சிராங்கூன் டைம்ஸூம் நானும்

0
37
ஹேமா

சிங்கப்பூரில் புனைவுகளையும் கவிதைகளையும் எழுத பல தளங்கள் இருக்கின்றன, ஆனால் அல்புனைவுகளுக்கு மிகவும் குறைவு. இந்நிலையில் கட்டுரைகளையும் பத்திகளையும் எழுத எழுத்தாளர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வரும் முக்கிய இதழாக ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இருக்கிறது. தொடக்கத்தில் நான் பெரும்பாலும் புனைவுகளையே எழுதி வந்தேன். அல்புனைவுகள் எனக்கானவை அல்ல என்று எண்ணிக் கொண்டிருந்த காலகட்டம் அது. அல்புனைவுகளைக் குறித்து நான் கொண்டிருந்த இந்தப் பிம்பம் உடைந்து அதன்மீது நாட்டம் கொள்ள ஆரம்பித்தது சிராங்கூன் டைம்ஸில் எழுதத் தொடங்கிய பின்னர்தான்.

புத்தகம் ஒன்றை வெளியிட வேண்டுமெனில் அடிப்படையாய் ஒருவருக்குள் ஒரு ஒழுங்கும் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது. சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ் என்னுள் அதை இயல்பாய் உருவாக்கியது. மாதம் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி என் எண்ணங்களையும் வாசிப்பையும் இருப்பையும் அமைத்துக் கொண்டேன். தொடர்ந்து எழுதினாலும் இடையிடையே ஏன் எழுதுகிறோம் என்ற சலிப்பு உண்டாகவே செய்தது. அத்தகைய சமயத்தில் சிராங்கூன் டைம்ஸ் இதழின் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த திரு. ஷானவாஸ், திரு. சிவானந்தம், திரு. மகேஷ்குமார் ஆகியோர் தொடர்ந்து எழுத எனக்கு உற்சாகமூட்டியிருக்கிறார்கள். நான் எழுத விரும்பிய விஷயத்தையும் அதை வெளிப்படுத்தும் வடிவத்தையும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் எனக்கு சிராங்கூன் டைம்ஸில் இருந்தது. அல்புனைவுகளை நான் தொடர்ந்து எழுத இதுவும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். தன் எழுத்தை அச்சில் பார்க்கும் உவகையைச் சிங்கப்பூர் எழுத்தாளர்களுக்கு அளித்து வரும் முக்கிய தளமாக சிராங்கூன் டைம்ஸ் இருக்கிறது. புதிய எழுத்தாளர்கள் தங்களை அடையாளம் காணவும், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளைப் பரிசோதனை செய்யவும், தேர்ந்த எழுத்தாளர்கள் தங்கள் கருத்தை வெளியிடவும் தளம் அமைத்துக்கொடுத்து, நூறாவது இதழைத் தொட்டிருக்கும் சிராங்கூன் டைம்ஸூக்கும் அதன் ஆசிரியர் குழுவினருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.