1924ல் சிங்கப்பூரில் பிறந்த செல்லப்பன் ராமனாதன் (S.R.நாதன்) ஆகஸ்ட் 22, 2016ல் தன் 92ம் வயதில் இயற்கை எய்தினார். ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தவர், இருமுறை அதிபர் பதவி வகித்தவர், வயதானவர் என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு சின்ன விஷயத்தால்தான் அவரிடம் முதலில் நான் கவரப்பட்டேன்.

தமிழ்த்தொலைக்காட்சி உரையாடல் ஒன்றில் ‘இளையர்களுக்கு, குறிப்பாக நம் இன இளையர்களுக்கு, உங்கள் அறிவுரை என்ன?’ என்று கேட்டார்கள், அவர் அழகான பழகுதமிழில் ‘அவுங்க நெனச்சா எவ்வளவோ செய்யலாம், ஆனா எல்லாத்தையும் வுட்டுட்டு சாராயத்துல கவனஞ்செலுத்துறாங்க…(அதன் பின் அவர் பேசியது நினைவிலில்லை) என்றார். நம் தாத்தாக்கள் உரிமையுடன் பேசுவது போன்றதொரு நெருக்கம் அதைக்கேட்டதும் ஏற்பட்டது. அவர் பேசுவதைக் கேட்கவேண்டும், எழுதியதைப் படிக்க வேண்டும் என்று உந்தியது அந்த நெருக்கம்தான்.

பதினாறு வயதில் சகமாணவனின் புத்தகமொன்றை திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட நாதன் அன்னையின் முகத்தில் விழிக்க வெட்கப்பட்டு வீட்டை விட்டு ஓடியவர். மதுவுக்கடிமையான தந்தையை தன் எட்டாம் வயதிலேயே இழந்தவர் இவர். வீட்டைவிட்டு ஓடிவந்தபின் சோத்துக்குக் கஷ்டப்பட்டு, கிடைத்த சில்லுண்டி வேலைகளைச்செய்து, சிங்கப்பூர் ஜப்பானின் ஆளுகைக்குட்பட்ட நேரத்தில் ஜப்பானிய மொழி கற்றுக்கொண்டு மொழிபெயர்ப்பாளராக வேலை பார்த்து, பிறகு கல்வியைத்தொடர்ந்து, தேசிய பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் பட்டயப்படிப்பு படித்து, எழுத்தர், பத்திரிகையாளர், அரசு அதிகாரி, வெளியுரவுத்தூதர், அதிபர் என்று உயர்ந்த நீண்ட நெடும் பயணம் அவரது.

1974ல் நடந்த புலாவ் புகாம் தீவிரவாதத் தாக்குதல் அதைத்தொடர்ந்த ஆட்கடத்தல் ஆகியவற்றின்போது தீவிரவாதிகள் பிடியிலிருந்தவர்களை பத்திரமாக விடுவிக்க அப்போது பாதுகாப்பு அமைச்சக அதிகாரியாக இருந்த நாதன் தன்னைப் பிரதிப்பிணையாக வைத்து அவர்களுடன் சென்றது இவரது துணிச்சலையும் பொறுப்பையும் அனைவரின் கவனத்துக்கும் கொண்டுசென்றது. 1980-களில் லீ குவான் இயூ உள்ளூர்ப்பத்திரிகைகள் அரசின் கொள்கைகளைத் தேவையற்ற அளவுக்கு எதிர்மறையாக விமர்சிக்கிறது என்று சந்தேகப்பட்டபோதும் பிரச்னையைத் தீர்க்க நாதனே அவரது தேர்வு. ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் பிரஸ்ஸின் செயல் தலைவராக நியமிக்கப்பட்ட இவர் சுமார் ஏழு வருடங்கள் பணியாற்றினார்.

1994ல் மைக்கேல் பே என்ற அமெரிக்க இளையர் சிங்கப்பூரில் பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்த குற்றத்திற்காக பிரம்படி தண்டனை விதிக்கப்பட்டபோது அவரை அதிலிருந்து தப்புவிக்க அதிபர் கிளிண்டன் மற்றும் அமெரிக்க செனட்டர்களிடமிருந்து வந்த அழுத்தத்தை அப்போது அமெரிக்க தூதராக இருந்த நாதன் திறம்படக்கையாண்டார். பிறகுதான் 1999ல் சிங்கப்பூரின் ஆறாவது அதிபராகப் பதவியேற்றது. இன்றும் மக்களின் அதிபர் என்றே பத்திரிகைகள் இவரை அழைக்கின்றன.

2012ம் வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு புதன்கிழமை இரவு நானும் ஊரிலிருந்து வந்திருந்த என் உறவினர் ஒருவரும் தேசிய பல்கலைக்கழகத்தில் நடந்த நாதனின் U@live என்ற ஒரு நேருக்குநேர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். இது பெரும்புள்ளிகளாகிவிட்ட பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களை அழைத்து தற்போது படிப்பவர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் உண்டாக்க மாதாமாதம் நடத்தப்படும் நிகழ்ச்சி.

நாதன் அந்நிகழ்ச்சிக்கு வரப்போவதாக அறிந்ததும் இரு இருக்கைகளுக்கு முன்பதிவு செய்துகொண்டேன். கட்டணம் கிடையாது. எவரும் வரலாம். முந்துவோர்க்கு முன்னுரிமை. U@live-ல் அனைவருக்கும் பொதுவான ஆங்கிலத்தில்தான் உரையாடல் இருந்தது. ஆங்காங்கே சுவையான சம்பவங்களோடு சேர்த்து சுருக்கமாக நாதன் அவர் வரலாற்றைச்சொன்னார்.

பின்னர் பலவிதமான கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. சளைக்காமல் சுறுசுறுப்பாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு வயது 87. ஒரு இளையர் எழுந்து அறிவுரை கேட்டபோது, வீட்டைவிட்டு ஓடிவிடாதே என்றார். ‘எப்போதைக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும் முன் தயாரிப்புடன் நாம் இருக்கமுடியாது. சமயோஜிதமாக அவ்வப்போது நம்மை நாமே வெவ்வேறு வழிகளில் கண்டடையவேண்டும்’ என்று அவர் சொன்னது எனக்கு ஆழமாகத்தைத்தது; இன்றளவும் எனக்கு உதவிவருகிறது. இந்த வயதிலும் ஆற்றல் எங்கிருந்து வருகிறதென்று கேட்டதற்கு ஆகாயத்தை நோக்கிக்கைகளை உயர்த்தி விட்டார்.

அதிபருக்கு சிங்கப்பூரில் அளவுக்கதிகமான சம்பளம் என்று விமர்சிக்கிறார்களே என்று கேட்டதற்கு, தான் வேலையை ஏற்றுக்கொள்கையில் சம்பளம் பேசிக்கொள்ளவில்லை; எனவே அதிகமோ குறைவோ அதைப்பற்றி ஒன்றுமில்லை என்றார். அதோடு நாதனுக்காக சம்பளத்தைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கவில்லை, அது பதவிக்கான கௌரவம் என்று முடித்தார்.

மக்கள்சேவையில் ஒரு சிக்கல் உள்ளது. மேலதிகாரி சொல்கிறார் என்பதற்காக சொன்னதையெல்லாம் செய்தால் வாழ்வில் நமக்கென ஒரு தத்துவம் இல்லாமல் போய்விடும். ஆனால் செய்யாவிட்டால் வேலை போய்விடும். இந்த சூழ்நிலையை சாமர்த்தியமாக எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் விஷயம் என்றார். ஆனால் உங்களின் அந்த தத்துவம் உங்கள் ஆன்மீகத்தன்மையின் ஆழத்திலிருந்து பிறக்கவேண்டும் என்றும் சொன்னார்.

எல்லாம் முடிந்து இரவு ஒன்பது மணிக்கு அரங்குக்கு வெளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திண்பண்டங்களை நாங்கள் கொறித்துக்கொண்டிருந்தபோது நாதனும் வந்தார். போய் பேசுங்கள் என்று என் உறவினரைத் தூண்டினேன். அவரும் நாதனின் கையைக்குலுக்கி ‘நம்மாளு ஒருத்தர் இவ்ளோ பெரிய உயரத்திற்கு வந்தது எங்களுக்கெல்லாம் பெரிய பெருமை, மகிழ்ச்சி’ என்றார். பதிலுக்கு நாதன் எங்க படிக்கிறீங்க என்றார். என் மருமகன்தான் இங்க படிக்கிறார் என்று கைபேசியில் படம் பிடிக்க முயன்றுகொண்டிருந்த என்னைக்காட்டினார். மருமகனா? என்று திரும்பிய நாதனை நோக்கி நான் ‘ரொம்ப நன்றி’ என்றேன். நாதன் என்னிடம், படம் புடிச்சிட்டீங்களா? என்றார்.

மீண்டும் என்னை முதலில் கவர்ந்த அவரின் பழகுதமிழைக்கேட்ட நிறைவில் வீடு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் என் உறவினர் என்னிடம் ‘எவ்வளவோ இடங்களை சிங்கப்பூர்ல எனக்கு காமிச்சீங்க. ஆனா இதுதான் எல்லாத்துக்கும் மேல’ என்றார். எனக்கே நாதனின் அருகில் சென்ற அனுபவம் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருந்தது. அவருக்கும் பதட்டம் தணியட்டும் என்று புன்முறுவலுடன் அமைதிகாத்துவிட்டேன்.

சிங்கப்பூர் என்ற நாட்டின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் முக்கியமான பங்கொன்றை ஆற்றிய நாதனின் பெயர் வரலாற்றில் அழியாத இடம்பெற்றுவிட்டது. அவருக்கு நம் அஞ்சலி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here