விவாதம் விலக்கும் இருள்

இல்லாத விளக்கில் உருவாகும் ஒளி (விமர்சனம்-நவீன், வல்லினம் 100 தொகுப்பில்), இலக்கியக் கரையான்களின் உணவு (எதிர்விமர்சனம்-சிவா, நவம்பர் சிராங்கூன் டைம்ஸில்), அபோதத்தின் அலறல் (எதிர்வினை-நவீன், இந்த இதழில்) ஆகிய மூன்று கட்டுரைகளையும் வாசித்திருப்பவர்கள் இக்கட்டுரையில் உடனே நுழைந்துவிடலாம். அப்படி வாசித்திராத இலக்கிய ஆர்வலர்களும் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் கூடியமட்டும் விஷயங்களைப் பொதுமைப்படுத்தி இந்த உரையாடலைத் தொடர்கிறேன். இக்கட்டுரையில் விமர்சகர் என்பது நவீனையும், வாசகர் என்பது என்னையும் குறிக்கும்.

*

விமர்சனம் படைப்பின் மீதா? படைப்பாளியின் மீதா?

விமர்சனம் படைப்பாளிகளின் மீதான ஒட்டுமொத்த மதிப்பீடு அல்ல என்று எதிர்வினையில் விளக்கப்பட்டுவிட்டது. வாசகருக்கு இக்குழப்பம் ஏற்படுவதற்கு விமர்சனத்தில் மூன்று காரணங்கள் இருந்தன. முதலாவது, ‘கதைகளின் வழி தன்னை ஒரு நவீன சிந்தனையாளராக நிறுவ முயலும்…’, ‘…தன்னிடம் புதைந்து கிடப்பதாக அவரே நம்பும் அறிவாற்றலை…’, போன்ற வரிகளின் மூலம் படைப்புகளின் வழியாகப் படைப்பாளியை மதிப்பிடுவது விமர்சனத்தில் நடந்திருந்தது. இரண்டாவது, படைப்புக்கு வெளியேயும் போய் படைப்பாளி முகநூலில் இட்ட பதிவுகளின் மூலம் மனவுளைச்சலைக் கண்டறிந்து அவரது தனிப்பட்ட ஆளுமையின் பலகீனத்தைக் காட்டும் முயற்சி இருந்தது. மூன்றாவது, ‘கதை இப்படிச் சொல்கிறது’ என்றில்லாமல் கிட்டத்தட்ட அனைத்து இடத்திலும் ‘ஆசிரியர் இப்படிச் சொல்கிறார்’ என்ற மொழியிலேயே விமர்சனம் எழுதப்பட்டிருந்தது. இவற்றால் வாசகர் அவ்வாறு ஊகிக்க நேர்ந்துவிட்டது. இவைகளைத் தவிர்த்தும் அந்த விமர்சனம் வீரியக்குறைவின்றி எழுதப்பட்டிருக்கமுடியும்.

‘வாடிவாசல்’ – நாவலா? சிறுகதையா?

இவ்விஷயத்தைப் பொறுத்தவரை பல கருத்துகள் நிலவுகின்றன. ஜெயமோகன், ‘வாடிவாசல் உண்மையில் ஒரு நீண்ட சிறுகதை ஆனால் நாவலாகக் கூறப்படுகிறது’ என்கிறார். வாசகரும் வாடிவாசல் வாசித்ததும் அப்படித்தான் உணர்ந்தார். விமர்சகர் அதைக் குறுநாவல் என்கிறார். வேறு பலரும் நாவல் என்கிறார்கள். அதனால் இவ்விஷயத்தில் ஒருமித்த கருத்து ஏற்படுவது அரிது. ‘தாகம்’ சிறுகதையை வாடிவாசலோடு வாசகர் ஒப்பிடவில்லை. ஒரேயொரு விறுவிறுப்பான சம்பவத்தை மட்டுமே வைத்தும் கதை எழுதலாம் என்பதே வாசகரின் கருத்து. அப்படி முடியாது என்றுரைத்தால் அது அபிப்ராயமானாலும் கோட்பாடானாலும் – ஒப்புக்கொள்ளக்கூடிய ஆதாரம் ஒன்று கண்முன் இருப்பதால் – குறையுள்ளது.

கதாபாத்திர நம்பகத்தன்மை அவசியமா?

எழுத்தாளர் கோணங்கி ஓர் உரையில், ‘நம்பி எழுதக்கூடாது, நம்பற மாதிரி எழுதணும்’ என்றார். விஷேஷ குணங்களுக்கான போதுமான பின்புலமில்லாமல் சாதாரண மனிதனாக வார்க்கப்படும் பாத்திரங்கள் அவற்றுக்கான சில எல்லைகளை மீறக்கூடாது அல்லது நம்பும்படி மீறவேண்டும். குற்றமும் தண்டனையும் நாவலில் வரும் ரஸ்கோல்னிகோவ், ‘நூறு உயிர்களுக்காக ஓருயிரை எடுக்கலாம்’ என்ற சிந்தனையைப் பெற்றபின்பு, கிழவியும் இரக்கமில்லாதவள் என்ற தகவலை ஓர் உரையாடலின் வழியாகக் கிரஹித்துக்கொண்டு அதன்பிறகே கொல்கிறான். அதனால் அவன் செய்யும் காரியத்தின் நம்பகத்தன்மைக்கு எவ்வித பங்கமுமில்லை. நேர்மாறாக, ‘விரல்’ கதையில் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற சந்தேகத்திலுள்ள காப்பீட்டை நம்பி அவன் விரலைச் சிதைத்துக்கொள்வதால் சம்பவம் நம்பிக்கை இழக்கிறது.

பாலியல் சுரண்டல் – தேர்ந்தெடுப்பும் திணிப்பும்

‘நாளை ஒரு விடுதலை’ கதையின் இறுதியில் பணிப்பெண்ணுடன் வீட்டு முதலாளிக்கு இருப்பதாகச் சொல்லப்படும் பாலுறவில் அவளது தேர்வும் உள்ளது என்பது விமர்சகரின் பார்வை. அதுவும் அவள்மேல் ஒரு திணிப்பே என்பது வாசகரின் பார்வை. ஆனால் அந்தப்பார்வைக்கு வலுசேர்க்க, ‘ஹவ்மச்’ என்று சாலைத் தொழிலாளர்கள் கேட்ட இடத்திலேயே போயிருக்கலாமே என்று வாசகர் கேட்பது உருப்படியான சமாதானமல்ல. அதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அக்கதாபாத்திரத்தின் மீது ஏற்பட்ட இரக்கத்தால் அவளைச் சமூக ஒழுக்கவிதிகளின்படி காப்பாற்றும் எண்ணத்துடன் வாசகர் அங்கு தடுமாறியுள்ளார். ஒரு பிரதியை வாசிக்கும்போது கொள்ளவேண்டிய அதீத கவனத்தையும், உணர்வின் அடிப்படையில் அல்லாது அறிவார்ந்து சிந்திக்கத் தேவையான விலகலையும் இத்தடுமாற்றம் உணர்த்துகிறது.

விமர்சனத்தில் குறைத்துரைத்தல்

விமர்சனத்தில் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள இடங்களை வாசகர் தவறான பொருளில் புரிந்துகொண்டுவிட்டார் என்று எதிர்வினையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுவும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்தான். குறைத்துரைத்தலை புனைவுகளிலும் மற்ற உரைநடை இலக்கிய வடிவங்களிலும் பழகியிருந்தாலும், விமர்சனத்தில் அதை வாசிப்பது வாசகருக்குப் புதிது. விமர்சனம் கொஞ்சம் நீட்டி முழக்கித்தான் செய்யப்படவேண்டும் என்ற கருத்து எப்படியோ வாசகருக்கு உருவாகியிருக்கிறது. க.பூர்ணசந்திரன், ஞானி, தமிழவன், ரமேஷ்-பிரேம், க.மோகனரங்கன் ஆகியோர் பாதித்திருக்கலாம். விமர்சகர்கள் ஓரளவுக்காவது விரித்துரைத்தலையும் செய்யவேண்டும் என்பது வாசகரின் வேண்டுகோள். ஒரு விமர்சனத்தின் தொனியும் வாசிப்பின் புரிதலில் முக்கியப்பங்காற்றுகிறது. வாசகரின் தவறான புரிதல்களுக்கு அதுவும் வழிவகுத்திருக்கலாம்.

வாசிப்பின் அந்தரங்கம்

வாசிப்பு அந்தரங்கமானது என்பது வைர வாக்கியம். அதில் விமர்சகரும் வாசகரும் முழுமையாக உடன்படுகிறார்கள். முடிந்தவரை மானுட மனத்தின் அந்தரங்கத்தை வெவ்வேறு விதங்களில் பொதுவில்வைத்துக் கூறுபோடுகிறது புனைவிலக்கியம். இலக்கிய விமர்சனம் அதற்கும்மேல் சென்று அந்தரங்கமாக உணர்ந்ததையும் பூடகமற்ற சொற்களில் அடுத்தவருக்குக் கடத்திவிட முயல்கிறது. ஆகவே விமர்சனம் கலையின் அறிவியல். ஆனாலும் நூற்றுக்கு நூறு முழுமையாக எக்காலத்திலும் ஒரு கலையை அறிவியலாக்கிவிடவியலாது. விமர்சனமும் அவ்விடத்தில் மௌனமாகிவிடுவது இயல்புதான்.

*

ஒரு பிரதியின் மீதான வாசிப்பு, விமர்சனம் பிறகு அதன் மீதான விவாதம் எனத்தொடரும் இந்த உரையாடல் இலக்கியத்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே ஆர்வமூட்டக்கூடியதாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன். சிங்கையின் துடிப்பான இலக்கியச்சூழல் இதுபோன்ற உரையாடல்களை தகுந்த தளங்களில் முன்னெடுக்கும்போது மேலும் மேலும் செம்மைப்படும். அக்கூர்மையில் மின்னும் ஒளி, வாசிப்பதிலும் சிந்திப்பதிலும் ஆர்வமுள்ளோரிடமிருந்து இது போதும் என்ற எண்ணத்தை விரட்டும்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்