சோதனைகளே சாதனைகள்

முனைவர். ராஜி நிவாசன்

சிங்கப்பூரின் அருமையான இலக்கியத் தரம் வாய்ந்த மாத இதழ் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’சை வாசிக்கும் அனுபவம் இல்லாதோர் ஒரு அருமையான இலக்கிய அனுபவத்தைத் தவற விட்டவர்கள் என்று நான் எண்ணுகிறேன். இந்த இதழோடு என்னுடைய எழுத்தனுபவமும் வாசிப்பனுபவமும் என்னை ஆழமாக சிந்திக்கத் தூண்டிய ஒன்று. மொழிபெயர்ப்புக் கவிதைகள், கட்டுரைகள், புதிய கதைகள், கவிதைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். நூறாவது இதழை இவர்கள் வெளிக் கொணர்வது சிங்கப்பூருக்கு மேலும் பெருமை சேர்க்கக் கூடிய ஒரு முன்னெடுப்பு.

சோதனை முயற்சிகளை சாதனைகளாக மாற்றிய பெருமை இந்த இதழின் ஆசிரியக் குழுவிற்கு உண்டு. எழுத மறந்த எழுத்தாளர்களையும் துரத்தித் துரத்தி அருமையாக வடிவமைக்கப்பட்ட எழுத்துகளை அவர்களிடமிருந்து பெற்று வெளியிட்ட அனுபவம் இவர்களுக்கு உண்டு. புதிய புதிய தகவல்களைத் தருவதிலும், மாறுபட்ட கோணங்களில் எந்தக் கருப்பொருளை அணுகுவதிலும் முன்னோடியாகத் திகழும் இவர்கள் சிங்கப்பூர் இருக்கும்வரை இதை போல் இதழ்களைத் தொடர்ந்து வெளியிட வாழ்த்துகள். தமிழும் சிங்கப்பூரும் போல ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழும் தமிழர்களுடன் தொடர்ந்து பயணித்து வர மனமார்ந்த வாழ்த்துகள்.