அதிபதி நாடகக் குழு- விஜய்

தமிழ் என்னும் மொழி எத்துனை வளங்களையும் செழிப்புகளையும் கொண்டிருந்தாலும் அதனை வளர்ப்பதற்கென பல அமைப்புகள் தத்தம் வழிகளில் முடிந்தனவற்றை செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. தமிழ் வளர்ப்பது மட்டுமின்றி அதனுடன் நாடகக் கலையையும் வளர்ப்பதில் ஒரு முன்னோடியாய் தனது புதுமையான அணுகுமுறை கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருப்பது அதிபதி நாடகக் குழு. இக்குழுவின் தலைவர் திரு ரா.புகழேந்தி 1996 ல் இயற்றிய ‘அதிபதி’ எனும் நாடகத்தில் அறிமுகமான நண்பர்கள் மூலம் இக்குழு ஆரம்பிக்கப்பட்டு தமிழ் நாடகங்களுக்குரிய அத்தனை சவால்காளையும், சிக்கல்களையும் சரியான திட்டமிடலுடன் சரியான நபர்களைக் கொண்டு கையாளப் பட்டு வருகிறது. சிங்கப்பூரில் நாடகம் என்பது மிகப்பெரும் பொருட்செலவையும், மனிதவளத்தையும், பலரின் நேரங்களையும் எடுத்துக் கொள்கிற அரிய செயல். சிங்கப்பூரின் நாடக வரலாற்றில் 2000 க்கும் மேற்பட்டோர் நடித்திருக்கின்றனர், ஆனால் நடித்த எவரும் திரும்பி மற்ற நாடகங்களைப் பார்க்க வராததொரு நிலை உள்ளது. ஏதோ ஒரு காரணத்திற்காக நாடக ரசனை நின்று விட்ட வெற்றிடத்தை நிரப்பும் அரணாகவும், தமிழ் நாடகங்களின் நிலைத்தன்மைக்கு முன்னுதாரணமாகவும் தமது திட்டமிடல் வழிவகுக்கும் என அதிபதி நம்புகிறது.

சிங்கையில் பெயர் சொல்லுமளவுக்கு நாடகக் கலைஞர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் ஆனால் அவர்களைத் தாண்டி அடுத்த தலைமுறைக்கு நாடக ரசனையை எடுத்து சென்று வளர்க்க வேண்டிய அரிய பணியில் அணுகுமுறைகளை மாற்றி திறமையான கலைஞர்களை அடையாளம் காணுகிறது. அதிபதி நாடகக்குழுவில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பகுதி நேர ஊழியர்கள் என ஒரு பெரும் இளைஞர் பட்டாளமே இயங்குகிறது.

நாடகக் குழுவின் மதியுரைஞர் என்பதால் திரு புகழேந்தி தான் அனைத்தையும் இயக்குகிறார் என்று அர்த்தம் அல்ல. ஆண்டுக்கு ஒரு நாடகம் ஒருவரால் மட்டுமே இயக்கப்படும் எனும் விதியில் கதை, திரைக்கதை, இயக்கும் கலையை இளையோர்களின் கைகளில் கொடுத்து அவர்களின் தனித்திறமைகளை மேடைகளின் தவழ விட்டு நாடக ரசிகர்களை மகிழ்விக்கும் உத்தியில் திளைக்கிறது அதிபதி குழு. தனது நாடக்குழு மூலம் நடிகர் பட்டாளத்தை மட்டுமல்ல இயக்குநர்களையும் உருவாக்கி அவர்களின் வாசிப்பு, எழுத்துப் பழக்கத்தையும் விரிவுபடுத்தவும்செய்கிறது. தான் இயக்கிய ‘விக்கிரமாதித்தன்’ நாடகத்தை இளையோர் ஒருவர் இயக்கிய போது அதில் தனக்கு முற்றிலும் வித்தியாசமான அணுகுமுறையயும் , காட்சிகள், நடன அமைப்பு வேறுபட்டு அது முழுக்க முழுக்க இயக்குபவரின் ரசனையிலேயே படைக்கப்படுவதையே விரும்புகிறார் திரு புகழேந்தி.

நாடகத்தின் பாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முறையான பயிற்சியினை முதலில் கொடுத்த பிறகே ஒத்திகை ஆரம்பிக்கப்படுகிறது. ஒத்திகையின் போது இயக்குனரால் நடித்துக் காண்பிக்கப் படாமல் நாடகக் கலைஞர் காட்சிக்கான சுய உணர்வின் நடிப்பாற்றலை வெளிக் கொணரும் கலையினை பயிற்றுவிப்பது ஆச்சர்யமூட்டும் ஒரு அணுகுமுறை. சிங்கப்பூர்ச் சூழலில் நாடகக் கலைஞர்களுக்கு பெரும் அயர்வைத் தருவது சுமார் மூன்று மாதங்களுக்கு வாரத்தில் மூன்று அல்லது நாடகள் என நடைபெறும் நாடகத்திற்கான ஒத்திகைகள் தான்.
ஆனால் அதிபதி ஞாயிறன்று மட்டும் நடிகர்களை வரவழைத்து ஒத்திகை அளிக்கப்பட்டு நடிகர்கள் சோர்வடையாமல் இருப்பதற்கு வழிவகை செய்கிறது. தேவைப்படுபவர்களுக்கு மட்டும் கூடுதல் தனிப்பயிற்சி அளித்து நாடகத்திற்குத் தேவையான தரத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள்.

சிங்கை இளையோர்களிடம் காணப்படுகின்ற ஆங்கிலம் கலந்த தமிழ் இவர்களது குழுக்களில் அதிகமாக தென்படாத வகையில் நல்ல தமிழில் நாடகத்திற்கான அனைத்து உரையாடல்கள் அமையும் வகையில் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு. திசைவேகம் எனும் பெயரில் நாடகத் திருவிழா ஏற்பாடு செய்து பல்வேறு விதமான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் நகைச்சுவை, சிந்தனை, காவியம், இளையோர் என வெவ்வேறான படைப்புகளை ஒரு குடையின் கீழ் நிகழ்த்தும் பெருமையையும் அதிபதி குழு நடத்துகிறது. அரங்கேற்றிய நாடகங்கள் அனைத்திற்கும் நுழைவுச் சீட்டுக்கள் முழுதும் விற்பனையாகும் வகையில் அதற்கான குழுவை அமைத்து சமூக வலைதளம் மூலமும் செயல்படுத்தி விற்பனையிலும் சாதனை படைக்கிறது.
அரங்கம் கட்டமைப்பதற்கான மூலப்பொருட்களை தங்களது அறையிலெயே கிடத்தி வைத்திருந்து மறுபடியும் பயன்படுத்திக் கொள்ளும் உத்திகளுக்கும் திட்டமிட்டு நிறைவான, அழகான அரங்க வடிவமைப்புகளைக் கொண்டு அளிக்கிறது குழு. இதனால் பொருட்செலவும் மிச்சமாவதுடன், எளியில் அரங்க வடிவமைப்புகள் செய்யப்படுகின்றன. நாடகங்கள் யூடியூப் தளங்களில் பதிவேற்றினால் மேடை நாடகத்திற்கு வரவேற்பு குறைந்து விடும் என அஞ்சி பத்திரமாக வைத்திராமல் தொடர்ந்து பதிவேற்றி உலக வாசகர்களிடம் தன் நாடகங்களைக் கொண்டு சேர்க்கிறது குழு. பிரம்மாண்ட அரங்கங்களை மட்டுமே எதிர்பார்த்திராமல் சமூக மன்றங்களின் மேடைகளிலும் நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வெகுவான மக்களைச் சென்றடையும் வழியினையும் பின்பற்றி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

அற்புதம் நிறைந்த சாகசக் கதையான விக்கிரமாதித்தன் நாடகத்தை ஆங்கில நாடகங்களுக்கு இணையாக மிகுந்த சுவாரசியத்துடன் அரங்கேற்றியதின் விளைவாக பல சமூக மன்றங்களில் அரங்கேற்றப்பட்டது. சிங்கையின் முதல் தமிழ் மன்னனும் சிங்கப்பூர் எனப் பெயரிட்ட ‘சங்க நீல உத்தமன்’ வரலாற்று நாடகம் முத்தமிழும் கலந்து,
மிகச்சிறந்த ஒலி ஒளி அமைப்புகளுடன் படைக்கப்பட்டு அரியதொரு வரலாற்றைச் சொல்லும் அற்புத காவியமாகவும் திகழ்ந்தது. கலாச்சார விருது பெற்ற திரு பி.கிருஷ்ணன் அவர்களின் புகழ்பெற்ற கதைகளான‌ அடுக்கு வீட்டு அண்ணாசாமி, ஐடியாக் கண்ணு கதைகளை முதன்முதலில் மேடையேற்றிய வாய்ப்பும் அதிபதி குழுவினருக்கு மைல்கல்லாக அமைந்தது. மேலும் ந.பழநிவேல் அவர்களின் ‘ஆயிரத்தில் ஒருத்தி’ மற்றும் நா. கோவிந்தசாமி அவர்களின் ‘தேடல்’ கதைகளை மேடையேற்றிய பெருமையும் அதிபதியையே சேரும்.

தமிழர்களுக்காகத் தொண்டாற்றிய தமிழவேள் திரு கோ.சாரங்கபாணியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் கவிதை நாடகத்தை முழுக்க பள்ளி மாணவர்களைக் கொண்டு இரண்டு முறை படைத்து பெருமை கொண்டது. அதிபதியின் பிரதான நாடகங்களான ‘அதிபதி’, ‘கோசா” நாடகங்களும் பலமுறை அரங்கேறியுள்ளன. இவை தவிர ‘பந்தம்’, ‘பறவைகள்’, ‘உதயசூரியன்’, ‘கேள்விக்குறி’,’இப்படிக்கு’,’உத்தமன்’,’நடிப்போ நடிப்பு’, ‘ஏமாறச் சொன்னது நானோ’, நரகாசுரன் ஆகிய நாடகங்கள் பெரும் வரவேற்புடன் படைக்கப்பட்டன. நடிப்பில் விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு ஞாயிறுதோறும் இலவசமாக பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு தேசிய நூலகத்தின் ஆதரவில் ஆண்டு தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச பயிற்சியும் வழங்கப்படுகிறது.
இது தவிர வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 40 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் நாடகத்திற்காக அதிபதியில் கூடுவது கண்கொள்ளாக் காட்சி என்று சொன்னால் மிகையாகாது. அதிபதி தன் பாதையில் மேலும் பல உயரங்களை எட்டு நமது சமூகத்தின் ஆதரவும், இணைந்து செயலாற்றிட நடிக நடிகர்களும் தேவை.

சிங்கப்பூர் நாடக உலகில் தங்களது கற்பனைச் சிறகை விரித்து நாடக உலகம் எனும் ஆலமரத்தை தாங்கும் விழுதுகளாக சிந்தனைச் சிற்பிகளை உருவாக்கித் தருகிறது அதிபதி. இன்னும் பல புதிய யுத்திகளைக் கொண்டு நவீன யுகத்திற்கேற்ப இளம் சமுதாயத்தில் நாடகக் கலையுடன் கலாச்சாரத்தைக் கொண்டு சேர்க்க விரும்பும் திரு ரா.புகழேந்தி அவர்கள் தனது 20 வயதிலேயே எழுத ஆரம்பித்து வெற்றிகரமான 90 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தனது பதிப்பகத்தின் மூலம் 160 க்கும் மேல் எழுத்தாளர்களை அறிமுகப் படுத்தி விற்பனையில் சாதனை படைத்திருக்கிறார். சிங்கை ராணுவத்தில் கேப்டனாக பதவியில் இருந்தவர் தற்சமயம் தன்முனைப்பு பேச்சாளராகவும், பெற்றோர்-மாணவர் ஆலோசகராகவும் தனது எழுத்துப் பணியினைத் தொடர்கிறார். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி மூங்கில் போல் முடிவில்லாது வாழ்க அவர்தம் பணி என அதிபதி குழுவினரை வாழ்த்தி பிப்ரவரி 25 ம் அன்று சிங்கை ஈனூஸ் சமூக மன்றத்தில் நடைபெறும் விக்கிரமாதித்தன் நாடகம் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

சந்தாஆசிரியர் குழுவாட்ஸ் ஆப் வாசகர்கள்