பணத்தாள் தொடர்கள்

நித்திஷ் செந்தூர்

சிங்கப்பூரின் முதல் பணத்தாள் தொடர் 1967ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. ‘ஆர்க்கிட்’ தொடர் என அது வழங்கப்பட்டது. 1 வெள்ளி, 5 வெள்ளி, 10 வெள்ளி, 25 வெள்ளி, 50 வெள்ளி, 100 வெள்ளி, 500 வெள்ளி, 1000 வெள்ளி, 10,000 வெள்ளி ஆகிய மதிப்புகளில் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன.

பணத்தாளின் முன்பக்கத்தில் சிங்கப்பூருக்குச் சொந்தமான ஆர்க்கிட் மலர்களின் வடிவங்கள் இடம்பெற்றிருந்தன. புதிதாய் மலர்ந்திருக்கும் நாட்டின் பொருளியல் ஆர்க்கிட் மலர்களைப் போலப் பூத்து குலுங்கப்போகிறது என்ற நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் அது விதைத்தது. நான்கு அதிகாரபூர்வ மொழிகளில் ‘சிங்கப்பூர்’ சொல்லைக் காணலாம். உலகத்தில் சிங்கப்பூர், இலங்கை பணத்தாள்களில் மட்டுமே நாட்டின் பெயர் தமிழில் இடம்பெற்றிருக்கும்.

பணத்தாளின் பின்பக்கத்தில் சிங்கப்பூரின் தேசிய அடையாள சின்னங்கள் இடம்பெற்றிருக்கும். சிங்கப்பூர் ஆறு, அரசாங்க அலுவலங்கள், விக்டோரியா கலையரங்கம், இஸ்தானா முதலியவற்றை வெவ்வேறு மதிப்பிலான பணத்தாள்களில் காணலாம்.

சிங்கப்பூரின் முதல் பணத்தாள் தொடர் சிங்கப்பூரில் அச்சிடப்படவில்லை. மாறாக அவை பிரிட்டிஷ் ஆலைகளான ‘Bradbury Wilkinson & Co. Ltd’, ‘Thomas De La Rue & Co. Ltd’ ஆகியவற்றில் அச்சிடப்பட்டன. புதிய வெள்ளி பணத்தாள்களின் முதல் தொகுப்பு கப்பல் மூலம் சிங்கப்பூர்க் கரைக்கு 1967ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதியன்று வந்தடைந்தது. பலத்த பாதுகாப்புடன் அந்தப் பணத்தாள்கள் வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.

அதே ஆண்டு நவம்பர் மாதம், ‘பணக் கப்பல்’ என வழங்கப்பட்ட ‘P&O cargo liner SS Comorin’ கப்பல், 7 மில்லியன் மதிப்புமிக்க பணத்தாள்களையும் நாணயங்களையும் கொண்டு வந்தது. பணத்தாள்களின் எடை மட்டுமே 63 டன். கடுமையான பாதுகாப்புடன் பணக்கட்டுகள் இறங்கப்பட்டன. வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட அந்தப் பணத்தாள்களை வாங்க பொதுமக்கள் அலைமோதவில்லை. ஏனெனில், அப்போது மலாயா, பிரிட்டிஷ் போர்னியோ வெள்ளி இன்னும் சட்டப்படிச் செல்லுபடியாகும் நாணயமாக இருந்தது. 1969ஆம் ஆண்டில் தான் மலாயா, பிரிட்டிஷ் போர்னியோ வெள்ளி பணத்தாள்கள் புழக்கத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டன.

1967ஆம் ஆண்டிலிருந்து 1976ஆம் ஆண்டு வரை ‘ஆர்க்கிட்’ பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. சுதந்திரத்திற்குப் பிறகு தேசத்தின் பயணத்தில் அது ஒரு முக்கிய மைல்கலாகக் கருதப்பட்டது. ‘S$’ எனும் குறியீட்டில் சிங்கப்பூர் வெள்ளி புதிய அடையாளத்தைப் பெற்றது. உலக அரங்கில் சிங்கப்பூர் வெள்ளி தனது தன்னிகரற்ற செல்வாக்கைப் பதிக்கத் தொடங்கியது.

பறவை பணத்தாள் தொடர்

‘ஆர்க்கிட்’ பணத்தாள் தொடரைத் தொடர்ந்து ‘பறவை’ பணத்தாள் தொடர் 1976ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. 1 வெள்ளி, 5 வெள்ளி, 10 வெள்ளி, 20 வெள்ளி, 50 வெள்ளி, 100 வெள்ளி, 500வெள்ளி, 1000 வெள்ளி, 10,000 வெள்ளி ஆகிய மதிப்புகளில் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன.

‘ஆர்க்கிட்’ தொடரில் இருந்த 25 வெள்ளி பணத்தாள் சிங்கப்பூர்வாசிகளிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை. மக்கள் 50 வெள்ளி பணத்தாளையே பெரிதும் பயன்படுத்த விரும்பினர். 25 வெள்ளி பணத்தாள்களை ஏற்க அவர்கள் தயக்கம் காட்டியதால் பெருமளவிலான பணத்தாள்கள் வங்கிகளில் தேங்கிக் கிடந்தன. ஆர்க்கிட் 25 பணத்தாளுக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பறவை தொடரில் அந்த மதிப்பு கொண்ட பணத்தாள் அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக, 20 வெள்ளி பணத்தாள் புதிதாய்ப் புழக்கத்தில் புகுத்தப்பட்டது.

பணத்தாளின் முன்பக்கத்தில் சிங்கப்பூருக்குச் சொந்தமான பறவைகளைப் பார்க்கலாம். ‘Black-naped tern, Red-whiskered bulbul, White-collared kingfisher’ முதலியவை அவற்றுள் சில. இளம் சிங்கப்பூர்க் குடியரசு உயர்ந்து பறந்து செல்வதைப் பறவைகள் சித்திரக்கின்றன. பணத்தாளின் பின்பக்கத்தில் கடந்த பத்தாண்டுகளில் சிங்கப்பூரின் சாதனைகள் இடம்பெற்றிருந்தன. வானுயர ஓங்கி நிற்கும் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள், தேசிய தின அணிவகுப்பு, சாங்கி விமான நிலையம், சிங்கப்பூர் ஆறு முதலியவற்றைக் காணலாம். கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் பறவை தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டன.

1976ஆம் ஆண்டிலிருந்து 1984ஆம் ஆண்டு வரை பறவை பணத்தாள் தொடர் அச்சிடப்பட்டது. அந்தக் காலகட்டத்தில்தான் தீவெங்கும் தானியக்க வங்கி இயந்திரச் சேவைகள் தொடங்கின. சிங்கப்பூரின் முதல் தானியக்க வங்கி இயந்திரம் ராஃபிள்ஸ் பிளேஸில் 1979ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதியன்று அமைக்கப்பட்டது. பணத்தைப் பத்து வெள்ளி பணத்தாள்களாக மட்டுமே அது வழங்கமுடிந்தது. பொதுமக்கள் பணத்துடன் உறவாடிய விதத்தையே தானியக்க வங்கி இயந்திரங்கள் மாற்றின. தற்போது தீவு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட தானியக்க வங்கி இயந்திரங்கள் உள்ளன.

கப்பல் பணத்தாள் தொடர்

சிங்கப்பூரின் மூன்றாவது பணத்தாள் தொடராகக் ‘கப்பல்’ பணத்தாள் தொடர் வெளியிடப்பட்டது. 1 வெள்ளி, 2, வெள்ளி, 5 வெள்ளி, 10 வெள்ளி, 50 வெள்ளி, 100 வெள்ளி, 500 வெள்ளி, 1000 வெள்ளி, 10,000 வெள்ளி ஆகிய மதிப்புகளில் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன.

முந்தைய தொடர்களில் இருந்த 1,000 வெள்ளி பணத்தாள் தீர்ந்துபோனதால் கப்பல் தொடரின் 1,000 வெள்ளி பணத்தாள் முதலில் வெளியிடப்பட்டது. அன்றாட புழக்கத்தில் அதிகம் பயன்படுத்தப்படாத பணத்தாள் இல்லாமல் இருந்தது வியப்பான விஷயம் தான். 1,000 வெள்ளி பணத்தாள் 1984ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

தொடரின் இதர மதிப்பு பணத்தாள்கள் 1985ஆம் ஆண்டு ஆக்ஸ்ட்டுக்கும் 1991ஆம் ஆண்டு ஜனவரிக்கும் இடைப்பட்ட காலத்தில் வெளியிடப்பட்டன. 20 வெள்ளி பணத்தாள் இந்தக் கப்பல் தொடரில் இடம்பெற்றவில்லை. அதற்குப் பதிலாகப் புதிதாய் 2 வெள்ளி பணத்தாள் அறிமுகமானது. முதலில் வெளியிடப்பட்ட 2 வெள்ளி பணத்தாளின் நிறம் ஆரஞ்சு கலந்த சிவப்பு. பத்து வெள்ளியின் பணத்தாளின் நிறமும் சிவப்பாக இருந்தது. இரண்டு பணத்தாள்களின் நிறமும் ஒத்தியிருந்ததால் சில்லறை தரும்போது கடைக்காரர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டது. தவறான பணத்தாளைத் தந்த சம்பவங்கள் பல அரங்கேறின. அதன் காரணமாக ஊதா நிறத்திற்கு 2 வெள்ளி பணத்தாளின் நிறம் மாற்றப்பட்டது.

சிங்கப்பூர், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த வர்த்தக மையமாக இருந்து உலகின் பரபரப்புமிக்க துறைமுகங்களில் ஒன்றாக உருமாறியுள்ளது. அந்த வளர்ச்சிக்கு வித்திட்ட வர்த்தகக் கப்பல்களை நினைவுகூர்கிறது இத்தொடர். பணத்தாளின் முன்பக்கத்தில் பல நூற்றாண்டுக் காலம் சிங்கப்பூர் கரைகளுக்குப் பரிச்சயமான கப்பல்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

பணத்தாளின் பின்பக்கத்தில் தகவல்தொடர்பு, வீடமைப்பு, தற்காப்பு, துறைமுக நிர்வாகம் முதலியவற்றில் சிங்கப்பூர் அடைந்துள்ள சாதனைகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி 2 வெள்ளி பணத்தாளில் தமிழர்ப் பாரம்பரிய கலையான பொய்க்கால் குதிரையையும் மயிலாட்டத்தையும் காணலாம். பல்லினச் சமூகத்தின் பாரம்பரிய கலைகளை எடுத்துக்காட்டும் சிங்கே ஊர்வலத்தைப் படம்பிடித்து காட்டுகிறது 2 வெள்ளி பணத்தாள்.

1984ஆம் ஆண்டிலிருந்து 1999ஆம் ஆண்டு வரை கப்பல் பணத்தாள் தொடர் ஜூரோங்கில் அச்சிடப்பட்டது. சிங்கப்பூரில் அச்சிடப்பட்ட முதல் தொடர் என்ற பெருமையும் இதற்கு உண்டு!

யூசோப் இஷாக் பணத்தாள் தொடர்

சிங்கப்பூரின் நான்காவது பணத்தாள் தொடராக ‘யூசோப் இஷாக்’ பணத்தாள் தொடர் 1999ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 2 வெள்ளி, 5 வெள்ளி, 10 வெள்ளி, 50 வெள்ளி, 100 வெள்ளி, 1000 வெள்ளி, 10,000வெள்ளி ஆகிய மதிப்புகளில் பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. தற்போது இந்தப் பணத்தாள் தொடர்தான் தற்போது புழக்கத்தில் உள்ளது.

சிங்கப்பூரின் முதல் அதிபர் யூசோப் இஷாக். நாட்டு நிர்மாணத்தில் அவர் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பினை அங்கீகரிக்கும் வண்ணம் அவரது உருவப்படம் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு மதிப்பிலான பணத்தாள் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டது. அந்தக் கருப்பொருளும் யூசோப் இஷாக்கின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்ததாக அமைந்திருக்கும்.

50 வெள்ளி பணத்தாளில் தமிழர்ப் பாரம்பரிய இசைக் கருவியான வீணை இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம். அதோடு நான்கு அதிகாரத்துவ மொழிகளில் ‘சிங்கப்பூர்’ என்ற சொல் இடம்பெற்றிருக்கும். அதற்கு மேலே நுண்ணெழுத்துகளால் ‘சிங்கப்பூர் நாணய ஆணையம்’ என ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும். 1,000 வெள்ளி பணத்தாளில் நாட்டின் தேசியக் கீதம் நுண்ணெழுத்துகளாக இடம்பெற்றிருக்கும். உருப்பெருக்கியின் உதவியுடன் தேசியக் கீதத்தின் வரிகளைப் பார்த்து ரசிக்கலாம்.

இந்தத் தொடரின் பணத்தாள்களில் சோழிகள் இருப்பதைக் கவனிக்கமுடியும். பண்டைக் காலத்தில் சோழிகள் பணமாகப் பயன்படுத்தப்பட்டன. அந்தப் பழமையைப் பணத்தாளில் பக்குவாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கள்ளப் பணத்தாள்கள் அச்சிடப்படுவதைத் தடுக்க பல பாதுகாப்பு அம்சங்கள் புதிதாய் அறிமுகப்படுத்தப்பட்டன. அதோடு கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுவதைத் தடுக்க சிங்கப்பூர் நாணய ஆணையம் 2021ஆம் ஆண்டிலிருந்து 1,000 வெள்ளி பணத்தாளை வெளியிடுவதில்லை. 10,000 வெள்ளி பணத்தாளை வெளியிடுவதை ஆணையம் 2014ஆம் ஆண்டில் நிறுத்தியது.

2 வெள்ளி, 5 வெள்ளி, 10 வெள்ளி பணத்தாள்கள் பிளாஸ்டிக் போலிமர் நோட்டுகளாகவும் வெளியிடப்பட்டன. பிளாஸ்டிக் பாலிமர் நோட்டுகள் நீடித்து நிலைக்கக்கூடியவை. அதன் ஆயுட்காலம் காகிதத்தைவிட அதிகம். தண்ணீர் பட்டாலும் நோட்டுக்குச் சேதம் இருக்காது. எனவே அன்றாடம் பொதுமக்கள் அதிகம் புழக்கக்கூடிய மதிப்பிலான பணத்தாள்கள் பிளாஸ்டிக் நோட்டுகளாக வலம் வருகின்றன.

உசாத்துணை

  1. Clement Liew, Peter Wilson (2021). A history of money in Singapore
  2. Stella Kon (1992). President Yusof bin Ishak and the Portrait Note