எழுதுவதா வேண்டாமா?

0
581

தேசிய கலைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் ஆண்டுதோறும் சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் எழுத்தாளர் விழாவில் இவ்வாண்டு சில புதுக்குரல்கள் ஒலித்தன. ‘எழுதுவதா வேண்டாமா? – இளம் எழுத்தாளரின் குழப்பம்’ என்ற தலைப்பில், சிங்கையின் சமகாலத் தமிழிலக்கியச் சூழலை சிங்கையிலேயே பிறந்து வளர்ந்த இளையர்களின் கண்ணோட்டத்திலிருந்து விவாதிக்க இவ்வமர்வில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காயத்ரி இளங்கோ, ஹரிணி வி, இளஞ்சேரன் குணசேகரன் ஆகியோருடன் நானும் கலந்துகொண்டு பல கருத்துகளை முன்வைத்தோம். அமர்வை வழிநடத்தியவர் தமிழக எழுத்தாளரான திரு எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்ரா). நிகழ்வை வழிநடத்தியதோடு நாங்கள் கூறிய பல பிரச்சனைகளுக்குத் தன்னுடைய அனுபவம் சார்ந்து அவரும் சில தீர்வுகளை முன்வைத்தார்.

அடிப்படையில் சமூகப் பொறுப்புணர்ச்சி மிக்கவரே எழுத்தாளர் என்று தொடங்கி தமிழகத்தின் முழுநேர எழுத்தாளர்கள் குறித்து எஸ்ரா தொடக்க உரையில் குறிப்பிட்டார் ஆனால் சிங்கைச்சூழல் முற்றிலும் நேர்மாறானது. இங்குள்ள தமிழ் எழுத்தாளர்கள் முழுநேரத் தொழில்முறை எழுத்தாளர்கள் அல்ல. அத்தகைய எழுத்துப்பணியில் ஈடுபடுவதற்கான புறச்சூழலும் இங்கில்லை. ஆயினும் இச்சூழலானது சிங்கை எழுத்தாளர்களுக்குப் பாதகமாகத்தான் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை என்றார் காயத்ரி இளங்கோ. முழுநேர ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றும் அவருக்குக் கல்விச்சூழலில் மாணவர்கள் எதிர்கொள்பவற்றையும், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் மனவுளைச்சலையும் எழுதமுடிகிறது. ஆகவே முழுநேரத் தொழில்கள் தரும் அனுபவங்களை அவரவர்களுக்கான தனித்தன்மையுடன் இங்கு எழுத்தாளர்கள் எழுதவியலும் என்பதால் அதுவும் ஒரு சாதகமே.

காயத்ரியின் கருத்தை இளம் தமிழ் எழுத்தாளர்களுக்குப் பொருத்திப்பார்த்தால், இங்கு பிறந்து வளர்ந்த இளையர்களின் பிரச்சனைகளை அவர்களால் மட்டுமே எழுதவியலும். சிங்கப்பூரின் படைப்பிலக்கியப் பரப்பில் அதற்கான தேவையும் இடமும் இருப்பதே இளையர்களை எழுதத்தூண்டும் ஊக்கமாக இருந்திருக்கவேண்டும். எழுத்துத்துறையில் அதிகமான இளையர்கள் தடம் பதித்திருக்கவேண்டும். ஏன் அவ்வாறு நிகழவில்லை?

சிங்கப்பூரின் தமிழ்க்கல்விச் சூழலில், தமிழ்மொழியின் இலக்கணமும் இன்னபிற கூறுகளும், தொடக்கப்பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரையில் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகிறது. ஆனால், தமிழ் இலக்கியங்களைப் பற்றி, குறிப்பாகத் தற்காலத் தமிழ் இலக்கியங்களைக் குறித்த அறிமுகம் கிட்டுவது அரிது. உயர்நிலைப் பள்ளிகளில் தமிழ் இலக்கியத்தைச் சாதாரண நிலைத் தேர்வுகளில் எடுப்பவர்கள் சிறுபான்மையினராகவே உள்ளனர். அதிலும் தொடர்ந்து தொடக்கக்கல்லூரியில் தமிழ் பயில்பவர்கள் அந்தச் சிறுபான்மையில் பாதி இருக்கலாம்.

நான் சென்ற ஆண்டு தொடக்கக்கல்லூரியில் தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் என்ற பாடத்தை மேல்நிலைப் பாடமாக எடுத்து பயின்றபோது, என்னுடன் அப்பாடத்தை பயின்றது இன்னொரு மாணவி மட்டுமே. பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை ஆயிரத்தைத்தாண்டும். சிங்கப்பூர் முழுவதிலும் இந்த எண்ணிக்கை நாற்பதைக்கூட எட்டிப்பிடித்திருக்காது. இந்தப் பின்னணியை மனதிற்கொண்டால் சிங்கை இளையர்களின் கண்ணோட்டம் தெளிவாகப் புரியும்.

இந்த அமர்வில் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளையும் அவற்றை எதிர்கொள்ள ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டவைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்து ஆராய்ந்துள்ளேன்; முதலாவது, சிங்கப்பூரின் இருமொழிச் சூழலில் புதிதாக நுழையும் இளம் எழுத்தாளர்கள் பொதுவாக சந்திக்கும் பிரச்சனைகள். இரண்டாவது, தற்போது எழுதிகொண்டிருக்கும் இளையர்களின் சிக்கல்கள். மூன்றாவது இந்த இளையர் வட்டத்தை விரிவுபடுத்தத் தேவைப்படும் மாற்றங்கள்.

ஆங்கிலமா? தமிழா?

காயத்ரி தொடக்கத்தில் தன்னுடைய வலைப்பூக்களில் அதிகமாகத் தமிழில் எழுதிவந்ததாகவும், காலப்போக்கில் ஆங்கிலத்தில் எழுதத்தொடங்கியபோது தமிழில் எழுதுவது கணிசமாகக் குறைந்துவிட்டதாகவும் கூறினார். இருமொழிகளிலும் தொடர்ந்து எழுதுவது சவாலான பணி என்பது அவருடைய கருத்து. சமீப காலமாக மட்டுமே தமிழில் எழுதிவந்தாலும், ஆங்கிலத்தில் பல ஆண்டுகளாகத் தன்னுடைய கவிதைகளைப் படைத்து வரும் இளஞ்சேரனும் இக்கருத்தை ஆமோதித்தார்.

வழக்கநிலைத் தேர்வுகளோடு தமிழுடனான தொடர்பும் அறுபட்டுப்போன சூழலில், தான் கூறவிரும்புவதைத் தமிழில் வெளிப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார். இதற்கு எஸ்ரா முன்வைத்த ஆலோசனை பலதரப்பட்ட அகராதிகளின் மூலம் சொல்வளத்தை மேம்படுத்திக்கொள்ளலாம் என்பது. அவரது ஆலோசனை அடிப்படைப் பிரச்சனைக்குத் தீர்வாகுமா என்பது என்னுடைய கேள்வி.

இளையர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தொடர்புப்படுத்திப் பார்க்க உதவும் ஆங்கிலச் சொற்களை, அச்சொல்லில் உள்ள தன்மை மாறாமல் தமிழுக்கு அவர்களால் சரியாக மொழிபெயர்க்க இயலுமா என்பதுதான் கேள்வி. உதாரணத்திற்கு, “Anxiety” என்பது இன்றைய சூழலில் குறிப்பாக இளையர்களிடம் காணப்படும் ஒரு பிரச்சனை. தமிழில் அதற்கிணையாக பதற்றம் அல்லது படபடப்பு ஆகிய சொற்களே கிடைக்கின்றன. இவை சற்றுத்தட்டையான பொருளில் இருக்கின்றன. அதேநேரம் ஒருவகையான மனநோய் என்றும் மொழியாக்கவியலாது.

ஆங்கிலத்தில் பொதுவான உள்ளர்த்தம் (neutral connotation) கொண்ட ஒரு சொல்லை, ‘நோய்’ என்ற சொல்லைச் சேர்த்து எதிர்மறையான பொருளில் சொல்வது சரியாகாது. இதுபோன்ற சொற்களின் உள்ளர்த்தம் மாறாமல் மொழிபெயர்ப்பது இருமொழியிலும் சிறப்பான புலமை கொண்டவர்களுக்கே சவால்தான். சொற்களுக்கான பஞ்சம் என்பதை விட சரியான சொற்களைப் பயன்படுத்துவதே இங்கு இளையர்களால் எதிர்கொள்ளப்படும் சிக்கல். அதற்குத் தேவையான மொழித்திறன்கள் அவர்களிடம் உள்ளதா? ஒருவேளை இருந்தாலும், அவர்கள் உருவாக்கும் சொற்களை யார் சரிபார்ப்பது?

Anxiety என்பது மேற்கத்திய வாழ்க்கைமுறையை நாம் கடைப்பிடிப்பதினால் விளைந்த பிரச்சனை என்றும், அப்பிரச்சனையை முதன்முதலில் உருவாக்கியதே ஆங்கிலேயர்கள்தான் என்றும் எஸ்ரா இச்சிக்கலுக்கு பதில்கூறினார். அது எனக்குத் திருப்தியளிக்கவில்லை. தமிழில் பேசுவதாலும் பழந்தமிழர் வாழ்முறையைக் கைக்கொள்வதால் மட்டும் உளவியல் ரீதியான பிரச்சனைகளைத் தடுக்கவியலுமா என்ன? தமிழில் பொருத்தமான சொற்கள் கிடைக்கும் சிரமம் இருக்கும் விஷ்யங்களைப் பற்றித் பேச தமிழ்ச்சமுதாயம் இதுநாள் வரை தயங்கியிருக்கலாம். அத்தயக்கத்தை உடைப்பதையே இளைய தலைமுறை எழுத்தாளர்கள் செய்யவிரும்புகிறார்கள்.

நவீன ஆங்கில உலகத்தையும் தமிழ் உலகத்தையும் இருவேறு துருவங்களாகப் பிரிக்கவியலாது என்று கூறிய யேல் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவியான ஹரினி வி, அவற்றை இரு கரைகளாகத் தொடர்புபடுத்திப் பார்க்கவேண்டும் என்றார். மேலும், அவ்விரு கரைகளுக்குள் நீந்தி நமது அடையாளத்தை நிலைநாட்ட முயற்சிகளை மேற்கொண்டு, இளையர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களைப் பற்றி சிங்கப்பூர் இலக்கியங்களில் அதிகமாகப் பதிவுசெய்யவேண்டும் என்றும் கூறினார். பல்லினச் சூழலில் வாழும் சிங்கப்பூர் தமிழ் இளையர்கள் ஆங்கிலத்திலேயே பிரதானமாக பேசிப் புழங்குவதால், இருமொழிகளையும் சார்ந்த அடையாளங்களுடன் வாழ்வது எத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துகின்றது என்பதைக் குறித்து அதிகமாக எழுதப்படவேண்டும் என்றும் அவர் பேசினார்.

இளைய எழுத்தாளர்களுக்கான வாசகர்களும் தளங்களும்

ஒவ்வொரு எழுத்தாளரும் தனது படைப்பிற்கான அங்கீகாரத்தைத் தனது வாசகர்களிடமிருந்துதான் பெறுகிறார். ஆனால், சிங்கப்பூரில் இன்றைய இளையர்கள் தமிழில் வாசிப்பதும் எழுதுவதும் குறைவென்பதால், இளைய எழுத்தாளர்களுக்கான வாசகர்களும் இயல்பாகக் குறைந்துவிடுகின்றனர். தமிழ் இலக்கியத்திற்கான வாசகப்பரப்பு பெரும்பகுதி புதிய குடியேறிகளாகவும் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்களையும் உள்ளடக்கியுள்ளது. சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த ஒருவரின் அளவிற்கு அவர்களுக்குச் சிங்கப்பூர்ச் சூழல் பரிச்சயமானதல்ல.

மேலும், தமிழ்மொழியையே முதன்மை மொழியாக பயன்படுத்தும் மாநிலத்திலிருந்து வந்திருப்பதால் அவர்களுடைய வாசிப்பு அனுபவத்துடனும், தமிழ் மொழிப்பயன்பாட்டுடனும் சிங்கை இளையர்களின் படைப்புகளைப் பொருத்திப் பார்க்கும்போது, அவை இலக்கியத் தரமற்றவையாக கூட இருக்கக்கூடும். எனவே அங்கீகாரம் கிடைப்பதில் அடிப்படைச்சிக்கல் எழுகிறது. இது தயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியக் காரணங்களில் ஒன்று.

வெவ்வேறு வயதினருக்காக எழுதப்படுபவற்றையும் இலக்கிய வடிவங்களாக ஏற்றுக்கொண்டு வளைந்துகொடுக்கும் தன்மை சிங்கையின் தமிழ் இலக்கியத்திற்கு இருக்கவேண்டியது அவசியமென்று ஹரினி கூறினார். அனைவரும் ஒரே விதமான இலக்கியத்தைப் படைக்கவேண்டும் என்று எதிர்பார்க்காமல், சிங்கப்பூரின் இளம் தமிழ் எழுத்தாளர்கள் வடிவம், மொழி இவற்றில் மாறுபட்டு எழுதினால் அவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார். இலக்கியத்தரத்தைக் கட்டிக்காக்கும் நோக்கில் இளையர்களின் படைப்புகளில் குறைகளையே அதிகம் கண்டால், பலரின் வளர்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே தடைபட்டுவிடும் என்றும் கூறினார்.

இளம் எழுத்தாளர்கள் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கொண்டிருக்கவேண்டும் என்று எழுத்தாளர் அழகுநிலா நிகழ்ச்சியின் கேள்வி பதில் அங்கத்தின்போது பேசினார். இவ்விஷயத்தில் எனக்கொரு கருத்து உண்டு. ஒரு படைப்பை விமர்சனம் செய்வதற்கு முன்னர் அப்படைப்பு எழுந்த சூழல் குறித்த முழுப்புரிதல் இருக்கவேண்டும். அப்புரிதலின் மேல்தான் சரியான, நடுநிலைமையான விமர்சனமானது நிகழும். தங்களின் படைப்பைவிட அவற்றின் மூலமாக வெளிவரும் கண்ணோட்டங்களைப் பற்றிய விமர்சனங்கள்தான் இளையர்களுக்கு முதல் தேவை. மற்றபடி நேரடியாகப் படைப்பின்மீதான விமர்சனங்கள் நேர்மறையா எதிர்மறையா என்பது குறித்த கவலையெல்லாம் அடுத்த நிலையில் தான்.

புத்தகங்களை வாசிப்பதைவிட சமூக வலைத்தளங்களில் அதிகமானவற்றை பகிர்ந்து, அதன்மூலமாக வாசிப்பைப் பெருக்கிக்கொள்ளும் இளைய வாசகர்களே இளைய எழுத்தாளர்களுக்கான வாசகர்கள் என்று ஒரு கருத்து கூறப்பட்டது. இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இளையர் ஒருவர் தமிழில் பதிவிடும் இலக்கியம் சார்ந்த பதிவுக்கு ‘லைக்’ ஒன்றை மட்டும் தட்டிவிட்டுக் கடந்து செல்லும் அனைவரும் அப்பதிவை முதலில் முழுமையாகப் படித்தார்களா என்று தெரியாது. ‘லைக்’ செய்பவர்களில் உள்ள இளையர்களின் எண்ணிக்கை விகிதம் என்ன? இளம் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் பதிவுகள் அவர்களுக்குத் தமிழிலக்கியத்தின் மீதான ஆர்வத்தைத் தூண்டியுள்ளதா? இந்த ஆர்வமானது படைப்பாக்கத் தூண்டுதலுக்கோ உரையாடல்களுக்கோ வழிவகுத்துள்ளதா? எனக் கேள்விகள் எழுகின்றன.

இளையர்கள் சக இளையர்களுடன் கலந்துரையாட, இளையர்களால் இளையர்களுக்காகவே அமைக்கப்பட்ட இலக்கியத் தளங்கள் அறவே சிங்கையில் இல்லை. இப்பிரச்சனையை எதிர்கொள்ள எஸ்ரா ஓர் ஆலோசனை கூறினார். தமிழகத்தில் வளர்ந்துவரும் இளம் எழுத்தாளர்கள் ஒரு நிர்ணயித்த நேரத்தில், அவரவர் இருக்குமிடத்திலிருந்தே முகநூலில் நேரலையாகச் சென்று, தங்களுடைய படைப்புகளைப் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். இணைய ஊடுருவல் அதிகமுள்ள சிங்கப்பூருக்கு இது மிகவும் ஏற்புடையது. புத்தாக்கமான இத்தகைய முயற்சிகளை நாமும் மேற்கொள்ளவேண்டும்.

குறுக்கப்பட்ட எல்லைகளை விரிவுபடுத்துதல்

இளையர்கள் மொழியிலும் இலக்கியத்திலும் ஈடுபாடு காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. பல இளையர்கள், குறிப்பாகப் பல்கலைகழக மாணவர்கள், நாடகத்துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவைகள் மேடையேற்றும் நாடகங்களோடு நின்றுவிடாமல், சிங்கையில் பலகாலமாக இயங்கி வரும் நாடக குழுக்களிலும் சேர்ந்து நாடகங்களை எழுதியும் இயக்கியும் வருகிறார்கள். தன்னிச்சையாகப் பள்ளியின் மூலமாகவும் பள்ளி சாரா அமைப்புகளின் மூலமாகவும் நாடகத்திலுள்ள தங்களது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

நாடகத்தின் கதையோட்டத்தில் சிறுகதையின் கூறுகளும், வசனங்களில் கவித்துவமான மொழியின் கூறுகளும் அடங்கிவிடுகின்றன. ஆதலால், சிறுகதை, கவிதை, நாடகம், ஆகிய இலக்கிய வடிவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்பதை மறுக்க இயலாது. இந்த தொடர்புத்தன்மையைக் கருத்தில்கொள்ளாமல் இலக்கியத்தின் எல்லைகளைச் சுருக்கிவிட்டதால்தான், எழுதக்கூடிய பலர் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றனர்.

சிங்கையிலுள்ள பல இளையர்களுக்கு நிகழ்கலைகளில் உயர்நிலைப் பள்ளி காலத்திலிருந்தே அதிக ஈடுபாடு இருக்கிறது. எனக்கும் இருந்தது. நிகழ்கலைகளில் உள்ள பின்னணி, இசை, நடனம் எனப் பிறகலைகள் இலக்கியத்தை மேலும் செம்மைப்படுத்தப் பெரும் துணைபுரியும் என்று குறிப்பிட்ட இளஞ்சேரன், தமிழ் முரசின் ஏற்பாட்டில் எழுத்தாளர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியாக நடைபெற்ற ‘ராக்’ இசை கலைநிகழ்ச்சியை உதாரணமாகச் சுட்டினார். அதைத்தொடர்ந்து ஹரினி, கல்வியின் மூலம் மொழி மீதான மதிப்பு வளர்ந்துவிடுகிறதென்றாலும், வகுப்பறையையும் தாண்டி மொழிப்பிணைப்பையும் அதன்மீதான இரசனையையும் ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படவேண்டும் என்றார்.

இறுதியாக,

நிகழ்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ஒன்றரை மணி நேரம் போதாமல், பலர் அறைக்கு வெளியேயும் விவாதத்தைத் தொடர்ந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தகது. இளம் தலைமுறைத் தமிழ் எழுத்தாளர்களின் குரல்கள் எழுப்பியுள்ள அதிர்வுகள் என்பதால் இது முக்கியமானதொரு முன்னெடுப்பு. கட்டமைப்பு ரீதியான பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடும் நிலையில் நாமில்லை என்பதாலேயே இளைய எழுத்தாளர்கள் சந்திக்கும் பிற பிரச்சனைகளைப் புறக்கணிக்க இயலாது. கல்விச் சூழலில் தமிழ் மொழிப்புழக்கக் குறைவினால் உண்டான தாக்கத்தை எவ்வாறு கையாளலாம் என்பதே நாம் அனைவரும் சிந்திக்க வேண்டியதாகும். அதற்கான சிறப்பான தொடக்கமாக இந்த அமர்வு அமைந்துவிட்டது. தொடக்கங்கள் வெறும் விதைகளாகவே இருத்தலாகாது. அவை வேர்பிடித்து வளர்ந்து விருட்சங்களாக ஆகவேண்டும். அதற்கான முனைப்பையும் உழைப்பையும் கொடுக்க இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் தயாராகவே உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here