கவிதை காண் காதை (14)

0
151

ஊரின் இரண்டாம் முகம்

கணேஷ் பாபு

இருபது ஆண்டுகளுக்குப்பின் இந்த ஊருக்கு வருகிறேன். இந்த ஊரின் பெயர் பாண்டியராஜபுரம். வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் வழியில் நிலக்கோட்டைக்கு அடுத்து வரும் ஊர்களில் ஒன்று. இந்த ஊரில்தான் என் மாமா வசித்தார். சிறுவயதில், பள்ளி விடுமுறைகளில் அம்மா என்னையும், அக்கா, தம்பியையும் அங்கு அழைத்துச் செல்வார். மாமா, அத்தை, அவர்களது குழந்தைகளுடன் என் பால்யத்தின் சில இனிய நாள்களைச் செலவழித்த ஊர் இது.

இந்த ஊரின் சிறப்பு அதன் மையத்தில் இருந்த சர்க்கரை ஆலை. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வண்டிவண்டியாகக் கரும்புகள் ஆலைக்குக் கொண்டுவரப்படும். இந்த ஆலையை நம்பி ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். அவர்கள் குடும்பத்துடன் வசிப்பதற்காக ஆலை நிர்வாகம் வீடுகளைக் கட்டிக் கொடுத்திருந்தது. வீதிகள் விசாலமாகவும், நேர்த்தியாகவும்,சுத்தமாகவும் கண்களைக் கவரும். “ஆறு கிடந்தன்ன அகநெடுந் தெரு” என்று நெடுநல்வாடையில் நக்கீரர் சொல்வது போல, ஆறு பாய்வதேற்கேற்ற அகலம் உடைய தெருக்கள்.

ஒவ்வொரு வீட்டுக்கும் இடையே செறிந்து நிற்கும் மலர்மரங்கள், கொய்யா, மாதுளை, மாமரங்கள், பசியச் செடிப் பொதும்பர் என யாவும் ஒருமுறை பார்த்தால் போதும், நினைவில் பச்சை குத்தப்பட்ட சித்திரங்களாக என்றென்றும் தங்கிவிடும். பகல் நேரங்களில் இந்த வீதிகள் சுமந்து நிற்கும் கனத்த அமைதி சிறிது பயத்தையும் வரவழைக்கும்.

சிறுவர்களாகிய நாங்கள் மைதானத்து வாணலியில் வெயிலில் வறுபட்டு விளையாடிக்கொண்டிருப்போம். சனிக்கிழமை மாலை வேளைகளில், மைதானத் திறந்தவெளியில் திரைகட்டிப் படம் போடுவார்கள். ‘கேபிள் டிவி’ அந்த ஊரை வந்தடையாத காலம் அது. ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பாய், போர்வை, நாற்காலி, தின்பண்டங்கள் போன்றவற்றைச் சுமந்துகொண்டு படம் பார்க்கக் கிளம்புவோம். அப்படிப் பார்க்கும் படங்கள்போக அவ்வப்போது அருகிலுள்ள வாடிப்பட்டிக்கும் திரைப்படம் பார்க்க மாமா அழைத்துப் போவார்.

ஒவ்வொரு விடுமுறை முடிந்த பின்னரும், கனத்த இதயத்தோடு ஊர் திரும்புவோம். அடுத்த விடுமுறை எப்போது துவங்கும் என்று ஏங்கியிருந்து, மீண்டும் இங்கே வந்துவிடுவோம். பேருந்தில் வரும்போதே சர்க்கரை ஆலையின் “மொலாசஸ்” கருப்பஞ்சாற்றுக் கசடு நெடி பாண்டியராஜபுரம் வரப்போவதை மூக்கைத் துளைத்து முன்னறிவிக்கும்.

கரும்பு புழங்கும் இடத்தில் பாம்பும் புழங்கும். இந்த ஊரில் அவ்வப்போது ஏதாவது ஒரு வீட்டில் பாம்பு நுழைந்துவிடும். அதை வெளியேற்றுவது பெரும்பாடு. சர்க்கரை ஆலைக்குள்ளும் ஆலை நிர்வாகத்தினர் அடிக்கடிப் பாம்பு பிடிப்பவர்களை அழைத்து வந்து பாம்புகளைப் பிடித்து வெளியேற்றுவார்கள். பாம்பாட்டிகளும் பிழைத்தனர். ஒரு பாம்பாட்டி புதர்களுக்குள் செல்வார். மகுடி ஊதுவார். கையோடு நீளமான ஒரு பாம்பைப் பிடித்துக் கொண்டு வருவார். வேடிக்கை பார்க்கக் கூட்டம் அலைபாயும். விதவிதமான நிறங்களில் கண்ணாடிபோல் பளபளக்கும் பாம்புகளை அப்போதுதான் முதன்முறையாக நான் பார்த்தேன்.

எல்லாத் துக்கங்களையும் போலவே எல்லா சந்தோஷங்களையும் வாழ்க்கை ஒருநாள் முடித்து வைக்கிறது. ஒரு சாலை விபத்தில் சிக்கி மாமா இறந்துபோனார். அவரது உடல் வைக்கப்பட்டிருந்த விசுப்பலகையினருகே கதறியழுத குடும்பத்தினரின் துக்கச் சுமை தாளாமல் தெருவே தள்ளாடியது போலிருந்தது. காற்றெல்லாம் துக்கத்தின் ஈரம்.

துயரத்தின் பேரலையில் திசைக்கொருவராகத் தூக்கியெறியப்பட்டோம். அதன்பிறகு, அந்த ஊருக்கு நாங்கள் செல்லவில்லை. வாழ்வின் அந்த அத்தியாயம் என்றென்றைக்குமாக முடிவடைந்துவிட்டது. அதன் பிறகான சில வருடங்களில் ஆலை நிர்வாகம் நஷ்டப்பட்டு ஆலையை மூடிவிட்டது. ஆலையை நம்பியிருந்த தொழிலாளர்களும் ஊரைவிட்டு வெளியேறிவிட்டனர். என் அத்தையும் வெளியேறிவிட்டார்.

ஊரின் நினைவுகள் எளிதாக மறையக்கூடியவை அல்ல. நீருபூத்த நெருப்பாக வாழ்நாள் முழுக்க ஆழ்மனதில் கரந்துறைபவை அவை. எந்த ஊருக்கும் இருமுகங்கள் உண்டு. ஒன்று, நம் எல்லோருக்குமே கண்கூடாகத் தெரியக்கூடிய முகம். அந்த முகம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் இயல்புடையது. காலத்தின் நெட்டோட்டத்தில், அந்த ஊரில் பிறந்து வளந்தவர்களுக்கே அந்நியமாய் மாறிப்போவது.

“ஆறு கிடந்தன்ன அகநெடுந் தெரு” என்று நெடுநல்வாடையில் நக்கீரர் சொல்வது போல, ஆறு பாய்வதேற்கேற்ற அகலம் உடைய தெருக்கள்.

சுஜாதா தான் வளர்ந்த ஊரான ரங்கத்தை நினைவுகூர்கையில், “அக்ரிலிக் பெயிண்ட் பூசப்பட்ட கோபுரங்களும், செல்போன் டவர்களும், என்னென்னவோ மேம்பாலங்களும் இருக்கக்கூடிய இந்த ரங்கம் அல்ல என்னுடைய ரங்கம்” என்று ஒரு முன்னுரையில் எழுதுகிறார். சென்ற நூற்றாண்டில், உ.வே.சா தன்னுடைய சொந்த ஊரான உத்தமதானபுரத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், “இப்போது உள்ள உத்தமதானபுரம் “எங்கள் ஊர்” என்று நான் பெருமையுடன் எண்ணும் உத்தமதானபுரம் அல்ல” என்கிறார்.

ஊரின் மற்றொரு முகம் மனிதர்களின் அகத்தில் வரையப்பட்டிருக்கும் முகம். நினைவுகளில் ஒளிர்ந்துகொண்டிருக்கும் இந்த முகத்தைக் காலத்தாலும் அழிக்க முடியாது. சிலப்பதிகாரக் காலத்தில் செல்வச் செழிப்பாக இருந்த புகார் நகரம் இன்றில்லை.

ஆனாலும், கவிஞனின் வரிகளின் ஊடாக அந்த ஊரின் முகத்தை இன்றும் வாசகரால் பார்க்க முடிகிறது. பாண்டியராஜபுரம் எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் கதைகளில் அவ்வப்போது தலைகாட்டி வருகிறது.

என் நினைவில் தங்கிவிட்ட பாண்டியராஜபுரத்தை நேரில் பார்க்க விரும்பினேன். நான் பார்த்திருந்த ஊர் இருபதாண்டுகளுக்குப்பின் ஒட்டுமொத்தமாகவே மாறியிருந்தது. இது எதிர்பார்த்ததுதான். ஆனாலும், சர்க்கரை ஆலை ஊழியர் குடியிருப்புகள் கைவிடப்பட்டுக் கிடந்தது எதிர்பாராத ஒன்று. ஆலை மூடப்பட்டபின் அந்த வீதிகளில் எவரும் குடியேறவில்லை. வீடுகள் முழுக்க இடிந்து, சிதைந்து, தீயில் பாதியெரிந்த ஓவியங்கள் போலிருந்தன. வெயிலிலும் ஈரத்திலும் நைந்து போயிருந்த சுவர்கள். உப்பேறியிருந்த வாயில்படிகள். ஊழால் சாபமிடப்பதைப் போல மனிதர்களால் கைவிடப்பட்ட இந்த ஊர் துர்கனவின் கோரச் சித்திரமாய் எஞ்சியிருக்கிறது.

கரும்பு புழங்கும் இடத்தில் பாம்பும் புழங்கும். இந்த ஊரில் அவ்வப்போது ஏதாவது ஒரு வீட்டில் பாம்பு நுழைந்துவிடும். அதை வெளியேற்றுவது பெரும்பாடு.

தரைதட்டிய கப்பலாய் நின்றியிருந்த ஊரின் ஒவ்வொரு தெருவையும் சுற்றி வந்தேன். மனிதர்கள் மறைந்து மட்கியபின்னும் எஞ்சியிருக்கும் எலும்புக் கூட்டினைப் போல, கைவிடப்பட்ட ஊர்களுக்கும் எலும்புக் கூடுகள் இருக்கின்றன போலும். நாங்கள் விளையாடிய தோட்டம், முகப்பறை, வாயில் படிகள் என யாவும் ஊழ் அரக்கன் தின்று போட்ட எலும்பின் மிச்சங்களாய் எஞ்சியிருந்தன. மாமா வீடு பாதி மண்ணில் புதையுண்டிருந்தது. ரத்தமும் சதையும் பசுமையும் ஈரமும் நிரம்பிய ஊர் என் நினைவுகளில் மட்டுமே இருக்கிறது.

காலத்தின் அனல் நாக்குகளின் முன் ஹம்பியும் ஒன்றுதான், பாண்டியராஜபுரமும் ஒன்றுதான்.

ஒரு காலத்தில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்று சொன்னால் எவரும் நம்பப் போவதில்லை. சிதைந்த வீடுகளின் பின்னால், புறக்கணிக்கப்பட்ட வீதிகளின் பின்னால், காலத்தின் புழுதி படிந்த இந்த இடத்திற்குப் பின்னால், எத்தனையோ மனிதர்களின் கதைகள் உயிரோட்டமாக இன்னும் இருக்கின்றன. ஒருவேளை அந்தக் கதைகளைக் கேட்கத்தான் காற்று இந்த சிதிலமடைந்த மிச்சங்களின் மீது ஓயாமல் மோதிக்கொண்டிருக்கிறதா?

ஹம்பி

அழிக்கப்பட்ட பெருநகரின் வீதிகளில்
ஆவிபோல அலைகிறேன்.
ஆந்தையின் கனவில்
புலரும்
இரவில் நிரம்பிய வெளிச்சமென
துலக்கமாய்க் கிடக்கிறது யாவும்.
திரும்பும் திக்கெல்லாம்
கல்பூத்த கட்டாந்தரை.
பிடிப்பு இன்றி
வீழும் அறிகுறியின்றி
தன்மேல் நடந்து சென்ற
யுகங்களின் தடயமின்றி
பாறைமேல் அமர்ந்த பாறைகள்.
விதானமும் நொறுங்கிய
கடைவீதியில்
காட்சிக்கு நின்றிருந்த தூண்கள்.
படிக்கட்டு சிதைந்த கலையரங்கில்
நிசப்தத்தின் பாடலுக்கு
வெறுமை அபிநயிக்கிறது.
அரசியர் நீராட அமைந்த
தடாகத்தின் வெற்றுத் தரையில்
புற்குச்சங்களில் பூச்சி தேடி
தவளைக்குஞ்சு தத்திச் செல்கிறது
அரைகுறையாய் நிற்கும்
கற்சிலையின் காதருகில்
ஒயிலாய்ப் படிந்திருக்கும் ஓணான்
என்றைக்குரிய ரகசியத்தை உரைக்கிறது?
நொறுங்கிய நகரத்தின்
நொறுங்காத உயிரோட்டமாய்
பாறைகள் மற்றும்
சகாப்தங்களுக்கிடையில்
ஊர்ந்து நகர்கிறாள்
துங்கபத்திரை.
அதோ, நீராடி
திரும்பி நின்று
உடைமாற்றும் பேரிளம்பெண்
தன்னுணர்வின்றிக் காட்டும்
ஒற்றை முலை வீசும் வசீகரம்
எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது?

-எம்.யுவன்

-எம்.யுவன்

எம்.யுவனின் இந்தக் கவிதை, ஒருகாலத்தில் விஜயநகரப் பேரரசின் தலைநகரமாகவும், அதிகார மையமாகவும், வாழிடமாகவும் இருந்த ஹம்பி அரண்மனையின் இன்றைய சிதிலமடைந்த தோற்றத்தைக் காட்டுகிறது. காலத்தின் அனல் நாக்குகளின் முன் ஹம்பியும் ஒன்றுதான், பாண்டியராஜபுரமும் ஒன்றுதான்.

ஊரின் முதல் முகம் அழிந்தாலும், இரண்டாம் முகம் அழிவதில்லை. இரண்டாம் முகங்கள் மெல்ல மெல்ல மனிதர்களின் கனவுகளில், ஆழுள்ளங்களில், ஆழ்படிமங்களாகச் சென்று சேகரமாகிக் கொண்டிருக்கின்றன. ஆழ்படிமங்களைக் காலத்தால் தின்னமுடியாது. கவிஞர்களின் மொழிக்குக் கச்சாப் பொருட்களை அளித்துக்கொண்டே இந்த ஊர்கள் தம் இரண்டாம் முகத்தைத் தக்கவைத்தபடியேதான் இருக்கும்.