ஆ.பழனியப்பன் அஞ்சலி

நாடாளுமன்ற நற்றமிழ் நாயகர்

அ.மல்லிகா

தமிழகத்தின் கல்லுப்பட்டி என்ற ஊரில் திருமேனி ஆறுமுகம் – அன்னபூரணி இணையருக்குப் பிறந்த ஒன்பது பேரில் இரண்டாவதாக 1950இல் பிறந்தவர் பழனியப்பன். அவரின் சிங்கை வாழ்க்கை 1958ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது. செட்டியார்களிடம் கணக்குப்பிள்ளையாக வேலை செய்த தந்தையுடன் மார்க்கெட் ஸ்திரீட்டில் வளர்ந்த இவர் அப்போது அச்சாலையில் இருமருங்கும் செட்டியார் கிட்டங்கிகளும் சீனர்கள், இந்திய முஸ்லிம்களின் கடைகளும் இரு இந்திய உணவகங்களும் இருந்ததைப் பழனியப்பன் நினைவுகூர்ந்தார்.

முதலில் டிரஃபால்கர் (Trafalgar) தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இது அப்போதைய எங்கோர் சாலையை ஒட்டிக் கடலோரத்தில் அமைந்திருந்தது. ஓராண்டிற்குப் பிறகு இவரின் தந்தை இவரை ரெட்ஹில் கம்பத்தில் வசித்த ஒரு யாழ்ப்பாணத் தமிழர் வீட்டில் தங்கி, புக்கிட் மேரா சௌத் பள்ளியில் பயில ஏற்பாடு செய்தார். அப்போது ரெட்ஹில் பகுதியில் நிறைய சீனர்கள் பன்றிகளை வளர்த்து வந்தனர். அருகில் இருந்த ஹெண்டர்சன் பகுதியிலும் அவ்வாறே பன்றிப் பண்ணைகள் இருந்தன.

மழை பெய்தால் அந்தப் பகுதி முழுவதும் உள்ள மண் சிவப்பு நிறமாக மழைநீரோடு கலந்து ஓடிவரும். பள்ளிக்கூடத்தின் நுழைவாயிலுக்குக் கீழ் ஒரு பெரும் கால்வாய் இருந்தது. அதனைக் கடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். மழைக் காலத்தின்போது அதில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். சில சமயங்களில் ஓரிரு மாணவர்கள் வெள்ளத்தில் அடித்தே செல்லப்பட்டிருக்கின்றனர். தண்ணீர் குறைவாக ஓடும்போது அதில் இறங்கி மீன்பிடிப்பதும் நீந்துவதும் மாணவர்களின் பொழுதுபோக்காக இருந்தது.

இப்பள்ளியில் படித்தபோது மூன்றாம் வகுப்பிற்கு நேரடியாக இரட்டை உயர்வு அளித்து அனுப்பிவைக்கப்பட்டார். பள்ளியின் தலைமைச் சட்டாம்பிள்ளையாகவும் நியமிக்கப்பட்டார். இப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும்போது சைமன்ராஜ் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தது இவருக்கு நினைவிருந்தது.

ரெட்ஹில்லிலிருந்து மீண்டும் மார்கெட் ஸ்திரீட்டில் சேதுப்பிள்ளை என்பவரின் மேற்பார்வையில் தங்கிப் படித்தபோது, புக்கிட் ஹோ சுவீ எனும் பழைய கம்பத்தில் தீப்பிடித்து எரிந்த மறுநாள் எல்லாம் தீக்கிரையாகிக் கிடந்ததைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் பார்த்து வியப்படைந்தார். அங்கு மலிவு ஓரறை அடுக்கு வீடுகள் கட்டப்படும் என்றும் அவற்றுள் ஒன்றில் தான் வசிக்கப்போவதையும் அப்போது அவர் கனவிலும் நினைக்கவில்லை.

மார்க்கெட் ஸ்திரீட்டிலிருந்து ஊட்ரம் ரோடில் இருந்த கடைகளும் வீடுகளும் அமைந்திருந்த ஒரு பெரிய வீட்டில் ஓர் அறையில் தங்கிப் படித்தார். அதுவும் கிட்டத்தட்ட கம்பம் போன்ற இடம்தான். தற்போது ஊட்ரம் பெருவிரைவு நிலையம் அங்குள்ளது. அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் இடைக்கால சிறைச்சாலை இருந்ததையும் அருகில் ஊட்ரம் தொடக்கப் பள்ளி இருந்ததையும் அங்கு அவரது தந்தை ஒரு காப்பிக்கடையை நடத்தியதையும் பழனியப்பன் நன்றாகவே நினைவில் வைத்திருந்தார். கட்டுவாசா என்ற பிரபலமான கடை ஒன்றும் கான்டோண்மெண்ட் சாலையை ஒட்டியிருந்ததும் அவர் நினைவில் இருந்தது.

தொடக்கப்பள்ளிப் படிப்பை முடித்து ராஃபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் தனது படிப்பை 1964 ஆம் ஆண்டிலிருந்து நான்கு ஆண்டுகள் மேற்கொண்டார். அப்போதைய ராஃபிள்ஸ் பெண்கள் பள்ளி மற்றும் பல உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைந்து பல தமிழ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். முதல் இரண்டாண்டுகள் ஏ.டேவிட் என்பவர் தமிழ் கற்றுக்கொடுத்தார். மற்ற பாடங்களில் பலவீனமாக உள்ள மாணவர்களுக்கு, கணக்கு, அறிவியல் பாடங்களையும் தன் ஓய்வு நேரங்களில் கற்றுக்கொடுத்தார்.

பின்னர் ஜேசுதாஸ் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அவரின் ஆதரவோடு உயர்நிலைப் பள்ளியின் முதல் இதழ் ஒன்றை (தமிழ் மலர்) பழனியப்பன் வெளியிட்டார். புக்கிட் ஹோ சுவீயில் வசித்து வந்தபோது அங்கு நிலவிய சூழல் காரணமாக இரவில் சக சீன, மலாய் நண்பர்கள் வீட்டில் தங்கி தனது ‘ஓ’ நிலைத் தேர்வுக்காகப் படித்தார். உயர்நிலை நான்கில் 1967இல் படித்துக்கொண்டிருந்தபோது இவரைப் பற்றி அறிந்துகொண்ட தமிழ் இளைஞர் மன்ற உறுப்பினர் கங்காதரன் (வழக்குரைஞர் ஜி.இராமனின் தம்பி) அம்மன்றத்தில் சேர்ந்து பங்காற்றுமாறு கேட்டுக்கொண்டார்.

அப்போதைய சூழலில் ‘ஓ’ நிலை முடித்தாலே போதும் என்ற கருத்து நிலவியதால் 1968இல் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராக கீழ் நிதிமன்றத்தில் சேர்ந்தார். உயர்நீதிமன்றத்திற்கு 1972இல் மாற்றலாகிச் சென்றார். அதேவேளையில் இவர் அருள்மிகு நிவாசப் பெருமாள் கோயில் செயலாளராகவும், புதிதாகக் குடியேறித் தெலுக் பிளாங்கா தொகுதி வசிப்போர் குழு (Residents committee) செயலாளராகவும் தலைவராகவும், அங்குள்ள குடிமக்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

சிங்கப்பூர்த் தமிழ் இளைஞர் மன்றம் சிங்கப்பூர்ச் சமூக சேவை மன்றத்தில் இணைந்திருந்ததால் அதன் வழி இளைஞர் மன்றப்பொதுச் சேவைகளில் ஈடுபட்டார். இளைஞர் மன்றம் முதல் முதலாக ‘டாருள் இசான்’ எனும் அனாதைச் சிறுவர் இல்லத்தைத் தத்தெடுத்துச் சேவையாற்றியது. அந்தப் பணியிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.

இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைவராக பி.ராம் பணியாற்றியபோது, பழனியப்பன் அதன் செயலாளராக 1980களில் பணியாற்றித் தொண்டூழியத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். அத்துடன் ஶ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவிலில் முதன் முதலாகக் கம்பன் விழாவைத் தொடங்கிவைத்தார். 1980களில் அம்பலவாணர் இவரைத் திருமுறை மாநாட்டின் செயலாளராகப் பணியாற்ற அழைத்தார். அதில் 25ஆண்டுகள் செயலாளராகவும் துணைத் தலைவராகவும் பணியாற்றுகிறார்.

பழனியப்பன் உயர் நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றியபோது பழைய நாடாளுமன்றத்தில் பகுதி நேர ஏககால மொழிபெயர்ப்பாளராகவும் (simultaneous interpreter) பணியாற்றினார். அப்போது அங்கு நிரந்தர மொழிப்பெயர்ப்பாளராக சேவையாற்றிய எஸ்.நாராயணனிடம் மொழிபெயர்ப்புக் கலையைக் கற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் 1990 முதல் 2020 வரை மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார்.

சிறிது காலம் சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகத்தில் தமிழ்ப்பிரிவின் முதல் ‘நியூஸ்காஸ்டர்’ ஆகப் (செய்தியைத் தொகுத்து வாசிப்பவர்) பணியாற்றினார். முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் வாழ்க்கை வரலாற்றைத் தமிழில் (உழைப்பின் உயர்வு) மொழிபெயர்த்துள்ளார். சிங்கப்பூரின் முதல் மூன்று பிரதமர்களின் தேசிய தின உரையை மொழிபெயர்த்துள்ளார். ஐந்து நாடாளுமன்ற நாயகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

சிம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து ஆங்கில மொழி இலக்கியத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார். பல மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். வசிப்போர் குழு 1980களில் முதன்முதலாகத் தொடங்கப்பட்டு, தேசிய அளவில் முதல் வசிப்போர் குழுக்கள் மாநாடு நடந்தபோது ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.

தகவல் தொடர்பு அமைச்சின்கீழ் செயல்படும் மொழிபெயர்ப்புக் குழுவின் தலைவராகப் பத்தாண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி 2018இல் ஓய்வு பெற்றார். தமிழ் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளையும் அச்சடிக்கும்போது ஏற்படும் பிழைகளையும் களையப் பரிந்துரைகளைச் செய்யும் குழுவிற்குத் தலைமை ஏற்றார். அக்குழு பற்றிய விவரங்கள் நாடாளுமன்றக் குறிப்பில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத் துணைப் பதிவதிகாரியாக நியமிக்கப்பட்டு திருமணங்களைப் புதிவு செய்யும் பணியிலும் ஈடுபட்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணச் சான்றிதழ்களில் கையொப்பமிட்டுள்ளார். பணி ஓய்வுபெற்றபோதும் தொடர்ந்து மொழிபெயர்ப்புத் துறையில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்தார். சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக் கழகத்திலும் (NUSS) தேசிய கல்விக்கழகத்திலும் (NIE) மொழிபெயர்ப்புப் பற்றிய கோட்பாடுகளையும், மொழிபெயர்ப்புப் பயிற்சிகளையும் அவ்வப்போது கற்றுக்கொடுத்தார்.

இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து சற்று உடல்நலம் குன்றியிருந்த பழனியப்பன் கடந்த மாதம் (04.05.2023) தன் 73ஆம் வயதில் இவ்வுலகை நீங்கினார். நாடாளுமன்றத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் அமர்ந்து மொழிபெயர்த்த இருக்கையில் மலர்க்கொத்து வைக்கப்பட்டிருந்தது. அவைத்தலைவர் இந்திராணி ராஜா, தன் அஞ்சலி உரையில், “ஒரு நல்ல மனிதரை இழந்துவிட்டோம் ஆனால் அவரது பங்களிப்புகளும் அவற்றின் தாக்கமும் என்றும் நீடித்திருக்கும்” என்றார்.

“நூலின் மூலத்தையும் மொழிபெயர்ப்பையும் நிறையப் படிக்கவேண்டும்; தங்கள் மொழிவளத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்; சொந்தச் சொற்களையும் சொற்களஞ்சியத்தையும் தொகுத்து வைத்துக்கொள்ள வேண்டும். கவிதைகள், புதினங்கள் போன்றவற்றை மொழிபெயர்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் நமக்குத் தேவைப்படுகின்றனர். ஆர்வம் உள்ள இளைஞர்கள் முன்வருவர் என்று நம்புகின்றேன்” என்று ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ (அக்டோபர் 2021) நேர்காணலில் ஆ.பழனியப்பன் தெரிவித்திருந்தார்.
அவரது கனவு மெய்ப்படவேண்டும்!

சிங்கப்பூரில் எங்கு கூரை ‘வேயப்படுகிறது’?

சொற்களுடன் அன்றாடம் சுழன்றுகொண்டிருந்த அரிய நபர்களில் நன்கு அறியப்பட்டவராக பாலா திகழ்ந்தார். மொழிபெயர்ப்பில் பழுந்த அனுபவமும் நுட்பமான பார்வையும் கொண்டவர். அவருடன் அதிகமாகப் பழகக்கூடிய வாய்ப்பு இல்லாத போதிலும் நூல் வெளியீட்டு விழா ஒன்றில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றம் எனக்கு நினைவில் உள்ளது.

உள்ளூர் வழக்கில் ‘sheltered walkway’ என்பதை ‘கூரை வேயப்பட்ட நடைபாதை’ என்கிறோமே, ஆனால் சிங்கப்பூரில் எங்கு கூரை வேயப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பினேன். இங்கு காங்கிரீட், சிமெண்ட் கலவையால் நடைபாதைகள் உருவாக்கப்படுகின்றன. கூரையைப் பின்னி யாரும் நடைபாதைகள் அமைப்பதில்லை. ‘கூரையிடப்பட்ட நடைபாதை’ என்றால் இன்னும் பொருத்தமாக இருக்குமே என வினவினேன்.

ஒரு கணம் சிந்தித்தவர், “ஆம் தம்பி, நீங்கள் கூறுவது முற்றிலும் சரி. நீங்கள் சிந்தித்த கண்ணோட்டத்தில் நான் சிந்திக்கவில்லை. இளைய தலைமுறையினர் அறிவியல் பார்வையுடன் சொற்களை அணுகுகின்றனர். அதனை நாம் ஏற்றுக்கொண்டு, நாட்டின் சூழல், அறிவியல் ஆகியவற்றை மொழிபெயர்க்கும்போது கவனிக்கவேண்டும்.” என்றார். எனது மாற்றுக் கருத்தை அவர் மனமுவந்து ஏற்றுக்கொண்டது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. அவரது பரந்த மனத்தைப் படம்பிடித்து காட்டியது.

-நித்திஷ் செந்தூர்