கடந்த 2010ஆம் ஆண்டில் சுமார் 40 விழுக்காட்டு சிங்கப்பூர் இந்தியக் குடும்பங்கள் வீட்டுமொழியாக ஆங்கிலத்தைப் பெருமளவு பயன்படுத்திக்கொண்டிருந்தன (most commonly used). அந்நிலை பத்தே ஆண்டுகளில் 60 விழுக்காட்டுக்கு உயர்ந்துவிட்டது. அதாவது பெரும்பான்மை இந்தியக் குடும்பங்கள் தம் தாய்மொழியை விடுத்து ஆங்கிலத்தை வீட்டுமொழியாக ஆக்கிக்கொண்டுவிட்டன. சிங்கப்பூர் இந்தியரில் பெரும்பான்மையினர் தமிழர் என்பதால் தமிழ் பேசும் குடும்பங்களிலும் ஏறக்குறைய இதே நிலைதான் இருக்கும் என ஊகிக்கலாம்.
பேச்சுமொழியாகத் தமிழ்மொழி முற்றிலுமாக இல்லங்களிலிருந்து நீங்கிவிடவில்லை எனினும் நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. தாய்மொழிப் புழக்க வீழ்ச்சிப்போக்கு சிங்கப்பூரில் இனவேறுபாடின்றி அனைத்துக் குடும்பங்களுக்கும் பொதுவானது என்றாலும் ஏற்கெனவே எண்ணிக்கைச் சிறுபான்மையினரான இந்திய இனத்தவருக்கு பேச்சுமொழிப் புழக்கச் சரிவு ஒப்பீட்டளவில் பிறரைக்காட்டிலும் விரைவுபடக்கூடும்.
பேச்சுமொழியாகத் தமிழ்மொழி முற்றிலுமாக இல்லங்களிலிருந்து நீங்கிவிடவில்லை எனினும் நிச்சயமாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.
சரிவின் வேகத்தைக் குறைப்பதற்கும் தமிழ்க்குடும்பங்களில் வீட்டுமொழியாகத் தமிழ்மொழியை ஆக்குவதற்கும் உள்ளூர்த் தமிழ்ச் சமூகத்தில் கனவு இருக்கிறது. அதை நனவாக்கத் தேவையான கூர்மையான கருவிகளோ தீர்க்கமான வழிமுறைகளோ கைவசம் இருக்கின்றனவா?
சிறுசிறு சொற்களைக் கற்றுப் பேசத்தொடங்கும் பாலர்பள்ளி நிலையிலிருந்து சிந்திப்பதைச் சரளமாக வெளிப்படுத்தத் தொடங்கும் தொடக்கப்பள்ளியில் சேரும் நிலைவரை – அதாவது சுமார் இரண்டிலிருந்து ஏழுவயது பிள்ளைகளிடையே – வீட்டில் தமிழ்பேசும் வழக்கம் குறையுமானால் அதன்பிறகு பெரிய அளவுக்கு மாற்றத்தைக் கொணர்வது மிகவும் கடினம் என்பது என் அனுபவ உண்மை.
அந்தவகையில், தமிழ் புழங்கும் வீடுகளில் பிறந்துவளரும் சிறுபிள்ளைகள் வீட்டில் எப்படித் தமிழைவிடுத்து ஆங்கிலத்தைப் பேசத் தொடங்குகின்றன என்பதைப் படிப்படியாக ஆராய்வது பயனுள்ளதாக இருக்கும். சிக்கலைப் புரிந்துகொள்ளும்போது தேவையான இடையீடுகளைச் செய்து மாற்றத்தைக் கொணர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்க இயலும் என்னும் நம்பிக்கையை அடிப்படையாகக்கொண்டு என் சொந்த அனுபவத்தை இங்கே ஆராய முற்படுகிறேன்.
நாங்கள் (பெற்றோர்) இருவருமே தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி கற்றவர்கள். ஒருவர் தமிழ்வழி, மற்றவர் ஆங்கிலவழி. எங்கள் இருவரின் உறவினர்களும் வீட்டில் எப்போதும் தமிழ்பேசுபவர்கள். சிங்கப்பூரில் பிறந்துவளரும், தற்போது தொடக்கநிலை ஐந்தில் பயிலும், மகள் தமிழில் பேசுவதை நன்கு விளங்கிக்கொள்கிறார் என்றாலும் ஆங்கிலத்தில் பதிலளிப்பதையே இயல்பாகக் கருதுகிறார். பள்ளிப்பாடத்தில் தமிழில் நல்ல மதிப்பெண் பெறுவதில் சிக்கலில்லை என்றாலும் தமிழில் இயல்பாக, சரளமாகப் பேசுவதற்குச் சிரமம் இருக்கிறது. இது எப்படி நடந்தது?
முதல் நிலை – பெற்றோரில் ஒருவர் ஆங்கிலத்துக்கு மாறுதல்
சுமார் இரண்டரை வயதுவரை முற்றிலுமாகத் தமிழ்ப்பேச்சை மட்டுமே வீட்டில் கேட்டுவளர்ந்தார். ஆங்கிலத்தில் எழுத்துகள், பொருள்களின் பெயர்களைக் கற்றுக்கொடுத்தோம் என்றாலும் நாங்கள் எங்களுக்குள் பேசிக்கொண்டதும் மகளிடம் பேசியதும் தமிழில்தான். அவருக்கு இரண்டரை வயதானபோது அதுவரை ஒரு நாளைக்குச் சில மணிநேரம் மட்டும் சென்றுவந்த பாலர்பள்ளியிலிருந்து (இங்கு தமிழும் ஆங்கிலமும் கற்றார்) மாற்றப்பட்டு முழுநேர பாலர் பள்ளிக்கு மாற்றவேண்டிய சூழல் உருவானது. அந்தச் சமயத்தில் வீடும் மாறினோம்.
புதிய வீட்டுக்கு அருகிலிருந்த பாலர் பள்ளியில் தமிழ் கற்பிக்கப்படவில்லை. ஆங்கிலமும் மாண்டரினும் கற்பிக்கப்பட்டன. தமிழ் வேண்டும் என்றால் தூரம் அதிகம். அதிகாலையிலேயே சிறுபிள்ளையை எழுப்பவேண்டியதில்லை, போக்குவரத்துக்கும் வசதி போன்ற காரணங்களை முன்னிட்டு வீட்டருகிலிருந்த பள்ளியிலேயே சேர்த்துவிட்டோம். எழுத்துகள், எண்கள் அறிமுகம், விளையாட்டு, உணவு, குளியல், மதியநேரச் சிற்றுறக்கம் எனப் பல அம்சங்களைக்கொண்ட பள்ளி அது. காலை ஆறுமணி முதல் மாலை ஆறுமணி வரை அடுத்த சுமார் மூன்றாண்டு அங்கே கழிந்தது.
பாலர் பள்ளியில் மகள் சேர்க்கப்பட்டச் சில நாள்களிலேயே எங்களைச் சந்தித்த நிலையப் பொறுப்பாளர், வா, போ, உட்கார், எழுந்திரு, சாப்பிடு, குடி போன்ற ஏவல்களும் தண்ணீர், கழிவறை, பொம்மை, விளையாட்டு, சத்தம், குளியல், உறக்கம் போன்ற அடிப்படையான ஆங்கிலச் சொற்களும்கூடப் புரியாததால் மகள் சிரமப்படுவதாகத் தெரிவித்தார். மேலும், வீட்டில் கொஞ்சம் ஆங்கிலம் பேசினால் அவருடைய சிரமம் பெருமளவு நீங்கிவிடும் என்ற யோசனையையும் தெரிவித்தார்.
ஏற்கெனவே புதிய சூழலில் தன்னைப் பொருத்திக்கொள்ளத் தடுமாறிக்கொண்டிருக்கும் சிறுபிள்ளைக்கு மொழிப்பிரச்சினையும் சேரவேண்டாம் என்றெண்ணி, எங்களுள் ஒருவர் வீட்டில் ஆங்கிலத்தில்பேச முடிவெடுத்தோம். அம்முடிவைக் கையோடு செயல்படுத்தியும் விட்டோம்.
பெற்றோரில் மற்றொருவர் தொடர்ந்து தமிழிலேயே வீட்டில் பேசவிருப்பதாலும், சில ஆண்டுகளில் தொடக்கப்பள்ளியில் சேர்ந்ததும் பள்ளியிலும் நண்பர்களிடையேயும் தமிழ்ப் புழக்கம் அதிகரித்துவிடும் என எதிர்பார்த்ததாலும் பெற்றோரில் ஒருவர் ஆங்கிலத்தில் பேசுவது மகளின் தமிழ்ப் புழக்கத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்காது என நம்பினோம்.
இரண்டாம் நிலை –
தமிழ் பேசுவதற்கான வெளி கணிசமாகக் குறைதல்
பெற்றோரில் ஒருவர் தொடர்ந்து தமிழிலேயே பேசினோம். ஆனால் அன்றாடம் பாலர் பள்ளியில் நடந்தவற்றை எங்களிடம் மகள் ஆங்கிலத்தில் தெரிவிக்கத் தொடங்கினார். அவரைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் மாறிமாறிப் பேசச்செய்தால் சிந்தனைக்கோவை தடைபடலாம், மேலும், தன்னை வெளிப்படுத்துவதில் ஆர்வமும் உற்சாகமும் குன்றலாம் எனக்கருதி ஆங்கிலத்திலேயே பேசட்டும் என விட்டுவிட்டோம்.
பெற்றோர் எங்கள் இருவருக்கும் தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் இல்லாததால் பொழுதுபோக்கை முன்னிட்டத் தமிழ்ப் புழக்கத்திற்கான வாய்ப்பும் இல்லாமலானது. பாலர் பள்ளியில் கற்ற ஆங்கில, மாண்டரின் பாடல்களையே மகள் முணுமுணுத்து வந்தார்.
ஒவ்வொரு நாளும் மாலையில் சகவயது தோழர்களுடன் விளையாடச் சென்றார். தோழர்களுள் தமிழ்ப்பிள்ளைகள் சிலர் இருந்தாலும் அவர்களுள் பலர் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை வீட்டில் பேசுவோர் என்பதால் அவர்களின் பொதுமொழியாக ஆங்கிலமே இருந்தது. ஆறேழு வயதில் மிகநெருக்கமான சமவயதுத் தோழியாக அமைந்தவர் ஒரு ஃபிலிப்பைன்ஸ் நாட்டவர். அவரிடமும் ஆங்கிலத்தில்தான் பேசமுடிந்தது. அவ்வாறாக, மெல்லமெல்ல, அடுத்த சுமார் மூன்றாண்டுகளில் பாலர் பள்ளி, வீடு, பொழுதுபோக்கு, விளையாட்டு, நட்புவட்டம் என எல்லா நேரங்களிலும் மகள் பேசியதும் சிந்தித்ததும் ஆங்கிலத்திலேயே அமைந்தது.
பெற்றோர் வீட்டில் தமக்குள் தமிழில் பேசிக்கொண்டால் பிள்ளைக்குத் தமிழ்ச் ‘செவியாறல்’ கிட்டிவிடும் என நம்பினோம். ஆனால் தமிழில் பேசப்படும் எதுவும் தனக்கானதாக இருக்காது என்ற எண்ணத்தை அது பிள்ளைகளிடம் உண்டாகிவிடுகிறது. ஆகவே பேசப்படுவதைக் காதுகொடுத்துக் கேட்கவோ புரிந்துகொள்ளவோ அவர்கள் பெரும்பாலும் முயல்வதில்லை.
தமிழில் பேசப்படும் எதுவும் தனக்கானதாக இருக்காது என்ற எண்ணத்தை அது பிள்ளைகளிடம் உண்டாகிவிடுகிறது.
தொடக்கப்பள்ளியில் சேர்ந்ததும் தமிழ் வகுப்புகளால் தமிழ்’வெளி’ சற்று அதிகரித்தது உண்மை. ஆனால் அது தமிழில் எழுதுவதற்கும் வாசிப்பதற்குமே உதவியது. மேலும் நாங்கள் எதிர்பார்த்ததைப்போலத் தமிழ்ப்பிள்ளைகள் தமக்குள் தமிழில் உரையாட முனையவில்லை. தமிழ் வகுப்பில் கட்டாயத்தின் காரணமாக வேறுவழியின்றிப் பேசப்படும் குறைந்தபட்சத் தமிழ்ப் புழக்கம் மட்டுமே இருந்தது. சரளமாகத் தமிழில் பேசுவது ஒரு சவாலாகவே தொடர்ந்தது.
மூன்றாம் நிலை –
தமிழ் பேசவராது என்னும் எண்ணம் வலுப்படுதல்
தொடக்கப்பள்ளியில் தன்னைப்போலவே தமிழ்பேசச் சிரமப்படும் சகமாணவர்கள் பலரும் தமிழ் வகுப்பில் இருந்தது பேச்சுத் தமிழ்ப்புழக்கத்தை மேலும் அதிகரித்துக்கொள்ள வேண்டிய உந்துதலை வழங்கவில்லை. தமிழ்ப் பாடத்தில் தொடர்ந்து நல்ல மதிப்பெண் பெற்றதால் கல்வியை முன்னிட்டும் தமிழ்ப்பேச்சில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆயினும் தொடக்கநிலையின் இறுதி ஆண்டுகளில் தமிழ்ப்பேச்சுக்குக் கணிசமான மதிப்பெண் அளிக்கப்படுவதால் அதன்பொருட்டு சில முயற்சிகள் செய்கிறோம். வீட்டில் அனைவரும் தமிழில் பேசவேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தோம் ஆனால் திறம்படச் செயல்படுத்த முடிவதில்லை.
கொவிட் பெருந்தொற்றுக் காலத்தில் முழுமையாக ஈராண்டுக்குமேல் தமிழகப் பயணமோ அங்கிருந்து சிங்கப்பூருக்கு உறவினர்கள் வந்து தங்குவதோ இல்லாமலாயின. மெய்நிகர் அழைப்புகளில் வழக்கமான நலவிசாரிப்புகள், வெகுசில சொற்றொடர்கள், கேட்ட கேள்விக்கு பதில் என்றே உரையாடல்கள் அமைந்தன. சுமார் மூன்றாண்டு அவ்வாறு கழிந்தபின் தமிழகத்துக்குச் சென்றபோது தமிழில் சரளமாக உரையாட இயலாததால் தனக்குத் தமிழில் பேசவராது என்ற எண்ணம் அவருக்கு வலுவடைந்திருக்கலாம்.
உறவினர்களோடு பேசித் தமிழை வளர்த்துக்கொள்ளலாம் என்ற நிலைக்குச் செல்வதற்கு மாறாக சொற்பிழைகள், ஆங்கிலமுறை வாக்கிய அமைப்புகள் போன்ற அடிப்படையான பிரச்சனைகள் கேலிக்குள்ளாகலாம் என்பதால் முடிந்தவரைப் பேச்சைக் குறைத்துக்கொள்வதே நல்லவழி என்ற எதிர்நிலைக்குச் சென்றுசேர்ந்தார். மேலும், இன்னொருபக்கம் ஆங்கிலப்புலமை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே சென்றதும் இருமொழிகளுக்கான இடைவெளியை அதிகரித்துவிட்டது. மாற்றத்தைக் கொணர்வதற்கான பல்வேறு முயற்சிகள் வீட்டில் தொடர்கின்றன என்றாலும் தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக நிலைமை இருக்கிறது.
ஒருகட்டத்தில் ஓர் இறுதிச் சமாதானத்தைத் தேடிக்கொண்டோம். நாங்கள் இருவரும் ஆங்கிலத்தைப் பதின்மவயதிலும் அதன்பிறகுமே பேசக்கற்றோம். அதைப்போலவே தமிழ்ப்பேச்சுக்கான தேவை ஏற்படும்போது அவருக்குத் தானாகவே தமிழ் கைவந்துவிடும் என்று நம்ப விரும்பினோம். நாங்கள் தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசுவதைப்போலத் அவர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் பேசிவிட்டுப் போகட்டும் என்று ஆறுதல்கொண்டோம். இது தர்க்கதீரியான சமாதானமேயன்றி எவ்வித கூடுதல் திட்டமும், முயற்சியும், உழைப்பும் இன்றித் தானாகவே நடைமுறையில் சாத்தியமாகிவிடக்கூடிய ஒன்றன்று.
தமிழில் சிந்தித்து ஆங்கிலத்தில் பேசுவதைப்போலத் அவர் ஆங்கிலத்தில் சிந்தித்துத் தமிழில் பேசிவிட்டுப் போகட்டும்.
என்ன செய்யலாம்?
மேற்கண்ட சொந்த அனுபவங்களிலிருந்து சிங்கப்பூரின் எதிர்காலத் தமிழ்ப் பெற்றோரின் பரிசீலனைக்கு இரு எளிய பரிந்துரைகளை முன்வைக்கலாம் எனக் கருதுகிறேன்.
முதலில், பாலர் பள்ளியில் பிள்ளைகள் எதிர்கொள்ளும் ஆங்கிலப் பிரச்சினைகள் தாமாக நீங்கிவிடக்கூடியவை, தற்காலிகமானவை. அவற்றுக்கு நிரந்தரத் தீர்வு தேவையில்லை. சிங்கப்பூரில் வீட்டைத் தவிரப் பிற இடங்கள் இயல்பாகவே பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன, அதிகரிக்கின்றன, ஊக்குவிக்கின்றன. பள்ளியிலும் ஆங்கிலம் பயிற்றுமொழி என்பதால் ஆங்கிலம் விரைவாகவே பிள்ளைகளுக்குக் கைவந்துவிடுகிறது. ஆகவே பெற்றோர் இருவரும் தமிழ்பேசுவோராக இருக்கும் வீடுகளில் தமிழையே வீட்டுமொழியாகத் தொடரவேண்டும்.
அடுத்தது, தமிழில் பேசும்போது பிள்ளைகள் ஆங்கிலத்தில் பதிலளிக்கத் தொடங்கினால் அவர்களுக்குத்தான் புரிகிறதே என விட்டுவிடல் தகாது. ஒரு மொழி புரிவது வேறு, நாவில் புழங்குவது வேறு. பிள்ளைகளிடம் தமிழ்ச் சொற்கிடங்கு உருவாவதும் வளர்வதும் முதலில் பேச்சுத் தமிழாலேயே நடைபெறுகிறது, பிறகே அது வாசிப்பால் செறிவடைகிறது. ஆகவே வெளியில் தமிழை அதிகரிப்பதற்கான சாத்தியங்கள் குறைவான சூழலில், வீட்டில் உரையாடல்கள் – அவை எவ்வளவு சாதாரணமானவை எனினும் – தமிழில் அமைவது இன்றியமையாதது.
ஒரு மொழி புரிவது வேறு, நாவில் புழங்குவது வேறு. அது வாசிப்பால் செறிவடைகிறது.
இல்லம் என்பதைத் தமிழுக்கான வெளியாகச் சிங்கப்பூர்த் தமிழர் கவனத்துடன் நீடிக்கச்செய்வர் என்றால் அது தொடர்ந்து சரியும் தமிழ்ப்பேச்சுப் புழக்கத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்குக் கட்டுப்படுத்தக்கூடும். அதுவே வளரும் தலைமுறைக்குத் தமிழின் மீதுள்ள பிடிமானத்தையும் கூச்சமின்றித் தமிழில் பேசுவதற்கான நம்பிக்கையும் அதிகரிக்கும் முக்கியமான வெளி. நடைமுறையில் நன்கு பயனளிக்கக்கூடிய அவ்வெளியை ஒரு சமூகமாக நாம் இழந்துவிடக்கூடாது.