வாழ்த்துகள்

பேராசிரியர் அ வீரமணி
சிங்கப்பூர்

‘சிங்கப்பூர்த் தமிழ் – தமிழர்’ வரலாற்றில் செய்தி மலர்கள் பல வெளிவந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் அதை தோற்றுவித்த ஆசிரியர் குழுவினரின் திறனையும், அவர்களுக்கு கிடைத்த நிதி ஆதரவையும் பொறுத்தே அவற்றின் வாழ்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில இதழ்கள் முதல் வெளியீட்டுடன் நின்று போயிருக்கின்றன. சில பல ஆண்டுகள் தொடர்ந்து வெளி வந்திருக்கின்றன. ஆனால் நூறு வெளியீடுகளைக் கண்ட ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இந்த வரலாற்றில் முதன்மை பெறுகிறது.

நாளிதழ்கள் மட்டுமே தொடர்ந்து வெளிவர முடியும் என்ற வரலாற்றுப் போக்கை மாற்றி, ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. பல நூறு கட்டுரைகள், செய்தித் தொகுப்புகள், பேட்டிகள், இலக்கிய பகுதி என பலவற்றை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. தமிழர்கள் வரலாற்று அடிப்படையில் முக்கியத்துவம் தரும் சிராங்கூன் வட்டாரத்தையே அதன் தலைப்பாக வெளிக்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. இந்த மாபெரும் சாதனையைப் படைத்த நண்பர் ஹாஜி முஸ்தபா அவர்களுக்கும், முதன்மை ஆசிரியராகப் பணியாற்றும் திரு.ஷானவாஸ் அவர்களுக்கும், ஆசிரியர் குழும நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் தொடர் பணி எளிமையானது அல்ல. சிங்கப்பூரில் தமிழ் வாழ்கிறது, தமிழர்கள் துடிப்போடு தமிழை வளர்க்கின்றனர் என்ற பல அடையாளங்களில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ முக்கியமானது. இந்தத் தொடர்ப் பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்.