குறுங்கதைகள்

0
95
தயாஜி (மலேசியா)

‘சிங்கியா மங்கியா’ என்றொரு நாடு

பலரும் நன்கு அறிந்த சிறு நாடு. பரப்பளவு எவ்வளவு இருந்தாலும் நாட்டையும் நாட்டு மக்களையும் நல்வழிப்படுத்த அரசாங்கம் அவசியம்தானே. அங்கும் ஓர் அரசாங்கம் அமைந்திருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த குற்ற விசாரணையால் ‘சிங்கியா மங்கியா’ நாடு மிகவும் பிரபலமானது. அரசாங்கப் பணியில் இருக்கும் முக்கிய அதிகாரியும் அரசியல்வாதியுமானவர் செய்த பண மோசடி அம்பலத்திற்கு வந்தது. என்னதான் அரசாங்கத்தின் முக்கிய பணியில் உள்ளவரென்றாலும் பொது மக்களின் பணத்தை கையாடல் செய்தது அந்நாட்டில் பெருங்குற்றம்.

‘சிங்கியா மங்கியா’ நாட்டு அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களை எப்போதும் குழப்பத்தில் விடாத அரசாங்கம். மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் அரசாங்கம்.

அந்த அரசாங்கம், இவ்வாறான குற்றத்திற்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு பாடமாக அமையவேண்டும் என்ற ஒற்றைக்குறிக்கோள் கொண்டவர்களின் கூடாரம்.

அதிகப்படியான விசாரணைகள் ஏதுமின்றி, உடனடி தீர்ப்பு வழங்கப்பட்டது. அரசாங்க அதிகாரியும் அரசியல்வாதியுமாகியவரின், அனுமதியின்றி அவர் செய்த பண மோசடிகளைக் கண்டறிந்த அவரின் பணியாளருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

என்ன இருந்தாலும் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நன்மதிப்பு குலையக் காரணமான நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படதான் வேண்டும் என்றும் ஆளுக்கு ஆள் கூறிக்கொண்டார்கள்.

அதன் பின் எந்தக் குற்றமும் ‘சிங்கியா மங்கியா’வில் பதிவாகவில்லை என்பது தனிவரலாறு.

அந்த தீர்ப்பிற்கு பிறகுதான் ‘சிங்கியா மங்கியா’ என்ற நாடு காலப்போக்கில் காணாமல் போனது. யாருக்கு தெரியும் அந்நாடு இப்போது வேறொரு பெயர் வைத்துக்கொண்டிருக்கலாம்.

பூட்டப்படாத கதவுகள்

“இவருக்கு கொஞ்சம் கூட பயமே இல்ல.. காலம் எப்படி கெட்டுக்கிடக்கு வாசல் கதவை லாக் பண்ணாமலேயே வச்சிருக்காரு….” என புலம்பிக்கொண்டே நுழைந்தான்.

“அப்பா… அப்பா… எங்க இருக்கீங்க…?” என அதிகம் தேடாமல், வரவேற்பறை நாற்காலியில் அமர்கிறான். வாங்கி வந்திருந்த சமையல் பொருட்களை கீழே வைக்கிறான்.

எப்படியும் ஒரு மாதத்திற்கான சமையல் பொருட்கள் அதில் இருக்கும். அதற்குள் அவை முடிந்துவிட்டால் ஓரிரு நாட்கள் அப்பா எப்படியும் சமாளித்துக்கொள்வார். ஒத்தையாளுக்கு ஒரு டம்ளர் டீயும் ஒரு ரொட்டிபன்னும் போதாதா என தன்னைத் தானே கேட்டுக்கொள்வான்.

அதுவுமில்லாமல் ஒரு மாதத்திற்கு ஒருமுறை இப்படி வருவதற்கே அவனுக்கு நேரம் சரியாக இருக்கிறது.

“குளிச்சிகிட்டு இருக்கேன் பா.. தோ வந்துடறேன்….” குளியல் அறையில் இருந்து சத்தம் வந்தது. அப்பா குளித்துவிட்டார்.

“வா.. மாதவா.. வா எப்படி இருக்க பொண்டாட்டி புள்ளைங்க எப்படி இருக்காங்க…”

“நாங்க இருக்கிறது இருக்கட்டும் நீங்க ஏன் பா இப்படி இருக்கீங்க..?” என கோவப்பட்டான்.

“எப்படி இருக்கேன். நானும் நல்லாத்தான மாதவா இருக்கேன்…”

“நான் அதைக் கேட்கல.. ஏன் எப்பவும் வாசல் கதவை உள்ள லாக் பண்ணாமலேயே இருக்கீங்க… எத்தனை தடவை சொல்லிருக்கேன்…”

“ஓ அதுவா… நான் குளிக்கும் போது கூடதான் பாத்ரூம் கதவை உள்பக்கம் லாக் பண்ண மாட்டேன்..” என்றவாறு சிரிக்கலானார். வாய்விட்டு சிரித்ததில் வாயில் பல்லில்லாதது அப்படியே தெரிந்தது.

“செய்யறது எல்லாம் கிறுக்குத்தனமான வேல… இதுல சிரிப்பு வேற…”

அப்பா நிதானமானார், “என்னப்பா செய்றது. நானோ ஒண்டிகட்ட, நீயோ மாசத்துக்கு ஒரு தடவைதான் வந்து பாக்கற….. ஒருவேளை நான் வீட்டுலயோ பாத்ரூம்பலயோ விழுந்து செத்துட்டா…. யார் உனக்கு கதவை திறந்துவிடுவா… அதும் இந்த வாசல் கதவை அவ்வளவு சீக்கிரத்தில் ஒடைக்க முடியாதுன்னு நீதான சொன்ன. என்னைய பார்த்துக்கவே நீ ரொம்ப கஷ்டப்படற அதுல நான் செத்தும் உனக்கு சிரமத்தைக் கொடுக்கனுமா சொல்லு….”

“இல்லப்பா அது வந்து….” அவன் மனம் ஏதோ செய்தது.

“அதான் வந்துட்டயே… இதோட அடுத்த மாசம்தான வருவ….” அப்பா இப்போதும் நிதானமாகவே இருக்கிறார்.

மனம் ஒரு…

பத்துமலை கோவில். வண்ணமடித்த படிகளில் வெள்ளைக்காரர்கள் வேட்டி சட்டை, புடவையில் நடந்து கொண்டிருந்தார்கள். சிலர் நேர்த்திக்கடனுக்காக படியேறிக்கொண்டிருந்தார்கள். சிலர் தங்களின் பூர்த்திக்கடனுக்காக படியிறங்கிகொண்டிருந்தார்கள். இரண்டுக்கும் இடையில் சிலர் டிக்டாக்கில் ஆடி கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து படியோறங்களில் இருந்த குரங்குகளும் ஆட முயன்றன. அவை நன்றாகவும் ஆடின.

சுந்தரம் தனது பிரார்த்தனைகளை முடித்துவிட்டார். கையில் சில வாழைப்பழங்களுடன் படி இறங்குகிறார். வழக்கம் போல குரங்குகள் அவரையும் சூழ்ந்தன. அவரும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வாழைப்பழத்தைப் பாதிப்பாதியாகப் பிய்த்து கொடுத்துக் கொண்டே நடக்கலானார்.

படிகளின் நடுவில் நின்றார். கையில் இருக்கும் தட்டை தரையில் வைத்தார். அடுத்து அவர் செய்யப்போவதை குரங்குகள் ஆவலாய்ப் பார்த்தன. தன் பையில் இருந்த பெரிய பாட்டில் பசும்பாலைத் தட்டில் ஊற்றினார்.

ஆசையாய்க் குரங்குகள் கூடின. தட்டின் அகலத்தைவிடவும் குரங்குகள் கூட்டமாக இருந்ததால் சீக்கிரமே பாலை குடித்து முடித்தன. வள்ளல் பரம்பரைக்கான மிடுக்குடன் மீண்டும் தட்டில் பசும்பாலை ஊற்றினார். ஒரு குட்டிக்குரங்கு தவறுதலாகத் தட்டில், வாய்க்கு பதிலாக இரு கைகளையும் வைத்துவிட்டது. தட்டு அப்படியே கவிழ்ந்தும் விட்டது. பால் கீழே ஊற்றியது.

பசும்பால் இப்படி வீணானதால் கோவம் கொண்டார் சுந்தரம். அவரால் அதை ஜீரணிக்க முடியவில்லை. இந்தக் குரங்குகளே இப்படித்தான். கையில் இருந்த பெரிய பாட்டில் பசும்பாலை பக்கத்து பாறையில் வீசி உடைத்தார்.

“ச்சீ அறிவுகெட்டதுங்க..” என்றார். யாரைச் சொல்கிறார் என அந்தக் குரங்குகளும் தேடின.

[email protected]