கவிதை காண் காதை (13)

0
169

புகையில் மறையும் கவிதை

கணேஷ் பாபு

தமிழகத்தின் திண்டுக்கல் போன்ற சிறுநகரங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. நகரத்தின் இரைச்சலும் இல்லாது, கிராமத்தின் அமைதியும் இல்லாது இருப்பவை. நகரம் பாதி, கிராமம் பாதி என்றும் சொல்லலாம். இந்தத் தோற்றமும் இன்னும் சிறிது காலம்தான் எஞ்சியிருக்கும். அதன்பின் முழு நகர்மயமாகிவிடும். ஒன்றும் செய்வதற்கில்லை. இந்த ஊரில்தான் அகிலா இருக்கிறாள். கல்லூரித் தோழி. பல வருடங்களுக்குப் பின் அவளைச் சந்திக்க வந்திருக்கிறேன். காலை 10 மணிக்கு வரச்சொல்லியிருந்தாள் அகிலா.

தெரு நிசப்தமாக இருந்தது. தெருவின் இறுதியில் கம்பி ‘கேட்’ போட்ட வீடுதான் அகிலாவின் வீடு. கேட்டின் கொக்கியைத் திறக்கையில் ஒரு புதுமையான சப்தம் வந்தது. வண்ணதாசனை நினைத்துக் கொண்டேன். மெல்லிய புன்னகை ஒன்று மனதில் விரிந்தது. அகிலாவின் மாமியார் வரவேற்பறையில் இருந்தார். மகிழ்ச்சி, வெறுப்பு இரண்டுமற்ற மையமான முகபாவனையுடன் வரவேற்றார். மாறாக, அகிலா அகம் நிறைந்த பூரிப்புடன் வரவேற்றாள். உருவம், உள்ளம் இரண்டுமே மாறவில்லை. அதே பழைய அகிலாதான்.

ஹாலின் நடுவே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டேன். எதிரில் இருந்த அலமாரியில் சிறிய சரஸ்வதி சிலையொன்று இருந்தது. சிலையிலுள்ள வீணையின் ஒரு முனை உடைந்திருந்தது. வீட்டிலுள்ளவர்கள் அதை ஏன் கவனிக்கவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை புதிதாக ஒரு வீட்டுக்கு வருபவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய குறைகளில் இதுவும் ஒன்று போலும் என நினைத்தேன்.

அகிலா, ஐந்து நிமிடம்தான் என்முன் அமர்ந்து பேசினாள். அதன்பின், சமையலறைக்கும் வரவேற்பறைக்கும் இடையில் போவதும் வருவதுமாக இருந்தாள். அவள் சமையறையிலும் நான் வரவேற்பறையிலுமாக இருந்தபடியே கடந்துபோன இருவரின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சொற்களினூடாக ஓடவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

“அவரோட ஆபிஸ் பக்கத்துலதான் இருக்குது. அதனால, மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துருவார். குழந்தைகள் காலையிலேயே ஸ்கூலுக்குப் போயாச்சு. அதனால்தான் பத்து மணிக்கு உன்னை வரச்சொன்னேன். இந்த நேரத்தில் எனக்குக் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்” என்றாள்.

“இதுதான் உன்னுடைய ஓய்வா”? என்றேன்.

“என்ன செய்வது?” என்றபடியே புன்னகைத்தாள்.

புன்னகையும் வியர்வையும் ஊறிய அந்த முகத்துக்கு எதிராக என்னால் வேறெதுவும் சொல்ல இயலவில்லை. தரமான டிகிரி காபி தயாரித்திருந்தாள். கடந்து சென்ற காலத்தின் இனிமையெல்லாம் மெல்லிய கசப்பாக காபியில் எஞ்சியிருந்தது.

அதிகாலையில் துவங்கி இரவுவரை ஒரு எந்திரத்தைப் போல வீட்டு வேலைகள் செய்து கொண்டும் சமைத்துக் கொண்டும் இருக்கிறாள் அகிலா. சமையலறையின் புகைபடர்ந்த மதில்கள் அறியுமா அவள் ஒரு சிறந்த படைப்பாளி என? அவளது பல கவிதைகள் இலக்கிய இதழ்களில் பிரசுரமாகியிருக்கின்றன. கல்லூரி ஆண்டு மலர்களிலும் அவளது கவிதைகள் தவறாமல் இடம்பெறும். இப்போது அந்தக் கவிதைகள் எல்லாம் எங்கு சென்று மறைந்திருக்கும்?

“இப்பவும் கவிதைகள் எழுதுறயா?” என்று கேட்டேன்.

“நான் கவிதை எழுதுவேன்ற விஷயம் எனக்கே மறந்து போச்சு”

“உண்மையாகவா?”

“சமைக்கும்போது அபூர்வமா சில கவிதைகள் தோணும். அத எழுதி வச்சுக்கணும்னு நெனப்பேன். ஆனா, அடுத்தடுத்து ஏதாவது வேல வந்துரும். அப்புறம் மறந்துரும். கிச்சன் சுவத்துக்குள்ளே என்னோட எத்தனையோ கவிதைகள் புதைஞ்சுருக்கு”, என்றாள்.

அவளுக்கென்று நான் வாங்கிய ஒரு டைரியையும் மாண்ட்பிளாக் பேனாவையும் எடுத்து அவள் கைகளில் திணித்தேன். “அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. கழிவிரக்கம்தான் நம்முடைய மிகப்பெரிய எதிரி. இந்த டைரியில உன் மனசுல தோணுற கவிதைய எழுத ஆரம்பிச்சுரு” என்றேன்.

மறுப்பேதும் சொல்லாமல் அதை வாங்கிக்கொண்டாள். “உன்னால பேனா, பேப்பர மட்டும்தான் வாங்கித் தரமுடியும். நேரத்த வாங்கித் தரமுடியுமா? எழுதுறதுக்கான மனநிலைய வாங்கித் தரமுடியுமா?” என்றாள்.

பதிலற்று விழித்த என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, “ஆனாலும், இத்தன வருஷம் கழிச்சு என்னப் பார்க்க வந்த உன்னுடைய நட்புக்காக ஒருவேளை நான் எழுதத் துவங்கலாம். சாருக்கு ஒரு கவிதை பார்சல்” என்றாள்.

எண்ணிக்கையற்ற கேள்விகளை மனதில் சுமந்தபடியே அவளிடம் விடைபெற்றேன். இதுபோன்ற எத்தனை எத்தனை பெண் கவிஞர்களை, கலைஞர்களை, ஆசிரியர்களை, விஞ்ஞானிகளை குடும்ப எந்திரத்தின் இரும்புச் சக்கரங்களுக்குக் காவு கொடுத்திருக்கிறோம். ஒவ்வொரு வீடும் இப்படிப்பட்ட பலிபீடங்களின் மீதுதான் நின்றிருக்கிறதா? ஒவ்வொரு வீட்டின் முன்பும் கிளைத்திருக்கும் மாக்கோலங்கள் யாவும் தன் திறமையை இந்த உலகிற்குக் காட்ட விரும்பும் பெண் ஓவியர்களின் முத்திரை ஓவியங்கள்தாமா?

சிறைச்சாலை என்பது கட்டுக்காவல் மிகுந்த, கம்பிக்கதவுகளால் ஆன இருண்ட அறை மட்டுமல்ல. அடுப்பும், பாத்திரங்களும், உப்பும், புளியும் புழங்கக்கூடிய வெப்பம் மிகுந்த ஓர் அறையாகவும் இருக்கலாம்.

தோசை

ஆண்டாண்டு காலமாக அளவு மாறாதது
தோசைகளின் விட்டம்
விளிம்பு தாண்டாதது அவற்றின் விட்டம்
உலோகக் கடின அடித்தளத்தில்
ஊற்றப்பட்டாலும் அவை
ஒரு போதும் இழப்பதில்லை மென்மையை.
விரிவும் திருப்பமுமற்ற
வெற்றுச் சுழற்சி.
எதனோடும் இணைந்து போகும் சுயமின்மை.
இழப்பின் விழிப்பற்று
மூடிக்குள் புழுங்கி வேகும்.
உள்ளே வெந்தாலும்
வெளிக்காட்டாத புன்முறுவல் மேலே.
சுருட்டித் திருப்புகையில்
சோர்ந்த முனகலன்றி
வேறெதுவும் சொல்லாதவை.
நகர்த்தவில்லை அவற்றை,
நவீன வகைப்படுத்தல்கள்
நிஜமான சுதந்திரத்துள்.
வருடங்களால் வளர்ச்சியுறாது,
வடிவம் மாறாது தோசைகள்
வாழும் வாழ்தலற்று.
அம்மாவின் பாட்டியின்
பாட்டியின் அம்மாவின்
இன்னும் என்னுடைய தோசைகள்
ஆண்டாண்டு காலமாய் அப்படியே.

உமா மகேஸ்வரி

உமா மகேஸ்வரியின் இந்தக் கவிதை தோசையைப் பற்றி மட்டும் பேசவில்லை என்று நம் அனைவருக்குமே தெரியும். பல வருடங்களாக மாறாத ஒரு சிக்கலைச் சொல்வதற்கு அவருக்குத் தோசை என்ற குறியீடு தேவைப்பட்டிருக்கிறது. மிக வெளிப்படையான இத்தகைய குறியீட்டினைக் கொண்டும் கலாபூர்வமாகக் கவிதை படைக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் உமா மகேஸ்வரி.

வீட்டுச்சிறைவாசியாக, குடும்ப அதிகாரத்துக்கு அடிபணியும் பதுமையாகப் பெண்ணை இன்னும் வைத்திருப்போரின் மந்தச் செவிகளில் சங்கூதுவதற்கு இதுபோல இன்னும் எத்தனை கவிதைகள் வேண்டியிருக்குமோ?