ஏன் செந்தமிழில் பேசுகிறார்கள்?

1990களின் மத்தியில் மதுரையில் ஓர் அரசியல் கட்சியின் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. தீப்பொறி ஆறுமுகம் என்பவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென கூட்டத்தின் ஒருபக்கத்திலிருந்து மாடு ஒன்று வேகமாக நுழைகிறது. திரண்டிருந்த மக்கள் பயந்து விலகியோடத் தொடங்க கூட்டத்தில் சலசலப்பு எழுகிறது. பேசிக்கொண்டிருந்த ஆறுமுகம் ‘எல்லாரும் ஒக்காருங்க…ஒன்னுமில்ல…மாடு…ஒக்காருங்க…ஒக்காருங்க’ என்று மைக்கில் திரும்பத்திரும்ப சொல்கிறார். ஆனால் கூட்டத்தில் சலசலப்பு குறையவில்லை. அடுத்த நிமிடம் சற்று வேறுவிதமாக ‘தோழர்கள் அனைவரும் அமைதியாக அமருமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் தொடர்ந்து நடைபெறும்’ என்றதும் கூட்டம் அமைதியாகிவிடுகிறது. இந்தச் சிறு சம்பவத்தை கூர்ந்து கவனிக்கும் ஒருவர், ஏன் கொச்சைத்தமிழில் சொன்னால் சட்டைசெய்யாத கூட்டம் அதையே செந்தமிழில் (அல்லது மேடைத்தமிழில்) சொன்னால் கட்டுப்படுகிறது என்று யோசிக்கிறார்; ஆராய்கிறார்; விடையையும் கண்டுபிடிக்கிறார். இது உங்களைப் புருவமுயர்த்த வைக்கலாம். ஆனால் அவர் ஒரு வெள்ளைக்காரர், அப்போது அமெரிக்க சிகாகோ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர், தமிழை எழுதப்பேசக் கற்றவர், தமிழ்நாட்டில் நான்கு வருடங்கள் தங்கி தமிழையும் மேடைப்பேச்சையும் ஆய்வுசெய்தவர் என்றால்…நம்பக்கடினமாக இருக்கிறதா?

மேலை நாட்டவர்கள் தமிழ் மீது காதல்கொண்டது நூற்றாண்டுகளாக வரலாற்றில் உண்டு. வீரமாமுனிவர் என்றழைக்கப்பட்ட பெஸ்கி பாதிரியார், போப் ஐயர் என்றழைக்கப்பட்ட ஜி.யு.போப், ராபர்ட் கால்டுவெல், பீட்டர் பெர்சிவல் போன்ற பெயர்கள் நம்மில் பலருக்கு அன்னியமாக இருக்காது. அந்த வரிசையில் தமிழ்மொழிக் காதலுக்காக வரலாற்றில் இடம்பெறுபவர்தான் இக்கட்டுரையின் நாயகர்; துரதிருஷ்டவசமாகத் தன் ஐம்பத்தைந்தாம் வயதில் (11 மார்ச் 2016) மறைந்த யேல் பல்கலைக்கழக மானுடவியல் பேராசிரியர் பெர்னார்ட் பெய்ட். நெருக்கமானவர்கள் சுருக்கமாக அழைக்கும் பெயர் ‘பார்னி’. 2009ல் வெளியான ‘தமிழ்ப்பேச்சுக்கலையும் திராவிட அழகியலும்’ (Tamil Oratory and the Dravidian Aesthetic : Democratic Practice in South India) என்ற தலைப்பிலான இவரது ஆய்வுப் புத்தகத்திலிருக்கும் ஒரு காட்சிதான் முதல் பத்தியில் நீங்கள் வாசித்தது. மிக விரிவான அவரது ஆய்வு, மொழிசார் மானுடவியலின் கலைச்சொற்கள் காரணமாக அத்துறைசாரா வாசகர்களுக்கு வாசிக்கச் சற்றுக்கடினமானது. ஆனால் அவரது ஆய்வுக்காலமான அந்த நான்கு வருடங்களில் தமிழ்நாட்டில் பார்னியின் கஷ்டங்களையும் முயற்சியையும் ஒப்பிடுகையில் நம் வாசிப்புச்சிரமம் ஒன்றுமில்லை!

1993ல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் என்ற புதிய அரசியல் கட்சி உருவானதும், 1996 தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கியிருந்ததும் அவரது ஆய்வுக்காலத்தைப் மேடைப்பேச்சுக்களால் நிரம்பவழிசெய்துள்ளன. 1992 முதல் 1995 வரை மதுரையில் ஆய்வுக்காகத் தங்கியிருந்து பார்னி சுமார் ஐம்பது அரசியல் பொதுக்கூட்டங்கள் பார்த்து, கேட்டு, பதிவுசெய்திருக்கிறார். வெள்ளைக்காரர் ஒருவர் மேடையில் பேசப்படுவதைக் குறிப்புகள் எடுக்கிறார், ஒலிப்பதிவு செய்கிறார் என்றதும் தேவையில்லாத தொல்லைகள் எழுந்துள்ளன. அவற்றைச் சமாளித்திருக்கிறார். இதுதவிர சுமார் ஐம்பது பேரை நேர்காணல் செய்திருக்கிறார். தினமும் காலையில் தினமலர், தினத்தந்தி, தினகரன் செய்தித்தாட்களையும் மாலையில் மாலைமலர், மாலைமுரசையும் வாசிப்பதையும் அவற்றிலிருந்து ஆய்வுக்குத்தேவையான பகுதிகளைக் கத்தரித்து சேமித்துக்கொள்வதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். தேநீர்க்கடைகளில் செய்தித்தாட்கள் உரக்க வாசிக்கப்படுவதையும் அது மற்றவர்களால் கேட்கப்படுவதையும் பலமுறை கவனித்துக் குறிப்புகள் எடுத்துள்ளார்.

அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, அப்பர் தேவாரம், திருக்குறளில் இருந்தெல்லாம் தொடர்புடைய இடங்களைத் தன் புத்தகத்தில் மேற்கோள் காட்டியும் விளக்கியும் எழுதியிருப்பதையும், நன்னூலில் ஆகுபெயருக்கான இலக்கணத்தை சுட்டிக்காட்டி அதைச் சுவரொட்டி வாசகங்களில் அரசியற் தலைவர்களை விளிப்பதோடு ஒப்பிடுவதையும் பார்க்கும்போது தமிழை இவர் மேம்போக்காகப் பேசுவதற்கு மட்டும் கற்காமல் இலக்கிய-இலக்கண ஆழத்தோடு கற்றிருப்பது விளங்குகிறது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோருக்கே மேற்கண்ட நூல்கள் பழக எவ்வளவு முயற்சிவேண்டும் என்பதை மனதிற்கொள்கையில் பார்னியின் உழைப்பின் தீவிரம் மலைக்கவைக்கும். செந்நாப்புலவர் என்றால் செம்மையான நாக்கா அல்லது வெற்றிலைபாக்கால் சிவந்த (செம்மை = சிவப்பு) புலவனின் நாக்கா என்று கேட்டு ஓர் அத்யாயத்தைத் தொடங்கும் பார்னி சிலேடைப்பதங்களையும் விட்டுவைக்கவில்லை என்பது தெரிகிறது.

‘அடிப்போம் அடல் கெடுப்போம் முகத்திடிப்போம் குடல் எடுப்போம்’ என்ற மனோன்மணீயம் நாடகத்தில் போர்முரசு கொட்டும் பாடல் வரிகள் எவ்வாறு நிறைநேர்நிறை-நிறைநேர்நிறை-நிறைநேர்நிறை-நிறைநேர் என்ற தாளத்தில் அமைந்து, ‘போம்’ என்று விழுமிடங்கள் முரசின் ஒலியுடன் இணைகிறது என்பதை எடுத்துக்காட்டி, அதை வைகோவின் பேச்சு ஒன்றுடன் ஒப்பிட்டு ஒற்றுமைகளை அடுக்கி பார்னி விளக்கும் இடம் புல்லரிக்கும். போர்வாள், தளபதி போன்ற விளிப்புகள், கோட்டை போன்ற மேடை அமைப்பு, அதில் சிம்மாசனம் போன்ற இருக்கை, ஊர்வலங்கள், அரசனுக்கு நிகரான அதீத மரியாதைகள், அதற்கும் மேலாக செந்தமிழ்ப்பேச்சு எல்லாவற்றையும் வெகு அழகாக இணைத்துத் தமிழகத்தின் திராவிட அரசியல் மேடைப்பேச்சுக்கள் எவ்வாறு என்றோ இருந்த தமிழர்களின் பொற்காலம் மீண்டுவந்துவிட்டதாகத் தோற்றத்தை ஏற்படுத்துவதில் வெற்றிகண்டிருக்கிறது என்பதை பார்னி விளக்குகிறார். அதிலும் பொதுக்கூட்டங்களில் பேசப்படும் ஒலி காதில்விழுந்து பொருள் புரிந்து அறிவுபூர்வமாக உணரப்படவேண்டிய அவசியமில்லாமல் லவுட் ஸ்பீக்கர்கள் உதவியுடன் உடல் அதிர்வுகளாலேயே உணர்ச்சிபூர்வமாக உணரவைக்கப்படுகிறது என்பதையும் நுட்பமாக விளக்குகிறார்.

மேடைப்பேச்சு ஆய்வின் மூலமாகவே தமிழ் மொழியையும், தமிழ்நாட்டின் மொழிசார்ந்த அரசியலையும் பார்னி கண்டுகொண்டுவிட்டார் என்று தோன்றுகிறது. அண்ணாதுரைக்குமுன் சம்ஸ்கிருதம் கலந்த தமிழில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மேடைகளில் பேசிவந்ததையும் அதற்குமாற்றாக அண்ணா செந்தமிழ்ப்பேச்சை முன்னிறுத்தியதையும் சுட்டிக்காட்டும் பார்னி இன்று காங்கிரஸ்காரர்களும் செந்தமிழ்ப்பேச்சுக்கு வந்துவிட்டதையும் கவனப்படுத்தத் தவறவில்லை. ஒரே நேரத்தில் தலைவர்களின் செந்தமிழால் கவரப்படும் பொதுமக்கள் கழகப்பேச்சாளர்களின் ஆபாசமான கொச்சைமொழிப் பேச்சுக்களை ரசிப்பதையும் ஆராயமுற்படுகிறார். ஜெயலலிதாவின் முகத்தை ஆண்டாளாகவும் பராசக்தியாகவும் வரைந்து வழிபாட்டுக் கவிதைகள் எழுதப்படுவதைக் குறிப்பிடும் பார்னி, கடவுள் வழிபாடு -அரச வழிபாடு – பொதுக்கூட்ட அமைப்பு மற்றும் செயல்பாடு என்ற முக்கோணம் காரண காரியங்களோடுதான் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று வாதங்களை முன்வைக்கிறார். இடையில் ஜெயலலிதா உருவத்தைக் கன்னிமேரியாக வரைந்ததும் பெருமளவில் எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் வெடித்ததையும் எழுதி வரலாற்று முழுமையையும் நூலுக்குச் சேர்க்கிறார்.

தமிழக அரசியற்களத்தில் அபூர்வமாகத் தென்படும் பெண் மேடைப்பேச்சாளர்கள் பார்னிக்குத் தன் ஆய்வுத்தளத்தை விரிவுசெய்ய உந்துதலாக இருந்திருக்கிறார்கள். கவிதா என்ற அரசியல் பேச்சாளரை நேர்காணல் செய்து, சொந்த வாழ்விலும் பொதுவாழ்விலும் ஒரு பெண்ணாக அவர்பட்ட பாடுகளைப் பதிவுசெய்யும் பார்னி அவருக்குத் தன் புத்தகத்தைச் சமர்ப்பணமும் செய்திருக்கிறார். வெளியே செல்ல சுதந்திரமில்லாத, கல்வியறிவில்லாத, தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட, ஒரு மதுரைப்பெண் எவ்வாறு மேடைப்பேச்சை வீட்டிலிருந்தபடி காதால் கேட்டுக்கேட்டே அடுக்குமொழி செந்தமிழ்ப்பேச்சுக்குத் தன்னைத் தயாரித்துக்கொண்டார், அதன்மூலம் எப்படிப் பேச்சாளராக ஆகி தான் சார்ந்திருக்கும் கட்சியின் தலைமையைக் கவர்வதன்மூலம் பொதுவாழ்வில் கவனிக்கத்தக்க ஓரிடம் பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடனிருக்கிறார் என்பதை பார்னி குறிப்பிடுகையில் மேடைப்பேச்சின் வீச்சுக்கு இப்படியொரு பரிமாணமா என்ற வியப்புமேலிடுகிறது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் அமெரிக்க யேல் பல்கலைக்கழகமும் இணைந்து சிங்கப்பூரில் தொடங்கிய Yale-NUS கல்லூரியின் மானுடவியற் துறைப் பேராசிரியராக 2012 முதல் பார்னி பணியாற்றிவந்தபோதும், பழக மிக இனிய மனிதராக இருந்தபோதும், அவரை நேரிற்சந்தித்து உரையாடும் வாய்ப்பை நான் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்ததால் இழந்துவிட்டேன்; ஓரிருமுறை முகனூலில் அளவளாவியதோடு சரி.

தமிழ் அறிவுலகம் அவரது ஆய்வைக் கூர்ந்துநோக்கி அதை உரையாடல்கள் மூலம் மேலெடுத்துச்செல்ல வேண்டும். மொழியாக்கம் செய்து வெளியிடவேண்டும். மறைவதற்கு ஒருவாரம் முன்பாகக்கூட அமெரிக்கப் பல்கலைக்கழகமொன்றில் பாரதியைக் குறித்த ஆய்வுரையொன்றை நிகழ்த்திய பார்னிக்கு, அவர் தமிழ்மீது கொண்ட காதலுக்கு அதுவே நாம் செய்யும் நன்றியாகவும் அன்பாகவும் இருக்கும்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்