தமிழர் அறிவு மரபில் இருமொழியம்

த. சுந்தரராஜ்

மனிதர்களின் வாழ்வியலை பல்வேறு சூழல்கள் தீர்மானிக்கின்றன. அவற்றுள் மொழிச்சூழலுக்கு முதன்மையான இடம் உண்டு. மொழிகளின் தோட்டமாகிய இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படும் சூழல் பன்னெடுங்காலமாக இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு மொழி அரசர்களின் ஆதரவைப் பெற்று செல்வாக்குடைய மொழியாகத் திகழ்ந்திருக்கிறது. ஒரு மொழி தோன்றிய இடத்தைவிட பரவிய இடத்தில் மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்த வரலாறும் உண்டு. அந்த வகையில் தென்மொழியான தமிழ் மொழி வழங்கும் நிலப்பரப்பில் பல நூற்றாண்டுகளாக வடமொழிகள் செல்வாக்குப்பெற்றிருந்தன. தமிழர்களின் முதல் இருமொழிச்சூழல் வடமொழிகளின் வரவால் ஏற்பட்டது.

ஒரு மொழி தோன்றிய இடத்தைவிட பரவிய இடத்தில் மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்த வரலாறும் உண்டு.

வடமொழி என்ற சொல் (பெயர்) தமிழ் மரபின் பல்வேறு காலகட்டங்களில் இருவேறு பொருள்களில் வழங்கப்பட்டது. சங்கம் மருவியகாலம் வரை வடமொழி என்கிற சொல், இந்தியாவின் வடபகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்த பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளையும் குறிக்கும் பொதுச்சொல்லாக (பெயராக) தமிழகத்தில் வழங்கப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் குறிப்பாக, அற இலக்கியம், காப்பிய இலக்கியம் ஆகியவற்றோடு மரபிலக்கணத்திலும் சமணர்களும், பௌத்தர்களும் அதிகம் பங்களித்திருக்கிறார்கள். அவர்களின் படைப்புகளிலும், இன்றுவரையான நம்முடைய தமிழ்ப் பேச்சுவழக்கிலும் நிறைய பாலி, பிராகிருதச் சொற்கள் விரவியிருக்கின்றன. பக்தி இலக்கிய காலகட்டத்திலிருந்து வடமொழி என்கிற பெயர் சமஸ்கிருதத்திற்கு மட்டும் உரிய சிறப்புப்பெயராகப் பெருவழக்கில் மாறியது. அதற்கு சமண, பௌத்த சமயங்கள் செல்வாக்கிழந்தது ஒரு முதன்மையான சமூகக் காரணியாக அமைந்தது. இன்றைக்கு நாம் தூய தமிழ்ச்சொற்களை அடையாளம் காண முயலும்போது, இது தமிழ்ச்சொல், இது வடசொல் என வகைப்படுத்துகிறோம். இங்கே வடசொல் என்னும் வகைப்பாட்டில் சமஸ்கிருதச்சொற்கள் மட்டுமல்ல, பாலி, பிராகிருதச் சொற்களும் அடங்கும்.

தொடக்க காலத் தமிழர்களின் இருமொழி என்பது தமிழ்-பாலி, தமிழ்-பிராகிருதம், தமிழ்-சமஸ்கிருதம் என்றிருந்தது. பிற்காலத்தில் தமிழ்-அறபு, தமிழ்-உருது, தமிழ்-தெலுங்கு, தமிழ்-ஆங்கிலம் என தமிழகத்தின் சமூக, அரசியல் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் இருமொழி, மும்மொழி, பன்மொழி என அவர்களின் வாழ்விடத்திற்கேற்ப பல்வேறு மொழிச்சூழலுக்கு உள்ளாகிறார்கள். இருமொழிச்சூழலை கட்டமைப்பதில் சமயம், வாழிடம், சமூக அமைப்பு, அரசியல் அதிகாரம் முதலிய பல கூறுகள் இயங்குகின்றன. இன்றைக்குக் கிடைக்கும் ஆதாரங்கள்வழிப் பார்க்கையில், தமிழர்களிடம் மிகச்செல்வாக்குப் பெற்ற இருமொழி வடிவங்கள் இரண்டுதான். ஒன்று தமிழ்-சமஸ்கிருதம், மற்றொன்று தமிழ்-ஆங்கிலம். இவ்விரண்டும் செல்வாக்குப் பெறுவதற்கு அடிப்படையாக விளங்கியது அரசியல் அதிகாரம். இடைக்காலத்தில் தமிழ்-சமஸ்கிருதம் என்னும் இருமொழியம் தமிழ் அறிவுத்தளத்தில் ஏற்படுத்திய விளைவுகளில் பலவற்றை, பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை, தமிழ்-ஆங்கிலம் என்னும் இருமொழியம் மீண்டும் நிகழ்த்திக் கொண்டிருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதற்கு இடமளிக்கும் வகையில், நான் இங்கே தமிழ்-சமஸ்கிருதம் என்னும் இருமொழியம் தமிழ் அறிவுத்தளத்தில் ஏற்படுத்திய விளைவுகளைப் பற்றி மட்டும் சுருக்கமாக விவரிக்கிறேன்.

தொடக்க காலத் தமிழர்களின் இருமொழி என்பது தமிழ்-பாலி, தமிழ்-பிராகிருதம், தமிழ்-சமஸ்கிருதம் என்றிருந்தது. பிற்காலத்தில் தமிழ்-அறபு, தமிழ்-உருது, தமிழ்-தெலுங்கு, தமிழ்-ஆங்கிலம் என தமிழகத்தின் சமூக, அரசியல் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டே வந்திருக்கிறது.

தமிழும் சமஸ்கிருதமும்

இந்தியா என்னும் ஒரே நிலப்பரப்பில் இருவேறு பகுதிகளில் வழங்கிய இருவேறு மொழிகள் என்ற நிலையில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் நீண்ட உறவு உண்டு. ஒரே நிலப்பரப்பின் வழி உருவாகும் இந்த இயல்பான உறவை தமிழ்-சமஸ்கிருதத்தில் மட்டுமல்ல, இவற்றைப்போன்று ஒரே நிலப்பரப்பில் வழங்கிய கிரேக்கம்-லத்தின், அறபு-ஹீப்ரு போன்ற செம்மொழிகளிலும் காணலாம். ஒரு நிலத்தின் சமூக, அரசியல் சூழல்களால் தோன்றும் இருமொழி உறவு, அந்நிலத்தின் அறிவுத்தளத்திலும், சமூகப்பண்பாட்டுத் தளத்திலும் எளிதாகப் பரவும்.

இந்தியாவின் வடபகுதியில் வழங்கிய பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளும் சமண, பௌத்த, வைதீக சமயங்கள் வழியே தமிழகத்திற்கு அறிமுகமாகின. அந்தந்த சமயங்களைப் பரப்ப வந்த சமயச் சான்றோர்கள் தமிழகம் வந்து தமிழ் மொழியைக் கற்றுத் தமிழில் தன் சமயக் கருத்துகளைப் பரப்பினர். பின்னர் அச்சமயங்களைப் பின்பற்றத்தொடங்கிய தமிழர்களுக்குத் தமிழோடு, அந்த வடமொழிகளிலும் நல்ல பரிச்சயம் ஏற்பட்டது. இந்த நிலையில்தான் தமிழர்கள் இருமொழி, மும்மொழிச்சூழலுக்கு உள்ளாகிறார்கள். சங்காலத்திற்குப் பின், களப்பிரர் காலத்திலிருந்து (பொ.ஆ.250-575) தமிழகம் இந்தச்சூழலுக்கு உள்ளாகிறது. களப்பிரர் காலத்தில் தோன்றிய தமிழ் அற இலக்கியங்களையும், காப்பியங்களையும் சமணர்களும் பௌத்தர்களுமே படைக்கிறார்கள். வைதீகமும் சிறுபான்மையாக இருக்கிறது.

அக்காலகட்டத்தில் தமிழ்-பாலி, தமிழ்-பிராகிருதம், தமிழ்-சமஸ்கிருதம் என்ற மூன்று இருமொழிச்சூழல் பரவலாக இருந்தது. இந்த மூன்று இருமொழி வடிவங்களில் புழங்குபவர்கள் எண்ணிக்கையில் மிக்குறைவாகவே இருந்தனர். சங்ககாலத்தைச் சார்ந்த தமிழ்ப்பிராமிக் கல்வெட்டுகளில் ஆங்காங்கே பாலிச்சொற்கள் விரவிவருவதை கல்வெட்டியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டுகிறார். பாலி, பிராகிருதம், சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்கள் தமிழில் பரவின. களப்பிரர் காலத்திற்குப் பின் வைதீக சமயம் செல்வாக்குப்பெற்று பக்திநெறிக்காலம் உருவானபோது சமஸ்கிருதம் முதன்மை இடம்பெற்றது. தொடர்ந்து சமஸ்கிருத்திற்குக் கிடைத்த அரச ஆதரவு தமிழகத்தில் சமஸ்கிருதக் கல்விக்கு வித்திட்டது. பொ.ஆ.10ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தில் சமஸ்கிருதக்கல்வி அரசால் வழங்கப்பட்டு வந்ததற்கான சான்றுகள் கிடைக்கினறன. பிற்காலச்சோழர்களுடைய ஆட்சிக்காலத்தில்,சமஸ்கிருத மொழியைக் கற்பிப்பதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு கற்பிக்கப்பட்டது.

பொ.ஆ.999இல், இன்றைய செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆனியூர் மகாசபை, சமஸ்கிருத மொழி கற்பிக்க ஓர் ஆசிரியரை நியமிக்க முடிவுசெய்கிறது. அந்த ஆசிரியர் ரிக், யஜூர், சாமா, அதர்வண ஆகிய நான்கு வேதங்களோடு, சமஸ்கிருதத்தின் முதல் மரபிலக்கணமான அஷ்டாத்யாயி (பாணினி வியாக்ரனம்), சமஸ்கிருத அணிக்கோட்பாட்டு நூலான அலங்கார சாஸ்திரம், மீமாம்சத் தத்துவம் ஆகியவற்றில் புலமையுடையவராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது (கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, சோழர்கள், ப.824). பொ.ஆ.1213இல் திருவொற்றியூரில் சமஸ்கிருத இலக்கணப்பள்ளி சிறப்பாகச் செயல்பட்டதைப் பற்றியும், பொ.ஆ.1229இல் சமஸ்கிருத வேதாந்தம் படிப்பதற்காக மலையாளச்சீமையிலிருந்து (இன்றைய கேரளா) பலர் தஞ்சாவூருக்கு வந்தது பற்றியும், ஆசிரியர்களிலேயே சமஸ்கிருத வேதம் கற்பிக்கும் வேதாந்த ஆசிரியருக்கே அதிகபட்ச ஊதியம் (நாள் ஒன்றுக்கு 1 1/3 கலம் நெல்) வழங்கப்பட்டது பற்றியும், பல கல்வெட்டு ஆதாரங்கள் வழி வரலாற்றாய்வாளர் கே.ஏ.நீலகண்டசாஸ்திரி நிறுவுகிறார் (கே.ஏ. நீலகண்டசாஸ்திரி, சோழர்கள், ப.825-28). எனவே இடைக்காலத்தில் தமிழகத்தில் சமஸ்கிருதக்கல்வி செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. இது தமிழர்கள் சமஸ்கிருத்தில் புலமைபெற வழிவகுத்து, தமிழ்-சமஸ்கிருதம் என்னும் இருமொழியம் செல்வாக்குப்பெற உதவியது.

தமிழ்-சமஸ்கிருதம் என்னும் இருமொழியம் தமிழர் அறிவு மரபில் ஏற்படுத்திய தாக்கம்

இடைக்காலத்தில் தமிழகத்தில் செல்வாக்குப் பெற்ற சமஸ்கிருதம் தமிழின் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. சங்க காலத்தில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டு வந்த தமிழ் மொழி, களப்பிரர் காலத்தின் பிற்பகுதியில் வட்டெழுத்துக்கு மாறுகிறது. அப்போது பௌத்தர்களும், வைதீகர்களும் தமிழில் கலந்த பிராகிருதச்சொற்களையும், சமஸ்கிருதச்சொற்களையும் தமிழ் வரிவடிவத்தில் துல்லியமாக எழுத, ஹ, ஷ, ஜ முதலிய புதுவகையான கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தினர் (மயிலை சீனி.வேங்கடசாமி, களப்பிரர் ஆட்சியில் தமிழகம்,ப.70). தமிழில் கலந்த பிறமொழிச்சொற்களைத் துல்லியமான ஒலியமைப்பில் எழுதுவதற்கான கிரந்த எழுத்து உருவாக்கத்தில் இருமொழியம் முக்கியப்பங்காற்றியது. இருமொழியறிவால் தமிழில் உருவான இந்த முறையிலேயே, இன்றும் தமிழில் கலந்த ஆங்கிலம், சீனம், மலாய் முதலிய பிறமொழிச்சொற்களை எழுதும் வழக்கம் தமிழகத்திலும், புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் பெருவழக்காக இருக்கிறது.

சங்க காலத்தில் பிராமி எழுத்தில் எழுதப்பட்டு வந்த தமிழ் மொழி, களப்பிரர் காலத்தின் பிற்பகுதியில் வட்டெழுத்துக்கு மாறுகிறது

தமிழில், சைவ, வைணவ இலக்கியங்கள் செல்வாக்குப்பெற்றபோது, குறிப்பாக வைணவ இலக்கியங்களுக்கான உரையில், வைணவச் சான்றோர்கள் புதிதாக ஓர் உரைநடையைக் கையாண்டனர். அதுதான் மணிப்பிரவாளநடை. மணிப்பிரவாள நடை என்பது ஒரே வாக்கியத்தில் தமிழ்ச்சொற்களையும், சமஸ்கிருதச்சொற்களையும் கலந்து எழுதும் ஒரு மொழிநடையாகும். இந்த நடையை தமிழும் சமஸ்கிருதமும் தெரிந்தவர்கள் மட்டுமே வாசித்துப் பொருள்கொள்ள முடியும். தமிழ்ச்சொல்லும் சமஸ்கிருதச்சொல்லும் கலந்த நடையை ‘முத்தும் பவளமும் கலந்த நடை’ என சிறப்பிக்கும் தொகைச்சொல்லே ‘மணிப்பிரவாளம்’. இவ்வாறு அந்நடை சிறப்பிக்கப்பட்டாலும், அறிவியல் அடிப்படையில் ஒரு மொழியின் இயல்பிற்கு எதிரான மொழிநடையாகி, மிகக்குறுகிய காலத்தில், அதாவது இரு நூற்றாண்டுகளில் வழக்கொழிந்து போயிற்று.

மணிப்பிரவாள நடை என்பது ஒரே வாக்கியத்தில் தமிழ்ச்சொற்களையும், சமஸ்கிருதச்சொற்களையும் கலந்து எழுதும் ஒரு மொழிநடையாகும்.

தமிழ்-சமஸ்கிருத இருமொழியம் தழுவல், மொழிபெயர்ப்பு முதலிய அறிவுத்துறைகளை வளர்த்தெடுத்தது. கம்பராமாயணம் முதலிய புகழ்பெற்ற தழுவல் காப்பியங்கள் தோன்றின. தண்டியலங்காரம் முதலிய பல மொழிபெயர்ப்புகள் உருவாகின.

தமிழகத்தைச் சார்ந்த சில அறிஞர்கள் சமஸ்கிருத்தில் மிகச்சிறந்த பங்களிப்பு செய்வதற்கும் இந்த இருமொழியம் வழிவகுத்தது.இந்த வகையில் குறிப்பிடத்தக்கவர், சமஸ்கிருதத்தின் முதன்மையான இலக்கணமான அஷ்டாத்யாயிக்கு (பாணினி) மிகச்சிறந்த உரை வகுத்த பதஞ்சலி. காஞ்சிபுரத்தைச் சார்ந்த பதஞ்சலியின் ‘மஹாபாஷ்யம்’ தான் பாணினியின் இலக்கணத்தை மிகத்தெளிவாக விளக்கும் மிகச்சிறந்த உரை நூலாக இன்றளவும் திகழ்கிறது.

தமிழ்-சமஸ்கிருதம் என்னும் இருமொழிச்சூழலால் இருமொழிகளும் ஒன்றிற்கொன்று கடன்பட்ட நிலையும் உண்டு. தமிழில் கலந்த சமஸ்கிருதம், பாலி, பிராகிருதச்சொற்களைப் பற்றியும் ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன. சமஸ்கிருதத்தில் கலந்த தமிழ்ச்சொற்களை இந்தியவியல் அறிஞர்களான எமினோ, பர்ரோ ஆகியோரின் ஆய்வுகள் அடையாளப்படுத்துகின்றன. பிராகிருதத்தில் கலந்த தமிழ்ச்சொற்களை மு.கு.ஜெகநாதராஜா இனம் கண்டிருக்கிறார்.

தமிழ்-சமஸ்கிருதம் என்னும் இருமொழிச் சூழல் ஏற்படுத்திய தாக்கங்களில் மிக உச்சமாகக் கருதப்படுவது, தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்த தமிழாசிரியர்களை தமிழ் நூல்வழித் தமிழாசிரியர் – வடநூல்வழித் தமிழாசிரியர் என்ற இரு பிரிவுகளாகப் பிரித்ததாகும்.

வீரசோழியம், தண்டியலங்காரம் முதலிய இலக்கண நூல்கள் சமஸ்கிருத இலக்கண நூல்களை மாதிரியாகக் கொண்டு தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்ய, நன்னூல் தொல்காப்பியத்தை மாதிரியாகக் கொண்டு தமிழ் மரபுப்படி, தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தது. இங்கே, பாணினி, நிருக்தா முதலிய சமஸ்கிருத இலக்கணங்களையும், பிற சமஸ்கிருத இலக்கண மரபுகளையும் மாதிரியாகக் கொண்டு, தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்களுக்கும், தொல் காப்பியம் முதலிய முன்னைய தமிழ் மரபிலக்கணங்களை மாதிரியாகக் கொண்டு தமிழ்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இரு குழுவினரும் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லுநர்கள். ஆனால், இவ்விரு குழுவும் அடிப்படையில், தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்யும் முறையில் வேறுபட்டன.

சமஸ்கிருத மரபுப்படி தமிழ் இலக்கணம் செய்தவர்கள் தமிழில் இருந்த சமஸ்கிருதத் தாக்கத்தை முன்னிலைப்படுத்தி சமஸ்கிருதத்திற்கு உயர்வு கற்பித்தார்கள். தமிழ் மரபுப்படி தமிழ் இலக்கணம் செய்தவர்கள் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள அமைப்புமுறையிலான வேறுபாட்டை அடையாளப்படுத்தி, இருமொழிகளும் இருவேறு மரபை, இருவேறு பண்பாட்டைச் சார்ந்த தனித்துவமான மொழிகள் என்று நிறுவினர். 19-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கால்டுவெல் முதலிய மொழியியல் அறிஞர்களும், ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின், 20-ஆம் நூற்றாண்டில் அறிவியல் முறையில் ஆராய்ந்த ஒப்பியல் மொழியியல் ஆய்வாளர்களும், தொல்காப்பியரும், நன்னூலாரும் கண்டறிந்த ஆய்வுமுடிவே சரி என உறுதியளிக்கிறார்கள்.

தமிழில் இரண்டறக் கலந்த சமஸ்கிருதச்சொற்களை அப்படியே (சமஸ்கிருத ஒலியமைப்பில்) பயன்படுத்துவதே சிறந்தது என்றனர் சமஸ்கிருத மரபைப் பின்பற்றிய தமிழாசிரியர்கள். தமிழ் மரபைப் பின்பற்றும் தமிழாசிரியர்கள், அதை அப்படியே ஏற்றுக்கொண்டு, சமஸ்கிருதச் சொல்லை சமஸ்கிருத ஒலியமைப்பிலேயே பயன்படுத்துவது தற்சமம்; தமிழில் உள்ள ஒலிகளைக் கொண்டு தமிழ் மரபிற்கேற்ப மாற்றி எழுதுவது தற்பவம் என்று ஓர் இணக்கமான இலக்கண விதி செய்தார்கள் (“பொது எழுத்தானும் சிறப்பு எழுத்தானும்/ஈர் எழுத்தானும் இயைவன வடசொல்” (நன்னூல்,274)). இந்த இலக்கண விதியின் அடிப்படை நோக்கம் சொல் அமைப்பின் வழி இருமொழிக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்துவதாகும்.

சமஸ்கிருதச் சொல்லை சமஸ்கிருத ஒலியமைப்பிலேயே பயன்படுத்துவது தற்சமம்; தமிழில் உள்ள ஒலிகளைக் கொண்டு தமிழ் மரபிற்கேற்ப மாற்றி எழுதுவது தற்பவம்

எழுத்து, சொல்‌, பொருள்‌ என மூன்றிலக்கண மரபு தமிழ் இலக்கண மரபு. யாப்பையும், அணியையும் (பாடு) பொருளோடு இணைத்து பொருளதிகாரத்திற்குள் உள்ளடக்கும் தமிழ் இலக்கண மரபிலிருந்து விலகி, சமஸ்கிருத மாதிரியில், யாப்பிலக்கணமும், அணியிலக்கணமும் தனித்தனி இலக்கண நூல்களாகத் தோன்றின. அந்த வழியில் சமஸ்கிருத மரபைப் பின்பற்றி, ஐந்திலக்கண முறையில் தமிழ் மொழிக்கு இலக்கணம் செய்த முதல் நூல் வீரசோழியம் (பொ.ஆ.11).

பொ.ஆ.மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய தொல்காப்பியத்தியத்திலிருந்து, பொ.ஆ.பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய அறுவகை இலக்கணம் வரை, தமிழில் முப்பதுக்கும் மேற்பட்ட மரபிலக்கண நூல்கள் எழுந்தன. ஆனால் அவற்றுள், தமிழ் மொழியை தமிழ் மரபிற்கு முற்றிலும் பொருத்தமான முறையில் விளக்குபவை தொல்காப்பியமும், நன்னூலும்தான். விளக்குமுறையிலும், கற்பித்தல் முறையிலும் தெளிவாக அமைந்த இவ்விரு இலக்கண நூல்களே தமிழ்க்கல்வியில் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்விரு இலக்கண நூல்களின் ஆசிரியர்களான தொல்காப்பியரும், பவணந்தி முனிவரும் தமிழ்-சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் புலமை பெற்றவர்கள். அந்த இருமொழிப்புலமை தான் தமிழோடு இரண்டறக் கலந்திருந்த சமஸ்கிருத மரபை தமிழ் மரபிலிருந்து பிரித்துப்பார்ப்பதற்கும், தமிழின் தனித்துவங்களைக் காப்பதற்கும் உதவியது.

இவ்வாறு தமிழ்-சமஸ்கிருத இருமொழியம் தமிழர் அறிவு மரபில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியது.