ஒரு வழியடைப்பில்…

0
37
மஹேஷ்

ஒரு வழியடைப்புக்கு அருகில்,
குற்றக் குருதிகளால் கறைபட்டு
தூய இரத்தங்களால் கழுவப்பட்ட
கற்களுக்கு இடையில்,
பல ஆண்களுடன்
அந்த பனிரண்டு வயது சிறுவனும் கொண்டுவரப்பட்டான்.
“நீ அவர்களைச் சேர்ந்தவனா?”
அந்தச் சிறுவன் “ஆம்” என்றான்.
“நல்லது” என்ற அந்த அதிகாரி,
“உன்னைச் சுடப் போகிறோம். காத்திரு” என்றான்.
அவன் கண்முன்னே மின்னித் தெறித்தன பிழம்புகள்.
சுவரோடு நின்றிருந்த
அவனுடன் வந்தவர்கள் அனைவரும்
செத்து விழுந்துகொண்டிருந்தனர்.
“நான் என் வீட்டுக்குப் போய் இந்த கைக்கடிகாரத்தை
என் தாயிடம் தந்துவிட்டு வரட்டுமா?” சிறுவன் கேட்டான்.
“தப்பிக்க எண்ணுகிறாயா?”
“நான் திரும்ப வருவேன்”
“பயந்தாங்கொள்ளிகள். எங்கே வசிக்கிறாய்?”
“அதோ.. அந்த நீறூற்றுக்கு அருகில். நான் திரும்ப வருவேன் கேப்டன்”
“ஒடிப்போ… போக்கிரிப் பயலே”
சிறுவன் ஓடினான். குரூரத் தந்திரம்!!
அதிகாரியுடன் சேர்ந்து வீரர்களும் சிரித்தனர்.
இறப்பவர்களின் ஓலமும் சிரிப்புடன் கலந்தது.
சிரிப்பு சட்டென நின்றது.
தீரமான வியாலா*வைப் போல
சிறுவன் அவர்களெதிரே வந்து நின்றான்.
“இதோ வந்துவிட்டேன்”
முட்டாள் மரணம் வெட்கப்பட்டது.
அதிகாரி சிறுவனை மன்னித்து அனுப்பிவிட்டான்.

கவிஞர் பற்றிய குறிப்பு

ஓவியர், மனித உரிமை ஆர்வர், அரசியல் பார்வையாளர் என்று பன்முகங்கள் கொண்ட ஃப்ரெஞ்சு நாட்டின் தேசியக் கவிஞர் விக்டர் ஹ்யூகோவுக்கு அறிமுகம் தேவையில்லை. அவர் தன் நாட்குறிப்பில் 1871இல் பாரிஸ் கம்யூன் என்ற இயக்கத்தையும், அப்போதைய அரசையும் ‘மூடத்தனமான இயக்கமும் மூர்க்கத்தனமான அரசும்” என்று விமர்சித்து ‘Sur une barricade” என்ற இந்தக் கவிதையை எழுதினார்.

(சரியான புரிதல்களுக்காக ஃப்ரெஞ்சு மூலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பின் உதவியும் தேவைப்பட்டது)