சமரசம் இல்லாத செய்திகள்

முனைவர் S. தமீம் தீன்
பேராசிரியர் – உடற்கூறு, யாங் லூ லின் மருத்துவக்கல்லூரி
சிங்கப்பூர் தேசியப் பல்கழைக்கழகம்.

சிங்கையிலிருந்து வெளிவரும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தமிழ் மாத இதழை வெளியிடுகிறது. சிங்கப்பூர் தமிழ் இதழியல் சுற்றத்தில், குறைந்த காலத்திற்குள் எத்தனையோ முன்னணி இதழ்களுக்கு இடையே தனக்கென்ற தனித்துவ முத்திரையோடு நூறாவது இதழை ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ அடைந்திருப்பது பெரும் சாதனையே. கொண்டாடக்கூடியதும்தான். சமரசம் இல்லாத, வணிக நோக்கமின்றி கட்டுரைகளை தேர்ந்தெடுத்து வெளியிடுவதிலும், அர்ப்பணிப்புணர்வோடு செயல்படும் ஆசிரியர் குழுமத்தினாலும்தான் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது.

“சிங்கைத் தமிழரின் சிந்தனை” என்னும் தலைப்புடன் தமிழ் இலக்கியம், வரலாறு, கதைகள், கட்டுரைகள், சாதனைத் தமிழர்களின் நேர்காணல்கள் என உலகளாவிய பார்வையுடன் படைப்புகளை வெளியிடுவது இந்த பத்திரிக்கையின் தரத்தை உயர்த்தியிருக்கிறது என்றால் மிகையில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில், காளான்களென பல்கிப் பெருகி இருக்கும் பல்லூடகங்கள், வலைத்தளம், சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றின் தாக்கத்தினால், அச்சு ஊடகங்கள் மூச்சுத் திணறித்தான் போயுள்ளன! இருப்பினும், என்னை போன்றவர்களுக்கு, ஒரு கையில் தேநீரும் மற்றொரு கையில் அப்பொழுதுதான் அச்சிட்ட பத்திரிகையின் மணத்துடன், செய்திகள் மற்றும் கட்டுரைகளைச் சுடச்சுடப் படிப்பதில் இருக்கும் சுகமே அலாதிதான்.

இப்பத்திரிக்கையின் நிறுவனர், அன்பு சகோதரர் திரு.முஸ்தபா அவர்களின் அளவில்லா தமிழ் ஆர்வமே இப்பத்திரிகை தரத்தின் தரக்குறியீடு. இன்றைய நிலையில் இப்பத்திரிகை தெளிவான நோக்கத்துடன், தரமான செய்திகளைச் சுமந்து சரியான பாதையில் பீடுநடை போடுவது கண்கூடாகத் தெரிகிறது. தமிழ் பேசும் நல்லுலகத்தின் ஆதரவுடன் மேலும் பல நூறு, அல்ல பல ஆயிரம் இதழ்கள் அச்சிடப்பட்டு சிங்கையின் தலைசிறந்த தமிழ் பத்திரிக்கைகளில் ஒன்றாக நிலைத்திருக்கவேண்டும் என என் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.