மெய்ப்படும் கனவு

சித்ரா ரமேஷ்

காட்சி ஊடகங்களும், இணைய ஊடகங்களும் நிறைந்துள்ள நவீன உலகத்தில் அச்சிதழ் வடிவம் என்பது வழக்கொழிந்துவிட்ட நிலையில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழாக சிங்கப்பூரில் வெளிவந்துகொண்டிருக்கிறது. திரு.முஸ்தபா அவர்களின் கனவு மெய்ப்பட இதழின் முதன்மை ஆசிரியர் திரு.ஷாநவாஸ், அவருடன் இணைந்து பணியாற்றிய மற்றும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மற்ற இணை ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சிராங்கூன் டைம்ஸ் முதன் முதலில் அறிமுகம் ஆன 2010 ஆம் ஆண்டை நினைவு கொள்கிறேன். திரு நந்தவனம் சந்திரசேகர் இதழ் ஆசிரியராக தொடங்கப்பட்டது. முதல் இதழிலிருந்து தொடர்ந்து என் பங்களிப்பை வழங்கி வந்து கொண்டிருக்கிறேன். நகரத்தின் கதை என்ற நெடுந்தொடர், மேலும் பல நேர்காணல்கள் செய்து அவற்றை அனுப்பினேன். அவை பிரசுரம் ஆயின. ஆனால் தொடர்ந்து நடத்த முடியாமல் நின்று போனதை மீண்டும் 2015இல் உயிர்ப்பித்து, இன்றும் அதே துடிப்புடன் வெளி வந்து கொண்டிருக்கிறது. சிங்கப்பூரின் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஒரு அடையாளமாக ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பல புதியவர்களை இனம் கண்டு அவர்களை எழுத ஊக்கப்படுத்தி, புதிய தளங்களில் புதிய விஷயங்களைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது. சொல் புதிது, பொருள் புதிது என்ற பாரதியின் வாக்குக்கேற்ப தொடர்ந்து பல புதுமைகளை தந்து கொண்டேயிருக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.