வணக்கம்

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ 100வது இதழ் வரலாற்று சிறப்புமிக்கது. நமது நாட்டில் நூற்றுக்கணக்கான தமிழ் இதழ்கள் அரும்பியுள்ளபோதிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான சஞ்சிகைகள் மட்டுமே நூறாவது மைல்கல்லை எட்டியுள்ளன. அந்த சாதனையும் சிறப்பும் சிங்கையைச் சேர்ந்த கட்டுரையாளர்கள், எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், கவிஞர்களுடன் உலகம் முழுதும் உள்ள வாசகர்களின் தொடர் ஆதரவினால் மட்டுமே சாத்தியமாகியுள்ளது.

சிங்கப்பூரில் தமிழ் இதழை நடத்துவதுவதில் பற்பல இன்னல்கள் உள்ளன. அவற்றுள் போதுமான நிதியாதரவு இன்மை, தமிழ்ச் சமூகத்தினரிடமிருந்து ஆதரவின்மை, பத்திரிக்கையை எடுத்து நடத்துவதில் மனிதவளப் பற்றாக்குறை ஆகியவை தலையாயவை. சிங்கப்பூர்த் சிற்றிதழ்களின் வரலாற்று பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் பல இதழ்கள் மூடுவிழா கண்டுள்ளதற்கு அவையே காரணங்கள்.

ஓர் இதழுக்கு உயிர்நாடியாக விளங்குபவை விளம்பரங்கள். விளம்பரங்கள் மூலம் வரும் வரவு முக்கியம். அதனை வைத்துத்தான் இதழை நடத்த இயலும். விளம்பரங்கள் இல்லையெனில் இதழ் தத்தளிக்கத் தொடங்கும். தாக்குப்பிடிக்க இயலாது. அவ்வகையில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழில் விளம்பரங்கள் குறைவாக இருந்தாலும் நிறுவனர் ஹாஜி திரு. முஸ்தபா அவர்களின் வற்றாத நிதியாதரவு இதழை வாட விடாமல் வாழ வைத்துள்ளது.

உள்ளூர்த் தமிழ் எழுத்துலகில் பெயர்பெற்றோருக்கு மேடை அமைத்து தந்ததோடு முன்அறிமுகம் இல்லாதவர்களின் படைப்புகளை மேடையேற்றவும் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ வித்திட்டுள்ளது. காலத்திற்கேற்ப இணையத்திலும் நுழைந்தது. அச்சுப் பிரதியின் வடிவமைப்பிலும் எழுத்துருக்களும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. கட்டுரைகள், கதைகள், கவிதைகள், கருத்துகள், கலந்துரையாடல்கள், நேர்காணல்கள், அனுபவங்கள், ஆய்வுகள், பத்திகள், நிகழ்வுகள் முதலிவற்றைத் தாங்கி மலரும் இதழின் வருங்காலமும் வளமாக இருக்கும் என நம்பிக்கை கொள்வோம்!

சிங்கப்பூரில் தமிழரின் அடையாளமாக இவ்விதழ் நிலைபெற தங்கள் ஆதரவே உயிர்நாடி இந்த விரைவுத் தகவல் குறியீட்டை வருடிச் சலுகை விலையில் சந்தா செலுத்தலாம் சந்தாதாரர்கள் இதுவரை வெளியான அனைத்து இதழ்களையும் இணையதளத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம் படைப்புகளை [email protected] முகவரிக்கு அனுப்புங்கள் இதே முகவரிக்குத் தங்கள் மேலான கருத்துகளையும் அனுப்பலாம் 

2010 ஜூன் மாதம் முதல் இதழ் வெளிவந்து சில மாதங்களுக்குப் பிறகு 2011இல் நின்று போய், பின்னர் 2015 ஆகஸ்டு மாதம் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழ் மீண்டும் வெளிவந்தபோது, நிறுவனர் திரு.முஸ்தபா அவர்கள் “சிங்கைத் தமிழ்ச் சூழலில் வெறுமனே செய்திகளைத் தொகுக்கும் பணியிலிருந்து தீவிர இலக்கியம் நோக்கி நகர்த்தவேண்டிய தேவைகள் இருக்கின்றன. இலக்கியப் படைப்புகளுக்கும் புத்தக விமர்சனங்களுக்கு இன்னும் பல புதிய முயற்சிகளுக்கும் இடம் ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாகவும் இருக்கும்” என்றார். கடந்த 9 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இப்பணியில் அவருடைய நோக்கம் பெருமளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது மனநிறைவைத் தருகிறது.

படைப்பாளர்கள், வாசகர்களின் ஆதரவு இன்னமும் பல்கிப் பெருகும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் இயங்கும் இதழின் தன்னார்வல ஆசிரியர் குழு, அனைவருக்கும் தனது மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கவும், வரலாறு, சமூகம், மொழி, பண்பாட்டுத் தளங்களில் காலப்பொருத்தமான விவாதங்களை முன்னெடுக்கும் படைப்புகளை வெளியிடவும் 2015 முதல் சமூக அக்கறையுடன் பங்களித்து வருகிறது.