சமீபத்தில் ‘ஆந்தை’ திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட சிங்கையைச் சேர்ந்த திரு.மில்லத் அஹமது அவர்களுடன் ஒரு நேர்காணல்.
இளமைக்காலம் பற்றியும் எழுத்தார்வம் பற்றியும்…
நான் காரைக்காலைச் சேர்ந்தவன். ஏழாம் வகுப்பு படிக்கும் போது புதுவை மாநில அளவில் கூட்டுறவு சங்கங்கள் பற்றி ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. அதில் எனக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. அது எனக்கு ஒரு ஊக்கத்தைக் கொடுத்தது. தொடர்ந்து எழுதிவந்தேன். “சிங்கப்பூர் கதம்பம்” என்ற பெயரில் 3 சிறுகதைத் தொகுப்புகள் எங்கள் உயிர்மெய் பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளேன்.
திரைத்துறையில் ஆர்வம் எப்படி வந்தது?
பத்தாம் வகுப்பு படிக்கும்போது பள்ளிகளுக்கிடையே நாடகப் போட்டி நடந்தது. எங்கள் பள்ளியின் சார்பாக ‘உப்பில்லாப் பண்டம்’ என்ற நாடகத்தை வரலாற்று ஆசிரியர் ஏற்பாடு செய்தார். பள்ளி முடிந்தபின் நாடக ஒத்திகை நடக்கும். நான் தினமும் அதைப் போய் வேடிக்கை பார்ப்பேன். சில வெளைகளில் சில வேடங்களுக்கான மாணவர்கள் வர முடியாதபோது ஆசிரியர் என்னை நடிக்க சொன்னார். நானும் நடித்தேன். சக மாணவர்கள் பாராட்டினார்கள். சினிமாவுக்கான புள்ளியை காலம் என்மீது தூவி விட்டு சென்றது. பத்து வருடங்கள் கழித்து எனது பள்ளியின் சார்பில் ‘இராணுவ ரகசியம்’ என்ற நாடகத்தை எழுதி இயக்கினேன். அதன் பிறகு மாங்கனி திருவிழா, கந்தூரி திருவிழா போன்றவற்றில் நாடகம் எழுதி இயக்கி நடித்தேன். அன்று வேடிக்கை பார்த்தவன், இன்று வேடிக்கை காட்டுகிறேன்.
மேலும், எனது தந்தை திரு.எஸ்.எஸ்.அஹமது மரைக்கார் திருமணத்திற்கு முன் சில காலம் சினிமாவில் பாட்டு எழுதுவதற்காக, முயற்சி செய்து, தோல்வியடைந்து, சினிமாவே வேண்டாம் என்று வந்துவிட்டார். அந்தத் தாக்கம் என்னையறியாமலே என்னுள் ஊடுருவியிருக்கலாம். நானும் ஏழு வருடங்கள் சினிமாவில் இருந்து தோற்றுப்போய் இப்போது 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சினிமாவுக்குள் பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன். இலக்கை அடையும் வரை இந்தப் பயணம் தொடரும். இந்தப் பயணத்தில் மில்லத் அகமது என்ற நாமத்துடன் என்னுடன் எனது தந்தையும் பயணிக்கிறார்.
திரைப்படத் துறையில் முன் அனுபவம் எங்கு? எப்படி?
சென்னையில் 1993 முதல் 1999 வரை ஏழு வருடங்கள் பல இயக்குனர்களுடன் சேர்ந்து பணிபுரிந்த வளமான அனுபவம் உண்டு. 1996இல் ‘காதல் தேசம்’ படம் பார்க்க டைரக்டர் அதியமான் எங்களை அழைத்துச் சென்றார். படத்தில் ஒரு பெண்ணை இரு ஆண்கள் காதலிப்பார்கள். படம் முடிந்து வீடு வந்து சேர்ந்த பின், அந்தப் படத்தை பற்றி விவாதித்தோம். ஏன் இரு ஆண்களை ஒரு பெண் காதலிக்கக் கூடாது எனவும் ஒரு கருத்து எழுந்தது. இது வித்தியாசமாக இருக்கிறது என்று நாங்கள் சொன்னோம். இப்படியாக உருவானதுதான் ‘சொர்ணமுகி’ என்ற படம்.
சமீபத்திய வேறு சாதனை முயற்சிகள் குறித்து…
உலகின் ஆகச்சிறிய சிறுகதை என்று ஒன்று எழுதி வெளியிட்டேன். தற்போது செயற்கை நுண்ணறிவு உதவியுடன் முஹம்மது நபிகளின் வாழ்க்கைச் சம்பவங்களை நடிகர்களே இல்லாமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கிவருகிறேன்.
எனக்குச் சிறுவயதிலிருந்தே எது செய்தாலும் அதை வித்தியாசமாகச் செய்ய வேண்டும், பிறர் பாராட்டும்படி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செய்வேன். அதைச் சாதாரணமாக ஏனோதானோ என்று செய்ய மாட்டேன். கடின உழைப்பை போடுவேன். புத்தாக்கச் சிந்தனைகளை இலக்காக வைத்து முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சி வெற்றிபெற கடினமாக உழைக்க வேண்டும். அதாவது, லட்சியம் நம்மை முன்னோக்கி நகர்த்தும் கலங்கரை விளக்கு. அதை அடைய முயற்சி செய்வது நமது பயணம். அந்தப் பயணம் வெற்றிப் பயணமாக உழைப்பு முக்கியம். லட்சியம் இல்லாத முயற்சி வீணாகும். முயற்சி இல்லாத உழைப்பு பலனளிக்காது. உழைப்பு இல்லாத லட்சியம் வெறும் கனவாக இருக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க லட்சியம், முயற்சி, புத்தாக்கச் சிந்தனை, உழைப்பு அவசியம்.
“ஆந்தை” திரைப்படத்தில் சந்தித்த சவால்கள்…
ஒவ்வொருவரும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் தன் கைப் பேசியில் வைத்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை உருவாக்கி, அதைத் திரையரங்கில் வெளியிடுவதே ஒரு சவால்தான். முன்னூறுக்கும் அதிகமான திரைப்படங்கள் தணிக்கை சான்றிதழ் பெற்றும் திரையரங்கில் வெளியீடு காணமுடியாமல் தவிக்கின்றன. குலு மனாலியில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காத நிலையில் யூடியூப் காணொளிக்காக என்று சொல்லிப் படம்பிடித்தது பெரும் சவாலாக இருந்தது. சினிமாவில் எவ்வளவு முதல் போட்டாலும், அது முதலை வாயில் போடும் தீனி போல போய்க் கொண்டே இருக்கும். எச்சரிக்கையுடன் இல்லையென்றால் சறுக்கிக் கீழே விழ வைத்துவிடும். மேலும் நிர்ணயித்த தொகையில் படத்தை முடிக்கவேண்டும். இதுவும் பெரிய சவால். அனைத்தையும் தாண்டி வெளியீடு செய்தோம்.
subiselvi@gmail.com


