சுடாத பழங்கள்

கீதா பிரேமா

இந்த முறை,
தின்ன வாய்க்காது போகும்
நவாப் பழங்கள் பற்றிய புலம்பல்கள்…
உப்பைத் தொட்டுத் தின்று முடித்து
கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்த
நீல நாக்கின் நினைவையும்
லிட்டில் இந்தியாவில்
நசுங்கிப்போன பத்து பழங்களை
ஆறு வெள்ளிக்கு விற்பதன் புகாரையும்
ஆழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும்போதே…
இரண்டு தெருக்கள் தள்ளி
கேட்பாரற்றுக் காய்த்துக் கிடக்கும்
நாவல் மரம் பற்றிச் சொல்லி இடைமறித்தாள்
பக்கத்து அடுக்ககப் பெண்…
மகிழ்ந்ததாக பதிலுக்குக்
குறிப்பறிவித்தது பொய்தான்.
யார் கேட்டார் எட்டும் தொலைவிலான
நாவல் மரத்தை?
கிடைக்கவில்லையென நான்
அலுத்துக்கொள்ளும்
நவாப்பழங்கள் காய்க்கும் மரம்
நிகழ் காலத்திலா இருக்கிறது?