எங்கள் குழு

நிறுவனர்
முஸ்தபா

சிங்கப்பூரின் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் வகையில் பல்வேறு சேவைகளை ஆற்றி வரும் திரு முஸ்தபா அவர்கள் தனது முஸ்தபா தமிழ் அறக்கட்டளை மூலம் தமிழ்ப் பணிக்கு உதவிகள் பல செய்து வருகிறார். தனது அறக்கட்டளை தஞ்சை பல்கலைக் கழகத்துடன் இணைந்து ‘கரிகால் சோழன் விருது’ எனும் பெயரில் ஆய்விருக்கை ஏற்படுத்தி சிங்கை, மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வெளிவரும் சிறந்த நூலுக்கு நடுவர் கொண்டு விருதுகள் அளித்து வருகிறார். சிங்கப்பூர் எழுத்தாளர்களின் தமிழ், இலக்கியம் வளர்ச்சிக்கென இலாப நோக்கமில்லாத ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழையும் நடத்தி வருகிறார்.

முதன்மை ஆசிரியர்
ஷாநவாஸ்

இராம நாதபுரம் மாவட்டம் நத்தம் (அபிராமம்) என்ற ஊரில்  பிறந்தவர். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் இளங்கலை (இரசாயனம்) பட்டமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.  25 ஆண்டுகளுக்கு  முன்பு சிங்கப்பூரில் குடியேறிய இவர் சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் சிறுகதைகளும் உயிர்மை மற்றும் இணைய பத்திரிக்கைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். முஸ்தபா அறக்கட்டளையும் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகமும்  இணைந்து வழங்கும் கரி காற்சோழன் விருது (2015) இவரது ‘அயல் பசி’ நூலுக்குக் அளிக்கப்பட்டது. மேலும், 
2016ஆம் ஆண்டிற்கான மு.கு.இராமச்சந்திரா புத்தக நினைவுப்பரிசு ‘மூன்றாவது கை’ சிறுகதைத் தொகுப்பு நூலுக்கு வழங்கப்பட்டது .

 

 

 

 

 

ஆசிரியர் குழு
அழகுநிலா பஞ்சாட்சரம்

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்திலுள்ள செண்டங்காடு இவரது சொந்த ஊர். திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் இளங்கலை (வேதிப் பொறியியல்) பட்டமும், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் எரியம் பேணல் மற்றும் மேலாண்மையில் முதுகலை பட்டமும் பெற்றவர். மூத்த வடிவமைப்பு பொறியாளராக சென்னையிலும் சிங்கையிலும் பணியாற்றியவர்.  இவரது படைப்புகள் தமிழ் முரசு நாளிதழிலும், தங்கமீன், சிங்கப்பூர் கிளிஷே, திண்ணை போன்ற இதழ்களிலும் வெளியாகி உள்ளன. இவரது கதைகள், தங்கமீன் வாசகர் வட்டச் சிறுகதைத் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரில் வசித்து வருகிறார். 2015ஆம் ஆண்டில் ‘ஆறஞ்சு’ எனும் இவருடைய சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டது.

 

 

 

சிவானந்தம் நீலகண்டன்

சொந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்காவிலுள்ள திருக்கண்ணங்குடி. 2006 முதல் பொறியாளராக சிங்கப்பூரில் பணிபுரிபவர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பட்டதாரி.
ஐந்தாண்டுகளாகத் தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவு, அபுனைவு நூல்களைத் தொடர்ந்து வாசித்து அறிமுக, விமர்சனக்கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரது கட்டுரைகள் சிராங்கூன் டைம்ஸ் அச்சு இதழிலும் சொல்வனம், பதாகை இணைய இதழ்களிலும் குறிஞ்சிநெட் வலைப்பூவிலும் வெளியாகியுள்ளன.  வருடத்துக்கு சராசரியாக நாற்பது புத்தகங்கள் வாசிப்பவர். தீவிர வாசகர் என்பதே தன் அடையாளம் என்கிறார்.

 

 

 

பாரதி மூர்த்தியப்பன் 

கவிஞர் பாரதி மூர்த்தியப்பன், பட்டதாரி. இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் வாசிப்பு மற்றும் கலந்துரையாடல்களிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் செயற்பாடுகளில் பெரும்பங்கு உடையவர். ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோர் சிங்கப்பூரில் நடத்திய பல எழுத்துப் பட்டறைகளில் கலந்துகொண்டு, தற்போது தனது படைப்புகளை உருவாக்குவதில் தேர்ந்து வருகிறார். கல்வி, பண்பாடு குறித்த கற்றல் கற்பித்தலில் சொந்த நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய கவிதைகள் ‘நதிமிசை நகரும் கூழாங்கற்கள்’ எனும் சிங்கப்பூர் பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

 

 

 

எம்.கே.குமார்

புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆவுடையார்கோவில் அருகிலிருக்கும் தீயத்தூர் இவரது சொந்த ஊர். படித்ததெல்லாம் சென்னை தரமணியிலுள்ள வேதியியல் தொழில்நுட்பக் கல்லூரியில். தூத்துக்குடியில் ஆறாண்டுகள் பணியாற்றிவிட்டு ஏழெட்டு ஆண்டுகளாக சிங்கப்பூரில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார். தமிழோவியம் மின்னிதழில் எழுதிய ‘மாஜூலா சிங்கப்பூரா’ என்ற சிங்கப்பூர் வரலாற்று குறித்த தொடர் வாசகர்களுக்கிடையே கவனம் பெற்றது. குறும்பட செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் இவரது முதல் குறும்படம் ‘பசுமரத்தாணி’. காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமி நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2008ஆம் ஆண்டு முதல் பரிசு பெற்றார்.  ‘சூரியன் ஒளிந்தணையும் பெண்’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உள்ள இவர் தற்போது சிங்கப்பூர் குடியுரிமையையும் பெற்றுள்ளார்.

 

 

 

அஷ்வினி செல்வராஜ்

தி சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆக இளைய எழுத்தாளர். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்து தற்போது பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் கலை சார்ந்த பாடங்களில் தனது மேற்கல்வியை தொடர விழைகிறார். தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் தொடக்கக்கல்லூரியில் தொடர்ந்து தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணம் எனும் பாடத்தைத் தேர்வுப்பாடமாக எடுத்தார். தமிழ் முரசு பத்திரிக்கையில் மாணவ செய்தியாளராக தற்போது பணிபுரிகிறார். இவர் எழுதியுள்ளவற்றில் சிறுகதைகளும் கவிதைகளும் அடங்கும். இலக்கிய படைப்புகளில் மட்டுமல்லாது, மொழிபெயர்ப்பிலும் தனது திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

 

 

 

பொது மக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத் துறை

விஜய் சங்கர்ராமு

மதுரை மாவட்டத்தில் அ.கிருஷ்ணாபுரம் எனும் ஊர் இவரது சொந்த ஊர். கணினித்துறைப் பட்டதாரியான இவர் சிங்கப்பூரின் ஒரு தனியார் வங்கியில் மூத்த வின்டோஸ் நிர்வாகியாக பணிபுரிகிறார். திரைப்படங்கள், வலைப்பூக்கள், நிழற்படக் கலை, இணையத் தள வடிவமைப்பு ஆகியவற்றில் ஆர்வம் காட்டும் இவர் சிங்கப்பூர் நாடகங்களில் நடிகராகவும், மேடை பின்னிருப்பு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். சிராங்கூன் டைம்ஸ் இதழுக்கு கட்டுரைகளை எழுதிவரும் விஜய், ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்திய பொங்கல் புகைப்படப் போட்டியிலும் கலந்துகொண்டு வெற்றிபெற்றுள்ளார். சிராங்கூன் டைம்ஸ் இதழ் மூலம் கட்டுரை எழுத ஆரம்பித்தவர் இரண்டு கட்டுரைகள் முடித்து நாடகம், வாழ்வியல் தொடர்பான கட்டுரைகள் எழுதும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்.