப்பார்க்கும் ஒலிகளோ ஒலி வாங்கியை பரீட்சிக்கும் சமிக்கைகளோ எதுவும் வெளியில் கேட்கவில்லை. அனைத்தையும் தயார்நிலையில் வைத்திருந்தார்கள் போலும்.

பன்னிரண்டு ஆண்டுகள் தொடராக வாரச்சஞ்சிகையில் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிசஷ_வின் காதல், மற்றும் சிதைந்த காதல் என நான்கு பெரிய பாகங்களாக வெளியாகிய ஒரு நாவலை… இல்லையில்லை… காவியத்தை எவ்வாறு இரு மணித்தியாலங்களுள் அரங்கேற்றப் போகின்றார்கள் என்ற ஆவல் அனைவரையும் நிறைத்திருந்தது.

10.00 மணிக்கு சுபமூர்த்தம் என்றால் மணப்பெண்ணே மண்டபத்துக்கு 12.00 மணிக்கு வரும் நிகழ்வுகளுக்கு இசைவாக்கப்பட்ட மக்களுக்கு மகிழ்வான நிகழ்வாக மாலை 6.00 மணிக்கு மண்டப விளக்குகள் மெதுமெதுவாக தங்கள் இமைகளை மூடிக்கொண்டு வர திரை மெதுமெதுவாக விளகியது.

வரவேற்புரையும் நன்றியுரையும் ஒலிவழி வந்து மறைய ஒளி மேடைமீது பரவியது.

”வெற்றி வெற்றி நம் படையதே வெற்றி
வெற்றி வெற்றி என முழுங்கு” என்று பல்லவ மாமன்னரின் வெற்றிப் பேரணி பார்வையாளரை நிமிர்ந்து இருக்க வைத்தது.
தொடர்ந்து படைகளின் வருகை அதன் உச்சமாக யானைமீது வாத்தியங்கள் முழங்க வதாபி கணபதியின் மேடைப் பிரவேசம் நாட்டிய நாடகத்தின் வெற்றிக்கே பிள்ளையார் சுமி போட்டது போன்றிருந்தது.

காட்சி மாற சிவகாமி சிலையாக!

”என்னை எடுத்தங்கே
தன்னை வைத்தவன் யாரோ
சொல்லடி
அவன் பேரென்னடி” என்ற பாடலில் தமிழ் தவிழ்ந்தது.
ஆயனார் அவளது தோற்றத்தையும் பாவனையையும் கல்லில் வடிக்கின்றார்.

சிவகாமி சபதம் நாவலில் வரையப்பட்ட சித்திரத்தை தண்ணீர்ப்படம் எடுத்தது போல ஆயனாரும் சிவகாமியும் கண்முன்னே நின்றிருந்தார்கள்.

சிற்பியின் கையில் இருந்த உளி போல நாடக நெறியாளர் ஸ்ரீமதி பவானி குகப்பிரியாவின் கை வண்ணமும் கற்பனை வண்ணமும் முதல் ஒரிரு காட்சிகளிலேயே பிரகாசிக்கத் தொடங்கியது.

காட்சிகள் மாற மாற அடுத்த ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களும் நாட்டிய நாடகம் என்றது மறந்து போகின்றது.

பிக்கு, மாமல்லர், நரசிம்ம மன்னவன், தூதன், நாவுக்கரசர், பரஞ்சோதி, புலிகேசி பாத்திரங்களும் அவர்களிடன் நடிப்பும்… நாட்டியமும்… பின்பாட்டும்… நட்டுவாங்கமும்… மிருதங்கம்… வீணை… வயலின் இசையும்.. காட்சி அமைப்புகளும் நிமிடத்திற்கு நிமிடம் அரங்கை அதிர வைத்துக் கொண்டிருந்தது.

குறிப்பாக போர்க்காட்சிகள்… அதில் காட்டப்பட்ட பிரமாண்டங்கள்…. குதிரைகளின் காலடியோசைகள்… அரங்கின் பின்வழியே வந்து முன் வழி செல்வது போன்றிருந்தது. அல்லது பின் வழியே வந்து முன்வழி செல்வது போன்றிருந்தது.

ஓலி என்பது எவ்வாறு ஒரு இசைநாடகத்தை நகர்த்தியும் ஓடியும் ஆடியும் இழுத்துச் செல்லுமோ… அதேயளவு ஒளியமைப்பும் காட்சி மாற்றங்களையும் ஒரே காட்சியில் பல வித்தைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

பாகுபலி போன்ற ஒரு திரைப்படத்துக்கு பிரமாண்டம் என்பது எவ்வளவு வெற்றியைக் கொடுத்ததோ… அதே பிரமாண்டத்தை சிவகாமியின் சபதத்துக்கு நடிப்பும் இசையும் ஒலி ஒளியமைப்பும் நெறியாழ்கையும் கொடுத்திருந்தது என்றால் அது மிகையான பதிவு இல்லை.

இந்த நாட்டிய நாடகத்தை தூக்கி நிறுத்திய தூண்கள் என்பதில் மானாக வந்த சிறுதி தொடக்கம் அனைத்து நடிக நடிகைகளுக்கு முக்கிய வகிபாகம் உள்ளது என்றாலும் சிவகாமி, புலிகேசி, மகேந்திர பல்லவன், நரசிம்ம பல்லவன் மற்றும் ஆயனாரின் பாத்திரப் படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடாது இந்த கட்டுரையை நிறைவு செய்தால் அது பூரணமாக அமையாது.

இன்றும் ஒளவையார் என்னும் பொழுது ஒளவையார் திரைப்படத்திலும் திருவிளையாடல் கந்தன் கருணை படங்களி;ல் பார்த்த கே.பி.சுந்தரம்பாள் நினைவுக்கு வருவது போல் ஒவியர் மணியம் வரைந்த சித்திரத்திற்கும்… கல்கியின் எழுத்துக்கும் உயிர் கொடுத்தது திருமதி. அமிர்தினி சிவகரன் என்றால் அது மிகையாது.

ஆம்! சிவகாமி என்றால் எதிர்காலத்தில் அந்த நாட்டியத்தாரகைதான் பலருக்கு ஞாபகம் வருவார்.

19858395_1396709440407808_1269328927_n

 

 

 

 

 

 

”தொடுத்த விழி தொடுத்தபடி
பிடித்த விரல் பிடித்தபடி பிடித்தபடி
சிறுத்த இடை நொடுத்தபடி
தளிர்த்த கொடி தொலைத்தாள்” என்று காதலில் துவளும் வரிகளுக்கு உயிர் கொடுத்த பொழுதும்……
”என் தேகம் உமதடிமையாகலாம்
என் ஆத்மாவையும் நீர்; பிடிக்கலாம்
என் கலை உமதடியாகாது
என்றும் அது ஆணைக் கடிபணியாது” என்று சீறும் பொழுதும்….
அடிமைப்பட்ட பொழுது

”எரிந்த தீயில் விரிந்த கனலென ஆடுகிறாள் –
அவள் ஆடுகிறாள்
நிமிர்ந்த மலையது தகர்ந்த ஒலியென –
அவள் ஆடுகிறாள்
எழுந்த கடலின் பரந்த அலையென –
அவள் ஆடுகிறாள்
சுழன்ற புயலென தகர்ந்த நிலமென-
அவள் ஆடுகிறாள்” என்ற வரிகளுக்கு சிவகாமியின் நடன அபிநயமும்… பெண்கள் அடிமைப்படுத்தப் பட்டு இழுத்து வரப்படும் காட்சியும் முள்ளிவாய்க்கால் அவலத்தை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது.
சிவகாமி நவரச நடிப்பை நாடகம் முழுக்க கொண்டு வந்து நிறைத்தார் என்றால் ஆயனாரின் பணிவும் வறுமையும் ஏழ்மையும் அவரின் ஒவ்வோர் அசைவிலும் நிறைந்திருந்தது.

அரசபடங்களில் மறைந்து போன வில்லன் பாத்திரத்தின் கர்ச்சிப்பையும் குரலின் தொனியையும் புலிகேசி வரும் காட்சிகள் அனைத்தும் நினைவூட்டிக் கொண்டிருந்தது. நாடகம் முடிந்த பின்பு அவருக்கு கிடைத்த கைதட்டல்கள் அதற்கு அத்தாட்சி.

அவ்வாறே மன்னர்கள் அவர்களின் வீரம் காதல் கம்பீரம் அத்தனையும் மற்ற இரண்டு மன்னர்களும் காட்சிக்கு காட்சி நிரூபித்துக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக அவர்கள் குதிரையின் காலடி ஓசையுடன் மேடைக்குள் வருவதும் போவதும் தற்பொழுதும் கண் முன்னே நிற்கின்றது. குதிரைகளின் காலடியோசை காதினுள் கேட்டபடி இருக்கின்றது.

நாட்டிய நாடகம் முழுக்க ஸ்வாமி ஸ்வானந்தாவின் தமிழ் இயல் தமிழாயும் இசைத் தமிழாயும் நாடகத் தமிழாயும் ஒலித்துக் கொண்டிருந்தது. வாய்ப்பாட்டுக் கலைஞர்களின் குரல் வளம் சேர்த்துக் கொண்டிருந்தது.

நிறைவாக 43 கலைஞர்களின் அர்ப்பணிப்பை மண்டபம் நிறைந்த பொழுதும் படிகளில் அமர்ந்திருந்து பார்த்து ரசித்த ரசிகர்கள் எவரும் அந்த மாலைப் பொழுதை மறக்கவே மாட்டார்கள்.

”காதலும் அது அவளுக்கு முற்பாதியில் அளித்த வீரமும்…

தோல்வியும் அது விளைக்கும் தியாகமும்” கடைசிக் காட்சியில் கண்ணீரை வரவழைத்தது.

மேலும் தமிழை வளர்க்கின்றோம்… அது செய்கின்றோம்…. இது செய்கின்றோம்…. என்று அறிக்கைகளும் கூடல்களும் நடத்துவது ஒருவகை என்றால் அதனை செயல்வடிவத்தில் முழுச்சமுதாயத்திற்கும் கொண்டு செல்வது இன்னோர் வகை.

சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவில் அரங்கேறிய நிகழ்ச்சியாயினும் எல்லா நாடுகளிலும் அந்தந்த அரசாங்கத்தின் தலையீடு இன்றி நிகழ்வுகள் நிகழ்கின்றதா என்பது கேள்விக்குறியாகும்.

இங்கு எந்த அரசியல் சாயமும் இருக்கவில்லை.

கல்கியின் கதைக்களத்தில் தான் அரசியல் இருந்தது. மகாபாரதம் யுத்த தந்திரங்களையும் அரசியல் சூழ்ச்சிகளையும் கூற அதன் கிளையாக பிரகாசிக்கும் பகவத்கீதை வாழ்வின் நெறிகளைக் கூறியது போலவே சிவகாமியின் சபதம் முழுக்க வாழ்வில் கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல் இருந்தது. அதனை நாடக ஒட்டத்தை கூர்ந்து கவனிப்போர் கண்டு கொள்ளலாம்.மேலாக வாசிப்பு என்பதே அருகி விட்ட காலத்தில் சிறுகதைகள் கூட ஒரு பக்க கதைகளாகவும் மின்மினிக் கதைகளாகவும் அவசர இலக்கிய உலகில் வாசகர்களுக்கு தீனி போடும் காலகட்டத்தில்…. மாபெரும் காவியத்தை வாசிக்க முடியாவிட்டாலும் இதில் சொல்லப்பட்டது தான் அங்கு விரிவாகச் சொல்லப்பட்டது என மூலக்கதைக்கு எந்தப் பங்கமும் இல்லாது அடையாளம் காட்டிய இந்தக் குழுவினரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

இந்த நிகழ்வின் மூலம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக கல்கி எழுத்தில் இறக்கி வைத்த காவியத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கின்றார் ஸ்ரீமதி பவானி குகப்பிரியா.

வாழ்க அவரின் பணி!

அவரிடம் இருந்து பொன்னியின் செல்வனையும் பார்த்திபன் கனவையும் எதிர்பார்க்கலாம்.

சிதம்பரத்தில் வாசம் செய்யும் நடனத்தின் நாயகன் அவருக்கு போதிய ஆயுள் பலத்தையும் ஆன்ம பலத்தையும் கொடுக்கட்டும்.

திருக்கோணேஸ்வரத்தானும் துணை நிற்கட்டும்!!

அலையோசையே அரங்கமாகட்டும்!!!

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்