சிங்கப்பூரின் தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள்: புலம்பெயர் வழிதேடல்கள்

இந்தக் கட்டுரையில் காணப்படும் கருத்துகள், கட்டுரை ஆசிரியர்களின் சொந்தக் கருத்துகளேயன்றி அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.

அறிமுகம்

அருண் மகிழ்நன்
நாரா ஆண்டியப்பன்‌

பொருளாதாரக் கட்டாயங்கள், நிர்வாகத் தேவைகள் காரணமாகச் சிங்கப்பூர் புதிய மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் வரவர அவற்றை உடனடியாக ஏற்றுக்கொண்டது. மேலும், கல்வி, பண்பாட்டு நோக்கங்களுக்காகவும் பிற தேவைகளுக்காகவும் இந்தத் தொழில்நுட்பங்களை அரசாங்கம் பயன்படுத்தியுள்ளது. இந்தத் தேவைகளுடன் இணைந்து, அரசியலமைப்புச் சட்டத்தில் பொதிந்துள்ள, பன்மொழிக் கொள்கைகளும் தமிழ் தொடர்பான மின்னிலக்கத் தொழில்நுட்பங்களில் ஈடுபடுவதற்கான விரிவான தளத்தைத் தமிழுக்கு வழங்கியுள்ளன. சிங்கப்பூரில் கல்வி, ஊடகம், அரசு நிர்வாகம் என மூன்று துறைகளில் தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் சில முக்கியக் கூறுகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.

சிங்கப்பூரில் கல்வி, ஊடகம், அரசு நிர்வாகம் என மூன்று துறைகளில் தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பத்தின் சில முக்கியக் கூறுகளை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது.

முதல் தகவல் தொழில்நுட்பப் பெருந்திட்டம் (Masterplan) – IT2000 – 1996ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அத்திட்டத்தில், அரசாங்கம் தேசிய தகவல் உள்கட்டமைப்புக்கு (National Information Infrastructure) அடித்தளம் அமைத்தது. “தேசிய தகவல் உள்கட்டமைப்பை முதலில் உருவாக்கிக்கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் இருக்கும்” என்றும் அது சிங்கப்பூரை “நுண்ணறிவுத் தீவாக” மாற்றுவதற்கான அடித்தளம் என்றும் அரசாங்கம் அறிவித்தது. “வீடு, அலுவலகம், பள்ளி, தொழிற்சாலை ஒவ்வொன்றிலும்” இருக்கும் கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு பரவலான கட்டமைப்பை (network) உருவாக்குவதே அத்திட்டம்.

IT2000க்கு அடுத்து மேலும் இரண்டு முக்கியத்தும் வாய்ந்த 10-ஆண்டுப் பெருந்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்று, 2005இல் தொடங்கப்பட்ட நுண்ணறிவு நாடு 2015 எனப் பொருள்படும் Intelligent Nation 2015 (iN2015) திட்டம். மற்றது, ஜூன் 2023இல் தொடங்கப்பட்ட, மின்னிலக்கத் தொடர்பு மூலவரைவுத் திட்டம் என்னும் பொருள்படும் Digital Connectivity Blueprint (DCB) திட்டம். IT2000 திட்டம், இணையத் தொழில்நுட்பம் அனைவருக்கும் கிடைப்பதில் கவனம் செலுத்தியது. iN2015 திட்டம், அந்தத் தொழில்நுட்பம் எளிதாகவும் மலிவாகவும் மக்களைச் சென்றடையவேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது. இவற்றுக்கு மேலாக, சிங்கப்பூரை ஓர் அறிவார்ந்த நாடாக (Smart Nation) உருவாக்க மக்களுக்கே சக்தியைக் கொடுக்கும் வகையில் DCB வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அரசாங்கத்தின் பல்வேறு மொழி சார்ந்த முயற்சிகளில் தமிழுக்கு அதிகாரத்துவ இடம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் என்று வரும்போது, தேசிய முயற்சிகளில் தொடக்கத்திலிருந்தே தமிழ் சேர்க்கப்பட்டது. தற்போது, மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் முயற்சிகள் தமிழ்ச் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence, AI) தொடர்பானவை. அது பற்றிப் பின்னர் பேசுவோம்.

தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள்

தகவல், தொடர்புத் தொழில்நுட்பங்கள் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியபோது சிங்கப்பூர் அவற்றை உடனடியாக உள்வாங்கிக்கொண்டது. அப்போது, அரசாங்கம் கட்டமைத்த பன்மொழி இணையத்தளத்தில் தமிழும் பதிவேற்றப் பட்டது. சிங்கப்பூர் இணையத்தில் 1995ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி தமிழ் முதன்முதலில் தோன்றியது. இதைச் சாத்தியமாக்கியவர்களுள் முக்கியமான இருவர் தமிழ்க் கல்வியாளர் நா. கோவிந்தசாமியும் சீன இனத் தொழில்நுட்பவியலாளர் முனைவர் டான் டின் வீ-யும் (Tan Tin Wee) ஆவர்.

வலைத்தளத்தில் தமிழுக்கு ஒரு நல்ல தொடக்கம் இருந்தபோதிலும், பழமையில் ஊறியிருந்த சில தமிழ்த் தலைவர்கள் அதை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் (இக்கட்டுரையின் முதல் ஆசிரியர் அருண் மகிழ்நன்) தமிழ்மொழித் தலைவர்களுள் ஒருவராக இல்லாதபோதிலும், சிங்கப்பூரில் தமிழ் இணைய இயக்கத்தை வழிநடத்த முனைவர் டானும் சில அரசியல் தலைவர்களும் என்னைக் கேட்டுக்கொண்டனர். அக்காலக்கட்டத்தில், உலகளவில் தமிழ் இணையத்தில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டு சிங்கப்பூரில் இருந்த ஒரே முழுநேரத் தொழில்நுட்ப வல்லுநரான முத்து நெடுமாறன், முனைவர் டான் ஆகியோரின் பேராதரவைப் பெற்றது என்னுடைய பேறு. இவ்விருவரும் இல்லாவிட்டால், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம், International Forum for Information Technology in Tamil, INFITT) என்ற முதல் உலகளாவிய தமிழ் இணைய அமைப்பு, 2000இல் சிங்கப்பூரில் நிறுவப்பட்டிருக்காது.

தமிழக அரசின் அப்போதைய தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக இருந்த பேராசிரியர் மு. ஆனந்தகிருஷ்ணன், உத்தமம் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பின் செயலகத்தைச் சிங்கப்பூரில் நிறுவுவதற்கும் அதன் முதல் நிர்வாக இயக்குநராக என்னை நியமிப்பதற்கும் அவர்தான் முக்கியக் காரணகர்த்தா. இத்தகைய தலைவர்களோடு, வெளியே அவ்வளவாகத் தெரியாத மற்றொரு கரமும் பேருதவி செய்தது – அதுதான் Infocomm Development Authority எனப்படும் தகவல் தொடர்பு மேம்பாட்டு ஆணையம். அந்த அரசாங்க ஆணையம்தான் அதுவரை காணாத மிகப்பெரிய தமிழ் இணைய மாநாட்டை நடத்துவதற்கும் சிங்கப்பூரில் உத்தமம் தன் செயலகத்தை நிறுவுவதற்கும் அனைத்து அரசாங்க உதவிகளையும் நிதி ஆதரவையும் வழங்கியது. எனது சக கட்டுரையாசிரியர் நாரா ஆண்டியப்பனை உத்தமம் அமைப்பின் ஊதியம் பெறும் முதல் ஊழியராக நியமித்ததும் அந்த ஆணையமே.

சிங்கப்பூரில் நடந்தேறிய மேற்கண்ட நிகழ்வுகளைக் குறிப்பிடுவதற்குக் காரணம், பன்னாட்டு ஒத்துழைப்பின் மூன்று முக்கியக் கூறுகளைச் சுட்டிக்காட்டுவதற்காகவே:

முதலாவதாக, ஒரு பன்னாட்டு நிறுவனம் அமைந்திருக்கும் இடமும் சூழலும் பன்னாட்டு ஒத்துழைப்புக்கு உகந்ததாக இருக்க வேண்டும். சிங்கப்பூர் ஏற்கெனவே ஓர் உலகளாவிய நகரமாக இருந்தது; உலகளாவிய இணைப்புகள் உடையதாகவும் உலகளாவியப் பண்பாட்டுக்குப் பழகியதாகவும் இருந்தது.

இரண்டாவதாக, தன்னடக்க உணர்வும், கற்றல் வேட்கையும் இருக்கவேண்டும். நாங்கள் எப்போதுமே எங்கள் அளவைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறோம். எங்களிடம் பெரும் வளங்களோ மக்கள்தொகையோ இல்லாததால் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.

மூன்றாவதாக, ஆக முக்கியமான அம்சம் என்றுகூடச் சொல்லக்கூடிய, நீடித்த அரசாங்க ஆதரவு. சிறுபான்மைச் சமூகம் மட்டுமே பாதிக்கப்படுகிறது என்றாலும், சிங்கப்பூர் அரசாங்கம் தமிழ் தொடர்பான தொழில்நுட்பங்களை ஆதரிப்பதில் தீவிரமான, நிலையான ஆர்வத்தைக் காட்டுகிறது.

தமிழ் மின்னிலக்கக் கல்வி

இப்போது இந்தக் கட்டுரையின் மையமான மூன்று களங்களுக்குச் செல்வோம். தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய களம் தமிழ்க் கல்வித் துறை. சிங்கப்பூர்த் தமிழ்க் கல்வித் துறையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள், மாணவர்களாகவும் ஆசிரியர்களாகவும் உள்ளனர். தற்போது சிங்கப்பூரில் சுமார் 24,000 மாணவர்கள் தமிழ் கற்கின்றார்கள், சுமார் 700 ஆசிரியர்கள் தமிழ் கற்பிக்கின்றனர்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில், கல்வி அமைச்சு, கல்வியில் தொழில்நுட்பத்தின் நிலைமாற்றத் திறனைப் பயன்படுத்தும் வகையில் “EdTech Masterplan 2030” என்னும் பெருந்திட்டத்தை வெளியிட்டது. கற்பித்தலையும் கற்றலையும் மேம்படுத்துவதற்குப் பள்ளிகள் எவ்வாறு தொழில்நுட்பத்தைக் கையாள முடியும் என்பதை இத்திட்டம் காட்டுகிறது. சிங்கப்பூர் அரசு பல ஆண்டுகளாக வெளியிட்டுவரும் பல கல்வித் திட்டங்களின் வரிசையில், இத்திட்டமும் ஒன்று. திட்டத்தில், தமிழ்க் கல்விக்குப் பொருத்தமான கூறுகளின் சாராம்சம் பின்வருமாறு:

திட்டம் நான்கு இலக்குகளை மையமாகக் கொண்டுள்ளது. மின்னிலக்க வல்லமை பெற்ற மாணவர்கள்; தொழில்நுட்பத் திறனுடன் கூடிக்கற்கும் முறைகளை உருவாக்கக்கூடிய ஆசிரியர்கள்; அறிவார்ந்த, தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய, மின்னிலக்க வசதிகள் உடைய கற்றல் சூழலைக் கொண்ட பள்ளிகள்; நன்கு பிணைக்கப்பட்ட தொழில்நுட்பக் கட்டமைப்பு. இவற்றின் வாயிலாகக் கல்விச் சூழலையே மாற்றி அமைப்பதுதான் அடிப்படை நோக்கம்.

இப்பெருந்திட்டத்தின் கீழ், தமிழாசிரியர்களும் பயனடைவர். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பப் பயன்பாடுகளில் அவர்களது நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும்.

மாணவர் கற்றல் தளம்

கல்வி அமைச்சு, 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த மாணவர் கற்றல் தளம் (Student Learning Space) என்னும் இணையத்தளம், தொழில்நுட்பத்தைக் கவனமாகப் பயன்படுத்திச் சிங்கப்பூர் மாணவர்களின் கற்றல் அனுபவங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்களை மையமாகக் கொண்ட இந்தத் தளம், தமிழ்மொழி உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் பயன்படுகிறது. சிங்கப்பூர்த் தமிழாசிரியர்கள் பலர் இத்தளத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துவதோடு, தகவல்தொடர்புத் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய பாடங்களை வடிவமைத்து இத்தளத்தில் வெளியிட்டுத் தங்கள் தொழில்முறைத் திறனைப் பகிர்ந்துகொள்கின்றனர். Thinklink, Kahoot, Mentimeter, Quizlet, Decktoys, Edpuzzle, Nearpod, Padlet எனப் பல்வேறு செயலிகளைப் பயன்படுத்தித் தங்கள் திறமையை மேம்படுத்திக்கொள்வதில் தமிழாசிரியர்கள் பெரும் ஆர்வம் கொண்டுள்ளனர்.

கல்வியாளர்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் (SkillsFuture)

கல்வி அமைச்சு, ஆசிரியர்கள் பணிக்காலம் முழுதும் தொடர்ந்து தம் தொழில்முறைத் திறன்களை மேம்படுத்திக்கொண்டே இருக்க, 2020இல் வாழ்க்கைக்கான கற்றல் (Learn for Life) என்னும் இயக்கத்தைத் தொடங்கியது. அதற்கேற்ப, பிற ஆசிரியர்கள் போன்றே தமிழாசிரியர்களும் மாணவர்களின் கற்றல் அனுபவங்களை மேம்படுத்தவும் அவரவர்க்கு ஏற்றவாறு கற்பித்தலை மாற்றியமைக்கவும் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் மின்வழிக் கற்பித்தல் முறைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட பாடங்களை வடிவமைத்து, மாணவர் கற்றல் தளத்திலும் பிற இணையத்தளங்களிலும் பயன்முனைப்புமிக்க வகையில் தமிழ்மொழியைத் திறம்படக் கற்பிக்கின்றனர்.

மேலும், சிங்கப்பூர் சில காலமாகத் தமிழாசிரியர் பற்றாக்குறையை எதிர்கொள்வதால் நேருக்கு நேர் கற்பித்தலுக்குத் துணையாக இணையவழிக் கற்பித்தல் கருத்திற் கொள்ளத்தக்கது. உண்மையில், கொவிட் பெருந்தொற்று மாணவர்களின் முழுக் கற்பித்தலையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இணையவழிக் கல்வியாகவே மாற்றியமைக்கும் விதமாகக் கட்டாயப்படுத்தியது. இணையவழிக் கற்பித்தல் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஏற்கத் தயங்கிய பல ஆசிரியர்கள், அதன் பயனைக் கண்கூடாகக் கண்டறிந்தனர். நேருக்கு நேர் கற்பித்தலை முற்றாகக் கைவிடச்செய்யும் மாற்றுவழியாக அது இருக்காது என்றாலும், நிச்சயமாக ஒரு துணைக்கருவியாக இருக்கலாம். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பல ஆண்டுகளாக இணையவழிக் கல்வியை வழங்கிவருகின்றன. உயர்நிலைப் பள்ளி, புகுமுகக் கல்லூரி அளவில், இணயம்வழித் தமிழ்மொழி கற்பித்தலை இன்னும் அதிகரிப்பதைப்பற்றி ஆய்வு செய்யலாம்.

நாங்கள் இந்தப் பரிந்துரையை இங்கு வலியுறுத்துவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் திறமையான தமிழாசிரியர்களின் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது, இருந்து வரும். அந்தத் தமிழ்ச் சமூகங்களுக்கு, இணையவழிக் கல்வி ஒரு துணைக்கருவியாக மட்டும் இல்லாமல் முதன்மைக் கருவியாகக்கூடப் பயன்படலாம். இப்பெரும் பற்றாக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதில் இம்மாநாட்டை நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஏற்கெனவே பங்காற்றியுள்ளது; ஏனைய தமிழ்நாட்டு அமைப்புகளோடு இணைந்து மேலதிகமாகச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதே எங்கள் நோக்கம். இம்முயற்சியை வழிநடத்தும் திறமையும் வளமும் தமிழ்நாட்டிடம் உள்ளன.

தமிழ்ச் சமூகங்களுக்கு, இணையவழிக் கல்வி ஒரு துணைக்கருவியாக மட்டும் இல்லாமல் முதன்மைக் கருவியாகக்கூடப் பயன்படலாம்.

தமிழ் மின்னிலக்க ஊடகங்கள்

தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பம் தமிழ் ஊடகங்களுக்கு முற்றிலும் புதியதோர் உலகுக்கான கதவுகளைத் திறந்துள்ளது. அதன் வாயிலாகத் தகவல், கல்வி, பொழுதுபோக்கு என எல்லாத் துறைகளிலும் புதுப்புதுப் பரிமாணங்களைப் புகுத்தமுடியும்.

சிங்கப்பூரில் இரண்டு ஊடக நிறுவனங்கள்தாம் பெரும்பாலான தமிழ் வெகுஜன ஊடக உள்ளடக்கத்தை வழங்குகின்றன; SPH மீடியா அறக்கட்டளை, மீடியாகார்ப்.

நீண்ட, புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ள SPH மீடியா அறக்கட்டளை, நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் செய்தித்தாள்களை வெளியிடுகிறது. அவற்றுள் தொடர்ந்து நீடித்திருக்கும் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசும் அடக்கம். தமிழ் முரசு தலைசிறந்த தமிழ்ச் சமூகத் தலைவரான கோ. சாரங்கபாணியால் 1935இல் தொடங்கப்பட்டு இறுதியில் SPH பதிப்பகத்தின் கைகளுக்குச் சென்றுசேர்ந்தது. எனினும், சாரங்கபாணி காலத்தில் செய்ய முடியாததை — நினைத்துக்கூடப் பார்க்க முடியாததை — இன்று தமிழ் முரசு செய்துகொண்டிருக்கிறது: உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழ் முரசு படிக்கலாம். அதற்குக் காரணம், தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பம். தமிழவேள் மகிழ்ச்சி அடைவார் என்பதில் ஐயமில்லை. முரசு 2017இல் இணையவழி நாளிதழானது. இது அச்சிலும் வெளியிடப்படுகிறது. கடந்த அக்டோபர் 2023இல் தமிழ் முரசுக்கான இலவசத் தொலைபேசிச் செயலியை SPH மீடியா அறிமுகப்படுத்தியது.

உலகின் எந்த மூலையிலிருந்தும் தமிழ் முரசு படிக்கலாம். அதற்குக் காரணம், தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பம். தமிழவேள் மகிழ்ச்சி அடைவார் என்பதில் ஐயமில்லை.

சிங்கப்பூரில் உள்ள மற்றொரு பெரிய ஊடக அமைப்பு மீடியாகார்ப் (Mediacorp) நிறுவனம். இது நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளிலும் உள்ளூர் உள்ளடக்கத்தை வழங்கும் ஆகப்பெரிய ஒளிபரப்பு நிறுவனம். மீடியாகார்ப் நீண்டகாலம் அரசாங்க நிறுவனமாகச் செயல்பட்டு, 1980இல் தனியார்துறை நிறுவனமாக மாறியது. இன்று, மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் வாயிலாக, 24 மணி நேரமும் தமிழ் வானொலி, தொலைக்காட்சி, இணைய உள்ளடக்கம் மக்களுக்குக் கிடைத்துவருகிறது. தமிழ்ச் செய்திகள் 2015இல் இணையத்தளத்தில் அரங்கேறின. புதுப்புதுச் செய்திகள் உடனுக்குடன் பதிவேற்றப் படுகின்றன.

இந்த முன்னேற்றங்களுக்கு முக்கிய காரணம் சாதகமான சந்தை நிலைமைகளோ அல்லது இலாப நோக்கங்களோ அல்ல. மாறாக அரசாங்கக் கொள்கையே காரணம். SPH Media, மீடியாகார்ப் வெளியிடும் தமிழ் ஊடகங்கள் ஓரளவு அரசு மானியம் பெறுகின்றன. இதனால்தான், சிங்கப்பூர்த் தமிழர்களாகிய நாங்கள் இந்தப் பொது ஊடகங்களை மிகுந்த பொறுப்புடன் நடத்த வேண்டியவர்களாகிறோம். சமூகத்தின் விலைமதிப்பற்ற இச்சொத்தைக் கண்மூடித்தனமாக வீணடிக்க முடியாது.

தமிழ் மின்னிலக்க ஆளுகை

தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பம் சிங்கப்பூரில் செயல்படுவதற்கு ஆக முக்கியக் காரணம் சிங்கப்பூர் அரசாங்கம் எனலாம். இது போன்ற முயற்சிகளில் அரசே முன்னோடியாகவும் இருக்கிறது. சிங்கப்பூர் அரசாங்கம் பொதுமக்களின் நலனுக்காகத் தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் நான்கு தளங்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பம் சிங்கப்பூரில் செயல்படுவதற்கு ஆக முக்கியக் காரணம் சிங்கப்பூர் அரசாங்கம் எனலாம். இது போன்ற முயற்சிகளில் அரசே முன்னோடியாகவும் இருக்கிறது.

தேசிய நூலக வாரியம்

தமிழில் வழங்கப்படும் அனைத்து அரசாங்க சேவைகளிலும், கல்வி அமைச்சிற்கு அடுத்தபடியாக மிகவும் பரவலாக அறியப்பட்டுள்ள சேவை தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச்சேவை என்று கூறலாம். காலனித்துவக் காலத்தில் இருந்து, அதன் முன்னோடி அமைப்புகள் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குச் சேவை செய்துவருகிறது. தமிழ்த் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்ட முதல் அரசு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.

தமிழ் நூற்பட்டியல்கள் 2002/2003இல் மின்மயமாக்கப்பட்டன. தமிழ்நாட்டிற்கப்பால், புலம்பெயர்ந்த தமிழர்களிடையே, இதுவே முதல் முயற்சி என்று கருதப்படுகிறது. மேலும், 2006இல் தொடங்கப்பட்ட அதன் மின்னிலக்கத் தொகுதி, 2023இல் 7000க்கும் கூடுதலான பதிவுகளை எட்டியுள்ளது. சிங்கப்பூர் சுதந்திரத்தின் 50வது ஆண்டுநிறைவை நினைவுகூரும் வகையில், 2015இல் 50 ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வெளியீடுகளை மின்மயமாக்கியது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று. சிங்கப்பூரில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு முன்னோடி முயற்சி. இந்த முயற்சி, தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் முன்மொழிந்து தேசிய நூலக வாரியத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டத் திட்டம். சிங்கப்பூர்த் தமிழர்களின் முதல் மின்னிலக்கக் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் அதே சமூகக் குழு இப்போது வாரியத்துடன் சேர்ந்து செயல்படுகிறது. இத்தகைய தமிழ் மின்னிலக்க வளங்கள் சிங்கப்பூரர்களுக்கு மட்டுமன்றி, யாருக்கும், எங்கும், எந்த நேரத்திலும், இலவசமாகக் கிடைக்கும் வளங்கள்.

50 ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வெளியீடுகளை மின்மயமாக்கியது குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்று. சிங்கப்பூரில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு முன்னோடி முயற்சி.

அரசாங்க மின்னிலக்கச் சேவைகள்

கடந்த 2018ஆம் ஆண்டு, அரசாங்கம் பலராலும் பயன்படுத்தப்படும் அரசு சேவைகளைத் தமிழ் உட்பட பல மொழிகளில் வழங்கத் தொடங்கியது. இந்த வசதியுடன், குடிமக்கள் தமது அடையாளச் செயலியைத் (SingPass) தமிழில் பயன்படுத்தி ஏராளமான அரசு சேவைகளைப் பெறலாம்; இணையத்தளங்களைப் பயன்படுத்தலாம்; பலதுறை மருந்தகங்களில் மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்யலாம்; அரசாங்கத் திட்டங்கள்பற்றிய தகவல்களைக் கண்டறியலாம்; புதிய மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்; வீட்டுவசதிச் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அத்தனையையும் தமிழிலேயே செய்யலாம்.

பலதுறை மருந்தகங்களில் மருத்துவரைச் சந்திக்க முன்பதிவு செய்யலாம்; புதிய மின்னிலக்கத் திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்; வீட்டுவசதிச் சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அத்தனையையும் தமிழிலேயே செய்யலாம்.

பொதுத் தொடர்பு

தொடர்பு, தகவல் அமைச்சு, 2022இல் SG Translate Together தளத்தை அறிமுகப்படுத்தியது. சீன, மலாய், தமிழ் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தரவுகளை அரசாங்கத்தின் அன்றாட நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, குடிமக்களின் கூட்டறிவைப் பயன்படுத்துவதே நோக்கம். இயந்திர மொழிபெயர்ப்பு வசதியைப் பயன்படுத்தி, அதிகாரத்துவ மொழிகளுக்கு இடையே தரவுகளின் மொழிபெயர்ப்பை உருவாக்கலாம். இது உள்ளூர்ச் சூழல், பண்பாடுகளுக்கு ஏற்றவாறு நம்பகமான உள்ளடக்கத்தை உருவாக்க அரசாங்க நிறுவனங்களுக்குப் பெரிதும் உதவி வருகிறது.

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்

தற்போது, தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களில் மிகவும் பரவலாக எதிர்பார்க்கப்படும் விளைவுகள் தமிழ்ச் செயற்கை நுண்ணறிவுடன் (AI) தொடர்புடையவை. தென்கிழக்கு ஆசியாவின் முதல் பெரிய மொழி மாதிரி (Large Language Model, LLM) கட்டமைப்பை உருவாக்கச் சிங்கப்பூர் அண்மையில் 52 மில்லியன் அமெரிக்க வெள்ளி செலவில் AI முன்முயற்சியைத் தொடங்கியது. எனினும், இந்த முயற்சியின் வெற்றி, ஒவ்வொரு வட்டார மொழியின் மின்னிலக்க உள்ளடக்கத்திலிருந்து திரட்டப்பட்ட பில்லியன் கணக்கான தரவுகளின் தன்மையைப் பொறுத்தது.

சிங்கப்பூரில் தமிழ் அதன் அதிகாரத்துவ நிலை காரணமாகத் தானாகவே கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொடர்பு, ஊடக மேம்பாட்டு ஆணையம் (Infocomm Media Development Authority) AI ஆளுகைக் கட்டமைப்பிற்கான புதிய வரையறைச் சட்டகங்களையும் தரநிலைகளையும் உருவாக்கி வருகிறது. தமிழ் AI என்பது, இன்றைய மின்னிலக்கத் தொழில்நுட்பங்களில் மிகக் குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளது என்றாலும் இறுதியில் கிடைக்கும் பலன்கள், கடந்த காலத் தொழில்நுட்பங்களை விடப் பெரியதாகவும் நெடுங்காலம் நீடிப்பதாகவும் இருக்கப்போகிறது.

தமிழ் AI என்பது, இன்றைய மின்னிலக்கத் தொழில்நுட்பங்களில் மிகக் குறைவாகவே வளர்ச்சியடைந்துள்ளது என்றாலும் இறுதியில் கிடைக்கும் பலன்கள், கடந்த காலத் தொழில்நுட்பங்களை விடப் பெரியதாகவும் நெடுங்காலம் நீடிப்பதாகவும் இருக்கப்போகிறது.

தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பக் கூட்டுமுயற்சி

இந்த உரையின் இறுதியில் நாங்கள் உங்களுக்கு விட்டுச்செல்ல விரும்பும் ஒரு சொல், ஒரு யோசனை – கூட்டுமுயற்சி. சிங்கப்பூர் கூட்டுமுயற்சியை நாடுவது தவிர்க்க முடியாதது — நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல. இருப்பினும், நாம் அனைவரும் ஒத்துழைத்தால், புதிய மின்னிலக்கத் தமிழ் தொழில்நுட்பங்கள் விரைவாகவும் சீராகவும் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையிலும் வளரும் என்பதே எங்களது கருத்து.

தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்களின் துருவ நட்சத்திரம். அறிவு, திறமை, வளம் ஆகியவற்றில் தமிழகம் உலகில் தலைசிறந்து நிற்கிறது. அத்தகைய முதன்மை சில சமயங்களில் ஒருவித தனிமைப் போக்குக்கு இட்டுச்செல்லக்கூடும். ஆனால், தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்களை, தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதில் ஈடுபடுத்தினால், நாம் அனைவரும் அதிகப் பயன் அடைவோம். இது தொடர்பாக, புலம்பெயர்ந்தோரின் திறமைகள், தொழில்நுட்பங்களை அறுவடை செய்வதற்கான வழிமுறைகளைத் தமிழ்நாடு அரசாங்கம் ஏற்கெனவே நிறுவியுள்ளது என்பதை நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம்.

தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்களின் துருவ நட்சத்திரம். அறிவு, திறமை, வளம் ஆகியவற்றில் தமிழகம் உலகில் தலைசிறந்து நிற்கிறது. தமிழ்நாடு புலம்பெயர் தமிழர்களை, தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்களை உருவாக்கிப் பயன்படுத்துவதில் ஈடுபடுத்தினால், நாம் அனைவரும் அதிகப் பயன் அடைவோம்.

எங்களுடைய பங்கை – அது மிகச் சிறிய பங்குதானென்றாலும் – அளிப்பதற்குத் தயாராக இருக்கிறோம். உண்மையில் பலருடன், குறிப்பாகத் தமிழ்நாட்டுடன் ஒத்துழைக்க வேண்டியது எங்களுக்குக் கட்டாயமானது. ஒரு சிறு வேண்டுகோள்: சிறியதாக ஆரம்பித்துப் பின்னர் வேகமாக முன்னேறலாம். “அகலக்கால்” எங்களுக்குப் பொருந்தி வராது.

கூட்டுமுயற்சி ஒரு நல்ல விஷயம் என்று அனைவரும் ஒப்புக்கொண்டாலும், தொழில்தர்மம், செயல்திறன், கூட்டாளிகளிடையே சமத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் முயற்சி செய்தால் மட்டுமே அதை வெற்றிகரமாக நிலைநிறுத்த முடியும் என்பதை அனுபவம் நமக்குக் கற்பிக்கிறது.

முடிவுரை

புதிய தமிழ் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் கணிசமான எண்ணிக்கையில் வெளிவருகின்றன. ஆனால் ஆங்கிலம், மற்றும் வேறு சில மொழிகளில் உள்ள அளவுக்குத் தமிழ் வளர வேண்டுமென்றால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டால், உலகின் ஒரு மூலையில் நடக்கும் முன்னேற்றம் மற்றப் பகுதிகளுக்கும் நன்மை பயக்கும். அதனால்தான் இதுபோன்ற ஒரு மாநாடு புலம்பெயர்ந்த மக்கள் அனைவருக்கும் முக்கியமானது. இந்த முயற்சி எதிர்காலத்திலும் தொடரும் என்று நம்புகிறோம். நாம் அனைவருக்கும் மிக உயர்ந்த கோபுரங்களை எட்ட உதவும்.