கால் முளைத்த பூவே

0
839


> 2013 ஆரம்பத்தில் என்று ஞாபகம். மாற்றான் என்ற திரைப்படத்திற்காக மதன் கார்க்கி எழுதிய ‘கால் முளைத்த பூவே’ என்ற பாடலைத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தேன். ரஷ்யாவில் வருவதுபோன்ற காட்சிகள் என்பதால் அந்நாடு தொடர்பான சில பெயர்கள் அப்பாடல் வரிகளில் வரும். அதில் ‘கேமமில் பூவின் வாசம் அதை உன் இதழ்களில் கண்டேனே’ என்றொரு வரியும் உண்டு. ஏதோ ஒரு வாசமுள்ள பூ என்ற அளவில் அப்போது அதைக்கடந்து போய்விட்டேன்.
>
> சில வாரங்கள் கழித்து ஒருநாள் லிட்டில் இந்தியா முஸ்தபா செண்டரில் பலவகையான டீ பாக்கெட்டுகளை சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோது அதில் camomile flowers என்ற பெயர் தென்பட்டது. தில்மா (Dilmah) என்ற இலங்கைக் கம்பெனியின் தயாரிப்பு. ருசிப்போமே என்றொரு பெட்டி வாங்கினேன். அதில் சொல்லியிருந்தபடி கொதிக்கும் நீரில் ஒரு பாக்கெட்டைப் போட்டுவிட்டு ஐந்து நிமிடங்கள் காத்திருந்தேன். அதிகக் காட்டமில்லாமல், புதியதோர் வாசனையுடன் பானம் தயாரானது. பாலில்லை, சர்க்கரையில்லை. ஆனாலும் பிடித்திருந்தது. பிறகு அடுத்தடுத்த வேலை நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு கேமமில் பானத்துடனேயே தொடங்கியது.
>
> நாட்கள் செல்லச்செல்ல ஒன்றை உணர முடிந்தது. ஒரே பெட்டியின் முதல் பாக்கெட்டுக்கும் கடைசி பாக்கெட்டுக்கும் பெரும் வேறுபாடு தெரிந்தது, சுமார் மூன்றுவாரங்களில். அட்டைப்பெட்டிக்குள் ஒவ்வொரு பாக்கெட்டும் தனித்தனியாக பேக்கிங் செய்யப்படாததால் பூவின் வாசனை குறைந்துகொண்டே வந்ததாகத் தோன்றியது. ஒருவேளை பழகப்பழக பூவும் புளிக்குதோ என்றுமொரு சிந்தனை.
>
> சோதனைக்காக அந்த பெட்டி தீர்ந்தவுடன் Teekanne என்ற ஜெர்மனி கம்பெனி தயாரிப்பில் ஒரு பெட்டி கேமமிலை வாங்கினேன். அதில் ஒவ்வொரு பாக்கெட்டும் தனித்தனியாக பேக் செய்யப்பட்டிருந்தது. விலை தில்மாவைக்காட்டிலும் ஐம்பதுசதம் அதிகம். ஆனால் ஒவ்வொரு பாக்கெட்டும் வாசனை குறையாமல் இருந்தது, அதே மூன்று வாரகாலத்தில். சந்தேகம் தீர்ந்தது. அதன்பிறகு அந்த ஜெர்மனி தயாரிப்பையே தொடர்ந்து வாங்கிக்கொண்டிருந்தேன்.
>
> ஓராண்டு கழித்து NTUC Fairprice ஒன்றில் Dilmah ப்ரமோட்டர் ஒருவர் கேமமில் பானத்தை அருந்திப்பார்க்கச்சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டிருந்தார். அவரிடம் என் அனுபவத்தைச் சொன்னேன். தனித்தனி பாக்கெட்டுகளில் போட்டு இதே விலைக்கு விற்றால் என்னைப்போன்ற வாடிக்கையாளர்கள் தில்மாவுக்குத் திரும்பிவிடுவார்கள் என்றேன். அவர் குறித்துக்கொண்டார். அன்றும் பிறகும் வழக்கம்போல் Teekanne-தான் வாங்கிவந்தேன்.
>
> சமீபத்தில்Teekanne கேமமில் கிடைக்காததால் வேறுவழியின்றி தில்மா வாங்கினேன். பெட்டியைப் பிரித்துப்பார்த்தால் பாக்கெட்டுகள் தனித்தனியாகப் பேக் செய்யப்பட்டுள்ளன. ஆனால் விலை அதேதான். ஏற்றவில்லை. மகிழ்ந்து, பாராட்டி தில்மா கம்பெனிக்கு ஒரு கடிதம் போட்டேன். அதன் நிறுவனர்-சேர்மன் மெரில் பெர்னாண்டோ நீண்ட நன்றிக்கடிதம் ஒன்று அனுப்பினார். அதில் சுவையான தகவல்களும் இருந்தன.
>
> பெர்னாண்டோவின் மகன்கள் தில்ஷன், மாலிக் இருவர் பெயரையும் இணைத்து தில்மா என்ற பெயருடன் தொடங்கினாராம். டீ வியாபாரம் பெருவணிகத்தின் கையில் சிக்கிச்சீரழிந்து, அதன் சுவைக்காகவும் அனுபவத்துக்காகவும் அருந்தி மகிழ்ந்தது போய், பிராண்ட் பெயருக்காகவும் விரைவில் நிறம் தரும் ரசாயனங்கள் கலக்கப்பட்டும் விற்கப்பட்டதைக் கண்டு நொந்துபோய், சிலோன் டீயின் பெருமையை மீண்டும் மீட்டெடுக்க உறுதிபூண்டு தொழிலைத்தொடங்கினேன் என்று எழுதியிருந்தார்.
>
> மேலும் விலையைக்குறைப்பதற்காக பல நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்ட தேயிலைகளை ஒன்றாக்கித்தூள் செய்யும் முறையைத் தவிர்த்து, கிராமத்தில் ஒரு மரத்துக்கள்ளு என்பார்களே அதுபோல, ஒரே இடத்தில் விளைவிக்கப்பட்ட தேயிலையை அங்கேயே பதப்படுத்துவது முதல் பேக்கிங் செய்வதுவரை அனைத்தையும் செய்யத்தொடங்கியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் முதலில் விற்பனையைத் தொடங்கி பிறகு நியூசிலாந்துக்கும் விரிவான வியாபாரம் மெல்ல உலகின் பல பாகங்களுக்கும் பரவி இன்று நூறு நாடுகளுக்கும் மேலாக தில்மா அறியப்பட்டிருக்கிறது. நவீனம் அல்ல பழமையே தேநீரின் அடையாளம் என்பதில் தான் கொண்டிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கையே இவ்வெற்றிக்குக் காரணம் என்கிறார் இவர்.
>
> சாதாரணமாக சினிமாப்பாட்டு என்று ஒதுக்கிவிடக்கூடிய ஒன்றும்கூட நாம் கூர்ந்து கவனிக்கும்போது அனேக அனுபவங்களைத் தரத்தயாராகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here