வெள்ளிச் சலங்கைகள் – இசைக் கலைஞர் குணா நேர்காணல்

0
28073

உங்களின் ஆரம்பக்காலம் பற்றி

தமிழகம் பட்டுக்கோட்டை அருகில் நவக்கொல்லைக்காடு கிராமத்திலிருந்து எனது 9 வயதில், 70 களில் அன்றைய காலகட்டத்தில் போக்குவரத்தாக இருந்த ரஜுலா கப்பல் மூலம் நாகப்பட்டினத்திலிருந்து எட்டு நாட்கள் கடுமையான பயணம் செய்து சிங்கப்பூர் வந்தடைந்தேன்.

எனது தந்தை அப்போது சிங்கப்பூரில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அப்போதைய கப்பல் பயணம் என்பது பெரும் சிரமங்களை உள்ளடக்கியதாகவே இருந்தது.
எனது தந்தை தமிழவேள் கோ சாரங்கபாணி அவர்கள் மேல் அதிக மரியாதை கொண்டவர். சிங்கப்பூர் குடிமகனாக அவரது ஊக்கமூட்டும் முயற்சிகள் தான் காரணமாக அமைந்தது.
என் அப்பா,என்னை சிறப்பாக எந்த வித கஷ்டமும் நெருங்காத நிலையில் பார்த்துக் கொண்டார்.
உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளியில் ஆரம்பித்த எனது பள்ளி வாழ்க்கை, நல் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் வழி இன்று வரை சிறப்புடன் வாழ வாய்ப்பு வழங்கி உள்ளது.

கலைத்துறையில் உங்களின் பயணம் ?

கலைத்துறையில் எனது பயணம் , சிங்கப்பூர் தொலைக்காட்சியில் 1984 இடம்பெற்ற உதயதாரகை போட்டியில் நான் பாடிய “வெள்ளிச் சலங்கைகள்” பாடலுக்கு இரண்டாம் பரிசு கிடைத்தாலும் இன்று வரை அந்தப் பாடல் எங்கு சென்றாலும் என்னை அங்கீகரிக்கும் வகையில் அமைந்து விட்டது. ஒரு பத்து வருடங்கள் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளில் பாடுவது, கச்சேரிகளில் பாடுவது என அந்தத் துறையில் இருந்து வந்தேன். தொலைக்காட்சி நாடகங்கள், சொந்தப் பாடல்கள் இசையமைக்கும் வாய்ப்புகளை வழங்கியது. 80களில், புகழீட்டும் அளவுக்கு பொருளீட்டும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை.
1995 ல் எனக்கு அரசிடமிருந்த கிடைக்கப்பெற்ற திட்டத்தின் மூலம் தமிழகத்திற்குச் சென்று இசை மற்றும் பாடல் துறைகளில் இசைஉருவாக்கம் பற்றி கற்றுணர்ந்து வர வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பின் மூலம் தமிழகத்திற்குச் சென்று பாடகர்கள் மனோ, மலேசியா வாசுதேவன்,சுவர்ணலதா போன்ற முன்னணிக் கலைஞர்களுடன் இணைந்த தனிப்பாடல்கள் உருவாக்கி வெளியிட்டேன்.
2005 ல் கவிஞர் அமலதாசன் அவர்களின் “சிங்கப்பூர் என்று சொல்லும் போதிலே” எனும் கவிதை, மற்ற மொழிப்பாடல்களுடன் போட்டி போட்டு முதல் பரிசைப் பெற்றது. எனது இசைப் படைப்புகள் தேசிய நூலகத்தின் www.music.sg பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இசைத்துறையில் நான் தற்போது நாதஸ்வரம், தவில், பறை ஆகிய கருவிகளின் ஓசையை பதிவு செய்யும் முயற்சியை தஞ்சாவூர் நாட்டுப்புற கலைக்குழு மூலம் ஒரு கருவூலம் உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
தேசிய கலைகள் மன்றம், 2014ல் சென்னையில் ஏஆர் ரகுமான் இசைக்கூடம்,2015ல் லண்டன் ஹில்டாப் இசையகத்தில் பயிற்சி பெறுவதற்கு வழங்கிய மானியம் என்னை இசைக்கலைஞனாக உயர்த்தி கொள்வதற்கு தற்போது வாய்ப்பு வழங்கி இருக்கிறது.

தமிழ் மொழி விழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் தொழில்நுடபம் சார்ந்த நிகழ்ச்சிகளை உங்களிடம் இருந்து காண்கிறோம். இந்த ஆண்டு மெய்நிகர் தொழில்நுட்பம் பற்றி தமிழ்மொழி விழாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தினீர்கள். அதனைப் பற்றி.

கடந்த 4 ஆண்டுகளாக, புத்தாக்கத் தமிழை பயன்படுத்தும் பயிலரங்குகளை தமிழ் மொழி மாத நிகழ்ச்சியில் படைத்து வருகிறேன்.இவ்வருடம் நடந்த பயிற்சியில் மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என 80 பேருக்கு பயிற்சி வழங்கினேன். இப்பயிற்சியின் மூலம் மெய்நிகர் தொழில் நுட்பத்தில் 6 திட்டங்கள் உருவாக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு திட்டங்களை ஜெர்மனியில் ஆகஸ்டு மாதம் நடக்கும் Gamescom 2017 தொழில்நுட்ப மாநாட்டில் காட்சிப் படுத்த இருக்கிறோம். இதில் திருவள்ளுவரையும் சிலப்பதிகாரத்தையும் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உட்புகுத்தி இருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது பார்வையில், சிங்கப்பூரில் அடுத்த 10 ஆண்டுகளில் ஏற்படும் மாற்றங்கள் அரசின் 2020 திட்டம் வழி மிகவும் முன்னேற்றம் மிக்கதாக இருக்கும்.
கணிப்பொறியில் தமிழின் பயன்பாடு என்பது அதன் எழுத்துரு, உள்ளீடுகள் வளர்ச்சி கொண்டிருந்த காலத்தில் அதனை தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணி அது தொடர்பான பயிற்சிகளையும், பாடங்களையும் வாழ்நாள் கற்றல் பயிற்சி திட்டம் மூலம் முடித்து அதில் பட்டயங்களும் பெற்றிருக்கிறேன். நான் கற்ற பாடங்களில் இருந்து தமிழுக்கு பயன்படுத்த முடிந்த விஷயங்களை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் செயல் திறன் பேசிகள், கண் முன்னால் பறப்பது போன்ற ஒரு கற்பனை மாயையை உருவாக்கும் மெய்நிகர் தொழில்நுட்பம். ஒருவரது மனதில் உள்ள கற்பனைத் திறனை கண்முன்னே கொண்டு வருவதற்கான அனைத்து நுட்பங்களும் உருவாக்க முடியும். இதற்கான யூனிட்டி போன்ற மென்பொருள்களை பயன்படுத்துகிறோம், அதனுடன் மற்ற தொழில்நுட்பங்களை இணைத்து மெய்நிகர் நுட்பத்தின் மூலம் தேவைகளை நிறைவேற்றுகிறோம். எதிர்காலத்திற்கு தமிழை கொண்டு செல்ல எனது முயற்சி அமைந்துள்ளது.

நீங்கள் உருவாக்கிய வரும் தமிழ்ச்செயலி பற்றி ?

தமிழில் மிகை எதார்த்த மெய்நிகர் தொழில்நுட்பம் வழி (Augmented with Mixed Reality) பாடல்களை ஒலிப்பதிவு செய்து அதில் குழந்தை பட்டம் விடுதல், நடப்பது, உரையாடல் ஆகியவற்றைக் கொண்ட புத்தாக்க செயல்பாடுகள் தமிழுக்கென உருவாக்கப்படுள்ளது.தமிழை பேச, எழுத , அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வகையில் அவை இருக்கும்.
நம்மவர்களின் ஆதரவு அதிக அளவில் கிடைக்கும் போது, இன்னும் அதிகமான செயலிகள் உருவாக்க முடியும்.

நீங்கள் வழங்கும் பயிற்சிகள் என்ன ? நமது சமூகத்திற்கு அது எவ்வாறு பயனளிக்கும் ?

வாழ்நாள் கற்றல் கற்பித்தல் அமைப்பின் மூலம் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் $500 வெள்ளிப் பணம் பயிற்சிகளுக்காக வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் மூலம் திறனை வளர்த்துக் கொள்ள விரும்பும் ஒருவர் ,அங்கீகரிக்கப்பட்ட பயிற்சிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து தனது திறனை வளர்த்துக் கொள்ள வழிவகை செய்யலாம்.
இதில் நான் ACTA மற்றும் DACE பயிற்சியை நான் முடித்து பயிற்றுவிப்பாளராகவும் நிறுவனமாகவும் ஏற்படுத்தி பயிற்சியை வழங்கி வருகிறேன். இந்த திட்டத்தின் மூலம் தமிழ் பயன்பாட்டு முறைக்காக பாடத்திட்டங்களை உருவாக்கி வழங்கி வருகிறேன்.
இதை செயல்படுத்த தேவையான இட வசதி, பொருள்வசதி ஆகிய அனைத்தும் எனக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைப்பதால் சிறப்பாகச் செய்ய முடிகிறது.

உங்களுடைய பிக்ஸிபிட் நிறுவனம் என்ன மாதிரியான சேவைகளை அளிக்கிறது. ?

அரசாங்கத்தின் மூலம் வரும் திட்டங்களை சரியாக தெரிந்து கொண்டு அதில் எது பயன்பாடு தரும் என ஆராய்ந்து எம்மாதிரியான சலுகைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிக அவசியம். தொழில்முறை நடத்துவதற்கான மேலாண்மை பயிற்சிகளை மேற்கொண்டு 2015 ல் எனது பிக்ஸிபிட் நிறுவனத்தை ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் முதலீடுகள் பெறுவது பெரும் சவாலாக இருந்த போது, அரசில் இருந்து கிடைத்த சலுகைகளை பயன்படுத்தி எனக்கான தேவைகளை ஈடுகட்டினேன். எனது நிறுவனத்தின் மூலம் வாழ்நாள் பயிற்சிகளை அளிப்பது, மென்பொருள், புத்தாக்க இணையத்தளம் ,செயலிகளை உருவாக்குவது, வெளிநாடுகளில் முதலீடுகளை ஈர்ப்பது ,தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அளிப்பது என சேவைகளை விரிவாக்கம் செய்து வருகிறேன்.

நமது நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாறுபட்ட சிந்தனைகள் இருக்கும் போது நமக்கு அரசின் சலுகைகள் வெகுவாக பயன்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
2015ல் சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக சபை நடத்திய “ரெட்பில்” எனும் திட்டத்தில் தொழில் உத்திகளையும், செயல்திட்டங்களையும் கற்றுக் கொண்டேன்.
சிங்கப்பூரில் நடக்கும் தமிழ் தொடர்பான இலக்கிய நிகழ்வுகளை மின்னாக்கம் செய்து உலகில் மற்ற நாடுகளில் உள்ளவர்களும் காணும் வகையில் ஓர் இணைய பதிப்பகத்தொழில்நுட்பத்தைப் உருவாக்கி, தமிழ் இலக்கிய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மற்ற நாடுகளில் உள்ளவர்களுடன் ஒருங்கிணைந்து, மின்புத்தகம் தயாரிக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன்.

பாடல், இசை, தொழில்நுட்பம், கற்பித்தல் எனத் தொடரும் பணிகளில் நீங்கள் சாதித்தது என்ன ?

சிங்கப்பூரில் தமிழில் தரமாகப் பாடும் ஆர்வமுடையோருக்கு பயிற்சி வகுப்புகள் நேரடியாகவும் இணையம் வழியும் நடத்தி வருகிறேன்.சுமார் 50 பேர் பயனடைந்துள்ளார்கள்.
மொரீசியஸ், அமெரிக்கா ,ஐரோப்பிய வெளிநாட்டுத் தமிழர்களின் ஆதரவு பெருவாரியாக கிடைத்து வருவதில் மகிழ்ச்சி.
தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழுக்கான பணிகளையும் ஈடுபடுத்தி நமது சமூகத்திற்கென தேவையான ஒன்றை எனது காலத்தையும் தாண்டி அனைவரும் பயன்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் எனது ஆசை. தொழில்நுட்பத்தில் நாள்தோறும் மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.ஆனால் அவற்றை எவ்வாறு தமிழுக்கு பயன்படுத்துகிறோம் என்பதை தமிழ் சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எனது பணியினைத் தொடர்கிறேன்.
தமிழில் வாழ்நாள் கற்றல் கற்பித்தல் மூலம் 50000 பேரைச் சென்றடைவது எனது இலக்குகளில் ஒன்று. எனது முயற்சியில் பங்கெடுக்க விரும்பும் அமைப்புகளையும் பார்வையாளர்களையும் வரவேற்கிறேன். powerguna@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். தமிழை புத்தாக்க தொழில்நுட்பம் வழி அடுத்த யுகத்திற்கு எடுத்துச் செல்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here