ஆழ்நெடுநீர் (தொடர் 5)

0
83
பரிமித்தா

மறு நாள் காலையில் மாமாவும் குடும்பத்தினரும் வீட்டுக்கு வந்திருந்தனர். வீட்டில் அலுவலக விருந்து என பொய் சொல்லிவிட்டு அந்தச் சமாதிக்குச் செல்லலானேன். இடையில் மாமா அவரே சென்று விடுவதாக வந்ததனால், அவரிடம் மட்டும் உண்மையைச் சொல்லவேண்டியதாகியது.

மாமா முதலில் என்னை அழைத்துச் சென்றது தெப்ராவ் சீனக் கோவிலுக்குத்தான். தெப்ராவ் ஒரு குட்டி நகரமாக இருந்தது என்றார். எனக்கோ அது ஒரு கைவிடப்பட்ட நகரம் போல இருந்தது. ஒரு முச்சந்தி வந்தது. இடதில் தீயணைப்பு முகாம். வலதில் சீனக் கோவில். மாமா வலது பக்கமாக வளைந்து வாகனத்தை நிறுத்தினார். அப்போது ஒரு கூன் வளைந்த சீனப் பாட்டி எங்கள் வருகையைப் பார்த்துவிட்டு, அவரது நாய்க்குட்டிகளுக்கு உணவளித்துக் கொண்டிருந்தார். முதலில் அவரைக் கண்டதுமே, என்னிடம் ஆயிரம் உண்மைகளைத் தரப்போகிறவர் என அறிந்தேன்.

அவரிடம் அவசரமாகச் சென்று மலாயில், “ஒரு முப்பது வருஷத்துக்கு முன்னால இங்க வெள்ளத்துல அடிச்சிட்டுப் போன ஒரு குடும்பத்த பத்தி உங்களுக்குத் தெரியுமா பாட்டி?” எனக் கேட்டேன்.

கூன் வளைந்த அவர், முகத்தை கூட நிமிராமல் “தத் தாவ்” என்றார்.

எனக்குச் சட்டென அவர் அதை தவிர வேறு எதையும் சொல்லிருக்க மாட்டார் என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்தது. மெல்லத் திரும்பி அங்கிருந்த சீனக் கோவிலை அடைந்தேன். அப்போதுதான் மாமா அங்கு இல்லை என்பதை அறிந்தேன். அவர் வருவதற்குள் கோவிலின் உள் சென்றேன். எனக்கு முன்னாடியே ஒரு நடுத்தர வயது சீனர் வெள்ளை பனியனும், முட்டி தெரியும் கால் சட்டை அணிந்தவர் ஒரு கைப்பிடி ஊதுபத்திகளை ஏற்றினார். கோவிலின் உட்புறத்திலிருந்து வெளியே பார்த்து மூன்று தடவை முதுகை முன் மடக்கியும் எழுந்தும் நமஸ்கரித்தார். பிறகு, கோவிலின் வெளியில் இருக்கும் ஒரு தாமரை ஜாடியில் ஊதுபத்திகளை நட்டு வைத்தார். இவை அனைத்தையும் என் வருகையை அறிந்தும் அதை கண்டுகொள்ளாமல் செய்தார். இங்கு எவரிடமும் இதைப் பற்றிக் கேட்க முடியாது எனத் தோன்றியது.

கோவிலுக்குள் நுழைத்ததும், சீன ஊதுபத்தியின் நெடியும் எண்ணை நெடியும் நாசிக்குள் நுழைந்து, மறைந்த மிங் ராஜ வம்சத்தில் வாழும் மாயையை அளித்தது.

கோவிலுக்கு மூன்று வாசல்கள். ஒவ்வொன்றும் ஒரே சுவரில் வட்டமாகத் துளையிடப்பட்ட ஓட்டைகள். வலது நுழைவாயிலில் வெள்ளை நிறத்திலான துவாரபாலகர். அவர் சொர்க்கத்தின் நுழைவாயில். இடது நுழைவாயிலில் கறுப்பிலான துவாரபாலகர். அவர் நரகத்தின் குறியீடு. நான் நடுவிலிருந்த நுழைவாயிலில் நுழைந்து மூலஸ்தானத்தில் எவர் எனப் பார்த்தேன்.

முட்டி வரை மீசை வளர்ந்த குட்டி உருவம். ஒரு பாறையின் மேல் அமர்ந்திருப்பது போன்ற சிலை. வலது கட்டை விரலை நடு விரல் மடக்கியிருந்தது. சுண்டு விரலை மோதிர விரல் மடக்கியிருந்து. இப்படி ஒரு பெயரில்லா முத்திரையை முதல் முறை பார்த்தேன். இடது கையில் ஒரு கத்தி. அவரின் இடது காலில் ஒரு பாம்பும், வலது காலில் ஓர் ஆமையும் இருந்தது.

இதைப்பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் ஊதுபத்தியின் வாடை மறைந்து சிகரெட் வாடை வந்தது.

மாமா, “அந்தப் பாட்டியிடம் ஏதாவது கேட்டியா?” என விசாரித்தார். மாமாவிடம் நடந்ததைக் கூறினேன். அந்தப் பாட்டியின் வீட்டை அடைந்தவர், அவரை வெளியே அழைத்து “1980ல இங்கே ஓர் அணை ஒடிந்து வெள்ளம் அடிச்சிட்டு போச்சே ஞாபகம் இருக்கா” எனக் கேட்டார். கூன் விழுந்த அவர் தலையை நிமிர இசைக்காமல், மெதுவாக “1978” என்றார்.  சற்று மௌனித்து சீனம் கலந்த மலாயில் பேச ஆரம்பித்தார்.

“நான்கு சடலங்கள். தாய், இரு பெண் பிள்ளைகள், சிறு வயது பேரன். அடித்துக்கொண்டு வந்த சடலங்களைச் சைக்கிள் கடையில் வைத்துத்தான் எடுத்தது”

“உங்களுக்கு அப்பொழுது என்ன வயதிருக்கும்?” என நான் குறுக்கிட்டேன்.

“எனக்கு அந்த வருசம் முப்பது இருக்கலாம். ”

“தப்பா எடுத்துக்கொள்ள வேண்டாம்.. எப்படி உங்களுக்கெல்லாம் ஒன்றும் ஆகல. ஒரு குடும்பத்துக்கு மட்டும் இப்படி ஆயிருக்கே?” என வெடுக்காகவே கேட்டுவிட்டேன். மாமா அதை எதிர்பார்க்கவில்லை.

“செய்தி வந்தது. அனைவரும் இந்த மேட்டில் இருக்கும் கோவிலில் தஞ்சம் கொண்டோம்.”

“அப்போது அந்தக் குடும்பத்துக்கு மட்டும் செய்தி போகலையா?”

“தத் தாவ். உண்மையிலே எனக்குத் தெரியாது. நான் பார்த்தது சடலத்தை மட்டுமே.”

“உங்களுக்கு வேறு எதுவுமே ஞாபகமே இல்லையா?”

“அணை உடைவதற்கு முன் ஒரு காட்சி கண்டேன். ஆனால் என் அம்மா அதை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்றார்”

“தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். இறந்த அந்தப் பெண்மணி என் பாட்டியின் தம்பி மனைவி. நான் அந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை சொந்தம். இவள் அத்ரி என் மருமகள், நான்காம் தலைமுறை” என மாமா கூறினார்.

“இத்தனை வருசம் கழித்து வந்தவர்கள் கிட்ட நான் எப்படி மறைக்க? உங்களுக்கு இது புரியுமா தெரியவில்லை. காரணம் நீங்க இந்தியர்கள்.”

“நீங்கள் சொல்லுங்கள் பாட்டி” என்றார் மாமா.

“அப்போது, இந்தக் கடைகள் இன்னும் இயங்கிக் கொண்டுதான் இருந்தன. படகு வியாபாரம், மளிகை வியாபாரம், பழம்… இங்கு இருந்த மொத்த 500 குடித்தனத்துக்கும் குழாய் வழி தண்ணீர் வருமென எதிர்பார்க்க முடியாது. எங்கள் எல்லாருக்கும் ஒரே வழி கோவில் பின்னாடி இருக்கும் கிணறுதான். பி.யூ.பி அணை உடைவதற்குச் சரியாக ஒரு வாரம் முன்னாடி நான் தண்ணீர் தூக்கச் சென்றேன். அப்போது பார்த்த ஒரு காட்சிதான்.

“அது என்ன பாட்டி?” எனக் கேட்டேன்

“கருப்பு ஆமை ஒன்று கிணற்றில் கவிந்து செத்துக் கிடந்தது.”

“என்ன? ஆமை எப்படி தண்ணீரில் சாகும்? யாராச்சும் கொன்று போட்டார்களா?”

“தத் தாவ். அப்படி ஒரு காட்சியை நான் பார்த்ததே இல்லை. எங்களுக்கு ஆமைங்கிறது ஆயுளைக் குறிக்கிற விசயம். எங்கள் சாமியின் காலுக்கடியிலும் ஆமைதான் இருக்கு.”

“ஆமா இருந்தது. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தமென்று சொல்ல வறீங்க?”

“எங்கள் தெய்வம் வடக்கின் அதிபதி. மழைக்கும் அவர்தான் அதிபதி. இவர் உண்மையிலேயே மஞ்சள் பேரரசர் காலத்தில் ஓர் இளவரசரென்று சொல்வார்கள். புத்தரைப் போலவே எளிய மனிதரின் துன்பங்களைப் பார்க்குமெனத் துறந்தவர். ஆனால் மிங் காலத்தில் வேறொரு கதை உண்டு. எங்கள் தெய்வத்தின் பெயர் சுவான்வு. இவரை ஒரு வேடர் எனச் சொல்லலாம். அனைத்து மிருகங்களையும் கருனையின்றிக் கொன்று அழிப்பார். அப்படி ஒரு முறை கருவுற்றிருந்த மான் ஒன்றைக் கொன்றுவிட்டார். மனம் வருந்தி தாவ் வாங்கச் சென்றார்”

அவரை இடைமறித்து உடனே தாவ் என்றால் என்ன என்று கேட்டேன்.

“தெய்வத்தின் கருனை”. என்றார் மாமா

பாட்டி தொடர்ந்தார்.

“வேட்டையை நிறுத்திக் கொண்டவர், மலைகளில் சென்று திரிந்தார். அப்படி ஒரு நாள், ஒரு கர்ப்பிணி பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தார். கொன்று அழித்த கைகளின் இருந்த இரத்த வாடை பிறந்த சிசுவின் இரத்தம் தூய்மைப்படுத்தியது. அவர் அப்போதே மன்னிக்கப்பட்டார். ஆனால், இறைவன் சுவான்யுவைச் சோதிக்க நினைத்தார். கர்ப்பிணியின் இரத்தக்கறை உடைகளை மலையாறுகளில் கழுவிக்கொண்டிருந்த சுவான்யுவிடம் ஆற்றின் கடவுள் எழுந்து ‘உன் மனைவியல்லாத ஒரு பெண்மணியின் இரத்தக்கறையை என்மீது கழுவி என்னை அசுத்தப்படுத்துகிறாய்’ எனச் சாடியது. அதற்கு சுவான்யு ‘மிருகங்களை வேட்டையாடி பெற்ற பாவத்தைக் கழுவ ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என வேண்டி ‘இந்தக் கரையை எனது கரையால் கழுவுகிறேன்’ எனச் சொந்த கைகளால், தனது குடலையும் வயிற்றையும் உடலிலிருந்து பிய்த்து மலையாறின் ஆத்திரம் அடங்கப் படையலிட்டார். ” படையலைப் பெற்றுக் கொண்ட மலையாறு மை கறுத்துப் பின் வெண்ணிறமாய் வெளுத்தது. மலையாறு மீண்டும் சுவான்யுவிடம் காட்சியளித்து ‘நீ பிரசவம் பார்த்தது சாதாரணப் பெண்மணி அல்ல, அவர் கருணையின் குறியீடான தேவி குவான் யின்’ என்றது. தேவிக்கே பிரசவம் பார்த்தவருக்கு அன்று அமரத்துவம் தாவ்-வாக அளிக்கப்பட்டது. ஒன்றைக் கொன்று உண்ட வயிற்றையும் குடலையும் உணர்த்தும் இச்சையையே படையலாக சுவான்யு கொடுத்ததால், மண்ணுக்கு விருந்தாகும் மனிதனுக்கு மண் வயிறாக்கப்பட்டது.  சுவான்யுவின் வயிறு பின் மண்ணால் நிறைக்கப்பட்டது.

ஆனால், அவரது ஆதி குணமான அழிக்கும் தொழில் வேறு ஓர் உருவம் கொண்டது. குடலும் வயிறும் ஆமையுமாய், பாம்புமாய் மறுவடிவம் எடுத்து அந்த மலையில் பல வெள்ளங்களை ஏற்படுத்தி அழிவுகளைச் செய்து வந்தது. அவ்வப்போது, அந்த அழிவுகளைப் போக்கி காக்கும் கடவுளாக சுவான்யு ஆனார். அதனால் தான் அவருக்கான கோவிலைக் கடலோடு கலக்கும் இந்த தெப்ராவ் ஆற்றில் கட்டினோம்.

“இந்தக் கோவிலை எப்போது கட்டினீர்கள்?” என்றேன்.

“சரியான வருடத்தைச் சொல்ல முடியாது. யாருக்கும் தெரியாது. கிட்டத்தட்ட 1840-45ஆக இருக்கலாம். அப்போது இருந்த ஜொகூர் அரசாங்கம் தனது கடல் வாணிகத்தை நிறுத்திக் கொண்டு நிலத்தில் வியாபாரம் செய்ய ஆரம்பித்தது. அப்போது, சிங்கப்பூரில் வியாபாரத்துக்கு வரி வசூலிக்க உத்தரவு கொடுத்தது. சிங்கப்பூரில் வரி அமலாக்கப்படும் செய்தி அறிந்தவுடன் தெப்ராவில் இருந்த எங்கள் அன்றைய தலைவர் தான் கீ சூன். இதோ இந்தக் கோவிலில் அவருக்கும் ஒரு தொன்மச் சிலையை வைத்துள்ளோம். அவர்தான் சிங்கப்பூரிலிருந்து 4000 தியோசு சீனர்களை தெப்ராவ் அழைத்து வந்தார். தெமெங்கோங்கள் சீனர்களின் மத்தியில் இருந்த தான் கீ சூனின் செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டு சீனர்களைக் கூலிகளாக வேலை வாங்கினர். மெல்ல வளர்ந்துகொண்டிருந்த எங்கள் கூட்டத்தைப் பார்த்து ஆங்கிலேயர்கள் ஆயுத பலம் கொண்டு தடுக்க ஆரம்பித்தபோதுதான் ஒரு வெள்ளம் வந்து ஐம்பது குடும்பங்களை அழித்தது. அப்போது எங்களைக் காக்கக் கட்டி எழுப்பிய கோவில்தான் இது. ஒவ்வொரு முறையும் ஒரு காவு. அந்த முறை உங்கள் குடும்பம். இவ்வளவுதான் எனக்குத் தெரியும்.”

அவரிடம் நன்றிகளை சொல்லிவிட்டு. மாமாவிடம் கூறலானேன்.

“மாமா சிகாமணி வாழ்ந்த வீட்டை எனக்கு பார்த்தே ஆகனும்.”

முன்பு பார்த்த அந்த நடுத்தர வயது சீனர் எங்களிடம் வந்து மலாயில் கேட்டார், “மறைந்தவர்களின் குடும்பத்தினருக்கு பி.யூ.பில இருந்து காசு கிடச்சுச்சா மேம்? எவ்வளவு?” என்றார்.

எனக்கு அவரிடம் அதன் மேல் எதுவும் பேசவோ, கேட்கவோ விருப்பமில்லாததால் “தத் தாவ்” என்று அங்கிருந்து கிளம்பினோம்.

(தொடரும்) [email protected]