நம்ஹேங் தோட்டத்தின் முதல் டிவிசனில் உள்ள தோட்டத் திடலில் அன்று கொடிக்கம்பத்தில் புதிய Jalur Gemilang கொடி ஏற்றப்பட்டிருந்தது. அதன் பக்கத்தில் நான்கு மரக் கம்புகள் நடப்பட்டு மேலே போர்வையால் மூடி அதன் நிழலில் நான்கு பிரம்பு நாற்காலிகளும் பிரம்பு மேசை ஒன்றும் அடுக்கப்பட்டிருந்தன. போர்வையின் விளிம்புகளில் சிகப்பு, மஞ்சள், வெள்ளை, நீலத்திலான சிறிய முக்கோணக் கொடிகள் கூர்முனை கீழ் தொங்க அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்த அலங்காரத்தை செய்தது நம்ஹேங் தோட்டப்பள்ளிகளின் ஆறாம் ஆண்டு மாணவர்கள்.
இந்த தோட்டத்தில் நடத்தப்படும் பன்னிரண்டாம் சுதந்திர நாள் விழாவில் கலந்துகொள்ள தோட்டத்துக் கண்காணி உட்பட தீராம் மாவட்ட அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். ஹிந்து சங்கத்திலிருந்து கந்தசாமி அதிகாரிகளுக்கு பொன்னாடை போர்த்தி மாலையிட்டு தமிழர்கள் சார்பாக மரியாதை செலுத்தினார். தீராம் மாவட்ட செயலாளரின் உரை முடிந்து திடல் தட போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தாளிகளுக்குப் போட்டியைக் கண்டு களிக்க இளநீரும் செவ்வாழையும் வழங்ககப்பட்டன. திடலின் இடது வலதில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிகளிலிருந்து விளையாட்டு வர்ணனையாளரின் குரலை மழுங்கடிக்கும் வகையாக தோட்ட
தோட்டத்து மக்கள் திரளாக ஒற்றை சிந்தனையுடையவர்களாக மெர்டேகா மெர்டேகா என கூச்சலிட்டனர்.
மக்கள் பீப்பீக்களை ஊதி கால்பந்தாட்ட வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அன்று நம்ஹேங் தோட்டமும் டைடாக் தோட்டமும் மோத தயாராயிருந்தனர். இரு அணியினரின் இருபத்திரண்டு வீரர்களும் திடலில் எதிரெதிர் நேர் வரிசையாக நின்று கை குலுக்கி கொண்டனர். நடுவர் காசைச் சொடுக்கி போட்டு நம்ஹேங் தோட்டம் முதல் அணியாகவும் டைடாக் தோட்டம் இரண்டாம் அணியாகவும் தெரிவித்தார். கால்பந்தாட்ட வீரர்கள் அவர்கள்தம் இடங்களை எடுத்துக்கொள்ளவும், ஒலி பெருக்கியின் குரல் தீவிரமடைந்தது.
“ஆட்டத்தின் எழுபதாம் நிமிடம், ஹசான் மிட் ஃபீல்டர் மேஸ்ட்ரோ பந்தை சோலமனிடம் செலுத்துகிறார். பந்து இன்னும் சோலமனிடம் உள்ளது மக்களே. மூன்று டைட்டாக் அணியினர் வண்டு போல சோலமனை முன் செல்ல விடாமல் மொய்க்கின்றனர். பந்தை எற்ற டைடாக் அபு முயற்சிகிறார். பயனில்லை. சோலமன் காற்றாடியைப் போல் சுழன்று பந்தை மேற்காக கொண்டு செல்கிறார். இத்தனை நேரம் சோலமன் பந்தை விடாமல் வைத்திருப்பது அவ்வளவு சரியாகப் படவில்லை. சோலமன் என்ன செய்கிறார் எனத் தெரிந்து செய்கிறாரா? சோலமன் பந்தை நின்ற இடத்திலிருந்து பின்னால் எத்துகிறார். பந்து மீண்டும் மாஸ்ட்ரோவின் காலடியில் உள்ளது. பின்னாடி பார்காமலே சோலமன் செய்த பின் கிக் அவருக்கு நன்மை செய்வதாகட்டும். மாஸ்ரோ நடு வட்டத்திலிந்து எத்துகிறார் மக்களே. பந்து தோட்ட பள்ளியின் கூரை தாண்டுகிறது, தென்னையை தாண்டுகிறது, ஜாலோர் கெமிலாங்கை தாண்டுகிறது, மக்களே பந்து வானைக் கிழிக்கிறது. பந்து அதன் உச்சத்தை அடைகிறது, டைட்டாக்கும் நம்ஹேங்குக்கும் பந்து விழப்போகும் இடத்தை குழுமியுள்ளனர். பந்து சென்ற நேர்கோடு சரிந்து கீழே விழுந்துக்கொண்டிருக்கிறது. விழும் பந்தும் விழும் கெத்தா விலையும் சமமாக உள்ளது. பந்து விழப்போகிறது, விழப்போகிறது விழுகிறது விழுகிறது விழுகிறது, பந்தின் பின்னால் நெருப்பு மட்டும் இல்லாத குறையாக அங்கு குழுமியிருந்தவர்கள் அங்கிருந்து திரிந்து செல்கின்றனர். பந்தை பிடிக்க நம்மிடம் ஒருத்தர் கூட இல்லையா? பந்து விழும் வேகத்திற்கு பூமி மட்டுமே தாங்கியது மக்களே. நம்ஹேங் பத்து! நம்ஹேங்க் பத்து! யார் இவர்? நிலத்தில் விழுந்து எழுந்த பந்தை நெஞ்சில் வாங்குகிறார். மக்களே நம்ஹேங் பத்தான புது ஸ்டிரைக்கர் மார்பில் வாங்கிய பந்துடன் முன்னகர்ந்து டிபென்ஸ் சிங் சிங்கத்திடம் எத்துகிறார். டைடாக் கோல் கீப்பர் கவுந்தனாய் நீள் கைகளுடன் தடுமாறுகிறார். இப்பொழுது சிங்கிடம் பந்து உள்ளது. சிங் மீண்டும் பந்தை ஸ்ரைக்கரிடம் எற்றுகிறார். மக்களே கோல்! கோல்! கோல்! எப்படி? யார் இவர்? சிங்கிடம் பந்தை மேல் நோக்கி எத்தவும் குதித்து காற்றில் சுருண்டு காலால் வாங்கி கோல் கம்பத்தில் எத்தி பந்து தரையில் பட்டு மீண்டும் வலையினுள் புகுந்தது. ஸ்டிரைக்கர் டைட்டாக் கோல் கீப்பர் லிம்மின் இடமாக இருந்ததால் ம்..ம்… லிம் எதிர்பார்க்கவில்லை. மக்கள் மணியா மணியா மணியா என்று கூச்சலிடுவது கேட்கிறது. மக்களே, சுப்பிரமணி இன்று முதல் சிலாங்கூர் ஆட்டக்காரர் பிரியத்துக்குரிய சூப்பர்மோகைப் போல சூப்பர் மணி என்று அழைக்கப்படுவார். நம்ஹெங் அணியினரும் டைடாக் அணியினரும் கலந்து கொண்ட இந்த நட்பு கால்பந்தாட்ட போட்டியில் நம்ஹேங் ஜேசி பத்தானவர் ஸ்டிரைக்கர் சூப்பர் மணி இரண்டுக்கு ஒன்று எனும் ஸ்கோரில் கோலை புகுத்தி தோட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அணியினர் அனைவரையும் திடலின் முன் அழைக்கிறோம். கோப்பைகளை அளிக்க தீராம் மாவட்ட…”
மிட் பீல்டர் ஹசான் கோப்பையை தாங்கியபடி தேசியக் கொடி பூட்டிய மிதிவண்டியில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தான். மணியன் மிதிவண்டியை முழு திடலுக்கும் ஓட்டி வந்தான். தோட்டத்து மக்கள் திரளாக ஒற்றை சிந்தனையுடையவர்களாக மெர்டேகா மெர்டேகா என கூச்சலிட்டனர். கிட்டதட்ட அனைவருக்கும் அதே சமயம் உள்ளிருந்து ஒரு விசை கிளம்பி கண்ணீர் சொட்டச் செய்தது. அன்று அந்தப் பொழுது, அங்கிருந்த ஒவ்வொருவரும் மானுடன் அறிய முடியாத கட்டுச் சக்தியால் உள்ளுணர்வால் ஒன்றெனப் பூரித்து திகழ்ந்தனர். ஒவ்வொருவருக்கும் உடல் சிலிர்த்து நெஞ்சு பொங்கி விம்மி அடங்கியது. பின் அதுவே அசடாகவும் தெரிந்தது.
ஆட்டத்தை கேட்டவாரிருந்த நதாஷா அவளது மரப்பலகையின் வீட்டின் சன்னலின் மேல் சட்டகத்திலிருந்து பார்த்தாள். மணியன் மஞ்சள் ஜேசியில் குட்டைக் காற்சட்டையுடன் முட்டிக்கால் நீள காலுரை அணிந்திருந்தான். அங்கிருந்து பார்வையை விலக்கினாள். நரம்புகளில் சூடேறி இரத்தம் கொதித்துவிடும் போலிருந்தது அவளுக்கு. ‘மீண்டுமொருமுறை பார்க்கலாமா?’ என பின்னால் அடியெடுக்க நினைத்தவள், உம்மா தன்னைப் பார்ப்பதற்கு முன்பு விரைவாக சன்னலிலிருந்து நகர்ந்துகொண்டாள்.
மடித்துக் கட்டிய கைலியுடன் பச்சை பெல்ட் அணிந்த சிகாமணி ஒரு கையில் வெள்ளை பானப் புட்டியுடன் வந்து மாப்பிள்ளை மணியனை இடது கையால் தூக்கி தோளின் மீது வைத்துக்கொண்டார். இருப்பத்தியோரு வயது பையனை தூக்க அவரின் உடற்பலம் போதுமானதாயிருந்தது. மணியன் இடது காலை சிகாமணியின் இடது தோளில் கழுத்தை சுற்றி போட்டான். “டேய் மணியா, என்னா சந்தேவான கோல் தெரியுமாடா? டைட்டாக் பொடியனுங்களாம் மிரண்டுட்டானுங்க. அந்த டைடாக் டிபென்ஸு சந்திரன பாத்துருக்கனும். மூஞ்செல்லாம் செத்துப் போச்சு” என்றார் சிகாமணி. வீடுவரை இதே கோலத்தில் வந்து விட்ட சிகாமணி அக்காள் அமராவதியை பார்த்ததும் மாப்பிள்ளையை இறக்கி, புட்டியைத் தூர வீசி, கைலியை இறக்கிவிட்டார்.
அமராவதியைப் பார்த்து “யெக்கா சோறு போடேன்” என்றார் சிகாமணி. “குடிச்சீனா உன்னைய வீட்டு பக்கம் வரவேண்டானு சொன்னனா இல்லையா? மணியா நீ வீட்டுக்குள்ள போ” என்று அதட்டி முடியும் முன்னரே மணியன் வீட்டினுள் புகுந்து மறைந்தான்.
சிகாமணியைத் திண்ணையில் அமரவைத்து வாழையில் சோறிட்டுத் தொடங்கினார் அமராவதி. “எனக்கு நீ பண்றதும் பிடிக்கல, மணியன் பண்றதும் பிடிக்கல. எல்லாத்தையும் கேட்டுகிட்டுதான் இருந்தேன். இவன் பந்துலாட்டு பந்துலாட்டுனு போயிடுறான். இன்னும் உளி எடுத்து சீவத் தெரியாது. இவனுக்கடுத்து அஞ்சு பொம்பளப் பிள்ளைங்க. இவன் ஆடிட்டு வரவும் ஊர் கண்ணு பூராவும் இவன் மேல. நீ குடிச்சிட்டு அவனை ஊர்வலமா சுத்தி வர. அவன் சின்ன பையன் தம்பி. தயவு செஞ்சு கேக்குறேன், அவனுக்கு இதெல்லாம் பழக்கிக் கொடுத்துறாத”
“ஐய்யோ அக்கா, மணியன் தொட்டது கூட கிடையாதுக்கா. என் பொன்னு மேல சத்தியம்” கையில் அப்பளத்துடன் பதிலளித்தார் சிகாமணி.
“பெரிய பாப்பா இன்னொன்னு சொல்லுச்சு. அதெல்லாம் அவருக்கு தெரிஞ்சா என்னையும் மணியனையும் வெட்டிருவாரு. மணியன அடுத்த வாரமே ரயில்ல பேராக் கூட்டிப் போகப் போறேன். சொந்தத்துலே பொண்னையும் பாத்து வெச்சிட்டேன். தண்டலோட இரண்டாவது மக. பேரு விஜயலட்சுமி”.
சிகாமணி மீதியிருந்த அப்பளத்தை கடித்து சிரித்தவாறே கடைசி கை சோற்றையும் பிசைந்து சாப்பிட்டு முடித்தார்
பால் மரம் சீவி மிச்சமிருந்த நேரங்களில் வேட்டைத் தொழிலென அலைந்தார். மனிதராகினும் மிருகமாகினும் வேட்டைதான் அவரது விசையாக மாறியது. மணியனுக்குப் பிள்ளைகள் பிறந்தும் முழு வேட்டையனாக மாறியிருந்தார். அரிவாளை இவரது கரத்தின் நீட்சியாகவே உணர்ந்தார். கடல் அவருக்கு அளவில்லாத மாயையை அளித்தது. வலையில் கடல் மீனுடன் கடல் நீரும் சிக்குறுகிறது என எண்ணினார். சிக்கிய மீன் கூட்டங்கள் சந்தையில் காணமாவது வரை இவரை துரத்தியது. அவற்றை வெல்ல வேண்டியே மீண்டும் மீன் பிடித்தார். வேட்டையும் வன்மமும் மாறி மாறி அவரை அலைகழிக்கச் செய்தது.
மலையுடும்பின் முரட்டுக்கடு தோலை உரித்து வீட்டிற்கு உணவளித்தார். இரவு கடலிறங்கியபின் வலையில் வகையாக சிக்கிய இறால், நண்டு, மீன் வகைகள் கொண்டு வருவார். எத்தனை இரவாக இருப்பினும் எழுந்து அதை கறியாக்கி கொடுக்க வேண்டும். இவை தாத்தாவின் கட்டளைகள்.
பன்றி அகப்படும் நாட்களில், பன்றியின் உள்ளுறுப்புகளை வேண்டுமென முன்னறிவித்தவர்களிடம் விற்றுவிடுவார். இதில் பன்றி ஈரலை மட்டும் எவர் எவ்வளவு பணம் கொடுத்து கேட்டாலும் விற்பதில்லை. மணியன் பண்டி மணியமாக மாறியதும் இப்படிதான்.
இறக்கிய ஈரலின் சூடு அவிவதற்குள் விஜயலட்சுமி பாட்டி வாணலியில் வெங்காயம், இஞ்சி பூண்டு, பட்டை, கிராம்பு, மஞ்சள் தூள், உருளை கிழங்கு, மிளகாய் தூளையும், உப்பையும் சேர்த்து சிறு துண்டுகளாக வெட்டிய ஈரலை குழம்பாக்கிவிட வேண்டும். முப்பது நபர் சாப்பிடும் அளவு நீண்டதொரு தலை வாழையிலையில் சோறு பொங்கி வைத்து அதன் மேல், ஈரல் குழம்பை கவிழ்த்து முனியாண்டிக்கு படையலிட வேண்டும்.
அதன்பின், மணியன் வந்து பூசையிடுவார். ஊதுபத்தி மணக்க மசாலை வாசமும் சேர்ந்து எச்சிலூறவைத்தபின்தான் பூஜை நிறைவேறும். அதற்குள் நம்ஹேங் தோட்டத்து தமிழர்கள் அங்கு வந்திருப்பர். பண்டி மணியத்திற்கு பண்டி சிக்கிவிட்டால், அதை ஊர் முழுவதும் பரப்பும் ஒற்றர்களாக சிறுவர்கள் இருந்தனர். மணியம் வீட்டு பிள்ளைகளே அதை தொடங்கி மற்ற பிள்ளைகளிடம் தெரிவித்து வந்தனர். இந்த உண்டாட்டில் அவ்வப்போது சாரோங் அணிந்தவர்களும் வருவதுண்டென கேள்வி.
பண்டி மணியம் மிட்டாய்த் தாத்தாவாக அடையாளம் மாறியபோது தாத்தாவிற்கு நரையேறி முகசருமத்திலும், கரசருமத்திலும் கரும் பருக்கள் முளைத்திருந்தன. அதை பற்றிய விசாரனை குழு ஒன்று பேரப்பிள்ளைகளால் தொடங்கப்பட்டது. அதில் முதியவனான அண்ணன் அந்த புள்ளிகள் வயதான சீனர்களிடம் இருப்பதாகவும் அதிக பன்றி ஊன் உண்டதனால் வந்தாகவும் அதை தவிர்க்கமுடியாதென விளக்கவுரை அளித்தான்.
அவர் இருக்கும் வரை எப்போது தாத்தா பாட்டியின் வீடு சென்றாலும், வாழை, பலா, தேங்காய் , இளநீர், பழ சீசன்களில் மங்குஸ்தீனும், டுரியானும், ரம்புத்தானும், ஜம்புக்காயும் அளித்துக்கொண்டேயிருப்பார். தாத்தா மட்டும்தான் கரும்பிலிருந்து, ரப்பரும், ரப்பரிலிருந்து கோபிக் கொட்டையும், அதிலிருந்து செம்பனை என நான்கு தலை முறைகளைப் பார்த்த ஒரே ஆள்.
காடுகளில் அளக்க முடியாத சுதந்திரத்தை கண்டடைந்தார். காட்டில் இருக்கும் ஒவ்வொரு கண்பார்வையும் அவரையே தேடுகிறது என நம்பினார். உண்மையில் எது எவரை பின்தொடர்ந்ததென்று தெரியாமல் அலைந்துகொண்டிருந்தார். காட்டுத் தரையில் முளைந்த ஒவ்வொரு புல்லும் அவருடன் கதை பேசின. புற்கள் நெருங்கி தழைகளாகின. தழைகள் புராணங்கள் பேசின. கனிகளும் பூக்களும் விருந்தாகின. பட்சிகள் பாடின. கொடிகள் வழி சொல்லின. ஆற்று நீர் கொதிப்பை அணைத்தன. வண்டல் மண் சாந்தப்படுத்தின. சேறு செழிப்பை தந்தன. அதன் பின் தாத்தா காட்டிலிருந்து பிரியவேயில்லை.
(தொடரும்)