விளையாட்டுக் கோட்பாடு

அருள்குமரன்

பெயர்தான் ‘கேம் தியரி’ ஆனால் இது வெறும் விளையாட்டில்லை. எல்லாமே தியரியும் இல்லை. ரொம்பவே பிராக்டிகலான வாழ்வியல் பாடம் இது!

கேம் தியரி பற்றி ஒரு தொடர் எழுதுவது என்று முடிவாயிற்று! அன்றாட வாழ்க்கையில் அதன் நேரடி பயன்கள் என்ற வகையில் துவங்க வேண்டும் என்றும் தோன்றியது, ஆனால் எப்படி?

இந்த நேரத்தில்தான் என் பழனி பயணம் நடந்தது. அங்கே நான் பார்த்த விஷயங்களில் இருந்தே துவங்குகிறேன். இரண்டு பிச்சைக்காரர்களின் உத்திகளைப் (Strategy) பார்ப்போம்!

என்னது? பிச்சையெடுப்பதில் ஸ்ட்ராட்டஜியா என்று அதிர்ச்சி அடைய வேண்டாம்! வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்திக்கொள்வது அனைவருக்கும் அவசியம்.

முதல் நபர் ஒரு வயதான ஆடவர், வந்தா வா! கேட்டகிரி. மேடான இடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு வருபவர்களை பிச்சை கொடுக்க வா வா என்று அழைக்கிறார். பொதுமக்களோ பெரும் சோம்பேறிகள். தமது தேவைக்கே நடக்க வேண்டுமா என்று யோசிப்பவர்கள் இவருக்கு பிச்சை அளிக்கவா மேடேறிப் போய் காசை அள்ளி வழங்கப் போகிறார்கள்?

இரண்டாம் நபர் ஒரு வயதான பெண்மணி. உப தொழிலாக கையில் மணி மாலைகளும் வைத்திருந்தார்! இவர் பிச்சை எடுப்பதில் கைதேர்ந்தவர் என்று பார்த்த கொஞ்ச நேரத்திலேயே புரிந்து விட்டது. பழனியில் முடி காணிக்கை கொடுப்பவர்கள் மொட்டை அடித்த பின் குளிக்கத்தான் வேண்டும்.

அனைவருக்குமான இலவச குளியல் அறைகளின் வாசலில் வாகாக நின்று கொண்டார் கண்ணில் எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் பிச்சை கேட்பது; மறுப்பவர்களிடம் மணி மாலையை விற்பது என்று கன ஜோராக நடந்தது அவருடைய வியாபாரம்.

அவருக்கு எந்த புத்திசாலித்தனமும் தேவைப்படவில்லை, அருகில் இருப்பவரைப் போதுமான அளவுக்கு தொல்லை படுத்தி, காசு கொடுத்தால்தான் இவர் நகர்வார் என்கிற சூழ்நிலையை ஏற்படுத்தினால் போதும்.

அந்த இடத்தில் தொடர்ந்து நிற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் ஒன்று தொல்லையிலிருந்து விடுபட அவருக்கு காசு கொடுக்கவேண்டும் அல்லது ஒரு மணிமாலையாவது வாங்கவேண்டும். மொத்தத்தில் அவருடைய வசூல் கட்டாயமாக நிகழ்ந்துவிடும்.

ஒரு முறை நாங்கள் காசு கொடுத்தோம். மூன்றே நிமிடத்தில் மீண்டும் எங்களிடம் வந்தார். இப்போதுதானே வாங்கினீர்கள் என்று நினைவு படுத்த வேண்டி இருந்தது! லேசாக தலை அசைத்து மீண்டும் அடுத்தவரிடம் போனார். மூன்றே நிமிடங்கள் தான்… மீண்டும் பந்து எங்களிடம் திரும்பி வந்தது. முதலிலேயே காசு கொடுக்காமல் இருந்துவிட்டு இப்போதுதானே வாங்கினீர்கள் என்று சொல்லி இருந்தாலும் அடுத்தவரிடம் போயிருப்பார்.

இந்த இரு பிச்சைக்காரர்களில் வெற்றியாளர் யார் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். அந்தப் பெண்மணிக்கு யார் இதையெல்லாம் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்? பெரும்பாலும் தப்பும் தவறுமாக செய்து, பட்டுத் தேர்ந்த, சொந்த முயற்சியாகத்தான் இருக்கும். ஒருவேளை, பரம்பரைத் தொழிலாக இருந்தால், மூத்தோரிடம் கற்று இருக்கலாம். இப்போதெல்லாம் பிச்சை எடுப்பது என்பது ஒரு குடிசைத் தொழில். இல்லை இல்லை. பங்களாத் தொழிலாகவே ஆகிவிட்டது.

உண்மையில் போட்டி அவர்கள் இருவருக்கும் அல்ல! அது விடாக்கொண்டனாகிய அவர்களுக்கும் கொடாக்கொண்டனாகிய நமக்கும் இடையேதான்.

முதல் நபர் லேசாக நம் தன்மானத்தைச் சீண்டி இரண்டாம் நபருக்காக நம்மைத் தயார் செய்பவராகக்கூட இருக்கலாம். யாருக்கும் கொடை இல்லை என்கிற இடத்திலிருந்து நாம் மெல்ல நகர்ந்து, இந்த பெண்னுக்கு கொடுத்ததற்கு லேசாக மகிழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் நம்மை அறியாமலே.

பிச்சைக்காரர்கள் ஏன் புனிதத் தலங்களில் கூடுகிறார்கள்? அங்கு நாமே இறைஞ்சத்தானே வந்திருக்கிறோம்! இறைவன் நம்மைத் திரும்பிப் பார்க்க மாட்டானா, நம் மனக்குறை தீர்க்க மாட்டானா என்று யோசிக்கும் மன நிலையில் நமக்கு அடுத்த படிநிலையில் இருக்கும் பிச்சைக்காரர்கள் இணக்கமாக தோன்றுவது எளிது! அவர்களுக்கு பிச்சை அளிப்பதில் நமக்கு ஒரு திருப்தி இருக்கிறது.அடுத்த படிநிலைக்கும் இந்த கருணை பரவாதா என்கிற நப்பாசை.

உண்மையில் ஏழ்மையில் உழல்பவர்க்கும் அன்றாட தேவைக்கும் நாம் பிச்சையளித்தோமா அல்லது பிச்சையை கூட்டு/ஈட்டுத் தொழிலாக செய்யும் முதலாளிகளுக்கு முதலளித்தோமா என்று பிரித்துப் பார்க்கும் திறன் நமக்கு இருக்கிறதா?

சரி! கேம் தியரி பற்றி பேச ஆரம்பித்து விட்டு பிச்சைக்காரர்களுடனே வெகு நேரம் தங்கி விட்டோம். விஷயம் இதுதான்: இந்த பரந்த உலகதில் நாம் தனியாக இல்லை. நம்மைச்சுற்றி பலர் இருக்கிறார்கள். நம்முடைய அன்றாட வாழ்வை ஒவ்வொருவருடைய முடிவுகளும் தீர்மானங்களும் பல வகையில் பாதிக்கிறது.

இதில் நாம் சரியான முடிவுகளை எடுப்பது எப்படி? எல்லா நேரங்களிலும் டிரையல் அண்ட் எர்ரர் ஒத்து வராது. சில நேரங்களில் சிறு தவறுக்கு கூட இடம் இருக்காது!

சரி இன்னும் கொஞ்சம் விவரமாகப் பார்க்கலாம்.

இந்த விளையாட்டில் இரண்டு அல்லது அதிகமான பேர் இருக்கலாம். அவர்கள் எடுக்கிற முடிவுகளால், அவருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ கிடைக்கிற லாபம் (payoff) பாதிக்கப்படும்.

இவர்கள் தனி மனிதர்களாக, நிறுவனங்களாக, அல்லது நாடுகளாகக் கூட இருக்கலாம். லாபம் என்று சொல்லும்போது அது காசு மட்டும் இல்லை, அதிகாரம், சந்தோஷம், ஈகோ இப்படி எதுவாகவும் இருக்கலாம்.

கேம் தியரியின் நோக்கம், ஆட்டம் எப்படி இருக்கிறது, மற்ற ஆட்டக்காரர்கள் யார் என்று தெரிந்து கொண்டு, ஒருவர் எப்படி முடிவு எடுப்பார் என்று கணிப்பதுதான். இந்தக் கணிப்பு கொஞ்சம் கஷ்டமான வேலை. ஏனென்றால், மனிதர்கள் எடுக்கிற முடிவு பல வகையிலும், யாராலயும் யூகிக்க (predict) முடியாததாக இருக்கும். ஆனாலும், கேம் தியரி நமக்கு நல்ல முடிவுகளை எடுக்க உதவி செய்கிறது.

அடிப்படையில் இதுவும் ஒரு கணக்குதான். பிரச்சனைகள் பல விதம், அதே போல தீர்வவுகளும் பலவிதம் தான். இனி வரும் பகுதிகளில் அதைத்தான் ஒவ்வொன்றாக பார்க்கப் போகிறோம்!