பிறழ் சித்திரம்

0
684

அறக்கப் பறக்க ஓடி, எட்டு மணி பேருந்து பிடித்து, தம்பெனிஸ்
ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு இரயிலேறி கதவோரம்
காலியாக இருந்த இருக்கையில் வேறு யாரும் அமரும் முன்
வேகமாகச் சென்று அமரும்போது காலை மணி 8.15.

முக்கால் மணி நேர இரயில் பயணத்தில் முதல் நாள் விட்ட
தூக்கத்தைப் பிடிக்கலாம், முகநூல் பார்க்கலாம், நண்பர்களுடன்
வாட்ஸ் அப்பில் அரட்டை அடிக்கலாம் என்று எது
வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் நானோ, தி.
ஜானகிராமனின் ‘பாயசம்’ மற்றும் ‘கங்கா ஸ்நானம்’ என்ற
சிறுகதைகளை வாசிக்கும் ஆர்வத்தில் இருந்தேன். திரு
ஜெயமோகனின் காவிய முகாமுக்குத் சென்றுவந்த நண்பர்கள் சிலர்
இந்தக் கதைகளைப் பற்றி விமர்சித்துக்கொண்டிருந்தனர். அவர்களின்
விமர்சனப் பார்வையின் உந்துதலால் நானும் பாயாசத்தைப் பருகும்
ஆவலில் எனது மின்னஞ்சல் உள்டப்பியில் காத்திருந்த கதையை
ருசிக்க ஆரம்பித்தேன். விரிவான விமர்சனங்களை உள்வாங்கியபின்
படிக்கும் கதையாதலால் பாயாசத்தின் சுவை அறிவதில்
சிரமமிருக்கவில்லை, நான் இறங்கும் நிலையம் வரும்வரை
பாயாசத்தில் மிதந்துகொண்டிருந்தேன்.

நிறுத்தம் வந்ததும் இலக்கிய ஜன்னல்களை மூடிவிட்டு அடுத்த
கதாபாத்திரத்திற்குத் தயாரானேன். வேறென்ன? வேலை வேலை
வேலைதான்! இயந்திரமாக மாறி மற்றவர்களோடு நானும்
சுழலவேண்டும். பின் மீண்டும் வீடு திரும்பும் வழியில் அடுத்த
முக்கால் மணி நேரம் இலக்கியச் சாளரங்களைத் திறந்து

இலக்கியமே சுவாசமாக வாசித்துக்கொண்டிருப்பேன், தம்பெனிஸ்
நிலையம் வரும்வரை.

இதை ஏன் உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற வினா
எழுகிறதா? காரணம் இருக்கிறது. சமீபத்தில் சிங்கப்பூர் வந்திருந்த
எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்கள் சிங்கப்பூர்
எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் எழுத்துகளைப் பற்றியும்
அவரது வலைதளத்தில் விமர்சனம் என்ற பெயரில் தன்
கொடுக்கால் கொட்டிவிட்டார் என்பது இலக்கிய வட்டத்தில் பலரும்
அறிந்ததுதான். அவர் குறிப்பிட்ட பல படைப்புகள் அரசாங்க
அங்கீகாரமும் பல்கலைக் கழக ஆய்வுகளுக்கும் தேர்வான சிங்கப்பூர்
படைப்புகள் ஆகும்.

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழக தலைவர் திரு நா.ஆண்டியப்பன்
அவர்கள் சென்ற கதைக்களத்தில் தற்பொழுது எழுந்துள்ள இந்த
இலக்கிய சர்ச்சையைக் குறிப்பிட்டு ஒரு எழுத்தாளர்
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்றும் அவரின் எழுத்துக்களை
மட்டுமே விமர்சிக்க வேண்டுமே ஒழிய, எழுத்தாளர்களைப் பற்றி
அல்ல என்று கண்டித்தார். சிங்கப்பூர் படைப்புகளைப் பற்றி
விமர்சிப்பதற்கு முதலில் விமர்சகர் சிங்கப்பூர் எழுத்தாளர்களைப்
பற்றி அறிந்திருக்க வேண்டும், இங்கே உள்ள சூழலைப் பற்றி
தெரிந்திருக்கவேண்டும், அப்பொழுதுதான் நேர்மையான மற்றும்
சரியான விமர்சனத்தை முன்வைக்க இயலும் என்று தெளிவாக
எடுத்துரைத்தார். மேலும் விமர்சனங்கள் ஆக்கரமாக இருக்க
வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நூல்களைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு எழுத்தாளரின்
சிந்தனைகளையும் ஆற்றலையும் செதுக்குவதற்கு மிக முக்கியமான
ஆயுதம். குறைநிறைகளைச் சுட்டிக் காட்டுவதற்கு எல்லா மூத்த
எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் உரிமை இருக்கிறது.
உன்னதமான விமர்சனத்தின் நோக்கம் எழுத்தாளரை ஆக்ககரமான
அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு. ஒரு நாட்டின் இலக்கிய
வளர்ச்சிக்கு உரமாக இருக்கும் விமர்சனங்கள் கட்டாயமாக
மதிக்கப்பட வேண்டும், வரவேற்கப்படவேண்டும். ஆனால்,
விமர்சனம் என்ற பார்வையில் தனி மனித சாடல் தேவையா ?

திரு ஜெயமோகனின் விமர்சனக் கட்டுரை ஒன்றில் சிங்கப்பூரில்
பிறந்து வளர்ந்த எழுத்தாளர்களுக்கு மொழிசார்ந்த ஒரு முக்கியமான
சிக்கல் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். சிங்கப்பூரர்கள் தமிழ்
மொழியைப் பள்ளியில் ஓரளவு கற்றுக் கொள்கிறார்கள், வீட்டில்
மட்டும் தமிழ் பேசுகிறார்கள் ஆனால் வெளியில் அவர்கள் புழங்கும்
சூழலில் தமிழ் இல்லை என்ற பார்வையை முன்வைத்திருந்தார்.
மற்றும் சிங்கப்பூரர்களிடம் இருக்கும் ஆங்கிலமும் சிங்கப்பூருக்கே
உரிய ஒருவகையான சமரச (சிங்கிலிஷ்) ஆங்கிலம். அதாவது சீனர்,
மலாயர் அனைவருக்கும் எளிய முறையில் புரியும் ஓர் நடைமுறை
ஆங்கிலம். உடைந்தச் சொற்றொடர்களும் பொத்தாம்பொதுவான
சொற்களும் கொண்ட ஒரு மொழியாகவே ஆங்கிலம்
அவர்களிடமிருக்கிறது. ஆகவே தமிழிலும் ஆங்கிலத்திலும்
சிந்தனைகளைச் சொல்ல அவர்களால் முடிவதில்லை. உண்மையில்
ஒருவர் ஆங்கிலத்தில் சரளமாகச் சிந்தித்து கொஞ்சம் கஷ்டப்பட்டு
தமிழில் எழுதினால்கூட அது நல்ல மொழியாகவே அமையும்.
ஏனென்றால் மொழி என்பது சிந்தனைதானே ஒழிய சொற்கள் அல்ல
என்றும் அவர் குறிப்பிட்டு சிங்கப்பூர்த் தமிழர்களின் மொழிப்
புலமையைச் சிகப்புப் பேனாவில் கோடிட்டு காட்டியிருந்தார்.

சிங்கப்பூரில் தமிழ் இலக்கிய வளர்ச்சியென்பது தமிழர்கள் அதிகமாக
வாழும் தமிழ் நாட்டைவிட மெதுவாகத்தான் நகர்கிறது. அதில் எந்த
விதமான மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லை. இதற்குக் காரணம்
என்ன? நான்கு மொழி இனத்தவர்களும் வாழும் சிங்கப்பூரில்
தமிழை நாம் இரண்டாம் மொழியாகத்தான் கற்கிறோம். மாணவப்
பருவம் கடந்தபிறகு தமிழ் கற்கும் சூழல் அவரவர் விருப்பத்திற்கு
ஏற்றாற்போல் மாறும். சிங்கப்பூரர்கள் மொழிப் புலமையைக்
கணித்திட்ட திரு ஜெயமோகன் சிங்கப்பூரர்களின் இயந்திர
வாழக்கைச் சூழலைப் பற்றி ஏன் புரிந்துகொள்ளவில்லை என்ற
கேள்வியே என்னுள் எழுகிறது.

மூளையை மழுங்கடிக்கும் பொருளாதார நெருக்கடியினால் இங்கே
பல குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் வேலைக்குச் செல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறோம். சில நேரங்களில்
குடும்பத் தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக்கூட
நேரமில்லாமல் அறக்கப் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் நிலை.
மேலும் இங்கே இலக்கியம் என்பது முழு நேரப் பணியும் அல்ல,
அதற்கான வாய்ப்புகளும் சிங்கப்பூர்த் தமிழர்களுக்கு
வழங்கப்படவில்லை. என்னைப்போல வேலைக்குப் போகும்
பலருக்கும் வாசிப்பதற்கு என சுமுகமான சூழல் அமைவதில்லை.
பேருந்து மற்றும் இரயில் பயணங்களிலும் அல்லது ஓய்வு
நேரங்களிலும்தான் வாசிப்பதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள்
அமைத்துக் கொள்கிறோம். இதனால்தான் இங்கே இலக்கிய
வளர்ச்சிக்காக இயங்கிக்கொண்டிருக்கும் பல மன்றங்களும்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை வாசியுங்கள் என்று எங்களுக்கு
வலியுறுத்துகிறார்கள்.

கடுமையான உழைப்பு பின் சிறிது இலக்கியம் என்று எங்களில்
சிலரின் வாழ்க்கை சுழலுவதால்தான் சிங்கப்பூரில் இலக்கிய
வளர்ச்சி தமிழ்நாட்டைவிட மெதுவாக நகர்கிறது. மேலும் இங்கே
தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு, அதிலும் இலக்கிய
ஆர்வம் கொண்டவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு என்னும்
அளவில்தான் உள்ளது. நல்லவேளையாக தமிழகத்திலிருந்து இங்கே
குடிபெயர்ந்த தமிழர்களும் வேலை செய்யவந்த தமிழ்நாட்டு
ஊழியர்களும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கிறார்கள்.
அவர்களின் பங்களிப்பை நான் வரவேற்கிறேன் பெரிதும்
மதிக்கிறேன். இப்படி குடும்பத்தையும் வாழ்வியல் தேவைகளையும்
பூர்த்திசெய்து, கிடைக்கின்ற அற்ப ஓய்வு நேரத்தையும்
இலக்கியத்திற்காக செலவிடும் சிங்கப்பூர் எழுத்தாளர்களைப்பற்றி
திரு ஜெயமோகன் பொறுப்பற்ற பார்வையில் அவர்களின்
படைப்புகளை அணுகிய முறையும் எழுத்தாளர்களைப்பற்றிய
ஆரோக்கியக் குறைவான பார்வையும் தேவையில்லாத மனக்
கசப்புகளுக்கு வழி வகுத்திருக்கிறது.

எனது பெண் தோழி ஒருவர், அவரின் விமர்சனப் பார்வையைக்
கண்டு தனது கதைகளை நூலாக்குவதற்கு அச்சமாக இருக்கிறது
என்றார். இன்னொரு தோழி ‘கதையைக் கற்பனை பண்ணக்கூட
பயமாக இருக்கிறது, நான் எதையாவது எழுதப்போக அவர்
ஏற்கனவே இவையெல்லாம் சினிமாவில் வந்துவிட்டனவே என்று
கனவில் வந்து மிரட்டினாலும் மிரட்டுவார்’ என்றார்.

எதிர்காலத்தில் இலக்கியத்திற்குள் நுழையும் இளையர்களுக்கு “எது
இலக்கியம், எது அல்ல” என்ற புரிதல் வேண்டும், உண்மைதான்.
ஆரோக்கியமான பார்வையோடு முன்வைக்கும் விமர்சனங்கள்
ஒருவரை செதுக்குவதாக இருத்தல் வேண்டும். மாறாக அவர்களை
அமிலக்குப்பிக்குள் அடைத்து அழிப்பதாக இருந்தால் இளையர்கள்
அருகில்கூட வரமாட்டார்கள். பொசுங்குவது படைப்பாளிகள்
மட்டுமல்ல நம் நாட்டின் எதிர்கால இலக்கிய வளர்ச்சியும்தான்.
கட்டமைக்கப்பட்ட கருத்துக்களை வரவேற்கிறோம். எங்கள்
கட்டடங்களைத் தகர்த்திடும் வன்மம் வேண்டாம் என்கிறோம்.

அவர் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார், இங்கே அவரின்
எதிர்பார்ப்புகளை மீறிய இலக்கிய வளர்ச்சி இருந்திருந்தால், அவரின்
சேவை நமக்குத் தேவை இல்லாமல் இருந்திருக்கும். அவரின் வரவு
சிங்கப்பூரின் இலக்கிய இடைவெளியை இட்டு நிரப்புவதற்கு, மாறாக
தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலைமையை
மோசமாக்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக சுமாரான கதைகள்
என்று ஒதுக்கப்பட்டவைகள் திரு ஜெயமோகனுக்குத் தரமான
கதைகளாகவும் விருது பெற்ற படைப்புகள் என்று கொண்டாடும்
கதைகள் அவரின் பார்வைக்குச் சுமாரான படைப்புகளைக்கூட
நெருங்கவில்லை என்ற கூற்று அவரின் தனிப்பட்ட பார்வையாகவே
நான் பார்க்கிறேன். ஆனாலும், சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கமலாதேவி
அரவிந்தன், சூர்யரத்னா, நூர்ஜஹான் சுலைமான் போன்றவர்களின்
நூல் விமர்சனம் நூலைப் பற்றிமட்டுமல்லாமல்
நூலாசிரியர்களையும் விமர்சனத்துக்குள்ளாக்கியது திரு
ஜெயமோகனின் விமர்சன நோக்கை சந்தேகிக்க வைக்கிறது.

விமர்சனம் என்பது ஒவ்வொரு வாசகர்களின் அனுபவங்களையும்
வாழ்க்கைச் சூழலையும் பொறுத்தது. ஒருவருக்குப் பிடிக்கவில்லை
என்பதால் அந்தப் படைப்பு இன்னொருவருக்குப் பிடிக்காமல்
போகுமா என்ன ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here