தனியுரிமையும் தனித்த வாழ்வும்

பார்கவ் கணேஷ்
மலேசியாவாழ் சிங்கை தமிழர்

சமீபத்தில் “ஸ்வீட், காரம், காபி” என்ற இணையத் தொடரை அமேசான் ப்ரைமில் பார்த்தேன். மூன்று பெண்கள் – இளம்பெண், அவள் தாய், தாயின் மாமியார், குடும்ப பாரங்களாலும், சமூக எதிர்பார்ப்புகளாலும் அவர்களின் கனவுகளை புறக்கணிக்கின்றனர். வருடங்கள் உருண்டோடுவது உணராமல் தத்தம் ஆழ்மனது ஆசைகளைப் புறம் தள்ளுகின்றனர்.

ஒரு நாள், விரக்தியில், கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து வீடடை விட்டு வெளியேறுகின்றனர். இந்தியா முழுவதும் பயணம். எதிர்பாரா சந்திப்புகள். உதிர்ந்த உறவுகளின் மீட்பு. தேக்கி வைத்திருந்த உணர்வுகளின் வெளிப்பாடு. பெண்ணியம் கலந்த Slice of Life, Feel good தொடர். எட்டு அத்தியாயங்கள் இருந்தாலும், தொடரின் முதல் காட்சி இன்னும் கண்ணில் நிற்கிறது.

இளம்பெண்ணின் பாட்டிக்கு அவள் மகன் அறிவுரை அளிக்கிறான்: “மருந்து மாத்திரையை எடுக்க மறக்காதீர்கள்” “நேரத்திற்கு சாப்பிடு!” “உட்கார்ந்த இடத்திலேயே இரு! அலையாதே!” நல்லெண்ணத்தில் கொடுக்கப்படும் அறிவுரையாக இருந்தாலும், அது பாட்டியின் மனவலிமையை நசுக்குகிறது. அவரை சிறியவளாக்குகிறது, அவர் சிசுவாகிறார்.

 

நம் சமுதாயத்திலும் அக்கறையின் பெயரில் பலர் இன்று மனம் கசக்கும்படிதான் பேசுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் என் திருமண நிச்சயதார்த்தத்திற்கு இந்தியா சென்றிருந்தேன். தலைமுடி சற்று கொட்டியிருந்தது. வழுக்கை வட்டம் தூரத்திலிருந்து புலப்பட்டது. என்னை ஐந்தாறு ஆண்டுகளுக்கு பின் காணும் உற்றார் உறவினர் – அவர்களே வழுக்கைதான் – என்னிடம் துக்கம் விசாரிக்கிறார்கள். கண்ணாடியை ஒவ்வொரு நாளும் பார்க்கும் எனக்குத் தெரியாதா என்ன?

“உன் குடும்பத்தில் இந்த அவல நிலை யாருக்கும் இல்லையே” என்று முரண்பாடு உணராமல் உளறினார் ஒருவர். துன்பகரமான கேள்விகளுக்கு மரியாதை, நாகரீகம் கருதி பதிலளிக்க வேண்டிய கட்டாயம். பெண்களுக்கும் நிலைமை மோசம் தான். எடை சற்று கூடிவிட்டார் போல் இருந்தால் ஒரு கருத்து; நலிந்து தெரிந்தால் “ஏன் சரியாக சாப்பிடுவதில்லையா?” என்ற போலி அனுதாபம்.

வாயிருப்பவர்கள் ஆயிரம் சொல்வர், தோற்றம்தானே என்று விட்டுவிடவும் முடிவதில்லை. கல்யாணம் செய்யவில்லை என்றால் “ஏன்? எப்போது” என்ற நச்சரிப்பு. கல்யாணம் செய்தால் ஓராண்டிலேயே குழந்தைகளைப் பற்றிய பேச்சு. ஒரு குழந்தை பிறந்தால், குழந்தைக்கு சகோதரன்/சகோதரி வேண்டாமா என்ற கேள்வி. ஐம்பது தாண்டிவிட்டால் போதும். யாரைக் கேட்டாலும் “உடம்பை பார்த்துக்கொள்!” என்பார்கள். பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை இளமை இழக்கச் செய்யும் காரியங்களில் இதுவும் ஒன்று.

இது போன்ற கேள்விக்கணைகளைத் தவிர்க்கவே என் நண்பர்கள் சிலர் சீன புத்தாண்டு Reunion Dinner-க்குச் செல்லவே அஞ்சுகின்றனர். தனியுரிமையை மதிக்காத உறவினர்களை எப்படிச் சமாளிப்பது என்று பட்டியல்களும் இணையத்தில் ஏராளம். வாதிடுவதைவிட ஓடிடுவதே மேல் என்று சிலர் எண்ணுகின்றனர். Flight is better than Fight? அப்படியென்றால், அக்கறை காட்டாமலேயே வாழ்வதா? நலம் விசாரிக்கவே கூடாதா? செய்வதில் தவறில்லை. ஆனால், யார் கேட்கிறார்கள் என்பது முக்கியம். அதைவிட முக்கியம் கேட்பவர்களின் தொனி.

 

அடிப்படையில் அக்கறையில் அறிவுரையளிக்கும் இந்த வழக்கம் ஏன் எழுகிறது? அனைவருக்கும் “இதுதான் நல்ல வாழ்க்கை!”, “இவ்வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும்!” என்ற குறிப்பிட்ட கருத்து (conception of a good life) இருக்கிறது. இந்தக் கோட்பாடுகளுக்கு அப்பாற்பட்டு யார் நடந்து கொண்டாலும் அவர்களை நெறிப்படுத்த விரும்புகிறோம். ஒரு குறுகிய வட்டத்தில் இறுக்கிவிடுகிறோம்.

ஆனால், நம் அனைவரின் வாழ்க்கைப் பயணங்களும் வெவ்வேறு. ’நாம் ஏன் வாழ்கிறோம்?’ என்ற கேள்வி பன்முகம் வாய்ந்த பதில்களையே வெளிக்கொணரும். புத்தகக்கடைக்குச் சென்றால் சுய உதவி நூல்கள் கொட்டிக்கிடப்பதே இதற்கு முதன்மையான முன்னுதாரணம்.

மனித இனத்திற்கு இது புதிய கேள்வியுமல்ல. உலக தத்துவங்களும் மதங்களும் இந்த கேள்வியோடு நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மல்லுக்கட்டிக்கொண்டு வருகின்றன. நிக்கோமேக்கியன் நெறிமுறைகள் என்ற புத்தகத்தில் (Nicomachean Ethics) அரிஸ்டோட்டில் மனிதன் எவ்வாறு செழிப்பான வாழ்க்கையை வாழலாம் (eudaimonia) என்பதை விளக்குகிறார். மகிழ்ச்சி என்பது ஒரு தார்மீக குணத்தைப் பெறுவதை பொறுத்தது. மனிதன் தனது வாழ்க்கையில் தைரியம், பெருந்தன்மை, நீதி, போன்ற நற்பண்புகளை வெளிப்படுத்தவேண்டும். இந்த நற்பண்புகள் அதிகப்படியான மற்றும் குறைப்பாட்டிற்கு இடையில் சமநிலையில், அதாவது “golden mean”-ஐ அடைவது அவசியம். உதாரணத்திற்கு, தைரியம் என்பது கோழைத்தனம் (குறைபாடு) மற்றும் பொறுப்பற்ற தன்மை (அதிகப்படியாக) ஆகியவற்றுக்கு இடைப்பட்ட நடுநிலை வழி. இன்னும் சுருங்கச் சொன்னால், அளவுக்கு மிஞ்சினால் நற்பண்புகளாகிய அமுதமும் நஞ்சே!

 

ஆனால், வாழ்வில் மகிழ்ச்சியையும், வாழ்வின் அர்த்தத்தையும் தேடும் பலர் அதனை அடையாமலேயே இறக்கின்றனர். இன்றும் பசி, பிணி, போரென்று அவதியுறுகின்றனர் மக்கள். இரண்டு வேளை உணவுக்காகத் திண்டாடுகின்றனர். அவர்களிடம் ‘Eudaimonia’ ‘சமநிலை’ என்றெல்லாம் கதைத்தால் திகைப்பர். ஆனால், அத்திண்டாட்டத்திலும் பலர் திருமணம் செய்து தாய் தந்தையாக நினைப்பது ஏன்? என் தலைமுறையோடு இன்னல்கள் போகட்டும் என்று நினைக்காமல் புதிய பந்தங்களை உருவாக்கி, மென்மேலும் கடமைகளை சுமக்க வைப்பது எது?

David Benatar “Better Never to have Been” என்ற சர்ச்சைக்குரிய நூலில் இந்தப் போக்குக்கு எதிர்மறையான வாதத்தை முன்வைத்தார். ‘பிறப்பு என்பது துன்பத்தையே விளைவிக்கும், இறப்பில் முடியும். பிறக்காமல் இருந்தால் வலி என்பதே தெரியாது. அவ்வப்போது நிரந்தரமில்லா சந்தோஷங்களை அனுபவிப்பதைவிட பிறக்காமல், வலியை உணராமல் இருப்பதே சிறப்பு.’ என்று கூறுகிறார். இதைத்தான் மோட்சம் என்கிறார்களோ?

 

தத்துவரீதியாக இக்கருத்திற்கு சில தகுதிப்பாடுகள் இருந்தாலும், நடைமுறை வாழ்வில் சிலரே இவ்வாறு யோசிக்கின்றனர். குழந்தைகள் வேண்டாமென்று சொல்லும் பலர் – ஆண்களும் சரி, பெண்களும் சரி – இன்று தன்னலம் கருதியே அம்முடிவெடுக்கின்றனர். பிள்ளை என்பது யாதெனக் கேட்கும் அளவிற்குக் கூடப் பலர் முற்படுவதில்லை; பெற்றுப் பார்ப்பதெல்லாம் அப்புறம்தான். வளர்ந்த நாடுகளிலும், வளர்ந்து வரும் நாடுகளின் நடுத்தரவர்க்கத்தில் உள்ளவர்களிடையே இந்தப் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. வாழ்க்கையின் பொருளை அவர்களின் வேலைகளிலேயே காண்கின்ற இவர்கள், “செய்யும் தொழிலே தெய்வம்” என்ற கூற்றை உச்சத்திற்கு கொண்டு செல்கின்றனர் (Workism). வேலை இழந்தாலோ, ஒய்வு பெற்றாலோ சுக்கானில்லாத கப்பல் போல் இலக்கில்லாமல் மிதக்கின்றனர். நூறாண்டுகளுக்கு முன், “Economic Possibilities for our Grandchildren” என்ற கட்டுரையில், பொருளாதார நிபுணர் John Maynard Keynes, 2028க்குள் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் மனிதனுக்கு வேலையிடத்தில் நேரம் சேமிக்கப்படுமென்றும், அதனால் பொழுதைப் போக்குவதே மனிதனின் மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்த்தார். எதிர்பார்த்தது நடக்கவில்லை. இன்று நடுத்தர வர்க்கத்தில் உள்ள பலர் அவர்களின் வேலைகளில் அதிக நேரம் செலவழித்தும் கூட, செய்யும் தொழிலை விரும்புவதில்லை. பொழுது போகிறது, ஆயினும் ஏன் இந்த வேலையைச் செய்கிறோம் என்று புரிவதில்லை. வேலையில் நூறு சதவீதம் கவனமில்லை (Silent quitting); கவனம் இருந்தாலும், மன உளைச்சலில் வாட்டம்; சொல்லமுடியாமல் தவிப்பு (Burnout).

பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடேன் என்று சொல்வது சுலபம். செய்வது கடினம். கடமைக்கும் (கடனுக்கும்!) கட்டுப்பட்டு வாழும் எந்த கர்மயோகியும் கிரகஸ்தனின் பொறுப்புகளை புறம் தள்ளிவிட்டு, துறவியாக முடியாது. அப்படியே செய்ய வேண்டுமானாலும், நகரங்களில் ஏது வனப்பிரஸ்தானம்? இந்த சூழலில், தற்போது ‘இகிகாய்’ (Ikigai) என்ற ஜப்பானிய தத்துவம் பிரபலமாகியுள்ளது. ’இகி’ என்றால் “உயிரோடு இருத்தல்”, ’காய்’ என்றால் மதிப்பு. நாம் விரும்புவது (ஆர்வம்), உலகிற்கு என்ன தேவை (நம் பணி), நம் திறமைகள், மற்றும் நமக்கு பணம் ஈட்டும் தொழில் ஆகியவை ஒன்றெனச் சங்கமிக்கும் போதுதான் வாழ்வு பொருளும், பொலிவும் பெறுகிறது; அதன் மதிப்பும் கூடுகிறது. இகிகாய்!

 

சிராங்கூன் டைம்ஸ்ன் நூறாவது இதழுக்கும் வாழ்வின் அர்த்தத்திற்கும் என்ன தொடர்பு?

உண்மையில், நாம் யாரும் பிறந்தோம், இறந்தோமென்று வாழ விரும்புவதில்லை. எல்லோருக்கும் குறைந்தபட்சம் அவர்களின் குடும்பங்களிலாவது தாம் மறைந்த பின்னும் பெயர் சொல்ல ஏதாவது ஒன்றை விட்டுச்செல்ல வேண்டும் என்ற வேட்கையுள்ளது. நம்மால் முடியாவிட்டாலும், அடுத்த தலைமுறையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சிலைகள், குடும்ப பெயரில் நன்கொடைகள், சுயசரிதைகள் அனைத்துமே தம் பெயரை, தம் மரபை தனக்குப்பின் வருவோருக்குப் பறைசாற்றும் ஒரு முயற்சிதான்.

இருப்பினும், இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, சுயநலமின்றி சமூகத்திற்குச் சிலர் பங்களிக்கிறார்கள். இவ்விதழும் நம் தமிழ்ச் சமூகத்திற்கு அப்படிப்பட்ட பங்களிப்புதான். சிங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை குறைவு; தமிழ் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதைவிட குறைவு. எதற்காகத் தேவையின்றி இந்தச் சஞ்சிகை என்று அனுதாபத்தோடு சில பலர் கேட்டிருக்கக்கூடும். ’எதற்கு உங்களுக்கு இந்த வேலை?’ என்று ‘அக்கறையுடன்’ அறிவுரை கூறியிருக்கக்கூடும்.

அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தமிழ் உரிமை வாழ, தனித்திருக்க, வேலை நிமித்தங்களிடையே, குடும்ப பொறுப்புகளைச் சுமந்துக்கொண்டு உழைக்கும் இதழின் அணிக்கு என் பாராட்டுக்கள்! பொருள் ஈட்டி, வாழ்வின் பொருள் தேடும் பலருக்கிடையே மொழி அடையாளத்தின் வளர்ச்சிக்காக முற்படும் உங்களுக்கு ஒரு வாசகனாக என் வாழ்த்துக்கள்!