இவ்வட்டாரப் பெண் புனைவுகளில் பெண்கள், அடித்தட்டு மக்கள், சூழலியல் சுவடுகள்

ஆங்கிலம்: பேராசிரியர்
சித்ரா சங்கரன்

இந்த ஆய்வு எதைக்குறித்தது? தேவை என்ன?

பூமிப்பந்தை அமைதி நிறைக்கட்டும்!
நீரில், மரம் செடி கொடிகளில்!
பிரபஞ்சத்தை நிறைத்து அமைதி ஒழுகி ஓடட்டும்!

என்னும் யஜுர் வேத சுலோகம் அமைதி எங்கெங்கும் நிலவிட வேண்டுகிறது. யஜுர் வேதகாலம் இந்தியாவின் இரும்பு யுகமாக அறியப்படும் காலம் என்கின்றனர் ஆய்வாளர்கள். சுமார் 3000 ஆண்டு கழிந்தபின், இன்றும் நாம் சுற்றுச்சூழல் நலனுக்கு எதிராகப் பயணித்து வருவது கவலைக்குரியது. இயற்கைச் சூழலோடு இயையாத வாழ்விலிருந்து பல்வேறு இயற்கைப் பேரழிவுகளும் பெருந்தொற்றுகளும் உற்பத்தியாகின்றன.

தமிழில்:
முனைவர்
எச்.
முகம்மது சலீம்

‘கொவிட்’ பெருந்தொற்று நமக்குக் கற்றுத்தந்த பாடங்களில் இரண்டு குறிப்பிடத்தக்கவை; முதலாவது, மானுடச் செயல்பாடுகள் பிரபஞ்சத்தை எண்ணற்ற வழிகளில் பாதிக்கிறது. இரண்டாவது, மக்கட்தொகைப் பெருக்கம் உச்சம்தொட்ட ஆசிய நாடுகளில் மானுட அழிவின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. “மக்கள்தொகைப் பெருக்கத்தை நாம் கட்டுக்குள் வைக்காவிட்டால் இயற்கை அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்” என்ற சர் டேவிட் அட்டன் பரோவின் கூற்றை மெய்ப்பிப்பதுபோல அது அமைந்தது.

தொகுப்பும்
சுருக்கமும்:
சிவானந்தம் நீலகண்டன்

ஆசியாவின் நீண்ட அனுபவ அறிவுக்கும் சமகாலப் பழக்கவழக்கங்களுக்கும் இடையே ஏற்படும் முரண்பாடுகளால் ஒருவித அமைதிப் புரட்சி உருவாகிவருகிறது; பாரம்பரிய அறிவுத்தேடலும் புதுமைக்கான வேட்கையும் ஒன்றாக வளர்ந்துகொண்டிருக்கின்றன. இயற்கைச் சுரண்டல்கள் அதிகரித்துவரும் நிலையில் பாரம்பரிய அறிவு குறித்த ஆர்வம் மேலோங்குகிறது. பசுமைச் செயற்பாட்டாளர்களும் சிந்தனையாளர்களும் இந்த எழுச்சியில் இணைந்துள்ளார்கள். அப்பின்புலத்தில், ஒரு வலுவான சூழலியல் விழிப்புணர்வு ஆசியப் பெண் புனைவுகளில் பிரதிபலிக்கிறது என்பதை என்னுடைய ‘தெற்கு, தென்கிழக்காசியாவின் பெண் புதினப் புனைவுகளில் பெண்கள், அடித்தட்டு மக்கள் மற்றும் சூழலியல் சுவடுகள்’ என்ற தலைப்பிலான ஆய்வு நிறுவ முயல்கிறது.

சுற்றுச்சூழல் அழிவுகளுக்கு வித்திடும் மானுடச் செயல்பாடுகளைப் பெண் புனைவெழுத்தாளர்கள் பலர் பிரமிப்பூட்டும் வகையில் தமது புனைவுகளில் கவனப்படுத்தியுள்ளனர். சூழலியல் சார்ந்த 30 புனைவுகளை ஆராயும் இந்த ஆய்வு பல்வேறு காரணங்களால் தேவையாகிறது.

சுற்றுச்சூழல் அழிவுகளுக்கு வித்திடும் மானுடச் செயல்பாடுகளைப் பெண் புனைவெழுத்தாளர்கள் பலர் பிரமிப்பூட்டும் வகையில் தமது புனைவுகளில் கவனப்படுத்தியுள்ளனர்.

முதலாவது, ஆசியச் சுற்றுச்சூழல் நெருக்கடி புவி வெப்பமயமாதலுடன் தொடர்புடையது என்பதை உணர்ந்துகொள்வது அவசியம். ஆனால் இதுகுறித்த உரையாடல்கள் பெரும்பாலும் மேற்குலகு சார்ந்தே நடந்துவந்துள்ளன என்கிறார் அமிதவ் கோஷ், ‘சூழலியல் நெருக்கடி’ (The Great Derangement) என்ற தனது நூலில். அவ்வகையில் இந்த ஆய்வு ஒரு சமநிலையை எட்ட முயலும்.

இரண்டாவது, கடந்த சில பத்தாண்டுகளாகக் கிழக்காசிய வட்டாரங்களின் தனித்துவமிக்கப் பார்வை மழுங்கடிக்கப்பட்டு ஆசியா என்னும் பொதுப்பார்வை மேலோங்கி வருகிறது. விளைவாக, உலகச் சுற்றுச்சூழல் நெருக்கடியில் இந்த இருபெரும் நிலப்பகுதிகளின் தனித்துவத் தாக்கங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. பண்பாட்டுப் பின்னணி, அரசியல், இயற்கைவள மேலாண்மை ஆகியவற்றில் ஆசியான் (ASEAN) நாடுகள் எனப்படும் தென்கிழக்காசிய நாடுகளிடையே குறிப்பிடத்தக்கத் தனித்தன்மை காணப்படுகிறது. அத்தனித்தன்மைகளை இந்த ஆய்வு பதிவுசெய்கிறது.

மூன்றாவதாக, இயற்கைசார் பதிவுகளைப் பொறுத்தமட்டில், தெற்கு, தென்கிழக்காசிய வட்டாரங்களில் ஏற்பட்டுள்ள இடைவெளியை இட்டுநிரப்பக் குறைவான படைப்புகளே வெளிவந்துள்ளன. அவையும் பெண்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் பார்வையை முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை. ஆசியான் வட்டாரத்தில் மட்டும் அரை பில்லியன் பேருக்கும் அதிகமானோர் அதீதக் காலநிலை மாறுபாடு, கடல்மட்ட உயர்வு, பாலையாதல் போன்ற இயற்கை மாற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வறிய மக்களும் பெண்களும். அதையும் இந்த ஆய்வு கவனப்படுத்துகிறது.

இறுதியாக, சமகால ஆய்வுகளில் பெரும்பாலும் தெற்கு, தென்கிழக்காசியப் பெருநிலங்களைத் தனித்தனியாகவே காணும் போக்கு நிலவுகிறது. ஆனால் பல்வேறு பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களால் பின்னிப் பிணைந்திருக்கும் இவ்விரு வட்டாரங்களையும் ஒருசேர ஒப்புநோக்கும் ஆய்வாக இது அமைகிறது.

தொகுத்துச் சொன்னால், இந்த ஆய்வு, சூழலியலில் பெண்ணியப் பார்வையை முன்வைக்கிறது. மானுடத்தையும் இயற்கையையும் தனித்தனிக் கட்டமைப்புகளாகப் பிரித்துக்காணும் சூழலியல் திறனாய்வு அணுகுமுறைகளிலிருந்து மாறுபடுகிறது. இயற்கையுடன் மானுடச் செயல்பாடுகள் பல அடுக்குகளில் பின்னிப் பிணைந்துள்ளதை உணர்ந்துகொள்ளும் களமாக அமைகிறது. இலக்கியப் பதிவுகள் மூலம் ஏற்படும் சூழலியல் விழிப்புணர்வு, இயற்கைச் சுரண்டல்களை மட்டுப்படுத்த வழிகோலும் என்பதால் இலக்கியங்களின் பங்கு முக்கியமானது.

இலக்கியப் பதிவுகள் மூலம் ஏற்படும் சூழலியல் விழிப்புணர்வு, இயற்கைச் சுரண்டல்களை மட்டுப்படுத்த வழிகோலும் என்பதால் இலக்கியங்களின் பங்கு முக்கியமானது.

சூழலியல் திறனாய்வும் சூழலியல் பெண்ணியமும் – இதுவரை நடந்திருப்பதென்ன?

மேற்குலகின் சூழலியல் இயக்கச் சிந்தனைகள் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 1960களில் மேலும் வேகம் கண்டன. ஜோசப் மீக்கரின் முக்கியத்துவம் வாய்ந்த சூழலியல் நூல் The Comedy of Survival 1970இல் வெளிவந்தது. இந்தக் காலகட்டத்தில்தான் சூழலியல் திறனாய்வு (Ecocriticism) என்னும் சொல்லாட்சி வில்லியம் ரக்கார்டினால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. சூழலியல் திறனாய்வு என்பது, “சூழலியலையும் அதுதொடர்பான கருத்துகளையும் இலக்கியத் தளத்தில் பேசுவது” என்று Literature and Ecology நூலில் ரக்கார்ட் விளக்குகிறார்.

ஷெர்ரி ஓனரின் ‘Is Female to Male as Nature is to Culture’ என்னும் கட்டுரை மற்றொரு முக்கியப் பதிவு. ஆயினும் பெண்களுக்கும் நிலப்பரப்புக்குமான தொடர்பில் தெற்கு, தென்கிழக்காசிய நிலை குறித்த ஆய்வுகள் அதிகமாக வெளிரவில்லை. எனவேதான் சூழலியல் பெண்ணியம் (Ecofeminism) எனது இலக்கியப் புனைவுகள் குறித்த ஆய்வில் முதன்மை பெறுகிறது.

காரன் ஜெ. வாரன் (Karen J. Warren) என்னும் முன்னோடிச் சூழலியல் பெண்ணியச் செயற்பாட்டாளர், “பொதுவாகச் சூழலியல் பெண்ணியம் என்பது இயற்கைக்கும் பெண்கள், அடித்தட்டு மக்களுக்குமான தொடர்புகள் குறித்த ஆய்வு” என்கிறார். தெற்கு, தென்கிழக்காசியாவின் சித்தாந்தங்களும் உள்ளூர் நம்பிக்கைகளும் பெண்களையும் நிலத்தையும் இயற்கையுடன் சக்திமிக்க வகையில் தொடர்புபடுத்துவதை இங்குள்ள சமகாலப் பெண் புனைவுகளில் காணலாம்.

ஆனால் சமகாலப் பெண்ணியச் சூழலியலாளர்கள் பெண்களுக்கும் இயற்கைக்குமான தொடர்புகள் நெருக்கமானவை என்னும் அனுமானங்களை மறுத்து வருகிறார்கள். ஜேனட் பியல் (Janet Biehl) காட்ரியானோ சாண்டிலன்ட்ஸ் (Catriona Sandilands) போன்ற எழுத்தாளர்களும் இத்தகைய அனுமானங்கள் பெண்களின் தளங்களைச் சுருக்கும் கருத்தியல் தந்திரம் என்று கருதுகிறார்கள். ஆயினும் இதில் சில மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

சீ பார்ம் (Chi Pharm) மற்றும் சிலர் இணைந்து அண்மையில் வெளியிட்டுள்ள Ecologies in Southeast Asian Literature : Histories, Myths and Societies தொகுப்பு, இவ்வட்டாரச் சூழலியல் திறனாய்வு முக்கியத்துவம் பெறத் தொடங்கியிருக்கும் முக்கியமானது. இது ஒரு பெண் ஆய்வாளரால் இவ்வட்டாரப் பெண் எழுத்தாளர்களின் சூழலியல் புனைவுகள் குறித்து ஆய்வுசெய்யும் முன்னோடி முயற்சி.

ஏன் தெற்காசியாவையும் தென்கிழக்காசியாவையும் ஒன்றாக கவனத்தில் கொள்ளவேண்டும் ?

புவியியல் சார்ந்து தெற்கு, தென்கிழக்காசியப் பிரதேசங்கள் நெருக்கமானவை. சுனாமி போன்ற கடல்கோள் பேரிடர்களும் போர்களும் இப்பகுதியிலுள்ள நாடுகளை ஒன்றாகவே பாதிக்கின்றன. மேலும், பண்பாட்டுக் கூறுகளிலும் பொதுவான இயல்புகளைக் காணலாம்.

ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக இவ்வட்டார நாடுகளின் பண்பாட்டு, சமூகக் கொடுக்கல்வாங்கல்கள் நெருக்கமாக இருந்து வந்துள்ளன. தமிழ், சமஸ்கிருத மொழிகளின் செல்வாக்கு இப்பகுதிகளில் காணக்கிடைக்கிறது. சிங்கப்பூரில் தமிழ்மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ஒன்று. மலேசியாவில் தமிழ் மொழி பேசுவோர் அதிகம். அங்குள்ள தமிழ்ச் சமூக அடையாளங்கள் குறிப்பிடத்தக்கவை. மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் பஹாசா என்னும் மலாய் மொழியில் சமஸ்கிருதப் பண்பாட்டு இலக்கியச் செல்வாக்கு கணிசம்.

இஸ்லாமியப் பண்பாடு சார்ந்த நாடுகளாக இருந்தாலும் மலாய் மக்களின் உள்நாட்டுப் பண்பாட்டுப் பாரம்பரியத்தில் இராமாயண அடையாளங்களைக் காணமுடிகிறது. தாய்லாந்தின் ராமகீன் (Ramkeen) மலாய் மொழியின் ஹிகாயத் ஸ்ரீ ராமா (Hikaayat Sree Raama) ஜாவா மொழியின் ஜாவா ராமாயணம் (Java Ramayana) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இலங்கை, வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பௌத்தம் கணிசமான மக்களால் பின்பற்றப்படுகிறது.

தெற்காசியா, தென்கிழக்காசியா ஆகிய இரண்டு பகுதிகளையும் ஒன்றாகச் சேர்த்து ஆராய்வதால் அவை எங்ஙனம் புவியியல் சூழல்கள், அரசியல் சமூக நடவடிக்கைகள், காடுகள் அழித்தொழிப்பு, இராணுவ இடையீடுகள், மணல் அரிப்புகள், பொருளியல் ஏற்றத் தாழ்வுகள் போன்றவற்றால் இணைந்துள்ளன என்று காணமுடிகிறது.

எந்த வட்டாரப் புனைவுகள் ஆய்வில் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன? ஏன்?

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு தெற்காசிய நாடுகள் மற்றும் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, லாவோஸ், வியட்நாம், மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகிய ஏழு தென்கிழக்காசிய நாடுகள் என மொத்தம் 11 நாடுகளைச் சேர்ந்த 30 பெண் எழுத்தாளர்களின் சூழலியல் புனைவுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளேன். பெண்ணியச் சூழலியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இந்தப் புனைவுகள் எவ்வாறு இயற்கை-பண்பாட்டு ஊடாட்டங்களை வெளிப்படுத்துகின்றன என்று ஆய்வு செய்துள்ளேன்.

இந்தோனேசியாவின் மறைந்துவரும் ஏரிகளும் அங்குள்ள ஊழல் மலிந்த அரசியல் நிலவரத்துக்குமான தொடர்பு, சிங்கப்பூரின் மாசுபட்டுள்ள நதிகள், நலிந்த மக்களின் உரிமைகள், வியட்நாமின் Agent Orange என்னும் போர்க்காலங்களில் வேதியல் நச்சுப் பயன்பாடு, கீழ்நிலையில் கருதப்பட்ட பெண்கள், நிலநடுக்கம், ஆழிப் பேரலைத் தாக்கம் போன்றவை இப்புனைவுகளில் காட்டப்படுவது குறித்து ஆய்வு பதிவுசெய்துள்ளது.

இயற்கைச் சூழலுக்கும் மானுடத்துக்கும் இடையிலான இணக்கமற்ற போக்கை புனைவாளர்கள் அனைவரும் தத்தமது கண்ணோட்டத்தில் சுட்டிக்காட்டுகின்ற ஒற்றுமை வியக்கவைக்கிறது. பிரகிருதியை இயற்கையுடன் இணைக்கும் சாங்கியக் கொள்கைகள், பௌத்த சமயத்தின் தீ வழிபாட்டு நம்பிக்கைகள், பஞ்சதந்திரத்திலுள்ள விலங்குசார் பதிவுகள், மியான்மரின் போன்பிபி (Baonbibi) டாவலர் ராது (Tawlar ratu) ஆகிய இயற்கையைப் பேசவைக்கும் கவிதைகள், சூத்திரங்கள் குறித்த பாரம்பரியங்கள், மகாபாரத, இராமாயண இதிகாசங்களின் இயற்கைசார் கருத்துகள், பரோமஷி (baromashi) நாட்டார் பாரம்பரியம் காட்டும் பெண்ணியக் கருத்துகள், தர்ம, அறத் தத்துவங்கள் ஆகியவற்றை இப்புனைவுகளில் காணலாம்.

பௌத்தம், இந்து சமயம், பிலிப்பீன்சின் புனைவுகள் வெளிப்படுத்தும் கத்தோலிக்க கிருத்துவச் சமயத்தின் சூழலியல் பார்வைகள் ஆகியவற்றையும் கருத்தில்கொண்டுள்ளேன். ஆயினும் இத்தொகுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட புனைவுகளில் இஸ்லாமியச் சமயத்தின் சூழலியல் தொடர்பான கருத்தாடல்கள் இடம்பெறவில்லை.

இஸ்லாமியர் அதிகமுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், மலேசியா, இந்தோனேசியா நாடுகளின் புனைவாளர்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றிருந்தாலும் அவர்கள் சமயச் சமநோக்குப் பார்வையுள்ள படைப்பாளர்களாகக் காணப்படுவதால் இஸ்லாமியச் சமயம் சார்ந்த சூழலியல் தனித்துவப் பார்வையைத் தமது புனைவுகளில் இவர்கள் கொண்டுவரவில்லை. மாறாக அவர்கள் சமயம் கடந்த நாட்டார் வழக்காறுகளையும் நடைமுறைகளையும் மட்டுமே தொட்டுச்செல்கிறார்கள்.

வரலாற்றிற்கு புனைவிற்கும் இடைப்பட்ட மூன்றாம் வெளியை மீரா சாந்தின் (Meira Chand) A Different Sky, கிறிஸ்டைன் சூசன் லிம்மின் (Christine Susan Lim) The River Song, மெர்லின்டா பாபியின் (Merlinda Bobi) Fish Hair Woman, ஜோன் அரசநாயகத்தின் (Joan Arasanayagam) All is Burning ஆகிய புனைவுகள் பேசுகின்றன. இவை வரலாற்றுப் புனைவுகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் ஆசிரியர்கள் இப்புனைவுகளைத் தத்தம் நாடுகளின் வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி அவற்றைக் கட்டமைத்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

சோனாலி தேரணியகலவின் (Sonali Deraniyakala) Wave: A Memoir of Life after the Tsunami போன்ற புனைவு ஒரு தன்வரலாற்றுப் பதிவுச் சாயல் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. லில்லி யுளியாண்ட்டி பரீடின் (Lily Yulianti Farid) Lake நாவலில் 1960களில் சுகர்னோ ஆட்சியில் காணாமல்போன சமூகச் செயற்பாட்டாளர்கள் குறித்துப் பதிவுசெய்யப்படுகிறது.

இறுதியாக, ஆய்வுநூலில் விவாதிக்கப்பட்டுள்ள நாவல்களின் களங்களும் கருத்துகளும்

சிங்கப்பூரைச் சார்ந்த இரண்டு நாவல்கள், இலங்கை மற்றும் பாகிஸ்தானைச் சார்ந்த இரு சிறுகதைகள் ஆகிய நான்கு சூழலியல் புனைவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போர், சமூகப்புரட்சி, நிலச்சுரங்கங்கள் குறித்தும் அரசு ஆக்கிரமிப்புகள், சூழலியல் அநீதி குறித்த மக்கள் எதிர்ப்பை அடக்கும் முயற்சிகள் ஆகியவை இந்த படைப்புகளின் பின்புலம். இவற்றில் பெண்களின் பங்களிப்பு பதிவுசெய்யப்படுகின்றன. ராப் நிக்சன் கூறும் நிதானமாக வளர்த்தெடுக்கப்படும் வன்முறையை (Slow Violence) இப்புனைவுகளின் வாசிப்பில் காணலாம். அதன் தாக்கம் ஆசிய நாடுகளில் எவ்வாறு வெளிப்படுகின்றன என்றும் இந்த இயல் பேசுகிறது.

மீரா சந்தின் A Different Sky இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் ஆசியாவின் மகளிர், சிறுபான்மையினர் உரிமைகள், கடமைகள் குறித்துப் பதிவு செய்கிறது. சூசன் கிறிஸ்டின் லிம்மின் The River’s Song ஆற்றோரம் வசிக்கும் மக்கள் சிங்கப்பூரின் 1970, 80களில் முன்னெடுக்கப்பட்ட தூய்மை நதி திட்டம் காரணமாக அவர்கள் சந்தித்த உரிமைச் சவால்களைப் பேசுகிறது. ஜேன் அரசநாயகத்தின் All is Burning உள்நாட்டுப் போர்ச்சூழலில் சிக்கிக்கொண்டிருக்கும் இலங்கையைப் பேசுகிறது.

அடித்தட்டு மக்கள் மனிதநேயமற்ற ஒடுக்குமுறைகளைச் சந்திப்பது, மலேசியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், மியன்மார் நாடுகளின் நான்கு நாவல்களை முன்வைத்துப் பேசப்படுகிறது. உயிர்மைய அறம் (Biocentric Ethics) புறக்கணிக்கப்படுவதனால் ஏற்படும் விளைவுகள் மானுடமல்லா இருப்பின் தார்மீக உரிமையைப் பறிப்பகும். உயிர் வகைகள் அருகிவருவதற்கு இப்போக்கு காரணமாகிறது. மகளிரும் புறக்கணிக்கப்பட்ட அடித்தட்டு மக்களும் இத்தகைய போக்கினால் பாதிப்புக்குள்ளாகின்றார்கள்.

மைகேல் ஃபூக்கோ (Michael Foucault) உயிரிகளின் மீதான ஆதிக்கம் அரசியலாக்கப்படுகிறது என்கிறார். இதனை உயிர் அரசியல் (Biopolitics) என்கிறார். உயிர் அரசியலின் மற்றொரு பின்விளைவு அழிவு அரசியல் (Thanatopolitics). இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நான்கு புனைவுகளும் ஒருவகையில் இந்த அழிவின் அரசியலை ஆசிய நோக்கில் பேசுகின்றன.

பெத் யாப்பின் (Beth Yapp) The Crocodile Fury பின்நவீனத்துவப் புனைவு. ஏகாதிபத்திய நோக்கில் இயற்கையை ஆசியாவின் பயன்பாட்டுப் பொருளாகக் காண்பதைப் பேசுகிறது. ஐரீன் கரோலினா சார்மியன்டோவின் (Irene Carolina S.Sarmiento) Maharika புனைவு செல்வந்தர்களுக்கும் வறியவர்களுக்கும் இடையே நிலவும் பொருளியல் வேறுபாடு மற்றும் பண்பாடு சார்ந்த இடைவெளி குறித்துப் பேசுகிறது. சூசன் காலின்ஸின் (Suzzane Collins) The Hunger Games என்னும் புனைவும் அதேவகையில் அமைகிறது.

தீ ஹாவ் ஓ (Thi Hao Vo) என்னும் வியட்நாமிய படைப்பாளியின் Blood of Leaves அமெரிக்கப் போர்ப்பின்னணியில் எழுதப்பட்டுள்ளது. உடற்குறையுள்ள அழகிய பெண்களை மையப்படுத்தி அவர்களை விலங்குகளாய் நடத்தும் பண்பாட்டுச் சிதைவுகள் குறித்து இந்நாவல் பேசுகிறது. மியான்மரின் மியா சின்னின் (Mya Zin Khin) Heartless Forest ஆசிய பகுதிகளுக்கே உரித்தான தனித்துவமான வன தேவதைகளைத் (Bonbibi) தொடர்புபடுத்திப் பேசும் நாவல்.

நதிகளை மையமாகக் கொண்டு பதிவாகியுள்ள இந்தியா, பிலிப்பீன்ஸ், வங்கதேசப் புனைவுகளின் பெண்-இயற்கை அரசியல் பேசப்பட்டுள்ளது. A River Sutra, Fish-Hair Woman, The Immersion ஆகிய டிலாரா ஹாஷிமின் (Dilara Hashim) பதிவுகள் அத்தகைய ஊடாடல்களைப் பேசுகின்றன.

வசீகரத்தின் அழகியல் அண்மைக்காலமாக கவனம்பெறுவதையும் சூழலியல் திறனாய்வுகளில் இதுபற்றிய மதிப்பீடு நிலவுவதையும் காண்கிறோம். வரலாற்றில் பெண்களின் அதிகாரம் தொடர்பான நிறைகுறைகள் எவ்வாறு பொதுப்புத்தி அனுமானங்களுக்கு மாறாக இப்புனைவுகளில் முன்னிறுத்தப்பட்டுள்ளன என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லாவோஸ், இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேசியா, இந்தியா ஆகிய நாடுகளில் பேரழிவுகளான ஆழிப்பேரலைத் தாக்கம், நில அதிர்வுகள், போர் போன்ற இயற்கைப் பேரிடர் அல்லது சமூக அரசியல் நிகழ்வுகள் குறித்த நுண் அரசியல் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

லாவோஸியக் குழந்தைகளின் பார்வையில் வில்லியா கெட்டாவோங்கின் (Vilia Ketawong) The Roar of a Distant War நாவல் அமெரிக்கப் போரின் வலியைப் பேசுகிறது. ஆழிப் பேரலை ஆசியாவில் ஏற்படுத்திய அழிவில் தன் குடும்பத்தை இழந்த ஓர் இலங்கைக் கல்வியாளரின் தன்வரலாற்றுக் கூற்றாகப் பதிவுசெய்துள்ளது Wave: A memoir of Life after Tsunami. பாகிஸ்தானில் 2010இல் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய துயரங்களின் பின்னணியில் அமைந்துள்ள ஷைலா அப்துல்லாவின் (Shaila Abdullah) Rani in search of a Rainbow நாவல் ஒரு குழந்தையின் பார்வையில் சூழலியல் சிக்கல்களை பேசுகிறது.

மத்திய ரஷ்யாவின் பிலோயி (Lake Beloye), நதி திடீரென்று காணாமற்போவதை ஒப்புநோக்கி ஜகார்தாவில் தன் சகோதரி பாயிசா (Fazy) காணாமல் போவதை தனது ஏரி (Lake) நாவலில் பதிவுசெய்கிறார். சித்ரா பானர்ஜீயின் (Chithra Banerjee Divakarunan) One Amazing Thing பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திலிருந்து தப்பிப் பிழைத்த ஏழுபேர், ஆபத்திலிருந்த நேரத்தில், தத்தம் வாழ்வின் அற்புதத் தருணங்கள் குறித்துப் பேசுகிறார்கள்.

ஆசியாவின் இயற்கை, பண்பாட்டு வெளியின் சுற்றுச்சூழல் பார்வை நூலின் இறுதி இயலில் பேசப்படுகிறது. புனிதங்கள், அடித்தட்டு மக்கள், மகளிர் மற்றும் இலக்கியப் பின்னணியைக் குறித்து அமைந்துள்ள இவ்வியல் பாரம்பரியத்துக்கும் பிரதிநிதித்துவத்துக்குமிடையேயான தொடர்பு குறித்தும் பேசுகிறது.

இந்தியா, வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து ஒருவர் வீதமும் பிலிப்பீன்சைச் சார்ந்த இரண்டு படைப்பாளர்களின் நாவல்கள், சமயப் பாரம்பரியங்கள் எவ்வாறு பெண்கள், அடித்தட்டு மக்களின்மீதும் இயற்கையின் மீதும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை ஆசியாவின் இந்து, இஸ்லாம், கத்தோலிக்கச் சமயங்களின் பின்னணியில் பேசியுள்ளன. அதிகம் பேசப்படாத மஹாஸ்வேதா தேவியின் The Hunt, Arjun, Seeds நாவல்கள் ஆதிவாசிகளின் வாழ்வியலைப் பேசுகின்றன.

ரொசாரியோ குருஸ் லூசரோவின் (Rosario Cruz Lucero) The Death of Fray Salvador Montano, Conquistador of Negros நாவல், கத்தோலிக்கச் சமயத்தின் பாவமன்னிப்பு முறை மற்றும் மீண்டெழுதல் குறித்த உரையாடலில் ஒரு தொலைதூர பிலிப்பீன்ஸ் கிராமத்திலிருக்கும் இரண்டு பாதிரிகளை நாவல் பதிவு செய்கிறது. நீத்தா உபாலி பெத்தேல் சென்னின் (Nita Upali Bethelsen) The monkey makers என்னும் நாவல் ஒரு கத்தோலிக்கக் குழந்தையின் பார்வையில் சில கருத்துகளை முன்வைக்கிறது. இறுதியாக, நியாஸ் சாமானின் (NIaz Zaman) The Baromashi Tapes சமகால வங்கதேசப் பெண்களின் பாரம்பரிய பரோமசி (Baromashi) நாட்டுப்புறப் பாடல்களில் காணப்படும் பண்பாட்டுப் புள்ளிகள் இயல்பாக இணைவதைப் பேசியுள்ளது.