சினிமா பார்த்துக் கெட்டுப் போகாமல் இருப்பது எப்படி?

இல கணேஷ்
தொழில்நுட்பக் கூலி | கிறுக்கல் எழுத்தர் | சினிமா/கிரிக்கெட் பித்தர் | மனைவிக்கு அஞ்சாதவர்

சென்ற வாரம் நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தற்காலத் தமிழக அரசியல் ஆளுமைகளுடன் முற்காலத்தில் நெருக்கம் கொண்டிருந்தவர். அவர்களுடன் வீட்டுக்குப் பின்புறம் கிரிக்கெட் எல்லாம் விளையாடியவர். ’பரவாயில்லையே, இப்போதும் தொடர்பில் இருக்கிறீர்களா?’ என்று கேட்டதற்குச் சில நொடிகளிலேயே, ‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகுவார்.’ என்று குறுஞ்செய்தி தட்டிவிட்டார். இடக்கு மடக்காக யோசிப்பதில் நமக்கு இணை வேறொருவர் கிடையாது என்ற இறுமாப்பில், ‘என்னது? திருவள்ளுவர் ‘முதல்வன்’ பட வசனத்தைத் திருடிவிட்டாரா?’ என்று கேட்க, அவர் தலையில் அடிக்கும் இமோஜியை ஐந்து முறை அனுப்பினார்! கொஞ்சம் சிரித்துவிட்டுப் பின்னர் சிந்திக்கையில் (நல்ல பழக்கம் வாசகர்களே!), என் வாழ்வில் சினிமாவின் தாக்கம் சிறிது அதிகமாகவே உள்ளது என்று (கொஞ்சம் குற்றவுணர்வுடன்) புலப்பட்டது.

சிறுவயதில் அம்மா, சித்தப்பாக்கள், அத்தைகள், சித்திகள், மூன்றில் இரண்டு மாமாக்கள் என அனைவரும் சினிமா பார்ப்பதனால் கெட்டுப்போய்விடுவேன் என்றும், அவற்றிலிருந்து கொலை, கொள்ளை, வன்முறை, கூடாக்காதல், வன்முறை, பாலுணர்வுக் கிளர்ச்சி போன்றவைதான் மிஞ்சும் என்றும், அந்தப் பாவத்தினால் நரகத்தில் எண்ணைச்சட்டி வறுவல் நிச்சயம் (கும்பிபாகம்!) என்றும் கற்பூரத்தில் அடிக்காத குறையாகச் சத்தியம் செய்தனர். மேலே கூறிய உறவுப் பெருவாரியில் அப்பாவும் ஒரு மாமாவும் விடுபட்டதை அறிவார்ந்த வாசகர்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். என் தந்தைக்குச் சினிமா மிகவும் பிடிக்கும். எம்ஜிஆர் என்றால் உயிர் (டிஷூம், டிஷூம்!); பின் பாக்கியராஜ் (நல்ல நகைச்சுவை!). மணிரத்னத்தைக் கண்டால் அலர்ஜி (படம் முழுக்க இருட்டு!). அதனால் நிறைய திரைப்படங்களுக்கு அழைத்துச் செல்வார். பாக்கியராஜின் ‘மெளனகீதங்கள்’ படத்திற்கு பத்து வயதான என்னை இட்டுச்சென்றபோது, அம்மாவுக்குக் கொஞ்சம் ரத்த அழுத்தம் ஏறியது திண்ணம்.

அதே போல மாமாவும், ஆங்கிலம், தமிழ், இந்தி (புரிகிறதோ, இல்லையோ, பாட்டு எல்லாம் நல்லா இருக்கும்டா!) என்று இழுத்துச் சென்று பார்க்கப் பார்க்க அந்த இருட்டு அரங்கின் ஒளிக்கற்றைகள் என்னை வசியம் செய்தன. இன்னும் திரைப்படங்களைப் பார்க்க, அவற்றைப் பற்றிப் படிக்கத் தூண்டின. ஆக மொத்தத்தில் கடந்த அரை நூற்றாண்டாக, திரைப்படமாக, செய்திப்படமாக, தொலைக்காட்சித் தொடர்களாக ரத்தத்தில் வெள்ளை/சிவப்பு ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள், கொழுப்பு மற்றவற்றுடன் நன்கு கலந்துவிட்டது. அதனால், அம்மா வகையறாக்கள் மேற்கூறியது போலக் கெட்டுப் போய்விட்டேனா, என்று மேலும் யோசிக்கையில், ’குற்றவுணர்வு எதற்கு? நிறைய நன்மைகளும் ஏற்பட்டுள்ளனவே’ என்றும் தோன்றியது.

சிலருக்குப் புத்தகங்கள், சிலருக்குச் செய்தித்தாள்கள், சிலருக்கு சஞ்சிகைகள், சிலருக்கு இசை, சிலருக்கு நடனம், சிலருக்கு விளையாட்டு, இப்படி மனித புத்தர்களுக்குப் பற்பல போதிமரங்கள்! இந்த வரிசையில் எனக்குச் சினிமா!

அன்பு, காதல், விழிப்புணர்வு, அறச்சீற்றம், பொறுமை, இசை/கலை நயம், விடாமுயற்சி/தன்னம்பிக்கை, உல்லாசம், மனிதர்களின் கோணல்கள் என்று வாழ்வின் பல கூறுகளைச் சினிமா காட்டியுள்ளது. அன்புதான் கடவுள், கடவுள்தான் அன்பு என்று காட்டிய அன்பே சிவமும், மன்னிப்பு கேட்பவன் மனிதன்; மன்னிக்கத் தெரிந்தவன் மாமனிதன் என்று கருணையைக் காட்டிய விருமாண்டியும், அந்தி மழையிலும், சுந்தரியின் கண்ணிலுள்ள சேதியிலும், வளையோசையின் கலகலப்பிலும், என் வீட்டைப் பார்க்கின் என்னைப் பிடிக்கும் என்ற நம்பிக்கையிலும் கண்ட மனிதர் உணர்ந்து கொள்ளும் புனிதக் காதலும், ‘ரொம்ப பிரச்சினைன்னா சொல்லுங்க, தட்டிடலாம்!’ என்ற கோணல் புத்தியை, ‘வேண்டாம், எல்லாரும் நல்லவங்கதான்!’ என்று தட்டிச் சரி செய்யும் மின்சாரக் கனவும், தனக்கென ஒரு சிறு கூட்டில், அவ்வளவாகச் சிரமங்களைச் சந்திக்காது வளர்ந்து, என்னைச் சுற்றிய கோட்டினைத் தாண்டி நடப்பதை இலைமறை காய்மறையாகத் தெரிந்திருந்தாலும்

‘இன்னும் எவ்வளவு நாட்களுக்கு இதைப் பற்றி அறியாமல் இருப்பாய்?’ என்று தலையில் குட்டு வைத்த தண்ணீர், தண்ணீரும், பரியேறும் பெருமாளும், அர்த் சத்யாவும், Is Mississippi Burningம்… ஒற்றை வாழைப்பழத்திலும், தருமியின் கேள்வி பதிலிலும், ஆசனவாய் அறுவை சிகிச்சை செய்த கமல மோகனக் கையிலும், ‘வேண்டாம், வலிக்கிறது’ என்ற இரண்டு சொற்களிலும், பெண்கள் மனதை அறிந்த விவேகக் கையறு நிலையிலும், இன்னும் பல நூறு சூழ்நிலைகளிலும், நம்மைச் சிரிக்கச் சிந்திக்க, கவலைகளை மறக்க வைத்த நகைச்சுவையும், சிற்றின்பத்தைத் தொடாது நூறு பாடல்கள் பாடு எனக் கூறியதும் காற்றில் மிதந்த ‘சிந்தனை செய் மனமே!’, 75 ஆண்டுகளுக்கு முன் பிரம்மாண்டத்தின் உச்சமாக முரசு கொட்டிய ‘சந்திரலேகா’, பின் அதே பெயர் கொண்ட பாடலில் இசைப்புயலின் ஆர்ப்பரிப்பு; ஒரு எந்திரன் போதாது; ஆயிரக்கணக்கில் பாம்பாக, சிங்கமாக உருமாறி பிரமிக்கவைத்தது; 35 கிலோ எடையுள்ள ஆடைகளை அணிந்து நளினமாகச் சுற்றிச் சுற்றி ஆடிய கூமர், இப்படிக் கூட்டிய இசை மற்றும் கலை நய ரசனைகளும், ஒருவர் பல் தேய்ப்பதை ஐந்து நிமிடம் காட்டிய அடூர் கோபாலகிருஷ்ணன்; இரண்டு மணி நேரம் கழித்தும் எதுவும் நடக்காத பூட்டாத பூட்டுக்கள்; புதுமையின் பெயரில் ஒற்றைச் செருப்பால் அடித்த பாங்கு; பொழுதுபோக்கு என்ற பெயரில் வெளிக்கொணர்ந்த ரத்த ஆறுகள்; இவற்றால் வளர்ந்த என் பொறுமையும் (’ஸ்ரீஜிக்கு என்னிக்கும் கோபம் வராது!’ மனைவியின் நற்சான்றிதழ் எப்படிக் கிடைத்தது என்று நினைக்கிறீர்கள்?!) ஒரு தகப்பனாகத் தன் பிள்ளைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைவிட எப்படி வளர்க்கக்கூடாது என்று கற்பித்த 13 Reasons Why தொடரும்…

ஒவ்வொரு முறை அலுவலகத்தில் உள்ள வெவ்வேறு குழுக்கள் கிழக்கு மேற்காக வேலை செய்யும் போதும் எனக்குத் தோன்றும்: 1000 பேர்களை ஒருங்கிணைத்து ஒரு புள்ளியை நோக்கிச் செல்ல வைத்து, முடிவில் வெற்றி கிட்டுமா கிட்டாதா என்ற நிச்சயம் இல்லை எனினும், இதை முடிக்க வேண்டும்; வெற்றி நம் கையில் என்று தம் அணிக்கு நம்பிக்கை அளித்து, அவர்களுக்காக ஆடியும் பாடியும் வேலையை முடிக்க வைத்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி இறுதிக் கோட்டை அடைய வைக்கும் அந்தத் தன்னம்பிக்கை, வெற்றி பெற வேண்டும்

என்ற வெறி, தீராத்தாகம், விடாமுயற்சி! இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

கல்வி முதலில் கண் பார்த்துக் கை செய்வதாக இருந்தது. பின் கேள்வி முறையாக மாறியது. அதன் பின் படித்துத் தெளிவதாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு வழியிலும் கற்பிக்கப்படுபவர்கள் சிறிதளவே இருந்தனர். பின் தெருக்கூத்துகளும், நாடகங்களும் உருவாகின. ஒரே சமயத்தில் பல நூறு பேர்கள் அவற்றைக் கண்டு களித்தனர். ஆடலும் பாடலும் மனதை மயக்கினாலும், தேனில் கலந்த மருந்தாக அறங்களும் நற்பண்புகளும் புகட்டப்பட்டன. தொழில்நுட்பம் வளர்ந்தது. பல நூறு மக்கள் மட்டுமே கண்டு களிக்கக்கூடியவற்றைப் பல்லாயிரம் பேர் பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டது, திரைப்படங்களினால். இன்று இணையத்தின் வழி பல கோடி மக்கள் ஒரே நேரத்தில் இணைய முடிவதால், திரைப்பட/ஒளிவழிகளின் தாக்கம் பூதாகாரமாகியுள்ளது.

முன்பு அம்மா கூறியது போல கெட்டுப் போவதற்கு வழிகள் இருப்பினும் ‘எல்லோரும் நல்லவரே’ என்ற அசையா நம்பிக்கையினால், இன்றும் கதாநாயகன் கடைசியில் வில்லனை அடித்தோ, கையை வெட்டியோ, தலையைத் துண்டித்தோ, பிழைத்துப் போ என்று மன்னித்தோ விடுவதால், மக்கள் நன்மையை மட்டுமே எடுத்துக் கொண்டு சொத்தை வேர்க்கடலைகளைத் தவிர்த்து விடுகின்றனர் என்றே நினைக்கிறேன்.

 

இது போன்ற திரைப்படப் பித்துக்களையும் தமிழின்பால், இலக்கியத்தின்பால் ஈர்த்து, சிங்கை எழுத்தாளர்களை ஊக்குவித்து நூறு இதழ்களைத் தொட்டிருக்கும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! சினிமா பாஷையில் சொல்ல வேண்டுமெனில், இவர்களை கண்டிப்பாக மைண்டுலே வெச்சுக்கணும்!