ஆழ்நெடுநீர்

பரிமித்தா

முன்னோர் படையலுக்கு சென்ற போது, பொது அறையில் ஒருத்தர் படுக்கும் கட்டிலில் சட்டையில்லாமல், அரைக்கால் சுலுவாருடன் மிட்டாய் தாத்தா படுத்திருந்தார். நாங்கள் வந்தமர்ந்தபோதுதான் பாட்டியிடம் கைகாட்டினார். உடனே ஒரு சட்டையை மாட்டிக்கொண்டு மௌனமாக சிரித்தார்.

டிவியின் முன் ஒரு மேசையில் மறைந்த நால்வரின் சுவர் படம் வைக்கப்பட்டிருந்தது. இடது மூலையில் பாட்டியின் அப்பா, ராமன் தண்டல். அவருக்கடுத்து தாத்தாவின் அப்பா, நடேசன் கவுண்டர். அவருக்குப் பக்கத்தில் தாத்தாவின் அம்மா அமராவதி. அமராவதியின் பக்கத்தில் அவரது தம்பி சிகாமணி.
எங்களுக்கடுத்து அம்மாவின் உடன் பிறந்தார் ஒவ்வொருத்தராய் வர, வாழையிலையில் சைவ உணவு பதார்த்தங்கள் மெல்ல மெல்ல அதிகரித்தன. ஜாங்கிரி லட்டில் இனிப்பு தொடங்கி பயிற்றங்காய் கோஸ் பிரட்டலும், நடுவில் சோறும் சாம்பாரும் அப்பளமும் படைக்கப்பட்டிருந்தது.


ஒரு சட்டத்தின் படத்துக்கும் மறு படத்துக்கும் இடைவெளியில் ஒரு பானம் இருந்தது. தண்டலுக்கும் கவுண்டருக்கும் நடுவில் இளநீர். கவுண்டருக்கும் அமரவாதிக்கும் நடுவில் வெந்நீர். அமராவதிக்கும் சிகாமணிக்கும் நடுவே கின்னஸ் ஸ்டவுட்.
பாட்டி அம்மாவை அழைத்து, “தேவி, அவர சாம்பராணி காட்ட சொல்லு” என்றார். அம்மா தாத்தாவிடம் சென்று “பா, சாம்பராணி போட்டு ஆரம்பிச்சு வை” என்றவுடன் “தங்கச்சி வரட்டும்” என்றார். வெடுக்கென பாட்டி பின்னாடி அடுப்புக்குச் சென்றார்.


விஜயலட்சுமி பாட்டியைத் தாத்தா முதலில் கண்டது எழுபதுகளில்தான். தாத்தாவின் நடவடிக்கைகள் பிடிக்காமல் அமராவதியும் மணியனும் நடேசனும் இரயில் ஏறி பேராக் மாநிலம் சென்றனர். தண்டலின் குடும்பம் ஒருவகையில் அமராவதிக்குச் சொந்தமென்பதால், ஒரு வாரம் அங்கிருந்து திரும்புகையில் நால்வராக திரும்பினர். பதினான்கு வயதிருந்த விஜயலட்சுமி பாட்டியை அவரது பதினோறு அக்காள்-தங்கைகளிடமிருந்து பிரித்து ஜொகூர் அழைத்து வந்திருந்தனர். புதிய மணமகள் விஜயலட்சுமியை ஆலம் எடுத்து வரவேற்றது மணியனின் தங்கைகள். எவராகினும் விஜலட்சுமியின் தங்கைகளாகிவிடமுடியாததால் இறுதி வரை விஜயலட்சுமியின் ஆற்றாமை மணியனின் தங்கைகளிடமும் வாழ்கையின் முதல் எதிரியாகிய அமராவதியிடமும் நீங்கா குரோதத்தை வரவழைத்திருந்தது.

மகமாயி பாட்டி வந்ததும் நான்கு படங்களிலும் மலர்மாலைகள் தொங்கவிடப்பட்டது. தாத்தா தேங்காய் உடைத்து கடிகார சுழலுக்கு எதிர் சுழலாக சூடமும் தூபமும் காட்டி தீருநீரிட்டு எழுந்தார்.


மகமாயி பாட்டி தாத்தா படுத்திருந்த கட்டிலின் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். நான் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டேன். கொஞ்சம் தேத்தண்ணீர் கேட்டார். சமையலறைக்குச் சென்று ஒரு குவளையில் தேத்தண்ணீர் ஊற்ற சென்றேன். அப்போதுதான் பாட்டி இன்னும் அங்கேயே இருப்பது தெரிந்தது. ஒன்றும் பார்க்காதவளாய் தேத்தண்ணீரை எடுத்து மீண்டும் ஹாலுக்குள் புகுந்தேன். வழியில் வெளி சமையலறையைத் தாண்டி ஓரத்திகள் நின்று மெல்லமாகப் பேசிக்கொண்டிருந்தனர். இதற்குள் ஆண்கள் வெளியே சென்று முற்றிலும் அவசியமே இல்லாத ஏதோவென்றை பேசத் தொடங்கியிருந்தனர்.


“வலதுல இருந்து மூனாவது படம் உனக்குதான் தெரியுமே. அமராவதி. எங்க அம்மா, எல்லாம். போன வாரம் அவருக்குதான் படையல் போடப் போனோம். மழை வந்து காரியத்தைக் கெடுத்தது. அவருக்கு பக்கத்துல இருக்குறது எங்க அப்பா நடேசன்” என்று மீண்டும் அமைதியானார். தாத்தா ஆயீ பாட்டியிடம் கைகளை தவழ்ந்த மாதிரியும் பிறகு நடேசனைக் காட்டியும், கழுத்தில் தாலி கட்டுவது போல செய்கை புரிந்தார். இந்த முறை தவழ்வது புரிந்தது – சிகாமணி. நடேசன் என்பது புரிந்தது. ஆனால் கட்டுவதுதான் புரியவில்லை. இதற்குள் கதை கேட்கும் கும்பல் இரட்டிப்பாக மாறியிருந்தது.
“எங்கம்மா நண்டு குழம்பு வெச்சுச்சினா, யாருக்கும் தெரியாம மரவள்ளி கிழங்க அவுச்சு கறியையும் கிழங்கையும் எடுத்துத் திருட்டுத்தனமா கண்ணம்மா அத்தைக்கிட்ட போய்க் குடுத்துவருவாரு சிகாமணி.”
“கண்ணம்மா அத்தையா! அது யாரு?” என்றேன் நான்.


“சொல்றேன். எஸ்டேட்குள்ள நுழைஞ்சதும் கங்காணி வீடு தாண்டி ஒரு சின்ன ஓடை போகாது? இப்பதான் நெலிஞ்சு கிடக்குது. நாங்கலாம் வயசு பிள்ளைகளா இருந்தப்ப அங்கதான் மாரியம்மனுக்கு குடம் தூக்க ஆத்தங்கரை பந்தல் போடுவாங்க. உச்சி வெயில்ல கூட பனிமலைல இருந்து ஊத்துன மாதிரி அப்படி ஒரு குளிரு அந்தத் தண்ணிக்கு. அந்தக் குளத்துக்கு பக்கத்துல ஒரு ரம்புத்தான் மரம் இருக்கும். அந்த மரத்தடியிலதான் இரண்டும் சேர்ந்துக்கிட்டு கொஞ்சுங்க. அத்தைக்குத் தூது அனுப்புறது வைக்கிறது எல்லாம் நானும் சின்னத் தங்கச்சியும்தான். அத்தையக் கொண்டு வந்து விடறவரைக்கும்தான் எங்க வேலை. இத பண்ணிக்கொடுத்தா ஒரு மாசத்துக்கு ஒரு தடவை பஸ் ஏறி சினிமாக்குக் கூட்டிட்டுப் போவாரு. இப்படியே போய்ட்டு இருக்கும்போதுதான் நாராயண வாத்தியாரு கங்காணிக கிட்ட பள்ளிக்கூட விசயமா பேச வந்து இதுங்களப் பாத்துட்டார். நேரா கண்ணம்மா அத்தையோட அப்பா கடல்கொண்டான்கிட்ட வத்திவெச்சிட்டாரு. வாத்தியாருல? விசயம் இரண்டு வீட்டுக்கும் தெரிய, எப்படியும் கடல்கொண்டான் குடும்பமும் நாமளும் சொந்தம்தானு நைனா சொல்லுச்சு”


மறுநாள், அம்மா, நைனாவும் தாம்பாளத்தோட போய், ‘நடந்தது நடந்துருச்சுனு’ பொண்ணு கொடுக்கக் கேட்ருக்காங்க.
“சாராயம் காச்சுற பயலுக்கு பொண்ணாக் கொடுக்க மாட்டேன். வெளிய போ!”னு நைனாவ தள்ளி தலைவாசிலிலே விரட்டிவிட்டுடாரு. ஏதும் கைகலப்பு நடக்கும்னு தெரிஞ்சே அவுங்க சைட் ஆளுங்கலாம் குழுமியிருந்தாங்க. “யாரு மேலடா கையவவெச்சனு” சிகாமணி மாமா கடல்கொண்டான் மேல பாய, நைனா அப்படியே மாமாவ சட்டை பிடிச்சு இழுத்து ‘சும்மா இருடா சின்னப்பயலே’னு அதட்டுனார். பிறகு நைனா “பொண்ணக் கொடுக்க மாட்டல்ல. அப்ப சரி”னு எல்லாரையும் கூட்டி கிளம்பிட்டாரு.


நைனாவும் அம்மாவும் அந்தக் கண்ணம்மாப் புள்ளைய மறந்துருனு சிகாமணி கிட்ட சொல்லிட்டாங்க. சிகாமணி அதுக்குதான் மாரியம்மன் கோவில் கிணத்துல குதிச்சுருவேனு சொல்லிருக்கார்.


அம்மா அதுக்கு “உனக்கு இரண்டு வயசிருக்கும்போது நம்ம அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டு வந்தார். நமக்கு வாய்க்குனு நம்ம சித்தி ஆக்கிபோட்டதா எனக்கு நினைவில்லடா. உன்னைய இடுப்புல தூக்கி வெச்சு, மரம் வெட்டிருக்கேன். நான் கல்யாணம் பண்னப்போ உனக்குப் பதினஞ்சு வயது. அப்ப, தண்டவாளம் போட இவரக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க. மொத்த எஸ்டேட்ல ஒரு ஆம்பளை கிடையாது. ஒரு எட்டப்பன் நீ இருக்கேனு சப்பான்காரங்கிட்ட போட்டுக் கொடுத்துட்டான். அவங்கிட்ட இருந்து உன்னையத் தப்பிக்க வெச்சதுக்கு நல்லா பேசுற… குதிச்சிருவேன் செத்துருவேனு…”


அந்த இராத்திரிதான் செய்தி வந்துச்சு. கடல்கொண்டான் கண்ணம்மாவ பச்ச வேரால வெளுத்து வாங்கி தலையக் கதவுல இடிச்சு மூஞ்ச்செல்லாம் நீலமா கன்னிப் போச்சாம். அத்தை புறவாசல் வழியா எப்படியோ தப்பிச்சு நேரா நம்ஹேங் கடலுல போய் குதிச்சிருச்சி. மீனவன் முஸ்தப்பாதான் பாத்து படகுல காப்பாத்தி வெச்சிருந்தார். அதுக்கப்பறம் அவுங்களுக்குக் கல்யாணம் பண்ணி கொஞ்சம் தூரமா டைடாக் எஸ்டேட்ல வேலை சொல்லி, வீடு பாத்துக் கொடுத்தாரு நைனா. இவ்வளவு செஞ்சும் அவனுக்கு எழுதலனா பிறகு யாரு என்ன செய்ய?”


“அதெப்படி சாரயம் காச்சறவன ஒருத்திக்குப் பிடிக்கும். முட்டாள்தனமா இருக்கு” என்றேன் நான்.
ஆயி பாட்டி மெல்ல சிரித்தார். மகமாயி பாட்டியைப் பார்த்து அம்மா, “அத்தை.. அந்த நம்ஹேங்க் முருங்கக்காய்க் கதைய கொஞ்சம் சொல்லு. நல்ல நேரத்துக்குச் சொன்ன மாதிரி இருக்கும்” என்றார் கிண்டலாக. சட்டென பிரகாசமானவராய் ஆயீ பாட்டி சொல்லத் தொடங்கினார்.


ஆயி பாட்டியிடம் மட்டும் கதைகள் எப்படிப் பெருக்கெடுக்கிறதெனும் மாயம் எனக்கு இன்றுவரை புரியவில்லை.
“அன்னிக்கு சிகாமணியும் கண்ணம்மா அத்தையும் அவுங்க பிள்ளைகளையும் கூட்டிட்டு அம்மாவப் பாக்க வந்திருந்தாரு. கண்ணம்மா சிவப்புக் கல் அட்டிகை போட்டிருந்தாங்க தெரியுமா? உண்மையில அத்தை சரியான அழகு. எனக்கு தெரிஞ்சு எங்கம்மாவுக்கு அடுத்து அட்டிகை போட்டது கண்ணம்மா. என்ன விசயம்னா, சிகாமணிக்கும் எங்களப் போலச் சாதாரண மாசச் சம்பளம்தான். அதுலையே கண்ணம்மாக்குனு வாங்கிப் போட்டுருக்கார். அவுங்க வந்த சமயம் அண்ணியும் அண்ணனும் பால் மரம் வெட்டப் போயிருந்தாங்க. எனக்கு அப்ப இன்னும் கல்யாணமாகதனால அண்ணங்கூடதான் இருக்கேன். மரம் வெட்டி முடிச்சு அப்பதான் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். எங்கம்மா தம்பி வந்துருக்குனு கோழி அடிச்சு குழம்பு வெச்சு, சோறாக்கி, பயித்தங்கா ஆக்கிருச்சு. வந்தவங்ககிட்ட கைகொழந்த வேற இருந்துச்சு. வெறுங்கையா அனுப்புனா நல்லா இருக்கானுது, அவங்கள அங்கேய ஒக்காற வெச்சு, ‘மணியன் இப்ப வந்துருவான், ஆயி, மாமா அத்தைய பாத்துக்கனு’ சொல்லி வெளியல இருந்த ஒரு முருங்க மரத்துலயிருந்து காய அறுத்து பக்கதுல செல்வி அக்கா வீட்டுயும் ஷுஹாடா வீட்டலையும் வித்து அம்மா காசாக்கிருக்கு குழந்தைக்கு கொடுக்க. வேலைக்காட்டு அலுப்போட வந்த என் அண்ணி ‘நீங்க எப்படி வித்து காசாக்கலாம்?, அது என் வீட்டு மரம்”னு சண்டை.


‘பேசாம போயிரு மணியனுக்கு தெரிஞ்சா பொளந்துருவான்’னு எங்கம்மா.
என்ன சத்தம்னு அண்ணன் பாக்கவும் அண்ணிதான் அம்மாகூட கத்திகிட்டுயிருக்காங்னு தெரிஞ்சவொடனேயே கைல இருந்த அலுமினிய வாளியிலயே அண்ணி மண்டை மேல ஒன்னு வெச்சாரு. வலது புருவத்துக்கு மேல வெட்டிருச்சி. கெத்தா பாலு குடிச்ச வாலி மனுச இரத்தம் ருசிச்ச நேரம் அது”. இடது காலை சோபாவின் மீது போட்டார் மகமாயி பாட்டி.’


“ஸ்..அடக்கடவுளே” என்றேன் நான். அம்மாவும் குமார் மாமாவும் வாய்பொத்தி சிரித்தனர். ‘அப்றம்’ என்றேன் நான். தாத்தா இதற்கு மேல் கதை கேட்க தெம்பில்லாதவராய் படுத்துக்கொண்டார்.
“அப்றம் என்ன இப்படியேதான். சிகாமணிக்கு ஏன் வந்தோம்னு ஆயிடுச்சி. கிளம்பிப் போய்ட்டாங்க. அதுக்கு முன்னாடி அண்ணங்கிட்ட சிகாமணி வந்து உன் வீரத்தையெல்லாம் இந்த பண்டி புடிக்கிறது உடும்பு புடிக்கிறதுல வெச்சிக்க, பொம்பள மேல கைய வெக்காதனு சொல்லிட்டுப் போனாரு.”


வீடு திரும்பியதும் அம்மாவிடம் “எனக்கென்னமோ, உங்க அப்பா பாட்டிய அடிச்சதா தெரியல, சிகாமணிக்கு கொடுக்க வேண்டியத உங்கம்மா வாங்கிகிட்டது மாதிரி இருக்கு” என்றேன்.
“ஏன் அப்படி சொல்ற?”
“பொறாமையா கூட இருக்கலாம்.”


(தொடரும்)