அசோகமித்திரன் அஞ்சலி – லங்கேஷ்


‘அசோகமித்திரன்’ என்ற பெயர் தாங்கிய ஒரு நாடகம் பரவலான தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. ராஜாமணி என்ற நண்பர், நாடகத்தை எழுதியவர், அதனால் மனமுடைந்துபோகிறார். அவரைத் தேற்றும் விதமாக அசோகமித்திரன் என்ற பெயரைப் பிரபலமாக்க அதையே தன் புனைபெயராக வைத்து எழுத ஆரம்பிக்கிறார் அவரது நண்பர் தியாகராஜன். அவரே கடந்த மார்ச் 23ம் தேதி மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக விடிகிற மாதிரி அன்று அசோகமித்திரனின் மறைவுச் செய்தியுடன் தொடங்கியது. லௌகிக வாழ்க்கையின் ஒதுக்கிவிட இயலாத வேலைகளுக்கு இடையேயான இடைவெளிகள் அன்று முழுதும் அவரைப் பற்றிய சிந்தனைகளால் பொங்கி நிரம்பின. எங்கிருந்து அவரை வாசிக்க ஆரம்பித்தோம், எந்தக் கட்டத்தில் அவரை ஆத்மார்த்தமாக உணர ஆரம்பித்தோம் என்றெல்லாம் சிந்தனைகள் உள்ளும்புறமுமாக ஓடிக்கொண்டிருந்தன.

Emotional discomfort, when accepted, rises, crests and falls in a series of waves.
அசோகமித்திரனின் எழுத்துக்களுடன் என் பரிச்சயம் ஜெயமோகனிடமிருந்துதான் ஆரம்பம். ஜெமோ ‘பதினெட்டாவது அட்சக்கோடு’ நாவலை விமர்சித்து எழுதியிருந்தது மிகவும் ஆவலைத்தூண்டியது. தேடி எடுத்துதான் படித்துப் பார்ப்போமேவில் தொடங்கிய வாசிப்பு தொடர்ச்சியாக மானசரோவர், கரைந்த நிழல்கள் மற்றும் சில சிறுகதைகள், கட்டுரைகள் வரைக்கும் தொடர்ந்து நீண்டது சிறப்பான அனுபவம்.18வது அட்சக்கோடு, இந்திய துணைக்கண்டத்தில் நடக்கும் ஒரு தேசப் பிரிவினையின் பொழுது, சாமான்யனான சந்திரசேகரனின் வாழ்வில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு புனைவு. கதையின் நாயகனான அவனின் இளமைக்கால செகந்திராபாத் அனுபவத்தைக் கிரிக்கெட் துள்ளலுடன் ஆரம்பித்து மனதை மெல்ல நிர்வாணமாகக் கொண்டு செல்லும் கதை. சமஸ்தானங்களை இந்திய தேசியத்துடன் இணைக்கும் காலகட்டத்தில் அதையொட்டிய வன்முறைகளையும், சாதாரண மனிதர்களின் அவதிகளையும் சிறப்பாகப் பதிவு செய்த கதை.

சிலர் இக்கதையை அசோகமித்திரனின் சுயசரிதை போன்றது எனக்கூறினாலும் அது எவ்வகையிலும் கதையுடைய தன்மையைப் பாதிக்காமல் சொல்வது இவரின் பாங்கு. எளிமையான நடையில் எழுதப்பட்ட இந்தக் கதையை, சந்திரசேகரனின் மூன்று முக்கிய மனமாற்ற காரணிகள் குறித்து ஜெயமோகன் எழுதியிருந்ததை ஒப்பிட்டுப் படித்தால் கிடைக்கும் அலாதியான இலக்கிய அனுபவத்துக்கு நான் உத்தரவாதம்.

இரண்டாவதாக நான் வாசித்தது ‘மானசரோவர்’ நாவல். இரண்டு நண்பர்கள் கோபால் மற்றும் சத்யன்குமார் பற்றிய கதை. மனிதர் எளிமை என்றால் அவரது எழுத்து நடை அதைவிட எளிமை. அசோகமித்திரனை ஒரு வாசகனாக எனக்கு மிக அன்யோன்யமான இடத்திற்கு கொண்டு சென்றது, நான் வாசித்த மூன்றாவது நாவல் ‘கரைந்த நிழல்கள்’. தமிழில் தலைசிறந்த நூறு நாவல்களில் ஒன்று என எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால் குறிப்பிடப்படும் நாவல் இது. தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு இன்றைய இன்றியமையாத தேவைகளில் ஒன்றான திரைப்படங்களின் பின்னால் உழைப்பவர்களைப் பற்றிய கதை.

அசாதரணமான வடிவ நேர்த்தியுடன் பத்து பிரிவுகளாக எழுதப்பட்ட இக்கதை, நேரங்காலம் எதுவுமின்றி உழைக்கும் திரைத்துறை மனிதர்களைப் புடம்போட்டு காட்டும் ஒரு சித்திரம். ரெட்டியாரின் படக்குழுவுடன் அவுட் டோர் ஷூட்டிங்கில் ஆரம்பிக்கும் கதை ஜெயசந்திரிகா என்னும் நடிகையினால் முடங்க, ரெட்டியாரின் வாழ்வில் ஒரு அஸ்தமனம். பட வேலை ஏதுமின்றித் தவிக்கும் உதவி டைரக்டர் ராஜகோபாலனைப் பற்றிய அடுத்த மூன்று பகுதிகள் வாசகரை ‘ஐயோ இவன் ஒரு வாயி சாப்டுட்டு போகக்கூடாதா’ என்று தவிக்கவிடும். பிற்பகுதியில் வரும் ஸ்டூடியோ முதலாளியாக வரும் ராம ஐயங்கார் மற்றும் அவரின் பிள்ளை பாச்சவுடனான உரையாடல் அற்புதம்.

ஒட்டு மொத்தமாக இக்கதை non-sequel ஆக வளர்ந்து செல்லக்கூடியது. வித்தியாசமான வகையில் கதை எழுத விரும்புவோர் கட்டாயம் பயில வேண்டிய புத்தகம். முன்னர் குறிப்பிட்டதுபோல் இக்கதையை நான் பெரிதும் விரும்பக் காரணம், இதில் இருக்கும் அப்பட்டமான உண்மை. கோலிவுட்டின் சாலிகிராமத்தில் வளர்ந்த நான், திரைப்படக் கலைஞர்களின் நிதர்சன வாழ்க்கையைக் கண்டும் கேட்டும் இருந்ததை ஒரு கதையாக அவர் வடித்திருந்ததை வாசித்து நெகிழ்ந்தேன். சாதாரண மனிதர்களின் வாழ்வை அசாதாரணமான முறையில் அதே சமயம் எளிமையான வார்த்தைகளில் எழுதிவிட மேதைகளால் இயலும்போலும்!

அசோகமித்திரனைப் பற்றி ஏதோவொரு தென்கிழக்காசிய மூலையில் உட்கார்ந்துகொண்டு யோசிக்கும்பொழுது இவர் மிகச் சிறந்த எழுத்தாளர் மட்டுமில்லாது ஒரு நல்ல நண்பராகவும் இருந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ராஜாமணி நாடக விஷயத்தை மட்டும் வைத்து சொல்லவில்லை. அசோகமித்திரன் மறைவையொட்டி ஜெயமோகனின் வெளியிட்ட ‘அவர் வறுமையில் உழன்றார்’ பேச்சும் அதையொட்டிய ஞாநி மற்றும் பலரின் மறுப்பு விமர்சனங்களையும் – எந்த சார்புமில்லாமல் – அசைபோட்டுப் பார்த்ததில் எனக்குத் தெரியும் உண்மை இதுதான்; இலக்கிய உலகில் அனைவருக்கும் அசோகமித்ரனின் மேல் இருக்கும் அன்பே காரணம் இச்சர்ச்சைகளுக்கு. ஜெயமோகனுக்கு இவரைச் சிறப்பான முறையில் நாம் அங்கீகரிக்கவில்லையென்ற ஆதங்கம். ஞாநிக்கோ சகநண்பனை சிறிதும் குறைத்து யாரும் பேசிவிடக்கூடாது என்ற கவலை. அசோகமித்திரன் மீதான மரியாதையும், பிரமிப்பும், அன்பும், நட்புமே வெவ்வேறு விதங்களில் வெளியாகி ஒன்றையொன்று உராய்ந்துகொள்கின்றன. அவ்வளவுதான்.

வடக்கே பனி சூழ்ந்த இமயமமலை நடுவே ஒரு ஏரி, அங்கே குளித்தால் மனம்
சுத்தமாகிவிடுமாம், மனம் சுத்தமானால் யோகம் சித்திக்குமாம், யோகமெல்லாம்
நமக்கெதற்கு? மனம் கொஞ்சம் சுத்தமானால் போதாதா! என்று மானசரோவரின்
சிறப்பை கதையின் கடைசி வரிகளால் முடித்த அந்த மேதை சொல்லும் செயலும் ஒன்றாகவே வாழ்ந்து முடித்திருக்கிறார்.

நிறைவாக, மறக்கப்படுகிற மரணங்கள் சாமான்யனுக்ககே, மேன்மையான படைப்பாளிகளுக்கு அல்ல. அசோகமித்திரன் திறமையும், முழுமையும் கொண்ட படைப்பாளி. அவரின் எழுத்தாக்கங்கள் காலங்கள் தோறும் உதாரணம் காட்டப்படும். எளிய கதைமாந்தர்களின் மாபெரும் நாயகன் அசோகமித்ரனுக்கு இவ்வாசகனின் பணிவான அஞ்சலிகள்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்