ஒன்பது கஜப் புடவைகள் பிறந்த கதை – ஒரு படைப்பிலக்கியப் பயணம்

முனைவர் பிரசாந்தி ராம்

படைப்பிலக்கியம் படைப்பது (creative writing) இயற்கையிலேயே ஒருவருக்கு அமையும் உள்ளார்ந்த திறனாகப் பலரால் கருதப்படுகிறது. அக்கருத்துக்கு வலுசேர்ப்பதைப்போல, படைப்பிலக்கியம் ஒரு கற்றல்துறையாக அடையாளம் காணப்படுவதற்கு முன்பே ஏராளமான படைப்பாளிகள் புகழ்பெற்று விளங்கத் தொடங்கிவிட்டனர். சார்ல்ஸ் டிக்கென்ஸ், மார்க் ட்வெய்ன் போன்ற எழுத்தாளர்கள் முறையான கல்வியை முடிக்காதவர்கள். இன்று இன்று கல்வி நிலையங்களில் பாடங்களாக வைக்கப்பட்டுள்ள Great Expectations, Adventures of Huckleberry Finn போன்ற செவ்வியல் ஆக்கங்களைத் தந்துள்ளனர்.

மேற்கண்ட உண்மைகளைக் கருத்திற்கொண்டு பார்க்கும்போது, படைப்பிலக்கியம் படைத்தலில் பட்டம்பெற விரும்பும் ஒரு மாணவர் தம் படிப்புச் செலவுக்குப் பெற்றோரிடம் பணம்கேட்பது எளிதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. அவ்வகையில் என் பெற்றோர் சற்று வித்தியாசமானவர்கள் எனலாம்.

கலைக்கல்வியை இளக்காரமாகப் பார்க்கும் பல இந்தியப் பெற்றோருக்கு இடையே, ஆங்கில இலக்கியம் படிக்கவிரும்பிய என்னை என் பெற்றோர் ஆதரித்து ஊக்குவித்தனர். சொல்லப்போனால் நான் இலக்கியம் படிக்கவிரும்பியதற்குக் காரணம் அவர்களே.

நான் சிறுபிள்ளையாக இருந்தபோது என் அம்மா புத்தகங்களை வாசித்துக்காட்டுவார். எங்கள் வீட்டு வரவேற்பறையின் ஒரு மூலையில் ஒரு படிப்பகம் இருந்தது. சிறு மேசை, குட்டி முக்காலி அவற்றுடன் கோபுரமாக அடுக்கப்பட்ட ஈனிட் பிளைடன் (Enid Blyton), லேடிபர்ட் (Ladybird) வரிசை புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள். என் தந்தை பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் பேசுவார். வீட்டில் சிங்கிலீஷ் பேசப்படுவதை அவர் மென்மையாகத் தடுத்துவிடுவார். பிரிட்டிஷ் நகைச்சுவை நிகழ்ச்சிகள், ஸ்டார் ட்ரெக், எக்ஸ் ஃபைல்ஸ் போன்ற அறிபுனை (sci-fi) நிகழ்ச்சிகளின் ரசிகர் அவர். அவற்றின் தாக்கத்திலேயே நானும் வளர்ந்தேன்.

ஆங்கில இலக்கியத்தில் இளநிலைப் பட்டத்தை முடித்ததும் ஏதோ ஓர் ஆழமான நிறைவின்மை என்னைப் பிடித்து உலுக்கத் தொடங்கியது. இன்னும் தீவிரமாக இலக்கியத்தைக் கற்கவேண்டும் என்று உள்ளிருந்து ஏதோவொன்று உந்திக்கொண்டே இருந்தது. இப்போது யோசித்துப் பார்க்கையில், படிப்பை முடித்து வெளியே சென்றால் நிஜ உலகத்தை நேர்கொள்ள வேண்டுமே என்ற அச்சமும் மேற்கல்வியைத் தொடர நான் நினைத்ததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இளநிலைப் பட்டத்திற்காக ‘வாசிப்பது எப்படி?’ என்று மாதக்கணக்கில் கற்றதன் விளைவாக, அடுத்தது ‘எழுதுவது எப்படி?’ என்று கற்கலாமே எனத் தோன்றியது. யாருக்குத் தெரியும், தம் எழுத்துகளால் என்னை அசைத்த வர்ஜீனியா வுல்ஃப், மார்கரெட் அட்வுட் ஆகியோரைப்போல ஒருவேளை என்னாலும் இலக்கியம் படைக்க முடியலாம்!

படைப்பிலக்கியம் படைத்தலில் மேற்கல்வியைத் தொடரவிரும்புவதாகத் தெரிவித்ததும் என் தந்தை அளப்பரிய மகிழ்ச்சியடைந்தார். படைப்பிலக்கியத்தில் பட்ட மேற்கல்விக்கு இடம் கிடைத்ததும் முதலில் வாழ்த்தியதும் அவர்தான். தம் பிள்ளைகளில் ஒருவராவது முனைவர் பட்டம் பெறவேண்டும் என்று அவருக்கு ஒரு கனவு இருந்தது. புத்தகங்களை வெளியிட்டுப் பிரபல எழுத்தாளராக ஆகாவிட்டாலும் பல்கலைக்கழகத்தில் பாடமெடுப்பேன் என அவருக்கு ஒரு நம்பிக்கை. அதிர்ஷ்டவசமாக, ஒரு புத்தகத்தையும் வெளியிடும் வாய்ப்பு எனக்குப் பின்னாளில் அமைந்தது.

என் அம்மாவும் மேற்கல்வி குறித்த என் விருப்பத்திற்கு இசைந்ததோடு கல்விச்செலவுக்கும் ஏற்பாடு செய்தார். என்னை என் வழியிலேயே அவர்கள் விட்டுவிட்டதால் என்னை நானே தேடிக்கண்டுணர முடிந்தது. படைப்பிலக்கியம் படைத்தலில் முதுநிலைப் பட்டம் பெற்றபின் இன்னொரு தடுமாற்றத்தை எதிர்கொண்டேன். முதல் நாவலை எழுதுவது கடினமாக இருந்தது. ஒரு ‘சிங்கப்பூர்’ நாவலை எழுதவேண்டும் என நான் விரும்பியதே அதற்கு முக்கியக்காரணம். ஏனோ எனக்கு நானே அப்படியொரு அழுத்தத்தை அளித்துக்கொண்டேன்.

சிங்கப்பூரையும் அதன் பல்பண்பாட்டு, பன்மொழிச் சூழலையும் முழுமையாகப் புனைவில் பிரதிபலித்துக் காட்டவேண்டும் என்ற ஆவல் எனக்கிருந்தது. உள்ளூர் எழுத்தாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால், அவர்களுள் ஒருவராக ஆகப்போகும் என் கடமை அது என்றும் நினைத்தேன். எல்லாவற்றையும் படைப்பில் கொண்டுவரவேண்டும் என்ற பரபரப்பில் எதையுமே சரியாகக் கொண்டுவர இயலவில்லை. மேலும் அப்போது ஒரு முழுநேர வேலையிலும் நான் சேர்ந்திருந்ததால் படைப்பிலக்கியம் கோரும் நேரத்தையோ ஆற்றலையோ அதற்கு அளிக்க இயலமால் திணறினேன்.

எழுதியதெல்லாம் இட்டுக்கட்டி எழுதியதைப்போலவோ சிறுபிள்ளைத்தனமாகவோ இருப்பதாகத் தோன்றியது. அம்மாவின் பெரிய காலணிகளை அணிந்துகொண்டு வீட்டுக்குள் இங்குமங்கும் தள்ளாடி நடக்கும் குழந்தையைப்போல அவ்வெழுத்துகள் அமைந்தன. போதாக்குறைக்கு, பெருநிறுவனங்களில் வெற்றிகரமாக வேலைபார்த்தபடியே எழுத்திலும் சாதித்தவர்களின் கதைகள்வேறு ஒருபக்கம் என்னை வாட்டி வதைத்தன. காலையில் ஒருமணி நேரம் முன்கூட்டியே எழுவார்களாம், கையோடு ஆயிரம் சொற்களை மளமளவென்று எழுதிவிடுவார்களாம். எப்படி அவர்களுக்கு அது சாத்தியமாகிறது? அன்றாடத்தின் சுழலில் நான் மட்டும் ஏன் சிக்கித் தவிக்கிறேன்?

காலம் ஓடவோட ஒருவித குற்றவுணர்ச்சி என்னை ஆட்கொண்டது. அரிதான பெற்றோரும் அவர்களுடைய ஆதரவும் அமைந்தும் என்னால் ஏன் சிறப்பாக எழுத இயலவில்லை? அப்படியே எழுதினாலும் எதுவும் வெளியிடும் தரத்திலில்லை என்று தோன்றியது. என்றேனும் உருப்படியாக ஒன்றை எழுதுவேனா என்ற ஐயமும் தலைதூக்கியது. நம்பினால் நம்புங்கள், அத்தகைய ஆயாசமும் சோர்வும் மேலோங்கிய ஒரு தருணத்தில்தான் படைப்பிலக்கியத்தில் முனைவர் பட்ட ஆய்வுப் படிப்புக்குச்சேர உள்ளூர்ப் பல்கலைக்கழகம் ஒன்றுக்கு விண்ணப்பித்தேன். ஒரு சிறுகதைகூட அப்போது நான் வெளியிட்டிருக்கவில்லை. எனக்குள் நானே அந்நியப்பட்டு வாழ்ந்த காலம். எந்த நம்பிக்கையில் விண்ணப்பித்தேன் என்று இன்றுவரை புரியவில்லை.

படிப்பைத் தொடங்குமுன் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு ஒரு சுற்றுப்பயணம் குடும்பத்துடன் சென்றேன். முதல் வேலையை விட்டதற்கும் அடுத்தது தொடங்கவிருந்த நான்காண்டு கல்விக்கும் இடையே அமைந்திருந்த அப்பயணம் எனக்குப் புத்துணர்ச்சி அளித்தது. வேலையின் பொருட்டு வெகுநாள்களாக விடுபட்டிருந்த வாசிப்பை அப்பயணத்தின்போது மீண்டும் தொடங்கினேன். பால்லி கௌர் ஜஸ்வாலின் (Balli Kaur Jaswal) முதல் நாவலான ‘இன்ஹெரிட்டன்ஸ்’ (Inheritance, 2013) வாசித்தேன்.

சிங்கப்பூர் பஞ்சாபி குடும்பம் ஒன்றில், 1970களுக்கும் 1990களுக்கும் இடையிலான காலக்கட்டத்தில், தனிப்பட்ட, குடும்ப உறவுகளுக்கிடையிலான சிக்கல்களை அந்நாவல் தன்போக்கில் காட்டியிருந்தது. சரியான கலைப்படைப்பு ஒன்றையோ நல்ல கலைஞர் ஒருவரையோ வாழிவின் சரியான தருணத்தில் கண்டடைவது என்பார்களே, அதுதான் எனக்கு இன்ஹெரிட்டன்ஸ் விஷயத்தில் நடந்தது.

நாவலின் நீலமும் மஞ்சளும் கலந்த அட்டை என்னை இழுத்துக்கொண்டது. ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் நாராயண், அம்ரித் இருவரின் பாடுகளை நானும் பட்டேன். அவர்களோடு சிரித்தேன், அவர்களுடனேயே திரிந்தேன். என் சிங்கப்பூர் அதில் இருந்தது. நானும் அவரகளுள் ஒருவராகவே உணர்ந்தேன்.

நான் எழுத விரும்பிய ‘சிங்கப்பூர்’ நாவல் அது. உக்கிரமான உள்ளூர்த்தன்மை கொண்டது, அதனாலேயே உலகளாவிய வீச்சும் கொண்டது. என்னைப்போலவே பேசும், என்னைப்போலவே உண்டு, உடுத்தி, உலவும் மக்களின் கதைக்கு உள்ள மகிமையை அன்றுதான் நான் முதன்முதலில் உணர்ந்தேன். புதினத்துக்காகப் புது இனத்தைத் தேடிப்போக வேண்டியதில்லை, நாமும் கதை நாயகர்களே. பெர்த் பயணத்தில் கிடைத்த அந்தப் புதிய வெளிச்சத்துடன் முனைவர் பட்டத்திற்குச் சேர்ந்தேன்.

சிங்கப்பூர்த் தமிழ்க் கதாமாந்தர்களைப் படைப்பில் அப்படியே காட்டவேண்டும் என்ற என் உறுதிப்பாடும் தீவிரமும் அதிகரித்தது. தமிழ் அம்மாக்கள் தம் பிள்ளைகளை ‘கண்ணா’, ‘குட்டி’ என்றெல்லாம் கொஞ்சுவது கதையில் கிடைக்கவேண்டும். சிங்கப்பூரின் தனித்துவ வீடமைப்பு, வளர்ச்சிக்கழக வீடுகள் கதைக்களமாக அமையவேண்டும். சாம்பார், அவியல், மீ கோரிங், காயா டோஸ்ட் அனைத்தின் சுவையையும் வாசகர்கள் ருசிக்க வேண்டும். இந்தியர் ஆடைகளின் எண்ணற்ற வண்ணங்கள், அன்றாடப் பழக்கவழக்கங்கள் வழியாக என் புனைவு சிங்கப்பூரை வாசகர்கள் காணவேண்டும். ஒருகாலத்துக் காலனித்துவமொழியான ஆங்கிலத்தை வசப்படுத்தி அதைக்கொண்டே தமிழ்க் கதாமாந்தர்களின்மேல் வெளிச்சத்தைப் பாய்ச்சவேண்டும்.

உறுதிப்பாடு, தீவிரமெல்லாம் சரிதான். ஆனால் படைப்பிலக்கியம் என்பது ஏதோ ஒரு குறிப்பிட்ட இலக்கு அன்று. இத்தனைக் காலத்தில் கற்றுமுடித்துவிடலாம் என்று திட்டமிட இயலாது. ஓரடி எடுத்து வைக்கலாம், அதிகபட்சமாக இன்னொன்று. முதலடியைக் காட்டிலும் அடுத்தது கொஞ்சம் தெம்பாக வைக்கலாம், அவ்வளவுதான். அந்த அளவில் திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

என் நான்காண்டு முனைவர் பட்டக் கல்வியின்போது படைப்பிலக்கியம் குறித்த என் கனவுகளும் பார்வைகளும் மாறிக்கொண்டே வந்தன. ஒவ்வொரு மாற்றத்திலும் ஒவ்வொரு பாடம்.

முதல் நாவலில் ஓர் ஆண் கதாநாயகரை வைத்து ஓர் அத்தியாயம் எழுதினேன். ஏதோ குறைவதாகத் தோன்றியது. “கதாபாத்திரத்தின் உடலுக்குள்ளே புகுந்து” பார்ப்பது அவசியம் என்றார் என் வழிகாட்டி. கூடுவிட்டுக் கூடுபாயும் அந்த வித்தை எனக்குக் கைவரவில்லை. பெண்ணை மையக்கதாபாத்திரமாக ஆக்கியதும் அச்சிக்கல் தீர்ந்தது. ஆனால் புதிய சிக்கல் முளைத்தது. என் கதைக்குள் ஒன்றல்ல, ஏராளமான நாயகர்கள் இருந்தனர்! அவர்களுக்கு அக்கதையின் வரம்புகள் போதிய இடமளிக்கவில்லை. நாவல் வடிவமேகூட ஒத்துவராதோ என்று அஞ்சினேன். அன்று எனக்கு ஓரளவுக்குத் தெரிந்திருந்த ஒரே படைப்பிலக்கிய வடிவம் அதுதான்.

படைப்பிலக்கியத்தின் வெவ்வேறு சாத்தியங்களைப் புத்தகங்களில் தேடத்தொடங்கினேன். வாசித்துத் தள்ளிக்கொண்டே வந்தபோது ‘சிறுகதைக்கொத்து’ (short story cycle) என்ற வடிவத்தைக் கண்டடைந்தேன். ஒவ்வொன்றாகப் பார்த்தால் தனித்தனிக் கதைகளாகவும் ஒன்றாக இணைத்துப்பார்த்தால் வேறொரு முழுமையான கதையாகவும் இணையும் அவ்வடிவம் எனக்கு உவப்பாக இருந்தது. ஒரே குடும்பத்துடன் வெவ்வேறு வகையில் தொடர்புடைய ஒன்பது பெண்களைக் கதாமாந்தர்களாக வைத்து அப்புனைவை எழுதினேன். அப்படியும் எழுதலாம் என்பது எனக்கு முனைவர் பட்டத்துக்குச் சேரும்போது அறவே தெரியாது.

படைப்பிலக்கியம் படைப்பதின் மகிமை தனிதான் என்றாலும் படைப்பூக்கம் உள்ளுக்குள் நெருக்கியடித்து உந்தித்தள்ளும் காலக்கட்டத்தில் அவ்வப்போது பிழியப்பட்ட ஒரு சக்கையாக உணர நேரிடுவது இயற்கை. எனக்கும் அது நடந்தது. ஒவ்வொரு கதைக்கும் தனித்தனி மொழிநடை, பார்வைக்கோணம், கதைக்களம் அமைப்பதும் அவற்றுக்கிடையே இணைப்புகளை நெய்வதும் எளிதாக இல்லை. வாரக்கணக்கில் எதையும் வாசிக்கவோ எழுதவோ திராணியற்று ஜடமாக உறைந்துபோய்க் கிடந்தது உண்டு. அப்போது நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் வீழ்ந்த என் தந்தையைக் கவனிக்க வேண்டியிருந்ததால் அந்நிலை மேலும் மோசமானது. இலக்கிய வாசனையுடன் ஏதாவது எழுதுவது பிரம்மப் பிரயத்தனமாக இருந்தது.

படைப்பூக்கமிக்க தருணங்கள் மட்டுமின்றி, உடைந்துபோய் நின்ற தருணங்களும் பல அவசியமான பாடங்களைக் கற்பித்தன என்பேன். வெறுத்துப்போய் நின்றபோதெல்லாம் ஒரு புத்தகமோ ஒரு பாடலோ ஒரு மனிதரோ தோள்நின்றனர். அப்போதுதான் பொங்கிவரும் படைப்பூக்கம் தொடர்ந்து மிளிர ஓய்வும் அவசியம் என்பது தெரிந்தது. கடும் அலைக்கழிப்புகளுக்கு இடையிலான அத்தகைய ஓய்வு ஓர் ஆன்ம அனுபவம். நம்மீது நடந்தேறும் அனைத்திற்கும் மேலான வேறொன்றாக நாம் இருக்கிறோம் என்பதை உணரச்செய்யும் ஓர் அரிய தருணம்.

ஓய்வின் அவசியத்தைப் புரிந்துகொண்ட பிறகு, நிம்மதியாக ஓய்வை அனுபவித்ததோடு, மதியத் தூக்கத்தைக் குறைத்தல், அதிகாலைத் துயிலெழல் என எங்கிருந்தெல்லாம் நேரத்தைத் திருடலாம் என்பதையும் மெல்லமெல்லக் கண்டுகொண்டேன். இசை, நாடகம், அரும்பொருளகம், பிரஞ்ச் (brunch), பூங்கா நடை, புத்தகங்கள், ஆவணப்படங்கள், கொண்டாட்டங்கள் எதுவும் விலக்கில்லை. ஒவ்வொன்றும் அதனதன் வழியில் வாழ்க்கைப் பார்வையை விரிவாக்கின; என்னை எழுத உந்தின.

இப்போது என் முதல் புத்தகம் Nine Yard Sarees வெளிவந்துவிட்டது. நடக்கவே நடக்காது என்று நாம் நினைக்கும் ஒன்றை இலக்காக வரித்துக்கொண்டு அதை நோக்கி நடைபோடுவது வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு என் புத்தகமும் ஒரு சான்று. என் புத்தக வெளியீட்டைக் காண என் அப்பா இவ்வுலகிலில்லை என்றாலும் என் முதல் கதைகள் The Panasonic, The Cassette ஆகியவை வெளிவந்தபோது அவற்றைக் கொண்டாடித் தீர்த்தார். என் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு முடிந்ததும் “டாக்டர் ராம்” என்று சொல்லி ஒருவித ததும்பிய மனநிலையில் கைகுலுக்கினார். என் நூலில் நான் இருப்பதைப்போலவே என் பெற்றோரும் உள்ளோட்டமாக இருக்கின்றனர்.

பத்தாண்டுக்காலம் படாதபாடுபட்டு இன்று வந்துசேர்ந்திருக்கும் இந்த இடத்தில் என்னை வர்ஜீனியா வுல்ஃபுடனோ மார்கரெட் அட்வுடுடனோ நான் ஒப்பிட்டுக்கொள்ள மாட்டேன். இப்படித்தான் எழுதவேண்டும் எனத் தேவையற்ற சுமைகளை என்மீது ஏற்றிக்கொள்ளவும் மாட்டேன். என் சொந்த வழியில், நான் கற்றதையும் தொடர்ந்து கற்பதையும் வைத்துக்கொண்டு எழுதப்பார்க்கிறேன். என்னைப் போன்றவர்களையும் என்போல் அல்லாதவர்களையும் என் கதைகளுக்குள் புனைந்துகொண்டே இருக்கப்போகிறேன். அவர்களில் என்னையும் என்னில் அவர்களையும் கண்டடையப்போகிறேன்.

ஒரு படைப்பாளி என்ற அடையாளத்தை ஈட்டிக்கொள்ள நான் மேற்கொண்ட இந்த நீண்ட, கொந்தளிப்பான பயணத்தைத் திரும்பிப் பார்க்கும்போது அதைவிட மேம்பட்ட வாழ்க்கையை என்னால் வாழ்ந்திருக்க முடியாது என்றே தோன்றுகிறது.