கடப்பாடு

தமிழ்ச்செல்வி இராஜராஜன்

‘My mother would kill me or disown me.’ சிங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள ஓர் உயர்நிலைப்பள்ளியின் முதல் தளத்தில் உயர்நிலை 4 Compassionate வகுப்பில் மிஸ் நாடியா ஒளிவில்லைகளைக் காட்டி சிங்கப்பூர் வரலாற்றை மாணவர்களிடம் கடத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். இனியாவின் கண்களும் காதுகளும் உன்னிப்பாக கவனிப்பதுபோல் இருந்தாலும் சற்றுமுன் அவளுடைய தோழி சொன்ன செய்தியினால் ஆசிரியர் சொல்வதில் ஒரு கருத்துக்கூட மனத்தில் ஏறவில்லை. ‘எப்படி ஏமாந்தாள்? கொஞ்சம் யோசித்திருந்தாலே இந்த சங்கடத்தில் சிக்காமல் இருந்துருக்கலாமே! எப்படி இவ பின்விளைவுகளைப்பத்தி யோசிக்காம இருந்தா? நல்லா படிக்கிற பொண்ணு! ஐயோ எப்படி சமாளிக்கப் போறா? மண்டை வெடித்திடும்போல இருக்கே. பாவம் அவளுக்கு எப்படி இருக்கும்?’

வலது பக்கத்தின் முன் வரிசையில் அமர்ந்திருந்த தோழியின் பக்கம் கண்கள் திரும்பின. இவளிடம் பேசிய பிறகு முகம் கொஞ்சம் தெளிவானதைப்போல் இருந்தது. சன்னலிலிருந்து வந்த ஒளிக்கீற்று அவள்மேல் பட்டதில் முகம் சற்று பளப்பளப்பாகத் தெரிந்தது. ‘இந்த மாதிரி நேரத்துல பெண்கள் அழகாகுவாங்கன்னு கேள்வி பட்டிருக்கோம். சே! பூமர் ஆன்ட்டி மாதிரி யோசிக்கிறேன். யார் நம்மிடம் அக்கறையா கேட்பார்களென்று காத்துக் கொண்டிருந்திருக்கா. நான் கேட்டதும் அத்தனையையும் கொட்டிவிட்டாள்’ அவளைப் பார்த்தபடியே சிந்தனை ஓடியது.

தோழி இயல்பாகவே அனைவரிடமும் நட்பாகப் பழகக் கூடியவள், பாடம் நடத்தும்போது பாடத்தைப் பற்றிய கருத்துகளைக் கேட்டு வகுப்பில் மாணவர்களை பேச, விவாதிக்க ஊக்குவியுங்கள் என்று கல்வி அமைச்சு சொல்லியுள்ளது என்பதற்காக ஆசிரியர்கள் மாணவர்களிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். பேசக்கூடாத நேரத்தில் வாயை மூடாதவர்கள் ஆசிரியர்கள் கேட்கும்போது அவர்களின் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைப்பதற்குள் ஆசிரியர்களுக்கு மொத்த சக்தியும் போய்விடும். ஆனால் இனியாவோட தோழி வகுப்பு விவாதங்களில் உற்சாகமாகப் பங்கேற்பாள். ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால்கூட தனது கருத்துக்களை எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு கை உயர்த்தி தன்னுடைய இருப்பை காட்டிக்கொண்டே இருப்பவள், கடந்த மூன்று நாட்களாக அவளது உற்சாகத்தின் மீது நிழல் படிந்ததுபோல் எந்த ஒரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் திடீரென்று முட்டாளாகி விட்டாளோ என்கிற மாதிரி அமைதியாக இருந்தாள். கண்களில் சோர்வும் களைப்புமாகக் காணப்பட்டதோடு அடிக்கடி கழிவறைக்கும் சென்று வந்தாள். ஆசிரியர் கேட்டதற்கு Monthly Problem என்று சொல்லிவிட்டாள்.

இனியாவால் பேசாமல் இருக்க முடியவில்லை. மதிய வேளை அனைவரும் சென்ற பிறகு தனியாக உட்கார்ந்திருந்தவளின் அருகில் அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் பிடித்துக்கொண்டு கேட்கும்போதுகூட அவளது வீட்டில் ஏதோ பிரச்சினை; ஆறுதல் சொல்லலாம் என்று நினைத்தாளேயொழிய எதுவுமே பேச முடியாதபடி இப்படி மலைபோன்ற செய்தியைச் சொல்வாளென்று இனியா எதிர்பார்க்கவேயில்லை. ‘எப்படி இதைக் கடக்கப் போகிறாள்? என்ன செய்யப் போகிறாள்?’ இனியாவால் இதைத் தாண்டி வேறெதிலும் கவனத்தைச் செலுத்த இயலவில்லை. இதே மனநிலையில் தன்னால் துணைப்பாட வகுப்புக்குச் செல்ல முடியாது என்பதால் “உடல்நிலை சரியில்லை” என்று ஆசிரியருக்கு செய்தி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டாள். யாரும் இல்லாத அமைதி பிடித்திருந்தது.

குளியலறைக்குச் சென்று தண்ணீரை திறந்துவிட்டு அப்படியே நின்றாள். ‘கொஞ்சம்கூட மனசு உறுத்தலையா? அப்படியிருந்திருந்தா இப்போ இந்த அவஸ்தை இருந்திருக்காதே? அந்த நேரத்துல யார் எப்படி நடந்துக்குவாங்கன்னு தெரியாது. கேட்ட எனக்கே இப்படி இருக்கே. அவ எப்படி பள்ளிக்கு வந்துகிட்டு இருக்கா?’ தண்ணீரைவிட அவளது எண்ணங்கள் வேகமாகக் கொட்டின.

வேலை முடிந்து வந்த அம்மா இவளைப் பார்த்ததுமே “உடம்புக்கு முடியலையா, முகம் ஏன் இப்படி இருக்கு?” கேட்டபடியே நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். “அதெல்லாம் ஒன்னுமில்லம்மா” இயல்பாகச் சொல்வதுபோல் கூறியவளை கூர்மையாக பார்த்தபடியே வெளியேறினாள்.

அம்மா சென்றதும் கண்ணாடி முன் நின்று பார்த்தவளுக்கு தனது முகத்தில் தெரியும்படியாக மாற்றம் இல்லை என்பதுபோல்தான் இருந்தது. ‘இதையே அம்மா கண்டுபிடிச்சிட்டாங்களே! அவ மாதிரி நடந்திருந்தால்… எவன் கூட படுத்திருந்திட்டு வந்த? என்று கேட்டிருப்பார்களென்று தோன்றியது. ‘தோழியின் அம்மா எப்படிக் கண்டுபிடிக்காமல் இருக்கிறார்?’ ஆச்சரியமாக இருந்தது.

ஒரு பதின்ம வயதுப் பெண் குழந்தையைப் பிரசவிப்பது எப்படிங்கிறதை யூ டியூபில் பார்த்து குழந்தையைப் பெற்றெடுத்து அக்குழந்தையை வீட்டு அலமாரியிலேயே வைத்திருந்தாள் என்கிற செய்தியை சில மாதங்களுக்கு முன் ஊடகத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. ‘அது போல் தோழியின் நிலைமையும் செய்தித்தாளில் வருமோ? புத்திசாலிப் பொண்ணு. இப்படி முகநூல்ல நட்பாகி ஏமாந்து போவாளா?’ திக்கு தெரியாமல் ஓடும் எண்ணங்களை அடக்க அடுத்தவாரம் நடக்கவுள்ள வேதியியல் தேர்வுக்கு படிப்பதில் கவனத்தைச் செலுத்த முயற்சித்தாள். ‘இந்த நேரத்துல மார்னிங் சிக்னஸ் இருக்கும்னு சொல்வாங்களே! பள்ளிக்கூடத்துல எப்படிச் சமாளிக்கிறா? அதனால்தான் அடிக்கடி கழிவறைக்குப் போறாளோ?’ ஐந்து நிமிடங்கள்தான் வேதியியலுக்குள் இருக்க முடிந்தது. தோழியின் கண்களில் தெரிந்த பீதியும் கலக்கமும் கண்முன் வந்து மறைந்தது. ‘நாட்களெல்லாம் கடகடன்னு முடிஞ்சி எதுவாயிருந்தாலும் முடிவு என்னன்னு தெரிஞ்சிட்டா நல்லாருக்குமே.’ தலை வலிப்பதுபோலிருந்தது. இவ்வளவு பெரிய விஷயத்தை மனதில் வைத்துக்கொண்டு தன்னால் இயல்பாக இருக்க முடியாது என்றுணர்ந்து அம்மாவை தன் அறைக்கு அழைத்து வந்தாள்.

அம்மா இது என் தோழியைப் பற்றியது. இதைச் சொல்றதுனால என்னை தப்பா நினைக்காதீங்க என்று முன்னேற்பாடு கொடுத்தாளே தவிர அதைத் தாண்டி வார்த்தைகள் வரமறுத்தன. இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்போல அம்மா அமைதியாக இருந்தாள். தயக்கத்தையும் பயத்தையும் வலுக்கட்டாயமாகப் புறக்கணித்துவிட்டு எச்சிலை விழுங்கிக்கொண்டு தோழியின் பெயரைச் சொல்லி “அம்மா அவ பிரக்னண்டா இருக்கா” வார்த்தைகளை அவசரமாக உதிர்த்துவிட்டு தோழியுடன் நடந்த மொத்த உரையாடலையும் வெளியேற்றினாள். அம்மாவோடு அனைத்தையும் உள்வாங்கிக்கொண்ட அறையும் அமைதியாக இருந்தது. என்ன சொல்லப் போகிறாரோ என்கிற பதைபதைப்பில் இதயம் தாறுமாறாக தாவி குதித்துக்கொண்டிருந்தது.

அம்மாவின் முகம் இலகுவாகி இனியாவின் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு “அவ ஏதோ தெரியாம பண்ணிட்டா. அவ என் பொண்ணு இல்லங்கிறதுனால இப்படி என்னால சுலபமா சொல்ல முடியுது. இந்த வயசுல இத ஹேண்டில் பண்ணணும்கிறது பெரிய பாரம்தான். இப்போ அவளுக்குத் தேவை அன்பும் ஆதரவும்தான். அத கொடுக்கிறதுல நீ கஞ்சத்தனம் காட்டாத. அதுதான்னு உறுதியா சொல்றாளா? எவ்வளோ நாளாச்சாம்?”

“ஆமாம்மா மூணு தடவை செக் பண்ணிட்டாளாம். இது ஆறாவது வாரமாம்.”

“அந்தப் பையன் என்ன சொல்றானாம்?”

“இந்த மாதிரின்னு தெரிஞ்சதிலேர்ந்து இவ கூப்பிட்டா எடுக்க மாட்டிங்கிறானாம்.”

“என்கிட்ட சொல்லிட்டல்ல. என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன். இன்னும் நாலு மாசத்துல “ஓ” லெவல் தேர்வு. உன் கவனம் அதில் இருக்கட்டும். அதுல கோட்டைவிட்ட வேற அம்மாவைத்தான் பார்ப்பே. எதையும் யோசிக்காம தூங்கு. குட் நைட்” சொல்லிவிட்டு அவள் நெற்றியில் ஆழமாக முத்தமிட்டு வெளியேறினாள். கடினமான கேள்விகளை எதிர்பார்த்துச் சென்ற தேர்வில் அனைத்தும் தெரிந்த சுலபமான கேள்விகள் கேட்கப்பட்டதுபோல ஆயிற்று. தோளிலிருந்து பெரிய சுமை இறக்கப்பட்டதுபோல நிம்மதியும் ஆசுவாசமும் அடைந்தாள். ‘இதே மாதிரி அவளுக்கும் நடந்தா எப்படி இருக்கும்? சுலபமா எடுத்துக்கிற மாதிரியான காரியமா செய்திருக்கா?’ தோழியின் அம்மாவை நினைத்தாலே இனியாவுக்கே வியர்த்து கொட்டியது. அவளுக்கு தைரியம்தான் என்று நினைத்துக் கொண்டாள்.

பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கு அவளுடைய பெற்றோர், அப்பாவைக்கூட சொல்ல முடியாது அவர் ஏதோ துணைக்கு வருவது மாதிரிதான் வருவார். அவளுடைய அம்மாதான், மைக்ரோ மேனேஜ்மென்ட் என்று சொல்வார்களே அந்த மாதிரி ஒவ்வொரு அம்சத்தையும் நுணுக்கமா பார்த்து வச்சிக்கிட்டு, ஆசிரியர்கள் மொத்த மாணவர்களைப்பற்றியும் சொல்வதற்கு வைத்திருக்கும் குறிப்புகளைவிட அதிகமான குறிப்புகளுடனும் கேள்விகளுடனும் விமர்சனங்களுடனும் கோரிக்கைகளுடனும் வந்து ஆசிரியர்களை ஒரு வழி ஆக்கிடுவார். விட்டால் பாடத்திட்டத்த தரப்படுத்துறது, கல்விமுறையை, பிற அம்சங்களைக்கூடக் கட்டுப்படுத்த முயற்சிப்பார். ஆசிரியர்கள் கவனமாக வார்த்தைகளைவிட வேண்டும். அவள் அம்மாவுடனான சந்திப்பை முடித்து அனுப்பி விட்டார்கள் என்றாலே ஆசிரியர்கள் ஒரு பெரிய சவாலை சமாளித்து விட்டதாகக் கருதி இன்னும் சந்திக்கப் போகிற ஆசிரியர்களைப் பரிதாபமாகவும் தாங்கள் முடித்துவிட்ட மிதப்பிலும் பார்ப்பார்கள். ‘அப்படிப்பட்ட அம்மாவுக்கு இந்தச் செய்தி தெரிந்தா?’

இனியாவைத் தூங்கச் சொல்லிவிட்டு வந்த அவளின் அம்மாவுக்கு நித்திரை எங்கு சென்றதென்றே தெரியவில்லை. அவளிடம் இயல்பாகப் பேசினாலும் அவள் சொன்ன செய்தியைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ‘நல்ல ஸ்கூல்ல நல்லா படிக்கிற பொண்ணு. எப்படி இப்படி புத்தி கெட்டுப் போனா? அவளைச் சொல்லியும் குற்றமில்லை. செகண்டரி ஸ்கூல் போனாலே பசங்களுக்கு என்னமோ லைசென்ஸ் கிடைச்ச மாதிரி பாய் பிரெண்ட் கேர்ள் பிரெண்ட்னு கைகளைக் கோர்த்துக்கிட்டு பேருந்து நிறுத்தங்களிலும் கடைத்தொகுதிகளிளும் உணவங்காடிகளிலும் சுத்த வேண்டியது. சில சமயம் அத்துமீறி பார்க்கிறவர்கள் கூசுறமாதிரி நடந்துகுதுங்க. அதெல்லாம் பரவாயில்லைனு சொல்ற அளவுக்கு இந்த மாதிரி வேற நடக்குது. யாருக்காவது ஆள் இல்லையென்றால் அவர்களை கேலி செய்ய வேண்டியது’ மனதுக்குள் புழுங்கத்தான் முடிந்தது.

கேலி செய்கிறார்கள் என்பதற்காக யாரோடையாவது சுத்தின… காலை முறிச்சுடுவேன் என்று இனியாவை மிரட்டித்தான் வைத்திருக்கிறாள். ‘பிள்ளைகள் எப்போ எதனால தடம் மாறுறாங்கனு தெரிய மாட்டேங்குதே! இப்ப அந்த பொண்ணுக்கும் குடும்பத்துக்கும் எவ்வளோ பெரிய அவமானம்? பள்ளிக்கூடத்துல Sexuality Education-லதான் எல்லாத்…தையும் சொல்றாங்களே. அவளோட அம்மா பொண்ண அந்த வகுப்புக்கு அனுப்புறதுக்கு அனுமதி கொடுத்தாங்களா இல்லையான்னும் தெரியலையே? இந்த பொண்ணு விபரீத முடிவு ஏதாவது எடுத்துடுச்சுன்னா! என்ன செய்றதுனு யோசிக்கணும்’ சிந்தித்தபடி புரண்டு படுத்தாள்.

மறுநாள் இனியா தோழியிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை. “அம்மாவை நினைத்தாலே எனக்கு வயிற்றுல என்னமோ பண்ணுது. அப்படியாவது எனக்கு பீரியட் வந்துடாதான்னு இருக்கு” என்று சொன்னவளைப் பார்த்து இரக்கப்படுவதைத்தவிர பதில் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

முன் மதிய நேரம் தோழியின் பெயரைச் சொல்லி அலுவலக அறைக்கு வரும்படி செய்தி வந்ததும் அவள் திரும்பி இனியாவைப் பார்த்தபடியே யோசனையுடன் போனாள். மற்ற மாணவிகளின் பார்வையும் அவள் செல்வதையே நோக்கின. ‘என்னவாக இருக்கும். இது தெரிந்து கூப்பிடுகிறார்களா? சே! தெரிவதற்கு வாய்ப்பில்லை.’ தன்னை திடப்படுத்திக்கொண்டே அலுவலக அறைக்குள் நுழைந்தாள். தலைமை ஆசிரியரின் எதிரிலிருக்கும் இருக்கைகளில் அவளுடைய அப்பா, அம்மா, பள்ளி ஆலோசகர் மூவரும் அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவளுக்கு உடனே கழிவறைக்கு ஓட வேண்டும் போலிருந்தது. அவர்களாக கேட்காமல் நாமாக எதுவும் காட்டிக் கொள்ள வேண்டாம் என்றெண்ணி “ஹாய் அப்பா அம்மா” என்று சொல்லப் பார்த்தாள். குரல் வரவில்லை. நடக்கவிருக்கும் நாடகத்தை அறியாமல் அடுத்த வகுப்புக்கான மணி ஒலித்ததும் மாணவர்களின் சலசலப்பு எதிரொலிக்க ஆரம்பித்தது.

தலைமை ஆசிரியர் அவளை எதிரிலிருந்த மற்றொரு நாற்காலியில் அமரச் சொன்னார். அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக்கொண்டே தயங்கியபடியே அமரப் போனவளை அதுவரை அமைதியாக இருந்த அவளின் அப்பா “உன்னை என் கையாலேயே கொன்னுடுறேன்” நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு அவள்மேல் பாய்ந்தார். தகவல் தெரிந்ததும் உண்மையில் தலைமை ஆசிரியரும் பள்ளி ஆலோசகரும் அவளுடைய அம்மாவை எப்படிச் சமாளிப்பது என்றுதான் பயந்தார்கள், அப்பாவிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. நிலைதடுமாறி கீழே விழுந்தவள் “சாரிப்பா சாரிப்பா, தெரியாம பண்ணிட்டேன்”னு சொல்லிக்கொண்டே அவருடைய கால்களை இறுகப் பற்றிக்கொண்டாள். அவரால் அசைய முடியவில்லை. ஆலோசகர் அவரை அமைதிப்படுத்தி அமர வைத்தாலும் அவர் பாய்ந்து பாய்ந்து அவளை நோக்கியே சென்றார்.

அம்மா மெல்ல எழுந்ததைப் பார்த்ததும் அவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு எங்கோ பள்ளத்துக்குள் செல்வதுபோல் இருந்தது. கண் விழித்தபோது தரையில் கிடந்தவளின் அருகில் பள்ளி மருத்துவர் இருந்தார். பக்கத்தில் முறைத்தபடி நின்ற அம்மாவைப் பார்த்ததும் எதுவும் சொல்லாமல் அழுதுகொண்டே கும்பிட்டாள். அவர் நெருங்கி பக்கத்தில் அமர்ந்ததும் உடல் நடுங்கியது.

கும்பிட்டுக்கொண்டிருந்தக் கைகளை விடுவித்துவிட்டு “தப்புன்னு தெரிஞ்சிட்டுல்ல. விடு. வா காவல் நிலையத்துக்குப் போய் புகார் கொடுத்துட்டு மருத்துவரைப் பார்த்து ஆக வேண்டிய வேலையைக் கவனிக்கலாம்” சொல்லிக்கொண்டே கழுத்துக்கு கீழே தன் கைகளைக் கொடுத்து மெல்ல அவளைத் தூக்கினாள்.