தீராக் கவிதை

0
1021

சிங்கப்பூரில் கவிதை வழி தமிழ் வளர்க்கவும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் கடந்த இருபது ஆண்டுகளாகப் பெரும்பணியாற்றி வருகிறது கவிமாலை.  கவிஞர்களுக்காகக் கவிஞர்களே நடத்தும் அமைப்பாகத் தொடங்கி இன்று வரையில் எந்தவிதத் தொய்வுமின்றி ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமையன்று கவிஞர்களின் ஒன்று கூடுகை தேசிய நூலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தச் சந்திப்புகளின் வழி, கவிதையாய்ச் சிந்தித்தல், கவிதைசார் உரையாடல்கள், கவிதை விமர்சனம், மாதாந்திர கவிதைப் போட்டிகள், பரிசுகள் எனத் தமிழோடும் கவிதையோடும் பயணித்து வருகிறோம்.

சிங்கப்பூரில் மரபுக்கவிதைக்கான வகுப்புகள் நடத்திப் பல்வேறு மரபுக்கவிஞர்களை உருவாக்கிய பெருமை கவிமாலைக்கு உண்டு. கவிமாலையோடு பயணித்த பலரும் கவிதையோடு வளர்ந்து தங்களுடைய கவிதை நூல்களை வெளியிடுமளவிற்கு வளர்ந்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் மரபில்  எழுதிய கவிஞர்கள் புதுக்கவிதையும் நவீன கவிதைகளும் எழுதி வருகிறார்கள்.  எழுத்தூக்கத்திற்கான  தளத்தினை ஏற்படுத்திக் கொடுத்து ஆர்வமுள்ளோர்க்கு உயிரூட்டி உரமுட்டி வருகிறது கவிமாலை. கவிதைசார் நிகழ்வுகள் நடத்திச் சிங்கப்பூரில் கவிதை இலக்கியத்தை வளர்ப்பதற்கான அத்தனைச் சாத்தியங்களையும் உருவாக்கித் தீவிர இலக்கியத்தின் மீதான பற்றையும் வளர்த்து வருகிறோம்.  

இருபத்தைந்து ஆண்டுகளில் எழுதப்பட்ட பெரும்பாலும் கவிதைகள் அந்தந்த காலத்துக்குப் பொருத்தமாக இருந்தாலும் கவிதை சமகாலத்தைச் சொல்வதும், அதைப் பற்றிய அனுபவப் பகிர்வுகளும் விசாரிப்புகளுமாகவே இருந்திருக்கின்றன. சிங்கப்பூரில் அதிகமான கவிதைகள் நிகழ்காலத்தை வியந்து பார்க்கக் கூடியதாகவும் அதனைப் போற்றக்கூடிய வகையில் கவிதையாக்கங்கள் இருந்து வந்திருக்கின்றன. இது மகிழ்ச்சியான மன நிலையை பிரதிபலிப்பதைக் காணமுடிகிறது. ஆனால் அதிக மகிழ்ச்சியை விட பெரும் சோகத்தைத் துலக்கும் இலக்கியங்கள்தான் மாபெரும் வெற்றியடைகின்றன என்பது பொதுவான கருத்து.  

மரபோ நவீனமோ அதனுடைய உயிரோட்டமே கவிதையை நிர்ணயிக்கிறது. வடிவங்களில் ஏற்படும் சலனங்களும் பார்வைகளும் அவரவர் சார்ந்திருக்கும் மனநிலையைச் ஒத்திருந்தாலும் சிங்கப்பூர்க் கவிதைகள் இந்த நிலத்தின் கருப்பொருள்களையும் பிரதிபலிக்க வேண்டும். கவிதை பேசும் அனுபவத்தையும் கருப்பொருளையும் வைத்து அந்தச் சம்பவத்தின் காலக்கட்டத்தை நம்மால் ஊகிக்க முடிந்தாலும் களத்தையும் காலத்தையும் மீறிக் கவிதைகள் அனுபவத்தை முன்னிலைப்படுத்துகின்றன.

சிங்கப்பூரில் எழுதும் கவிதைகள் பெரும் வாசகப் பரப்பைக் கொண்டிருக்கும் தமிழகத்தில் இருப்பவர்களுக்குப் புரியாமல் போய்விடுமென்று கவலை நிலவுகிறது. அகத்தை உணராமல் வசீகரிக்கும் புற உருவத்தை எழுதித் தீர்ப்பதும், மேம்போக்கான கவலைகளும் செயற்கையான பாடுபொருள்களும் எழுதப்பட்டுக்கொண்டேதான் இருக்கின்றன. அழகியலின் நீட்சியாக சமூகத்தின் பார்வைகளைப் பொதுமைப்படுத்தும் எண்ணத்தில் கவிதைகளைப் பூடகமாக்கி எழுதவேண்டியிருக்கிறது.  வெளிப்படைத் தன்மையைக் குறைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வாசகப் பரப்பைத் திருப்தி படுத்துவதற்காக எழுதுவதை விட சிங்கப்பூர்க் கவிதைகளை அதன் போக்கிலேயே எழுதுவதே சிறந்ததாக இருக்கும்.  அப்போதுதான் கவிதை பேசும் தருணங்களை, சம்பவங்களை முழுமையாக உணரமுடியும்.

இறுக்கமான கட்டமைப்பினைப் புரிந்துகொண்டு கவிதைகள் விவாதிக்கவும், சிலாகிக்கவும் வேண்டும். வாசகருக்கு அணுக்கமான சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதும் முக்கியமானதுதான் என்றாலும் சிங்கப்பூரின் அன்றாடங்களை இங்குள்ளவர்களால் மட்டுமே அடையாளப்படுத்தமுடியும்,  வெளியுலகுக்கு எடுத்துச் சொல்ல முடியும். எழுதப்படாத எண்ணற்ற கவிதைக்கான தருணங்கள் மொழியின் உள் மடிப்பில் இன்னும் உழன்றுகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எழுதிப் பார்க்கும் நோக்கத்தில் நானும் கைப்பிடிக் கவிதைகளைக் கையில் ஏந்திக்கொண்டு, கவிதையின் சிறகைப் பிடித்துக்கொண்டு சுற்றி வருகிறேன். கவிதையுலகில் நான் எங்கே நிற்கிறேன், பிற கவிஞர்கள் எப்படி எழுதுகிறார்கள், கையாளும் மொழி எப்படி வளர்ந்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் கவிதையில் ஏற்பட்டிருக்கும் வடிவ மாற்றங்களை ஏற்றுக்கொண்டு மொழியை  இன்னும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகளை உருவாக்கி அதில் நானும் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறேன். இந்தத் திணை எனக்குத் தரும் அனுபவங்களை, அன்றாடத்தின் செயல்களைச் சொற்களில் பிடித்து வைத்து, கவிதைக்கான என்னுடைய பங்களிப்பையும் உருண்டோடும் கல்லைப் போல் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.     

சிங்கப்பூரில் நவீன கவிதைகளின் வளர்ச்சியும் இன்றியமையாத ஒன்றாகி பல்வேறு பரிமாணங்களில் கவிதை இன்று பயணித்து வருகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்வதும் ஏற்றுக்கொள்வதும் சவாலாக இருக்கிறதென்றாலும் இன்னொரு பக்கம் சிங்கப்பூரில் பலரும் வீட்டில் தமிழில் பேசுவதில்லை. இன்றைய இளையர்கள் தாய்மொழிப் பற்றுக் குறைந்தவர்களாக  இருப்பது மிகவும் வருந்தக்கூடிய ஒன்றாகும். பேச்சுத்தமிழின் புழக்கம் குறைந்து பள்ளிப்பாடங்களில் படிக்கும் எழுத்துத் தமிழில்தான் பேசவேண்டும் என்றெண்ணி தட்டுத்தடுமாறுகின்ற தலைமுறையைக் கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் சமூக ஊடகத்தின் ஆளுமைக்கிடையே தமிழ்க் கவிதையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது எளிமையாக இல்லை. இவர்களிடம் சிக்கிக்கொண்டு கவிதையின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கவிதைப்பணியைச் செய்ய வேண்டிய கடமையை உணர்ந்து இளையர்களிடம் கவிதையைக் கொண்டு செல்வதற்காக விதைகள் மாணவரணியைத் தொடங்கினோம்.   பல்வேறு இளையர்கள் இதிலிருந்து கவிதை மட்டுமின்றி பல்வேறு வகையிலும் தன்னை முன்னேற்றியிருக்கிறார்கள்.  இந்த ஆண்டு விதைகள் குழுவில் அடுத்த அணியை இணைத்து வகுப்புகளைத் தொடங்கியிருக்கிறோம்.

ஒரு காலத்தில் பத்திரிக்கையில் ஒரு கவிதை வெளிவரவேண்டுமானால் மாதக்கணக்கில்  காத்துக்கிடந்தார்கள். புகழ்பெற்றக் கவிஞரை நேரில் சந்திக்க வேண்டுமானால் அவர் வீட்டு வாசலில் கவிதை நோட்டோடு கால் கடுக்க நின்றவர்கள் பலருண்டு. இப்போது அந்த நிலை முற்றிலும் மாறியுள்ளது. நம்முடைய எழுத்துகளை எப்போது வேண்டுமானாலும் சமூக ஊடகங்களின் வழி பகிரமுடிகிறது அதற்கான எதிர்வினைகளை உடனுக்குடன் பெறமுடிகிறது. மாபெரும் கவிஞர்களைக் கூட சமூக ஊடகங்களின் வழி எளிதில் அணுகமுடிகிறது. சக கவிஞர்களுடன் உரையாடலுக்கான வாய்ப்புகளும் தளங்களும் விரிவடைந்துள்ளன. அனைவரையும் சமதளத்தில் கொண்டுவந்து வைத்திருக்கிறது சமூக ஊடகம்.

சரியான அர்த்தத்தில் சங்கக் கவிதைகளின் பாடுபொருள்கள் தன்மைகள் அழகியல் மொழி நடை சமகால நவீன கவிதைகளுக்குள் கொண்டு வரப்படுவதையும் கவிமாலைக் கவிஞர்களின் கவிதைகளில் காணமுடிகிறது. அதே போல் வெளிநாட்டு கவிஞர்களின் கவிதைகளை வாசிக்கவும் மொழிபெயர்க்கவும் செய்கிறார்கள். சமகாலக் கவிதைகள் உரைநடை வடிவத்தைக் கையில் எடுத்திருக்கிறதென்ற எண்ணம் பலருக்குமிருந்தாலும் நாம் எந்த வித வடிவ சிக்கலுக்குள்ளும் சென்றுவிடாமல் கவிதை எந்த வடிவமாக இருந்தாலும் அது கவிதையாக இருக்க வேண்டும் என்பதே கவிமாலையின் நிலைப்பாடாக இருக்கிறது.

எந்தக் கவிதை வாய்க்கிறதோ எந்தக் கவிதை வசப்படுகிறதோ அதை எழுதிப்பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் இங்கு நிலவுகிறது. எந்தக் கவிதை படிக்கும்போது நல் அனுபவத்தைக் கொடுக்கிறதோ, எந்தக் கவிதை ஒருவரின் அனுபவத்தைத் தொட்டுச்செல்கிறதோ அது அதிகம் ரசிக்கப்படுகிறது. படைப்பாளியின் அனுபவமும் வாசகனின் அனுபவமும் சந்திக்கும் புள்ளியில் கவிதை அதிகம் உந்தப்படுகிறது. கவிதை நம் உள்ளத்தைச் சற்று அசைக்க வேண்டும்.  உள்ளத்திலுள்ளது கவிதை என்று சொல்வதுபோல் உள்ளத்தின் கொதிநிலையிலிருந்து கவிதைகள் உருவாகி வரவேண்டும். கவிநயம், கவிதாம்சம், அழகியல், காட்சிப்படிமம் இவற்றைப் பின்புலமாக வைத்துக்கொண்டு உயிரோட்டமான கவிதைகளை வாசிக்கும்போது நல்ல கவிதை நம் உள்ளத்தைத் திறக்கச்செய்கிறது. கவிதை சித்திரமாக, ஓவியமாக மாறிக் காட்சிகள் விரிகின்றன. கவிதைகள் நம்முடைய கனவுகளை எழுதவைக்கின்றன. கவிதை மனத்தோடு அணுக்கமாக இருக்கச்செய்கிறது. உண்மையான மன நிலையையும், துக்கமாக அல்லது மகிழ்ச்சியாக இருக்கிறோமா என்பதை அறிந்துகொண்டு அசைபோட வைக்கின்றன. கவிதை எல்லா வகை உணர்வுகளுக்குள்ளும் நம்மை இழுத்துச்செல்கிறது, அதே போல் நம்மை வெளியில் இழுத்து வருவதற்கான வடிகாலாகவும் இருக்கிறது.

கதையைத் தழுவியோ காட்சியைத் தழுவியோ கவிதைகள் வந்தாலும் அதில் அழகியலையும் சித்திரத்தையும் தாங்கி வருகின்றன.  அச்சித்திரங்களின் வழி உணர்வுகள் கண்டடையப்படுகின்றன என்று சொல்லலாம். கவிதைகள் புரிவதில்லை என்பதைவிட, ஒரு நல்ல கவிதையைப் படிக்கும்போது அதன் மையப்பொருள் கருத்தியலையோ அழகுத்தன்மையையோ புரிந்துகொண்டால் கவிதை அதன் புரிதலுக்கான பாதையைத் திறந்துவிடுகிறது. அறிதலின் பாதையைக் கண்டறிவது எப்போதும் எளிதாக இருப்பதில்லைவ் அதற்கென உழைப்பு தேவைப்படுகிறது. வெறும் காட்சிப் படிமங்களால் செங்கல் வைத்து அடுக்கப்படுபவையெல்லாம் கவிதையாகிவிடவும் இயலாது என்பதும் நாம் உணரவேண்டிய ஒன்று. சந்தமற்ற ஓசையற்ற கவிதைகளில் ரிதம் போய் விடுகிறது மொழிச் சிதைவு அடைகிறது என்று சொல்லி முழுமையாக நவீனத்தின் நுட்பத்தை ஒதுக்கிவிடவும்முடியாது.  ஒரு பாடல் பாடும் விதத்தைக் கொண்டு அது சோகப்பாடலா வீரப்பாடலா எனபதைப் பாடும் தொனியில் சொல்ல முடியும். உரைநடையில் கோபமோ சோகமோ எல்லாமும் ஒரே மாதிரி இருக்கிறது. மௌன வாசிப்புகளில் மட்டுமே நுண்ணிய தருணங்களை உணர முடிகிறது. வாசிப்பவரின் பார்வைக்கேற்ப புரிதல் விரிவடைந்துகொண்டே செல்கிறது.

அவரவர் அலைந்து திரியும் கவிதையுலகம் அவரவர்க்கான தனிமையும் தனித்துவமும் நிறைந்ததாகத்தான் இருக்கிறது. கவிதை எழுதுவதற்கான பொறி நம்முடைய தேடலில் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. மொழியின் மீது ஏறி சவாரி செய்து நடந்து கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. எது கவிதை, இது கவிதையா என்றில்லாமல் எனக்குப் பிடித்த கவிதை, நான் கடந்து செல்ல வேண்டிய கவிதை என்ற இரட்டைப் படிநிலைகளுக்குள் கொண்டு வரலாம். அப்படியாக இருத்தலியலை முன்னிலைப் படுத்தும் சிங்கப்பூர்க் கவிதைகள் அதன் வெவ்வேறு படிநிலைகளில் ஊடாடும் சிந்தனைகள், வித்தியாசமான பார்வைகள் படிமங்களில்,  புத்தாக்கங்களில் மொழிச்செறிவில், பேசப்படாத பாடுபொருள்களில், நவீன சிந்தனைகளில் வித்தியாசங்களைக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளும் சிங்கப்பூரில் எடுக்கப்படுகின்றன.  கவிதை இங்கு திடமாக இருக்கிறது என்று நம்புகிறோம்.. 

‘உன் கவிதையை நீ எழுது, உன் காதல்கள் பற்றி, கோபங்கள் பற்றி, ரகசிய ஆசைகள் பற்றி  இப்படி எல்லோரிடமும் காட்டவிரும்பும் அன்பைப் பற்றி எவரிடமும் காட்டமுடியாத தத்தளிப்பைப் பற்றி எழுது, நீ எழுது’ என்ற சுந்தரராமசாமியின் கவிதையை இங்கு நினைவுகூர்கிறேன். நமக்கான கவிதையை இம்மண்ணின் கவிதையை நம்மால் தான் எழுதமுடியும். அதற்கான தூண்டுகோலாக வாசிப்பு இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து ‘Read on the go’ என  நாள்தோறும் ஒரு கவிதையைக் கடந்த மூன்று ஆண்டுகளாகச் சமூக ஊடகக் குழுக்களில் ‘கவியாடும் முன்றில்’ என்ற தலைப்பில்  நாள்தோறும் கவிதைகளைப் பகிர்ந்து வந்தோம்.  

இலக்கியம் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் சிற்றிலக்கிய வலையுரைத் தொடரில் இருபது சிற்றிலக்கிய உரைகளை புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு வெளியிட்டோம்.   தங்கமுனைப் பரிசு வென்ற பிறமொழிக் கவிதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டோம்.   தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான கவிதை சொல்லும் போட்டியை அறிமுகம் செய்தோம்.   இளையோருக்காக விதைகள் மாணவர் கவிதைப் பயிற்சித் திட்டம்  நிறைவடைந்து இப்போது புதிய மாணவரணி தொடங்கிய வேகத்தில் ஓடத்தொடங்கியிருக்கிறது. மாணவர்களுக்காக மாணவர்களே நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து கவிதையை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்வதை நோக்கமாகக் கொண்டு மாணவரணி செயல்படுகிறது. கவிமாலைக் கவிஞர்கள் தேசிய கலைகள் மன்றத்தின் தங்கமுனை விருதுகளையும் தேசியளவில் நடைபெறும் கவிதைத் திருவிழாவில் பரிசுகளையும் பெற்று வருகின்றனர், சிங்கப்பூர் இலக்கியப் பரிசினைப் பெற்று வருவது கவிமாலைக்குப் பெருமைமிகு தருணமாகப் பார்க்கிறேன். 

இன்று சிங்கப்பூரில் கவிதை இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது. புதினங்களைக் காட்டிலும் கவிதைகள் இங்கு அதிகமாக எழுதிப் பார்க்கப்படுகின்றன. சமீப காலமாகப் பெண் படைப்பாளர்கள் அதிகம் வளர்ந்து வருகிறார்கள். ஆண்களை விடவும் அதிகமாக இலக்கியத்தில் பங்களிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இவர்களது இலக்கிய ஆர்வத்தைப் பார்க்கும்போது வருங்காலத்தில் மொழியும் இலக்கியமும் செழிக்குமென்ற நம்பிக்கை வருகிறது.  அந்த வகையில் மொழியை மெருகூட்டிக் கவிதை வழி எல்லாத் தரப்பையும் எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளிலும் எங்களது ஆக்டோபஸ் கரங்களை விரித்துத் தளத்தை விரிவுபடுத்தி வருகிறோம். அனைவருக்கும் வாய்ப்புகளை உருவாக்கி இளையர்களை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி வருகிறோம்.  இந்த  முயற்சிக்குக் கவிமாலைக் குடும்பத்தினரின் ஒருங்கிணைந்த முயற்சியும் ஒத்துழைப்பும் ஊக்கமுமே முக்கியமான காரணமாகும். இந்நேரத்தில் கவிதைக்கும் கவிமாலைக்கும்   செயலாற்றிய ஒவ்வொருவரின் பங்கையும்  நினைவுகூறும் வகையில் இந்த வெள்ளி விழாவினைத் திட்டமிட்டு நடத்துகிறோம். கவிமாலை வளர்வதற்கு ஆதாரமாகவும் ஆதரவாகவும் இருந்த விழுதுகள் ஒவ்வொருவருக்கும்  நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

2019 முதல் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும் கவிஞர்களாய்க் கைகோர்த்து கவிஞர்களால் நடத்தப்படும் இயக்கமாகத்தான் கவிமாலை தொடர்ந்து இயங்கி வருகிறது.  விரைந்து கொண்டிருக்கும் நதியின் அசைவில் கணக்கற்று மலரும் பூக்களின் மீது சிறகு துடிக்க அமரும் சிறு பட்டாம்பூச்சியாய் நான். புதுத் தளிர்களுடன் தீராக் கவிதையாய் இந்த வாழ்வு அமைந்திருக்கிறது, அதனைக் கவிதையாய் வாழ்ந்து தீர்ப்போம்.

ainbha@gmail.com