தபேலாவின்மீது தணியாத காதல். சுமார் 40 ஆண்டுகள் தாண்டியும் தொடர்கிறது அக்காதல். முதுமையிலும் இளமைத் துள்ளலுடன் வலம் வரும் உள்ளூர் தபேலா இசைக்கலைஞர் என்.எஸ்.கணேசனைச் சந்தித்து தகவல்களைக் கண்டறிந்து வந்தது ‘சிராங்கூன் டைம்ஸ்’.
தபேலாவின்மீது ஆர்வம் எப்போது ஆரம்பித்தது?
தேசிய சேவையின்போது நான் சிங்கப்பூர் ஆயுதப் படையின் இராணுவ இசைக் குழுவில் இருந்தேன். அதில் நூதன முரசு (Drums) போன்ற மேற்கத்திய இசைக்கருவிகளை வாசிப்பது எனது பணி. ஓய்வு நேரத்தில் இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்வேன். அப்போது தபேலா இசைக்கருவியின்மீது மோகம் ஏற்பட்டது. அதனை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. வடநாட்டு ஆசிரியர் ஒருவரிடம் தபேலாவை ஒன்றரை ஆண்டில் கற்றுக்கொண்டேன்.
தபேலாவைப் பகுதிநேரமாகச் சுமார் 40 ஆண்டுக்காலமாக வாசித்து வருகிறேன். நான் முழுநேர தபேலா கலைஞர் அல்லேன். வங்கியில் முழுநேரமாகப் பணியாற்றினேன். தற்போது வங்கிப் பணியிலிருந்து ஒய்வுபெற்றுவிட்டேன்.
முதல் இசை நிகழ்ச்சி…
முகவீணை வித்தகர் வரதராசன் எனக்கு தபேலா வாசிக்க வாய்ப்பு அளித்தார். அவருடைய இசைக்குழுவில் நான் இடம்பெற்றேன். அன்றிலிருந்து சமய நிகழ்ச்சிகளிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் தபேலாவை வாசித்து வருகிறேன். அதோடு குடும்பப் பிறந்தநாள் விழா, பஜனை நிகழ்ச்சி முதலியவற்றிலும் வாசித்து வருகிறேன்.
தபேலாவுடன் சேரும் இசைக்கருவிகள்…
தபேலா பக்கவாத்தியம். இந்தப் பக்கவாத்தியத்திற்குத் துணையாகத் தாள வாத்தியங்கள் தோள் கொடுக்கும். மிருதங்கம், ஜால்ரா, கஞ்சிரா முதலிய கருவிகள் தாள நயத்தை மெருகேற்றும். பக்கவாத்தியமாக இருக்கும் தபேலாவிற்குப் பாடகரின் துணை தேவை. இதர தாள வாத்தியங்களின் துணையும் தேவை. தபேலா தனித்து இயங்குவது சிரமம்.
தபேலாவில் என்னென்ன பாடல்களை வாசிக்கலாம்?
இந்துஸ்தானி இசையில் தபேலா மிக முக்கியமான தாள வாத்தியமாகக் கருதப்படுகிறது. தெம்மாங்குப் பாடல்கள், பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் முதலியவற்றுக்கு தபேலாவைப் பயன்படுத்தலாம். பொதுவாக தபேலாவை விறுவிறுப்பான பாடல்களுக்குப் பயன்படுத்துவார்கள்.
ஆதி தாளத்திற்கு தபேலா முக்கியமாகத் தேவைப்படுகிறது. ஆனால் அக்கால இசையப்பாளர்கள் மென்மையான பாடல்களுக்கும் தபேலாவை உபயோகித்துள்ளனர். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தபேலாவின் நுணுக்கங்களை மக்களுக்குக் கொண்டு சேர்ந்துள்ளார். ‘பாரதி கண்ணம்மா’ எனும் பாடல் இதற்குத் தக்க சான்று. கலைஞர் அல்லா ராக்கா தபேலாவில் பேர் பெற்றவர். பலவகையான தாளங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.
சிங்கப்பூரில் எத்தனை தபேலா கலைஞர்கள் உள்ளனர்?
இங்குத் தோராயமாக 50 முதல் 100 வரையிலான தபேலா இசைக்கலைஞர்கள் இருக்கக்கூடும். அவர்கள் இசைப்பள்ளிகளில் முறையாகப் பயின்று தபேலாவைக் கற்று வருகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன்.
தபேலா கலைஞருக்கு மாந்தோறும் கிடைக்கும் சம்பளம்…
சிங்கப்பூரில் இருக்கும் தபேலா கலைஞர்கள் அனைவரும் பகுதிநேரமாக தபேலாவை வாசிப்பவர்கள்தான். இசை நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அந்தத் தொகை வேறுப்படும். மாதத்தில் நிறைய நிகழ்ச்சிகள் இருந்தால், 400 வெள்ளி வரை கிடைக்கலாம். அதனைச் சம்பளம் என்று சொல்வதைவிட சன்மானம் எனலாம்.
அவர்கள் வழங்கும் தொகை போக்குவரத்துச் செலவுகளுக்கே சரியாக இருக்கும். கலைஞர்கள் ஆர்வத்தின் காரணமாகப் பணத்தைப் பொருட்படுத்தாமல் தபேலாவை நிகழ்ச்சிகளில் வாசித்து வருகின்றனர்.
அக்கால நிகழ்ச்சிகளுக்கும் இக்கால நிகழ்ச்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
அக்கால நிகழ்ச்சிகளில் நேரடி இசைக்கருவிகளின் பயன்பாடு மிகுதியாக இருக்கும். பாடல்களுக்கு அவை உயிரூட்டின. மக்களும் அதனை விரும்பி ரசித்தனர். காலப்போக்கில், தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ‘Minus one’, ‘Mp3’ முதலிய இசைவடிவங்கள் மேடை நிகழ்ச்சிகளில் கோலோச்சத் தொடங்கின.
‘Minus one’இல் பாடகரின் குரல்கள் இடம்பெறாது. பதிவுசெய்யப்பட்ட பின்னணி இசை மட்டும் ஒலிக்கும். மேடையில் பாடகர்கள் அந்தப் பின்னணி இசைக்கேற்ப பாடுவர். மக்களும் அதனை ரசிக்கத் தொடங்கினர். ரசனை மாற்றம் காலத்தின் கோலம் எனலாம்.
உள்ளூர் இசைக் கலைஞர்களின் பொற்காலம்…
சிங்கப்பூரில் 1960களிலிருந்து 1980 வரையிலான முப்பது ஆண்டுக் காலம் இசைக் கலைஞர்களின் பொற்காலம் எனலாம். அப்போது ஏறத்தாழ 20 இசைக்குழுக்கள் இங்கு இருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் பலரும் கருநாடக சங்கீதத்தைப் பயின்று மெல்லிசைப் பாடல்களைப் பாடினார்கள். இசை ஞானமும் மக்களிடையே வளர்ந்தது.
ஊடகங்கள் கலைஞர்களை உருவாக்க உதவினவா?
கண்டிப்பாக. அக்காலத்தில் தொலைக்காட்சியும் வானொலியும் இசைக்கலைஞர்களை உருவாக்கின. ஊடகங்கள் அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வளர்த்தன. அப்போதைய இசைக்குழுக்கள் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளில் பரவலாக இடம்பெற்றன. குறிப்பாகக் கதம்ப நிகழ்ச்சிகளில். ‘மாலை மதுரம்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியும் ‘வானவில்’ வானொலி நிகழ்ச்சியும் இசைக்கலைஞர்கள் பலருக்கு வாய்ப்புகளை வாரி வழங்கின.
கவிஞர் வாலியின் தீவிர ரசிகர் நீங்கள். எதனால் ஈர்க்கப்பட்டீர்கள்?
கவிஞர் வாலி ஒரு தத்துவ மேதை. அவர் 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் முதலிய முன்னணி நடிகர்களுக்குப் பாடல்களை எழுதியுள்ளார். பாடல்களில் சொல் விளையாட்டு அருமையாக இருக்கும். அதில் அவருக்கு நிகர் அவரே.
அவரது இனிய தமிழும் எளிய நடையும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது. நிகழ்ச்சிகளில் வாலியின் பாடல்களை தபேலாவில் வாசிக்கும்போது புத்துணர்ச்சி நரம்புகளில் பாயும். அவருடைய பாடல்கள் என்னுடைய தபேலா ஆற்றலை வளர்த்தன. ‘மதுரையில் பிறந்த மீன்கொடியை உன் கண்களில் கண்டேனே’ என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இலக்கிய மொழியில் அவர் பெண்ணை வருணித்த விதம் பிரமாதம்.
கவிஞர் வாலிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதா?
சிங்கப்பூரில் கவிஞர் வாலிக்குப் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது என்னுடைய கருத்து. இங்கிருக்கும் தமிழ் அமைப்புகள் அவருக்கு விழா எடுக்கவோ நிகழ்ச்சி செய்யவோ முன்வரலாம். அதற்கு ‘வாலிப வாலி’ எனப் பெயரிடலாம்.
அவரது பாடல்களில் உள்ள இலக்கியச் சுவையை மக்களுக்கு எடுத்துச் சொல்லலாம். அதன்மூலம் கவிஞரின் வாலியின் வரிகளுக்குப் பலர் ஈர்க்கப்படலாம். அவர்களுள் சிலர் புது கவிஞர்களாக உருவாகலாம்.
உங்கள் இசைப் பயணத்திற்குக் குடும்பத்தினர் எவ்வாறு உதவினர்?
இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது, அவர்கள் ஏதும் சொல்ல மாட்டார்கள். அவர்கள் என்னை ஊக்கப்படுத்துவார்கள். ஓய்வு கிடைக்கும்போது, நான் என் குடும்பத்தினருடன் சேர்ந்து சமயப் பாடல்களைப் பாடுவேன். அது மனத்திற்கு இதமாக இருப்போடு, குடும்பத்தினரிடையே பிணைப்பை வலுபடுத்துகிறது.
பகுதிநேர இசைக்கலைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்…
அவர்கள் முதலில் ஓர் இசைக்குழுவில் சேர வேண்டும். தனியாக வாசிப்பது சிரமம். தற்போது இசைக்குழுக்களும் குறைந்துகொண்டே வருகின்றன. இசைக்குழுவினரும் தங்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தடுமாறுகின்றனர்.
அதன் காரணமாக என்னைப் போன்ற பகுதிநேரக் கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது அரிதாகி வருகின்றன. வாய்ப்புகள் குறைந்தால் ஆர்வமும் குன்றிவிடும். ‘எரிகிற விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்’ அல்லவா?
‘தபல்’ என்னும் அரபுச் சொல்லிலிருந்து ‘தபேலா’ தோன்றியிருக்கக்கூடும். அரபுமொழியில் ‘தபல்’ என்றால் நூதன முரசு (Drums). தமிழில் ‘கைம்முரசு இணை’ எனவும் ‘இருமுக முழவு’ எனவும் தபேலா வழங்கப்படுகிறது. கைம்முரசு இணை 2 பாகங்களால் ஆனது. இடது கையால் வாசிக்கப்படுவது பயான் என்றும் வலது கையால் வாசிக்கப்படுவது தயான் என்றும் அழைக்கப்படுகின்றன.
இசைக்கலைஞர்களை ஊக்குவிக்க என்ன செய்யலாம்?
சமூக மன்றங்களிலும் சமூக நிலையங்களும் தீபாவளி, பொங்கல் முதலிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது பகுதிநேர இசைக்கலைஞர்களை அழைக்கலாம். சமூகத்தினர்தான் எங்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவேண்டும். அது எங்களுக்கு ஊக்கமாக இருக்கும்.
கணேசனைப் போன்ற இசைக்கலைஞர்கள் தங்களுக்குள் இருக்கும் ஆர்வத்தினால் கலையைக் கைவிடாமல் தொடர்கின்றனர்.