ஆழ் நெடு நீர்

பரிமித்தா

மேகம் இன்னும் சற்று நேரத்தில் கரு முகில்களை முறுக்கி உதிர்த்து தூறல்களைச் சொரியப்போவது எனப்பட்டது. ஒவ்வொருமுறை மேகங்கள் மல்யுத்தம் புரியவும் இடி முழங்கியது. அவை முழங்கும்தோறும் முழங்கும்தோறும் கல்லறையின் மீது ஏற்றப்பட்ட அகல்விளக்கு அணையாமலிருக்க மகமாயீ பாட்டி கவனித்துக் கொண்டார். அவருடன் பிறந்தவர்கள் அவரை ஆயீ என்றும் பேரப்பிள்ளைகள் ஆயீ பாட்டி என்றும் அழைப்போம். ஆயீ பாட்டியின் கனவில் தான் அவரது அம்மா அமராவதி வந்தாராம். ”நான் செத்து இருவது வருஷம் கூடயாகுது இன்னும் எனக்கு கல்லறை கட்டனும்னு உனக்கு தோனலதான” என்று அமராவதியே வந்து அதட்டவும் அமராவதியின் பெண்பிள்ளைகள் சேர்ந்து தீபாவளிக்கு முன்னரே கல்லறையை எழுப்பி படையலையும் முடித்து விட்டனர்.

ஜொகூரின் இந்திய சமாதி இடங்களில் ஒன்றுதான் இந்த கங்கார் பூலாய் மயானம். மற்றொன்று சயின்டெக்‌ஷ் செல்லும் பாதையில் உள்ளது. அங்கு அப்பாவின் மூதாதையர்கள் புதைக்கப்பட்டு அவர்களின் மீது மற்றவர்கள் புதைக்கப்பட்டு அவர்களின் மீது இன்னொருவர் என kuih lapis போல பல அடுக்குகளைக் கடந்திருப்பர் எனத் தோன்றுகிறது.

அம்மா இன்னும் விசும்பிக்கொண்டிருந்தார். சிவப்பேறிய மூக்கில் வைர மூக்குத்தி எப்படி இந்த மோடத்திலும் மின்னியது எனக் குழம்பினேன். அவருக்காகத்தான் நான்கு குடும்பங்களும் இன்னும் இடுகாட்டில் காத்திருந்தது. அம்மா அமராவதியின் முதல் பேரக்குழந்தை. அமராவதி என்னுடைய கொள்ளுப்பாட்டி. அவரது அந்திம காலத்தில் ஒரு கை முடக்கிக் கொண்டது.”உன் எல்லா பிள்ளைகளையும் தூக்கி வளத்துருக்கேன். இவள குளிப்பாட்டமுடியாம போயிடுச்சு” என அம்மாவிடம் குறைப்பட்டுக் கொண்டாராம். பிறகு, எனக்கு ஒருவயதாகவும் அவர் மறைந்தார்.

ஒரு குழந்தை பிறந்தவுடன், அமராவதி மிக முக்கியமாக ஒரு சடங்கை நிகழ்த்துவார். அதை ‘செத்த பொதைக்கனும்’ என்று கூறுவார். மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் நஞ்சுக்கொடியை வேண்டுமென கேட்டு கையுடன் கொண்டு வந்துவிடுவார். நம்ஹேங் தோட்டத்தின் மலாய் பாணி வீட்டின் முன் இருப்பதெல்லாம் விவசாய நிலங்கள்தான். அங்கு ஒரு இலுப்பை மரமும் அதனடியில் ஒரு விபூதி குங்குமம் பூசிய செங்கலும் இருக்கும். இந்த மரத்தின் பின் புறத்தில் தான் நஞ்சுக்கொடியை அமராவதி புதைப்பார்.

குழந்தை பிறந்த ஒன்பதாம் நாளில் வீட்டின் வாசலில் நான்கடிக்கு ஒரு கட்டம் வரைவார். அந்த கட்டத்தின் விளிம்புகளில் மண் குவித்து மேடாக்கி, ஒவ்வொரு முனைக்கும் ஒரு மண் பிள்ளையார் பிடிப்பார். பிறகு ஒரு நூலைக் கொண்டு நான்கு பிள்ளையாரையும் சுத்தி கட்டுவார். அதற்கு நடுவில் ஒரு அகல்விளக்கை ஏற்றி வைப்பார். குழந்தையைச் சிக்கலில்லாமல் பெற்றெடுக்க அருள் புரிந்த பேச்சாயி அம்மனுக்கு படையலும் இங்குதான் வைக்கப்படும். கருப்பு பெட்டை வெட கோழியைப் பிடித்து, அம்மியில் அரைத்த மசாலவுடன் அதை குழம்பாக்குவார். ஒரு முறத்தில் வாழை இழை வைத்து, அதில் பொங்கிய சோறிட்டு கருப்பு கோழி குழம்பிட்டு அவல்பொரி, வாழைப்பழம், தேங்காய் தட்சனை வைத்து பேச்சாயீ அம்மனுக்கு பூசை செய்வார். அதனுடன், பால்மணி, சிவப்பு மணி, கருப்பு மணியுடன் கருப்பு வளையல்கள் பூஜை செய்யப்படும். பூஜை முடிந்தவுடன், மணிகளை நூல் கோர்த்து குழந்தையின் இடக் கையிலும் கழுத்திலும் கட்டிவிடுவார். அறுபதாம் பச்சை இலையை உருவி உள்ளங்கையில் நசுக்கி ஒரு காசுடன் கிழித்த வேட்டியில் சுற்றி இறுக்கி குழந்தையின் கையில் முடிச்சிடுவார். மறுகையில் வசம்பைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நூலில் கோர்த்து கட்டிவிடுவார். குழந்தை பிறந்த முப்பது நாட்களில் மீண்டும் பேச்சாயி அம்மனுக்கு கோவிலில் பூசை செய்வார்.

அம்மாவை வளர்த்தவர் அமராவதிதானாம். அம்மாவுடன் உடன் பிறந்தவர்கள் பிறக்க ஒவ்வொரு குழந்தையையும் குளிப்பாட்டி, ஜான்சன் பவுடர் பூசி, வலையைப் போன்ற உடையை அணிவித்து பார்த்துக்கொண்டவர் அமராவதிதான். அமராவதி தனது மருமகள் விஜயலட்சுமிக்கு துணி துவைத்து போடுவதிலிருந்து பத்திய உணவு சமைத்து என் பாட்டி சாப்பிட்டு முடித்த தட்டை கழுவி கவிழ்க்கும் வரை அவரே பார்த்துக் கொள்வார். இவையனைத்தும் பேசிக்கொள்ளாமையில் நிகழும்.

அமராவதி குழந்தை பராமரிப்பை ஏன் இவ்வளவு பயபக்தியுடன் அவரது குழந்தைகளுக்கும், இவர்களுக்குப் பிறந்த தனது பேரக்குழந்தைக்கும், என் தலைமுறையினரான கொள்ளு பேரக்குழந்தைகளுக்கும் விடாமல் செய்து கொண்டாரென்று பெரிய பாட்டி சொல்லி கேள்விபட்டுள்ளேன். பெரிய பாட்டி என்பவர் அமராவதியின் மூத்த மகள்.

சிறுவயதில் தாயை இழந்த அமராவதியின் அப்பா மறுமணம் புரிந்து கொண்டார். அமராவதிதான் அவருடன் பிறந்தவர்களை வளர்த்தார். அமராவதி பதினைந்து வயதில் மணம் புரிந்து கருவுற்றிருக்கும் போது ஒரு மிதிவண்டி வயிற்றில் இடித்துள்ளது. பொறுக்க முடியாத வயிற்று வலியால் குழந்தையை எப்படி வெளியேற்றுவதென தெரியாமல் அறியாப் பிள்ளையாய் மாடிப்படியில் விழுந்தும் தரையில் புரண்டும் தனது தலைச்சன் குழந்தையை இழந்திருக்கிறார். இரண்டாவது பிறந்த முனுசாமி என்று பெயரிட்ட ஆண் இரண்டு வயது வரை நன்றாக இருந்தது. குழந்தைக்கு திடீரென காய்ச்சலால் அவதியுறவும் அமராவதியும் நடேசனும் குழந்தையை பிரிட்டிஷ் அரசு கட்டிய ஜொகூரின் பெரிய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அடைந்ததும், குழந்தை காலமாக, அமராவதி கண்டபடி அழுது கூச்சலிட்டிருக்கிறார். நடேசன் ஜப்பானியருக்குப் பயந்து மீதமுள்ளவர்களின் மீதிருந்த உயிரிச்சையால் அமராவதியின் வாயைப் பொத்தி தாயை மட்டும் உயிருடன் மீண்டும் அழைத்து வந்திருக்கிறார். மூன்றாவதாக குப்பம்மா என்று பெயரிட்ட குழந்தை நடேசன் அமராவதி இணையருக்குப் பிறந்தது. ஒரு மழைநாளில் ஏழுமாத பெண்பிள்ளைக்குப் பாலூட்டி தொட்டிலில் ஆட்டி உறங்க வைத்து சென்றிருக்கிறார். இரும்பாலான தொட்டிலில் இடி பாய்ந்து குழந்தை கருகி மறைந்தது. அறியாமையினாலும், நோயினாலும், நெருப்பினாலும், ஊழினாலும் பறிகொடுத்தவர். அதன் பிறகு எந்த உயிரையும் காவு கொடுக்காமல் இருக்க தான் நம்பியவற்றை செய்தார். இவருக்கு பிறந்த நான்காம் குழந்தைதான் எனது தாத்தா, சுப்பிரமணியன்.

ஆண்கள் கூட்டம் அமராவதி பாட்டியின் கல்லறைக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து தாத்தா வந்தார். கழுத்தை சுற்றி good morning வெண்துண்டைப் போட்டிருந்தார். பால் மரங்களை வெட்டி வெளிக்காட்டில் வேலை செய்து முறுக்கேறிய நெடிய கரிய உடல். பால் மரம் அவருக்கு கட்டு மஸ்தான உடலைமட்டுமின்றி நான்கு தசமங்கள் இரப்பர் காட்டில் வேலை பார்த்ததால் புற்றுநோயையும் சன்மானமாக அளித்திருந்தது. ரப்பர் மரத்தின் வெளி பட்டையில் அரை இஞ்சு சீவினால் வரும் பாலைச் சேகரித்து கட்டியாக்க அமிலத்தைக் கலக்க வேண்டும். நெடுநாள் சுவாசத்தில் பெயரறியாத அமிலங்கள் கலந்திருந்ததால் தொண்டை புற்றுநோய் ஏற்பட்டது என அம்மாவின் தம்பி செந்தில் மாமாதான் சென்னார். தொண்டைக் குழியில் துளையிடப்பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவதிப்பட்டார். அவதியை என்றுமே காட்டிக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. அவரது கழுத்தைச் சுற்றி ஒரு வளையம். அந்த வளையத்தின் நடுப்பகுதியில் மட்டும் ஒரு துளையிருக்கும். அந்த துளையில் ஒரு பவளத்தையோ ஒரு முத்தையோ சொருகினால், அச்சு அசல் கழுத்தில் அணிந்த மோதிரம் போல இருக்கும். அப்போது அது சன்மானம்தானே? ஆனால், இரத்தினங்களுக்குப் பதிலாக தாத்தா ஒவ்வொருமுறை மூச்சிழுக்கும் போதும் எச்சிலும் சளியும் கபமும் அந்த துளையிலிருந்து துருத்திக் கொண்டு மேலெழும். தாத்தாவால் பேச முடியாது. அந்த இரப்பர் காடு அவரின் கையில் சிக்காத வயது, ஆவி போதாதென்று குரலையும் களவாடிக்கொண்டது.

தாத்தா தனது தங்கை மகமாயீ அருகே வந்தார். தவழ்ந்து வரும் குழந்தையைப் போல் இரண்டு கைகளையும் காற்றில் தைத்து தலையை இடதுக்கும் வலதுக்கும் சிரித்து ஆட்டினார். அண்ணனும் தங்கையும் பக்கத்து கல்லறையைப் பார்த்து சிரித்தனர்.

தாத்தாவின் இச்செயலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆயீ பாட்டியிடம் தாத்தா என்ன சொல்ல வருகிறார் எனக் கேட்டேன்.

”அம்மாவோட தம்பி. சிகாமணி” என்றார் மங்கலான சிரிப்பில்.

”யாரு?” என்று புருவத்தை நெறித்துக் கேட்டேன்.

”பக்கத்துல இருக்காருல. இவர்தான்” என பக்கத்து நிலத்தைச் சுட்டினார்.

”அக்காவுக்கு பக்கத்துலயே என்னைய புதைச்சுருங்கனு சொன்னார் அதுக்கேத்த மாதிரி செஞ்சாச்சு. அவருக்கு பக்கத்துல அவர் பொண்டாட்டி, இரண்டு பிள்ளைங்க, இரண்டு பேரப்பிள்ளைங்க. எதுக்குமே கொடுத்து வைக்கல” என கொஞ்சம் நொந்து கொண்டார்.

நான் சிகாமணி எனும் பெயரை அப்போதுதான் முதல் முறையாக கேட்டேன்.

அவரே மேலும் விளக்கினார். “வெள்ளம் மொத்த குடும்பத்தையும் சாப்டிருச்சி. அவர் கண்ணுமுன்னாடியே அவரோட பொண்டாட்டியும் இரண்டு மகள்களும் பேரக்குழந்தையும் மூழ்கி போனாங்க.”

”என்ன பாட்டி சொல்றீங்க இப்போதான் இப்படி ஒருத்தர் இருக்கார்னே எனக்கு தெரியும். அப்ப தாத்தா என்ன சொன்னார்? ஏன் சிரிச்சிங்க?” எனக் கேட்டேன்.

படையலில் இருந்த icing biscuit நோக்கிச் செல்லும் முயிறின் படையைப் பார்த்தவாறு ”சாவ நேர்ல கண்டதும் புத்தி பேதலிச்சு போச்சு. குடியும் சேந்துகிச்சு, நாலு கால் நிலைமையிலதான் அவர் அக்காகிட்ட வருவார். அக்கா இங்க. தம்பி அங்க” என்று சலித்துக்கொண்டே வானைப் பார்த்தார். முன்னே சென்று பார்க்க முயன்றேன்.

”மத்தவங்கள மெதிச்சுறாதெ! கீழ பாத்து நட” என்றான் என் அண்ணன்.

புதைக்காட்டில் இன்னும் பலருக்கு கல்லறை கட்டவில்லை என்று சுற்றி பார்த்தால் தெரியும்.

பக்கத்தில் மூன்று மீட்டர் நீளத்துக்கு மண் குவிக்கப்பட்டிருந்தது. தலைமாட்டில் ஒரு சிமெண்ட் கல்லும் அதில் பாஸ்போட் அளவிலான மிகச் சிறிய தேய்ந்த படம் இருந்தது. அதில் அடையாளமென எதுவும் இல்லை.

இவருக்கு பக்கத்தில் அதே போல ஐந்து நீள் மண் குவியல்கள் இருந்தன. அதேபோல் ஒரு கல், கல்லின் நடுவில் சிறு படம். எதையுமே பார்க்கமுடியவில்லை. ஐந்தாவது சமாதியைத் தவிர. படத்தின் விளிம்புகள் பூஞ்சை பிடித்து பழுப்பேறி கிடந்தன. படத்தில் வழித்து சீவிய ஒரு சிறு பெண். சிறுமியேதான். சடை பின்னியிருப்பாள் என நினைக்கிறேன். அடர்கூர் புருவங்கள். அதன் நடுவில் ஐந்து காசு அளவிலான கருப்பு பொட்டு. வெளிறிய அச்ச பார்வை. மூக்கும் வாயும் இருந்தது எனும் சொல்லும் அளவிலேயே படத்தின் நிலை. தனது அக்காவுக்கு பக்கத்தில் பூரண உறக்கத்திலிருக்கிறாள். இன்னும் சில வருடங்கள் இருந்திருந்தால் பூப்படைந்திருப்பாள். மீண்டும் கண்களையும் புருவத்தையும் ஒரு சேரப் பார்த்தேன். முறைக்கிறாள்.

முகத்தைத் திருப்பிக் கொண்டேன். ரோமக்குழிகளுள் சில்லென திரவம் உள்புகுந்து உடம்பெங்கும் குளிர் பரவியது. கண்ணுள் நுழைந்து ஆவியைக் குடித்துவிடுவாள் என்றிருந்தது. என்னால் நகர முடியவில்லை. இடதுகால் இறுகியிருந்தது. எழும்ப திணறினேன். உதவி தேவைபட்டது போல் இருந்தது. எனது காலைப் பற்றிக் கொண்டுவிட்டாளா? இடது காலை நகர்த்த முயற்சித்தேன். சட்டென நகர்ந்ததால் உயிர்வளி காலுக்குள் சென்று குளிர்ந்த சதையைச் சூடு செய்தது. காலில் கூசச் செய்யும் வலியும் சேர்ந்து கொண்டது.

அவள் இன்னும் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

”அத்ரி! மழை.” அண்ணன் தான் அழைத்தது.

விடுபட்டது போல் உணர்ந்தேன். அங்கே மீண்டும் செல்வதேயில்லை என என்னிடம் சொல்லிக் கொண்டேன். தூறல் ஆரம்பித்திருந்தது.

தாத்தா அம்மாவிடம் சென்று அவரது கழுத்து வளைபட்டையின் நடு துளையில் இரு விரல் பொத்தி மூடி ”தேவி, கிளம்பலாம்!” என்றார்.

தாத்தாவின் குரல் மீண்டும் அனைவருக்கும் நினைவுவந்தது. தாத்தாவின் இருப்பு மீண்டும் உணர்த்தப்பட்டது. குரலற்றவரல்ல என நினைவுபடுத்தப்பட்டது. சிகாமணியின் குடும்பத்தைப் பற்றி நான் கேட்க விருப்பப்பட்ட ஒரே ஆள் என் தாத்தாதான்.