இணைய அரவம் – 2

0
1014

– வி.சூர்யகுமார்.

சென்ற இதழில் இணையம் வழியாக நடக்கும் மோசடிகளைப் பார்த்தோம். இந்த இதழில் இன்னும் சற்று அதனை ஆராய முற்படுவோம்.

இப்படி இணையத்தில் நடக்கும் மோசடிகளில் சிக்கி ஏமாந்தவர்களின் கதையைக் கேட்டால் நமக்கு விசித்திரமாக இருக்கும். ‘இவர் எப்படி இவ்வலவு எளிதாக ஏமாந்தார்’ என்றிருக்கும். ஆனால் யாரும் வேண்டுமென்று ஏமாறுவதில்லை என்பது நமக்குத் தெரியும். உலகமே உள்ளங்கையில் வந்த பிறகும் இன்னும் கடவுளுக்கும் பக்தனுக்கும் குறுக்கே நிற்கும் சாமியார்களை நம்புவோர் இருக்கிறார்களே. அதிகப் பணத்திற்கு ஆசைப்படுவதோ, போலி மிரட்டல்களுக்கு பயப்படுவதோ எதுவானாலும் உளவியலாக பாதிக்கப்படும்போது சரியான முடிவு எடுக்கமுடியாமல் தடுமாறுகிறோம். நமது தடுமாற்றம்தான் ஏமாற்றுக்காரர்களின் பலம்.

நீங்கள் பலவீனமானவரா?

ஏன் சாமியார்களை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டேன் என்றால், என்னதான் கடவுளுக்குப் பிரதிநிதி கிடையாது என்பது புத்திக்குத் தெரிந்தாலும் பலவீனமான மனதிற்கு தைரியம் கொடுக்க சாமியார்களை நாடுவது சிலருக்கு வழக்கமாக உள்ளது. அப்படித்தான் பொருளாதாரா நிலை, சூழ்நிலை நெருக்கடி, எதிர்கால பாதுகாப்பு என பல காரணங்களால் குறுக்கு வழியில், குறைந்த காலத்தில் பொருள் சேர்க்க நினைப்பவர்கள் இந்த இணைய மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது. இந்த மோசடி கும்பலின் திட்டமும் செயல்பாடும் சில தெளிவான மனிதர்களையே குழப்பிவிடும்போது பலவீனமான தருணங்களில் இருப்பவர்கள் நிலை பற்றி சொல்லவே வேண்டாம். எனது நண்பர் ஒருவர் மென்பொருள் துறையில் பணிபுரிபவர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன் இந்த நைஜீரிய மோசடி கும்பலின் மின்னஞ்சல்கள் தொடர்ச்சியாக வந்துள்ளன. (ஒரு பெரும்பணக்காரர் அனாதையாக இறந்துவிட்டார், அவரது வங்கி சேமிப்பை கை மாற்றிவிடும்போது உங்கள் நாட்டு வங்கியின் வழியாக செய்கிறோம், அதற்கு உங்கள் வங்கிக்கணக்கை தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்பதுதான் நைஜீரிய மோசடி. நம் வங்கிக்கணக்கை உபயோகப்படுத்த நமக்கு அவர்கள் கொடுக்கும் சிறு தொகையைக் கேட்டால் நமக்கு மயக்கம்தான் வரும், ஆனால் அந்தத் தூண்டிலை வைத்துத்தான் நம் பணத்தைக் களவாடுவார்கள். வங்கிக்கு கட்டணம், வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பக் கட்டணம் என்று நம் பணம் முழுவதையும் கறந்துவிட்டு காணாமல் போய்விடுவார்கள்.) முதலில் அவற்றை அலட்சியப்படுத்தியவர் ஒருமுறை ‘சும்மா பதில் அனுப்புவோமே’ என்று அவர்களிடம் சில விவரங்களைக் கேட்டிருக்கிறார். அதற்கு உடனடியாக பதிலளித்தது மட்டுமல்ல, இந்த சென்னை நண்பரை மதுரையிலிருந்து ஒரு வழக்கறிஞர் அழைத்து ‘நாந்தான் இந்த வங்கிப்பரிமாற்றத்தைக் கையாளுகிறேன், எதுவானாலும் உங்களுக்கு உதவி செய்வேன்’ என்றிருக்கிறார். இப்போது நண்பர் நம்பவே ஆரம்பித்துவிட்டார். எப்படியோ புத்திசாலித்தனமாக அமைக்கப்பட்ட வலையிலிருந்து கடைசிக்கணத்தில் தப்பினார் நண்பர். அவரது பணமும் தப்பியது. இணையத்தில் நடக்கும் மோசடிகள் என்றில்லை, பொதுவாகவே நாம் வாழ்க்கையில் தவறான முடிவுகளை எடுப்பது ஒருசில பலவீனமான தருணங்களில்தான். அந்த கணங்களில் எந்த முடிவும் எடுக்காமல் சும்மா இருந்தாலே போதும், நாம் தப்பிவிடலாம். மில்லியன்கணக்கில் தங்கள் சேமிப்பை இழந்தவர்கள் இன்று இதைத்தான் வலியுறுத்துவார்கள்.

சிந்தனை செய் மனமே!

பெரும் பணத்தின் மேல் ஆசை காட்டி மோசடி செய்வது ஒரு வழி என்றால் பொய்ப் புகார்களைச் சொல்லி பணம் பறிப்பது இன்னொரு வழி என்று முன்பு பார்த்தோம். பிறந்து சில மாதங்களேயான குழந்தையுடன் தங்கள் கனவு இல்லத்தை உடமையாக்கிக் கொள்ள சில வாரங்களே இருந்த நிலையில் மொத்த சேமிப்பையும் ஒரு தொலைபேசி மிரட்டலில் பறிகொடுத்த இளம் தம்பதியினரின் கதையை இன்னும் மறக்கமுடியவில்லை. சாதாரண பொதுமக்களாகிய நாம் ஏதேனும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளதாகவோ அல்லது ஏதேனும் அரசு தொடர்பான விவகாரங்களில் சிக்கியிருப்பதாகவோ அழைப்பு வந்தால் பதட்டமடைவது இயல்பே. இதைத் தெரிந்துகொண்டேதான் மோசடி கும்பல்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள். அந்த நேரங்களில் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயமாகத் தப்பிக்கலாம். ஏதேனும் அரசு அலுவலகங்களில் இருந்து அழைப்பு வந்தால்

*நீங்கள் நேரடியாக அந்த அலுவலகத்திற்கு வருவதாக சொல்லுங்கள். அந்த அலுவலகத்தில் யாரை சந்திக்கவேண்டும் என்றும் கேளுங்கள்.

*ஒரு சிறிய சந்தேகம் தோன்றினாலும் உங்கள் சுயவிவரங்களை அவர்களுக்குக் கொடுக்காதீர்கள். கண்டிப்பாக வங்கி கணக்கு எண், கடவுச்சொல், இருப்புத்தொகை போன்ற விவரங்களை எப்பொழுதும் தராதீர்கள்.

*இப்படி ஒரு அழைப்பு வந்தால் முதலில் காவல்துறையிடம் புகார் கொடுப்பது எப்போதும் நல்லது.

*எப்பொழுதும் ஒரு தொலைபேசி அழைப்பில் பயந்து யாருக்கும் பணம் தந்துவிடாதீர்கள். உங்கள் நெருங்கிய நண்பரிடமோ, குடும்ப உறுப்பினர்களிடமோ இதைப்பற்றிய ஆலோசனை செய்வது மிகவும் நல்லது.

ஏதாவது வங்கியிலிருந்து அழைப்பதாகச் சொல்லி, உங்கள் முழுப்பெயர், முகவரி போன்றவற்றை சொல்லி உங்கள் வங்கிப் பரிமாற்றம் பற்றிய விவரங்களைக் கேட்டாலும்

*அழைத்தவரின் விவரங்களை முதலில் கேளுங்கள். அவர்கள் பம்மினால் உங்களுக்கே புரிந்துவிடும்

*நீங்களே வங்கிக்கிளைக்கு நேரில் வந்து விவரங்களைத் தருவதாக சொல்லுங்கள். அதற்கான விவரங்களைக்கேளுங்கள். பணத்தை இழந்து வருத்தப்படுவதைவிட ஒருமுறை வங்கிக்கிளைக்கு சென்று வருவது எவ்வளவோ மேல்.

*ஏதாவது போலி அழைப்பு என சந்தேகப்பட்டால் உடனே அழைப்பை துண்டித்துவிட்டு உங்கள் வங்கிக்கு அதைத் தெரியப்படுத்துங்கள்.

நாம் கஷ்டப்பட்டு உழைத்துப் பணம் சம்பாதித்தால் அதை ஏமாற்றி சம்பாதிக்கப் பெரும் கூட்டம் காத்திருக்கிறது. கட்டுக்கடங்காத வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கும் இணையத்தை இப்படி தவறான முறையில் பயன்படுத்துபவருக்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைக்கும்போது அந்த உற்சாகத்தில் மென்மேலும் பலரை ஏமாற்ற முற்படுவர். நாம் விழிப்புணர்வுடன் இருந்து அவர்களைத் தோற்கடிப்போம். இணையத்தைப் பாதுகாப்பாக உபயோகிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here