பண்பாட்டு மஞ்சரி

கனடா’ மூர்த்தி,

சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் காலக் கண்ணாடியாகத் தென்படும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தனது 100வது இதழை எட்டியிருப்பது பெருமகிழ்வைத் தருகிறது. சஞ்சிகை வெளியிடுவதென்பதே பல்வேறு வகைப் பின்னடைவுகளுக்கு உலகெங்கும் உள்ளாகிவரும் இன்றைய காலகட்டத்தில், காத்திரமான உள்ளடக்கங்களுடன், நேர்த்தியான வடிவமைப்பில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ பயணப்படுகிறது. இச்சாதனை மிகவும் பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்.

தனது முதல் இதழிலிருந்தே ஒரு கட்டுக்கோப்பான அமைப்பில் பலதரப்பட்ட சிறப்பான ஆக்கங்களைத் தன்னுள் கொண்டு ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ வெளியாகி வருவதை நாமறிவோம். வெளிநாடுகளில் அதிகம் அறியப்படாதிருக்கும் சிங்கப்பூர்த் தமிழ் உலகினை அது தமிழ்கூறும் நல்லுலகெங்கும் பிரகாசிக்க வைக்கிறது. அந்த வகையில், தனது உள்ளடக்கங்களின் காரணமாக உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குப் பெரும் பிரமிப்பை ஊட்டுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை. ஒப்பிட்டுரீதியில் சிறியதொரு எண்ணிக்கைச் சமூகமாக அறியப்படும் சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் பெரும் சிறப்புகள் பலவற்றையும் அது தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், உலகெங்கும் வாழும் தமிழர்கள் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சஞ்சிகையை இலக்கிய இதழாகக் காண்பதற்கும் மேலாக சிங்கப்பூரின் சிறப்பானதொரு பண்பாட்டு மஞ்சரியாகவே காண்கிறார்கள்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இன்னும் பல நூறு இதழ்களைக் கடக்கட்டும். சிங்கப்பூரைப் பெருமைப்படுத்தித் தானும் சிறப்புறட்டும்.