‘எனது முதல் குழந்தை இந்தக் கடை’

நித்திஷ் செந்தூர்

வழி நெடுகிலும் விழிகளைப் பறிக்கும் பல்வேறு மாத, வார இதழ்கள். குழந்தைகள் முதல் பெரியோர் வரை விரும்பிப் படிக்கும் பத்திரிகைகளின் வரிசை. தீவெங்கும் உள்ள வாசகர்களைச் கவர்ந்திழுக்கும் ‘தம்பி’ கடையின் கைவரிசை. ஹாலந்து வில்லேஜ் கடைத்தொகுதிக்கு வெளியே சுமார் 80 ஆண்டு காலம் வாசிப்புக்குத் தீனி போட்ட ‘தம்பி’ சஞ்சிகைக் கடை, மே 5ஆம் தேதியன்று இரவு 9 மணியளவில் தனது கதவுகளை மூடியது. கதவுகளை மூடுவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்பு, சிராங்கூன் டைம்ஸ் கடையின் உரிமையாளரான ‘சேம்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் செந்தில்முருகனைச் சந்தித்து விவரங்களைக் கண்டறிந்தது.

  • கடையின் வரலாறு…

செய்தித்தாள்களை விற்பனை செய்யும் ஒட்டுக்கடையாக 1940களில் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் எனது தாத்தா P.கோவிந்தசாமி. 1950களுக்குப் பிறகு, எனது தந்தை பெரியதம்பி தாத்தாவிற்கு உதவி செய்ய, இந்தத் தொழிலில் இறங்கினார். அப்போது பெயர்ப்பலகை எல்லாம் கிடையாது.

அக்காலத்தில் இந்த வட்டாரத்தில் நிறைய இராணுவ முகாம்கள் இருந்தன. அங்குச் சேவையாற்ற வீரர்களுக்குத் தேவையான சஞ்சிகைகளை வாங்கிக் கொடுப்போம். சிங்கப்பூரில் இதழ்கள் கிடைக்கவில்லை என்றால், அவற்றை மலேசியாவில் வாங்கி விற்போம். காலவோட்டத்தில் அந்த எண்ணிக்கை பெருகப் பெருக, இது சஞ்சிகைக் கடையாக மாறியது. அன்று முதல் இன்று வரை கடை எங்கும் இடம்பெயராமல் லோரோங் லிப்பூட்டில் செயல்படுகிறது.

  • எப்போது தொழிலுக்குள் இறங்கிறீர்கள்?
சிராங்கூன் டைம்ஸ் இதழுடன் செந்தில்முருகன்

சிறுவயதில் அப்பாவிற்கு உதவியாக நான் செய்தித்தாள்களை வீடு வீடாகச் சென்று விநியோகம் செய்து வந்தேன். இளைஞனாக இருந்தபோது இந்தத் தொழிலுக்குள் வந்து சிக்கிவிடக்கூடாது என எண்ணினேன். நீண்ட நேரம் வேலை செய்யவேண்டும் என்பதால் இத்தொழிலை நான் விரும்பவில்லை. எனவே கடல் பொறியியல் (Marine Engineering) படிப்பைத் தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்தினேன்.

படித்துக்கொண்டிருக்கும்போது, அப்பாவின் உடல்நிலை குன்றியது. அவரது ஒரு காலை எடுக்கவேண்டிய சூழ்நிலை. குடும்பத்தில் நான் மூத்த பையன் என்பதால் குடும்பப் பொறுப்பைக் கையில் எடுக்கவேண்டிய கட்டாயம். விருப்பமில்லாமல் தான் 1990களில் இந்தத் தொழிலுக்குள் நுழைத்தேன். இன்று இதனைவிட்டு விலகச் சொன்னாலும் மனம் விலகாது. குடும்பம், குழந்தைகளைவிட இந்தக் கடையில்தான் அதிகமாக நேரத்தைச் செலவிட்டுள்ளேன். என் இரத்தத்திலும் இதழ்கள் ஊறிப்போய்விட்டன.

  • ஏன் கடைக்குத் ‘தம்பி’ எனப் பெயரிட்டீர்கள்?

அப்பாவின் பெயர் பெரியதம்பி என்பதால் அவரது நினைவாக ‘தம்பி சஞ்சிகைக் கடை’.

  • எத்தனை சஞ்சிகைகள் விற்கப்பட்டன?

ஆரம்பத்தில் விநியோகிப்பாளர்களிடமிருந்து சஞ்சிகைகளை வாங்கி விற்பனை செய்து வந்தோம். ஆனால் விநியோகிப்பாளர்களின் விலை சற்று அதிகமாக இருந்ததால் சஞ்சிகைகளை நேரடியாக இறக்குமதி செய்யத் தொடங்கினோம். வாடிக்கையாளர்கள் கேட்கும் எல்லா தலைப்புகளிலும் இதழ்களைத் தேடிப்பிடித்து இறக்குமதி செய்துவிடுவேன்.

ஒரு காலக்கட்டத்தில் 7,000க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இதழ்களை விற்பனை செய்தோம். அவை 14 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. ஆங்கிலம் உட்பட தமிழ், மலாய், சீனம், பிரெஞ்சு, ஜெர்மனி, டச்சு மொழிகளில் இதழ்கள் விற்கப்பட்டன.

  • இங்கு விற்கப்பட்ட தமிழ் நாளிதழ், சஞ்சிகைகள்…

சிங்கப்பூரின் ஓரே தமிழ் நாளிதழான ‘தமிழ் முரசு’ இங்கு விற்கபட்டது. அதோடு உள்ளூர்ப் பொழுதுபோக்கு சஞ்சிகைகளான இந்தியன் மூவி நியூஸும் (Indian Movie News) மூவிலேண்ட்டும் (Movieland) விற்கப்பட்டன. மலேசியாவிலிருந்து தமிழ் நேசன் நாளிதழ் மட்டுமே அதிகமாக இங்கு விற்கப்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த விகடன், நக்கீரன், குமுதம் முதலிய பத்திரிகைகளும் இங்கு விற்கப்பட்டன. ஒரு காலகட்டத்தில் வைரமுத்துவின் கவிதைகளையும் கூட விற்பனை செய்துள்ளேன்.

  • தமிழ் இதழ்களுக்கான வரவேற்பு…

தமிழ் இதழ்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழர்கள் கணிசமான அளவில் இந்த வட்டாரத்தில் இருந்ததே இதற்கு காரணம். எனது அப்பா வயதில் உள்ளவர்கள் பலர் ஆனந்த விகடன் இதழை வாங்கினர். மண்டோர்களாக இருந்த பலர் தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளை வாங்கிச் செல்வர். இளைய வயதினரும் குடும்பத்தினரும் விரும்பிப் படிக்கும் இதழாக ‘இந்தியன் மூவி நியூஸ்’ திகழ்ந்தது.

  • பொற்காலம்…

இதழ்களுக்கான பொற்காலம் என 1996 முதல் 2010ஆம் ஆண்டு வரை சொல்லலாம். அப்போது ஒவ்வொரு துறை சார்ந்த சஞ்சிகைகள் ஒவ்வொரு கால கட்டத்திற்குப் பிரபலமாக இருந்தன. இணையத்தின் வரவைத் தொடர்ந்து அது தொடர்பான சஞ்சிகைகள் மக்களிடையே பிரபலமாக இருந்தன. அதன் காரணமான கணினி, இணையம் தொடர்பான இதழ்களின் விற்பனை சூடாக இருந்தது.

பெண்கள், விளையாட்டு, நாட்டு நடப்பு, உடற்கட்டழகு, உடல்நலம், ஆடை அலங்காரம் தொடர்பான இதழ்கள் ஆமோக வரவேற்பைப் பெற்றன.

  • வாசிப்பின் நிலை…

இன்றைய மின்னிலக்க உலகில், இளையர்கள் அதிகம் வாசிப்பதில்லை என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. ஆனால், அது உண்மையல்ல. அண்மையில் டெய்லர் சுவிப்ட் (Taylor Swift) இசை நிகழ்ச்சி சிங்கப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

டெய்லர் சுவிப்ட் தொடர்பான செய்திகளைச் சுமார் 10 சஞ்சிகைகள் வெளியிட்டன. அவற்றை வைக்க வைக்க விற்றுப்போயின. வாங்கியவர்கள் இளவயதினர். ‘டைம்ஸ்’ இதழின் முகப்பு அட்டையில் டெய்லர் சுவிப்ட்டின் படம் இடம்பெற்றிருந்தது. அந்த இதழ் மட்டுமே 150 பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆயின.

தொட்டுணர்ந்து வாசிக்கும் அனுபவத்தை அச்சிதழ்கள் தருகின்றன. அந்த வாசிப்பு உணர்வை இணையத்தின்மூலம் பெற இயலாது. ஆணிவேரைத் தூண்டக்கூடியவை அச்சிதழ்கள். அச்சிதழ்களின் பிரசுரம் குறைந்தாலும் அதன் பிரபலம் குன்றாது. அதற்கென ஒரு கூட்டம் என்றும் இருக்கும்.

ஆணிவேரைத் தூண்டக்கூடியவை அச்சிதழ்கள். அச்சிதழ்களின் பிரசுரம் குறைந்தாலும் அதன் பிரபலம் குன்றாது.
  • கொவிட் காலக்கட்டம்…

கொவிட் காலக்கட்டம் இதழ்களின் விற்பனையைக் கைதூக்கிவிட்டது. பலரும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்ததால் இதழ்களை வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. அப்போது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று சஞ்சிகைகளை விநியோகம் செய்தோம்.

  • தொழிலைத் தக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள்…

வாடிக்கையாளர்களின் வீட்டுக்குச் சென்று இதழ்களை விநியோகம் செய்தோம். அதோடு, ‘கிராப்’ செயலிகளின் மூலமாகவும் சஞ்சிகைகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்தோம். அதற்கான தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்திவிடுவார்கள்.
அதிகரிக்கும் வாடகைச் செலவைச் சமாளிக்க கடையில் பணமாற்றுச் சேவை, காப்பிக் கடை ஆகியவற்றை அறிமுகம் செய்தோம். அதுமட்டுமின்றி, மாணவர்களுக்குத் தேவைப்படும் பள்ளித் தேர்வுத்தாள்களை விற்கத் தொடங்கினோம். பள்ளித் தேர்வுத்தாள்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

  • சிராங்கூன் டைம்ஸ் இதழைப் பற்றி…

சிராங்கூன் டைம்ஸ் இதழ் பற்றி இதற்கு முன்னர் நான் கேள்விப்பட்டதில்லை. முன்னமே தெரிய வந்திருந்தால், இவ்விதழை எனது கடைக்கு வரும் தமிழர்களிடம் விற்பனை செய்திருப்பேன்.

தமிழ் வாடிக்கையாளர்கள் வரும்போது தமிழ் இதழ் ஏதேனினும் உண்டா எனக் கேட்பார்கள். அவர்களுடம் சிராங்கூன் டைம்ஸ் இதழை அறிமுகம் செய்திருக்கலாம். 100ஆவது இதழை நோக்கி உள்ளூர் இதழ் ஒன்று அடியெடுத்து வைக்கிறது என்ற செய்தி மனத்திற்கு மனநிறைவையும் மகிழ்ச்சியையும் தருகிறது.

  • கடையைக் கைவிட காரணம்…
அக்காலத்தில் தம்பி சஞ்சிகைக் கடை

அதிகரிக்கும் வாடகையும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டுள்ள இதழ்களின் இடத்தைப் பாதியாகக் குறைக்கவேண்டிய கட்டாயமும் தான் முக்கிய காரணங்கள். அடுக்குகளைப் பாதியளவாகக் குறைத்தால் வாடிக்கையாளர்கள் அதிகமாக இங்கு வரமாட்டார்கள்.

நடைபாதையில் இதழ்களைத் தொட்டுணர்ந்து பக்கங்களைப் புரட்டிப் பார்த்து வாங்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெரிதும் ரசிக்கின்றனர். அதனையே அதிகம் விரும்புகின்றனர். இதழ்களைத் தேடி வந்து வாங்கும் வாடிக்கையாளர்களைவிட இந்தப் பக்கம் நடந்துபோகும்போது, சஞ்சிகைகளின் தலைப்புகளைப் பார்த்து ஈர்க்கப்படும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.

பாதியளவுக் கடை மட்டும் மிஞ்சினால் வாடிக்கையாளர்களின் இதழ் வாங்கும் அனுபவமும் பாதிக்கப்படும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிடும்.

  • கடையைவிட்டு பிரிவது…

எனது இயல்பான வாழ்க்கையைவிட்டு நான் இதழ்களில் இறங்கிவிட்டேன். என்னுடைய முதல் குழந்தை இந்தக் கடை. இதைவிட்டு பிரிவது என்பது என் முதல் குழந்தை மடிவதற்குச் சமம். என்னால் இதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

கண்ணீர் மல்க கடையின் கதியை செந்தில்முருகன் கூறியபோது, மனம் இளகியது. அதே நேரத்தில் கடையில் மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது, மனம் நெகிழ்ந்தது. செந்தில்முருகனுக்குத் நம்பிக்கை அளிக்கும் வார்த்தைக் கூறிய பின்னர், நேர்காணல் தொடர்ந்தது.

  • ஓரிரு தினங்களில் வந்த வாடிக்கையாளர்கள்…

கடை மே 5ஆம் தேதி மூடப்போகிறது என்ற செய்தியைக் கேட்டு வாடிக்கையாளர்கள் பலர் இங்கு வந்தவண்ணம் உள்ளனர். எங்களால் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பாரம்பரியம் ஒன்று அழியப்போகிறது என்பதை அறிந்து பலர் இங்கு வந்து நாங்கள் எவ்வாறு உதவிக்கரம் நீட்டலாம் என்று கேட்கிறார்கள். வழக்கமாக இங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து தங்களின் வாழ்த்துகள் தெரிவிக்கின்றனர். பலரும் வந்து நிழற்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.

கடை மூடப்படுவதற்கு ஓரிரு தினங்களுக்கு முன்பு, சமூக ஊடகங்களில் எல்லாம் தம்பி கடையைப் பற்றிய பேச்சு தான். பலரும் தங்கள் பள்ளி நாள்களில் அங்குச் சென்று சஞ்சிகைகளை வாங்கிச் சென்ற நினைவலைகளைப் பதிவுகளாக்கினர்.

மக்கள் கூட்டம் சஞ்சிகைக் கடையில் அலைமோதியது. குழந்தைகள், இளவயதினர், பதின்ம வயதினர், பெரியோர், மூத்தோர் என அனைத்து வயதினரையும் அங்குக் காண முடிந்தது. பசுமையான நினைவுகளைப் பகிர்ந்தவாறு வாடிக்கையாளர்கள் செந்தில்முருகனிடம் அளாவளாவிக் கொண்டிருந்தனர். நிழற்படக் கருவிகளுடன் படையெடுத்தவர்கள் கடையையும் சேமையும் (செந்தில்முருகனையும்) தங்கள் ஆவணப்பெட்டியில் சேமித்துவைத்தனர்.

சிங்கப்பூர் நவீன தேசமாக இருந்தாலும் சிங்கப்பூரர்கள் பாரம்பரியத்தின்மீது அதிக நாட்டம் கொண்டுள்ளனர் என்பதற்குத் ‘தம்பி’ சஞ்சிகைக் கடையில் கூடிய கூட்டம் ஓர் அத்தாட்சி. ஒரு பொருள் இருக்கும்போது, அதன் மதிப்பை மக்கள் அவ்வளவாக உணர்வதில்லை. அதே பொருள் இல்லாமல்போகும்போது அந்தப் பொருளின் மதிப்பு பன்மடங்கு கூடுகின்றது. ‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’ செய்வதில் எந்தவொரு பயனும் இல்லை.

கல்வியமைச்சர் சான் சுன் சிங் தமது ஃபேஸ்புக் பதிவில் ‘தம்பி’ சஞ்சிகைக் கடையை வேறு இடத்தில் திறப்பதற்கு வழிகள் ஆராயப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார். அது தம்பி கடைக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று தலைமுறைகளாகச் செயல்பட்டு வந்த ‘தம்பி’ சஞ்சிகைக் கடை இன்று அங்கு இல்லை. ஒரு விடயம் தொய்வின்றித் தொடர மக்களின் ஆதரவும் நிதி ஆதரவும் மிக முக்கியம். அது இதழ்க் கடையாக இருந்தாலும் சரி, உள்ளூர்த் தமிழ் இதழ்களாக இருந்தாலும் சரி.

100ஆவது இதழில் இந்த நேர்காணல் இடம்பெறுவது திருப்புமுனை. 80 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த உள்ளூர் இதழ்க் கடை மூடப்பட்டுள்ளது. 100 இதழ்களையும் தாண்டி ஓர் உள்ளூர் தமிழ் இதழ் இன்னும் வெளிவந்துகொண்டுள்ளது. கூடிய விரைவில் தம்பிக் கடை மீண்டும் தோன்றும் என்று நம்பிக்கை கொள்வோம்!